புலியூர் கேசிகன்

புலியூர் கேசிகன்

இதுவும் சேதுராமனின் guest post. இந்த முறை அவர் புலியூர் கேசிகனின் மகள் செல்வி கலைசெல்வியை நேரடியாக தொடர்பு கொண்டு இந்த விவரங்களை சேகரித்திருக்கிறார். சாதாரணமாக இந்த எழுத்தாளர்களைப் பற்றி விவரங்கள் கிடைத்தால் நன்றாயிருக்கும் என்று சொன்ன ஒரு வார்த்தையை அவர் இவ்வளவு தூரம் ஊக்கத்துடன் நிறைவேற்றி வருவது பெரும் பாராட்டுக்கு உரியது.

நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பற்றிய ஒரிஜினல் பதிவை இங்கே காணலாம்.

தமிழறிஞர் புலியூர்க் கேசிகனார், நெல்லையைச்சேர்ந்த புலியூர்க் குறிச்சி என்ற சிற்றூரில் 16-10-1923ல் பிறந்தவர். தந்தையார் கந்தசாமியா பிள்ளை, தாயார் மகாலட்சுமி அம்மையார். பெற்றோர் விவசாயத்தை முதன்மையாகவும், மளிகைக் கடை வைத்தும் வாழ்ந்தனர்.

தன் இளவயதுக் கல்வியை அருகிலுள்ள டோணாவூர் பள்ளியிலும், உயர் நிலைக் கல்வியையும் கல்லூரிக் கல்வியையும் திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியிலும் பயின்றவர். கல்லூரி நாட்களில் இந்தி எதிர்ப்பு மாணவராய்த் திகழ்ந்தவர், பின்னர் தமிழ் மீது ஆர்வம் கொண்டு வேங்கடசாமி நாட்டார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, திரு வி.க. போன்ற பல்வேறு தமிழறிஞர்களுடன் பழகித் தன் தமிழ்ப் புலமையை வளப்படுத்திக் கொண்டார்.

மறைமலையடிகளின் மகளும், திருவரங்கனார் துணைவியாருமான நீலாம்பிகை அம்மையார், உடல் நலமின்றி டோணாவூர் மருத்துவ மனையிலிருந்த போது, கேசிகனாரும் அவரது குடும்பத்தினரும் அளவிலா வகையில் உதவினர். நீலாம்பிகை அம்மையார் குணம் பெற்றுச் சென்னை திரும்பிய பிறகு திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் கேசிகனார்க்கு மேலாளர் பதவி கொடுக்கப் பட்டது. திருவரங்கனார் மறைவுக்குப் பிறகு அவர்கள் மகள் சுந்தரத்தம்மையாரை கேசிகன் மணம் புரிந்து கொண்டார்.

கேசிகனார் தம்பதிகளுக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உண்டு. தந்தையின் அடிச்சுவடுகளிலே சென்ற மகள்தான் கவிஞர் செல்வி கலைச்செல்வி.

கேசிகன் வடுகச்சி மலைப்பள்ளியில் ஆசிரியராக மூன்று ஆண்டுகளும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் மேலாளராக பத்து ஆண்டுகளும் பணி புரிந்த பின்னர், சென்னைக்குக் குடியேறியவர் அருணா பப்ளிகேஷன்சில் நிர்வாகியாகப் பணியிலமர்ந்தார். அருணாவில் இருக்கும்போது அதிவீரராமன் இல்லற ரகசியம், கொக்கோகம், சிங்கார நாயகிகள், பெண்மையின் ரகசியம் போன்ற பல நூல்களுக்கு உரை எழுதினார். இன்னூல்கள் அக்காலத்திலேயே ஆயிரக்கணக்கில் விற்று அவருக்குப் பெரும்புகழ் சேர்த்தது. பாரி நிலையத்திலும், மாருதி பதிப்பகத்திலும் பல ஆண்டுகள் கேசிகன் பணி புரிந்துள்ளார்.

பாரி நிலையத்தின் மூலம் சங்க இலக்கியங்களுக்கு எளிய உரை எழுதி மக்கள் மத்தியில் பெருஞ்செல்வாக்கைப் பெற்றார். சிலப்பதிகாரம், மணிமேகலை, புற நானூறு, அக நானூறு மூன்று பகுதிகள், நற்றிணை இரு தொகுதிகள், பதிற்றுப்பத்து, பரிபாடல், குறுந்தொகை கலித்தொகை, புறப்பொருள் வெண்பாமாலை, கலிங்கத்துப் பரணி, முக்கூடற்பள்ளு, ஐங்குறுனூறு ஐந்து தொகுதிகள், தொல்காப்பியம், திருக்குறள், நளவெண்பா, பழமொழி நானூறு, திருக் குற்றாலக் குறவஞ்சி, கம்பன் தனிப் பாடல்கள், காளமேகம் தனிப்பாடல்கள், ஔவையார் தனிப்பாடல்கள் என அனைத்து நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார்.

சங்க இலக்கியங்கள் அனைத்துக்கும் எளிய உரை எழுதி, மலிவுப் பதிப்பில் விற்று, இலக்கியங்களை அனைவர் மத்தியிலும் எளிமைப் படுத்திப் புரிய வைத்தது கேசிகனாரின் தமிழ்த் தொண்டும் சாதனையாகும். மற்றும் மனோசக்தி, எண்களின் இரகசியம், எண்களும் எதிர்காலமும் போன்ற, இவர் எழுதிய பல நூல்கள் இவருக்குப் புகழ் தேடித் தந்தன.

சிறந்த கவிஞர், படிதிருத்துனர், பதிப்பாசிரியர், எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், சோதிடர், எண் கணித வல்லுனர் மற்றும் ஆவியுலக ஆராய்ச்சியாளர்.

இவரது படைப்புகள் – உரை நூல்கள் 50, ஜோதிட நூல்கள் 10, மனோதத்துவ நூல்கள் 5, யோகம் பற்றியது 3, ஆன்மிக நூல்கள் 5, வரலாற்று நூல்கள் 2, குறள் சார்ந்த நூல்கள் 7, தொகுப்பு நூல், ஆராய்ச்சி நூல், கவிதை நூல் – மற்றும் பிற நூல்கள் 8.

புலியூர்க் கேசிகன் ஏப்ரல் 17, 1992ல் சென்னையில் காலமானார்.

(தகவல் நன்றி – கவிஞர் சொ.கலைச்செல்வி எழுதிய “உரையாசிரியர் புலியூர்க் கேசிகன் முதலாண்டு நினைவு மலர்-1993 — ஸ்பெஷல் நன்றி ஹிக்கின்போதம்ஸ் சந்திரசேகர், சண்முகா பதிப்பகம், பாரி நிலையம் உரிமையாளர்கள் – இவர்களுடைய உதவியால்தான் கலைச்செல்வியுடன் தொடர்பு கொள்ள முடிந்தது)

ஆர்வி: பல இலக்கியங்களுக்கு உரை எழுதி இருக்கிறார். எல்லாம் சரிதான். ஆனால் கொக்கோகம்? என் காலத்தில் கொக்கோகம் படிக்கிறான் என்றால் கெட்ட புத்தகம் படிக்கிறான் என்றுதான் அர்த்தம். ஒரு வேளை இந்த பேரிலும் ஏதாவது இலக்கியம் இருக்கிறதா? பெருசுகள் யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். டோண்டு?

Advertisements