பிள்ளை பற்றிய முந்தைய பதிவுகள் இங்கே மற்றும் இங்கே.

நான் வையாபுரிப் பிள்ளை பற்றி இணையத்தில் தேட கஷ்டப்பட்டேன். நல்ல வேலையாக சேதுராமன் ஜெயமோகன் எழுதிய சில சுட்டிகளை எனக்கு காட்டினார். பி.கே. சிவகுமார் எழுதியவை சில கிடைத்தாலும் எல்லாமும் கிடைக்கவில்லை.

வையாபுரிப்பிள்ளையின் மரணமின்மை என்ற சுட்டியில் ஜெயமோகன் எழுதியது எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

தமிழ்ப்பண்பாடு ஆரம்பம் முதலே எப்படி சம்ஸ்கிருத மரபைச் சார்ந்துள்ளது என்று விளக்கிய வையாபுரிப் பிள்ளை தமிழ்பண்பாட்டை சம்ஸ்கிருதக் கல்வி இன்றி முழுக்க புரிந்து கொள்ள இயலாதென்றார். தமிழின் தனித்துவத்தை அங்கீகரித்தவர் அவர். தமிழாய்வுக்கு சம்ஸ்கிருதக் கல்வியை வலியுறுத்தியதோடு சமஸ்கிருதம் என்ற வளம் மிக்க மொழி மீது தமிழர்களுக்குள் உருவாக்கப்பட்ட வெறுப்பு ஆபத்தானது என்று வாதிட்டார். ஆகவே அவர் பிராமண ஆதரவாளர் என்று சொல்லப்பட்டார். ஆனால் மொத்தமாகப் பார்க்கையில் மனோன்மணியம் சுந்தரனார் வழிவந்த வையாபுரிப்பிள்ளையிடம் பிரமாண நிராகரிப்பு நோக்கே விஞ்சி நின்றது என இன்று காணமுடிகிறது.

நானும் சமஸ்கிருதமும் தமிழும் திராவிட இயக்கத்தினர் சொல்வதை விட அதிக தொடர்பு உள்ளவை என்று நினைக்கிறேன்தான். ஆனால் பிள்ளை தமிழ் பண்பாடு சமஸ்கிருத மரபை சார்ந்தது என்று நினைத்ததாக சொல்வது எனக்கு மிக வியப்பாக இருக்கிறது. எனக்கு சமஸ்கிருதம் தெரியாதுதான், ஆனால் இவை இரண்டும் வேறு வேறு, ஒன்றுக்கொன்று ஏதோ கொஞ்சம் கொடுக்கல் வாங்கல் நடந்திருக்கிறது என்பதுதான் என் எண்ணம். ஒரு தமிழறிஞர் இப்படி நினைத்தார் என்பது அதிசயமாக இருக்கிறது. எந்த மொழி மீதும் வெறுப்பு என்பது ஆபத்தானதுதான். சமஸ்கிருத கல்வி தமிழ் பண்பாட்டை நன்றாக புரிந்து கொள்ள உதவக் கூடும் என்பது சரிதான் – சமஸ்கிருதம் என்ன, தெலுகு, கன்னடம், மலையாளம் கூட உதவத்தான் செய்யும். அதற்காக தமிழ் பண்பாடு தெலுங்கு பண்பாட்டை சார்ந்தது என்று சொல்லி விட முடியாதே?

இந்த முறை இந்தியா செல்லும்போது பிள்ளையின் நூல்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

Advertisements