இதுவும் சேதுராமனின் guest post.

நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பற்றிய ஒரிஜினல் பதிவை இங்கே காணலாம்.

சேதுராமன் இவர் 1875-இல் பிறந்து 1956-இல் மறைந்தார் என்று குறிப்பிடுகிறார். 

க.நா.சுப்பிரமணியம் தன்னுடைய இலக்கிய சாதனையாளர்கள் கட்டுரைகளில் பின்வருமாறு எழுதுகின்றார்:

***
இருபதுகளில் ஒரு தமிழ் வாசகர்கள் பரம்பரையை உருவாக்க முயன்றவர்கள் இருவரென்று ஜே. ஆர். ரங்கராஜு என்பவரையும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவரையும் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தைக் கல்கி தெரிந்து செய்தாரென்றும், இவர்களிருவரும் தங்களையறியாமலேயே காரணமாக இருந்தார்கள் என்றும் சொல்லலாம்.

ஜே.ஆர்.ஆரின் ஐந்தாறு நாவல்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்றாக 1916 முதல் 1923 வரை வெளி வந்தன.பிரஸ் சொந்தக்காரரான ரங்கராஜு மொத்தம் பத்தாயிரம் பிரதிகளை அச்சிட்டு ஒவ்வொரு ஐநூறு பிரதிகளையும் ஒரு பதிப்பாகக் குறிப்பிட்டு பத்து பதிப்புகள் வரை தன் நாவல்களை வெளியிட்டார். ராஜாம்பாள், ராஜேந்திரன், சந்திரகாந்தா, ஆனந்தகிருஷ்ணன் என்று ஒவ்வொரு நாவலும் வெளியாகும்போது வாசகர்கள் மிகவும் பரபரப்பாக வாங்கிப் படித்தனர்.

வரதராஜன் என்ற நாவல் இரண்டு பாகங்கள் வெளிவரும் வரையில் ஒன்றும் தடங்கல் இல்லை. அந்த நாவலின் பல பகுதிகள் இலக்கியத் திருட்டு என்ற ஒரு வழக்குப் பதிவான பின், மேலே எதுவும் எழுதிப் பிரசுரிக்கக் கூடாது என்றும், ஆறு மாதம் ஜெயில் வாசம் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் அவருக்குத் தண்டனை விதிக்கப் பட்டதாக எண்ணுகின்றேன்.

ஜெயிலில் இருந்து விட்டு எழுதுவதை நிறுத்தி விட்டார் ரங்கராஜு. நாற்பதுகளின் ஆரம்பத்தில் எழுத்தாளர் சங்கக் கூட்டம் ஒன்றில் நான் இவரைச் சந்தித்திருக்கிறேன். தாடி வளர்த்துக் கொண்டும், நாமம் போட்டுக் கொண்டும் (அவர் வைஷ்ணவ நாயுடு என்று எண்ணுகிறேன்) பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாக இருந்தார்.

*** (இலக்கியச் சாதனையாளர்கள் – க.நா.சுப்பிரமணியம்)

இவரது துப்பறியும் நிபுணர் கோவிந்தன் – ஷெர்லாக் ஹோம்ஸின் தமிழ் அவதாரம் என்று கூறப்பட்டார். இவரது படைப்பான ராஜாம்பாள் இருபத்தாறு வருஷங்களில் இருபத்தாறு பதிப்புகள் வெளி வந்தன என்று தெரிகிறது. இன்னோர் நாவலான சந்திரகாந்தா 1936ல் தன்னுடைய ஆறாவது பதிப்பை எட்டியது. (சிசிர் குமார் தாஸ் எழுதிய இந்திய இலக்கியச் சரித்திரம் – சாஹித்திய அகாடெமி பிரசுரம்)

(கொசுறு – இவரது ராஜாம்பாள் சினிமாவாக எடுக்கப் பட்டது. ஆர். எஸ்.லக்ஷ்மி நரசிம்மன் என்கிற மனோஹர் சினிமா உலகப் பிரவேசம் அதில் தான். மனோஹர் அப்போது தோட்டக்கார விஸ்வனாதனின் நடராஜா
அமெச்சூர்ஸ் என்ற குழுவிலும், ஒய்.எம்.ஐ.ஏ. ஃபைன் ஆர்ட்ஸ் குழுவிலும் நடித்துக் கொண்டிருந்தார் – ஒரு நாடகத்தைப் பற்றி நான் ஃப்ரீ இந்தியா, நாரதர் பத்திரிகைகளில் எழுதிய விமர்சனம் டி.ஆர்.சுந்தரம் கண்களில் பட்டு, ஃப்ரீ இந்தியா கோவிந்தன் மூலம் மனோஹரும், கல்யாணம் என்பவரும் மாடர்ன் தியேட்டர்சுக்கு அழைக்கப் பட்டனர்.. மனோஹருக்கு ராஜாம்பாள் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது பின்னர்).

ஜே.ஆர்.ரங்கராஜு – படைப்புகள்

இராஜாம்பாள் (1906 – கடைசிப் பதிப்பு 1955 – எவ்வளவு பதிப்புகள் என்று தெரியவில்லை)
மோகன சுந்தரம் (1911)
ஆனந்த கிருஷ்ணன் (1921 – 15)
வரதராஜன் (1925)
சந்திரகாந்தா ( ? -1936 -6 )
ராஜேந்திரன் ( ? 1956 – 13)
பத்மராஜு
ஜெயரங்கன்

முதற்பதிப்பு வெளியான வருஷமும் மொத்தப் பதிப்புகளும் அடைப்புக் குறிக்குள் உள்ளன. கடைசி இரண்டு நாவல்கள் விவரங்கள் தெரியவில்லை.

ஆர்வி: தமிழ் படிப்பை இவர் பரவலாக்கினார் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இவர் எழுத்துக்கள் இலக்கியத் தரம் வாய்ந்தவை அல்ல. ராஜேஷ் குமாரும், ரமணி சந்திரனும் தமிழ் படிப்பை பரவலாக்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எழுத்துக்கள் நினைவில் கொள்ளப்பட வேண்டியவை இல்லை. எனக்கு என்னவோ சிறு வயதில் கலைஞர் இவரது எழுத்துக்களை விரும்பி படித்திருக்க வேண்டும் என்றும் அதனால்தான் இந்த கவுரவத்தை அவருக்கு கொடுத்துவிட்டார் என்றும் தோன்றுகிறது. 🙂 இவருக்கும் வடுவூராருக்கும் இந்த கவுரவம் கொடுக்கப்பட்டது என்று தெரிந்துதான் கடுப்பாகி நான் இந்த சீரிசை ஆரம்பித்தேன். சேதுராமன் தொடர்கிறார். சேதுராமன் உதவியால் பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

ராஜாம்பாள் தவிர மோகன சுந்தரம் (டி.ஆர். மகாலிங்கம் நடித்தது), சந்திரகாந்தா ஆகியவையும் திரைப்படமாக வந்திருக்கின்றன. சவுக்கடி சந்திரகாந்தா அந்த காலத்தில் புகழ் பெற்ற திரைப்படம். காளி என். ரத்னம் போலி சாமியாராக வருவார் போலிருக்கிறது. சாமிகள் யோகத்தில் இருக்கிறார் என்றால் சிஷ்ய கோடிகள் புரிந்துகொண்ட அந்த பக்கம் போக மாட்டார்களாம். 🙂

இவரது புகைப்படம் கிடைக்குமா என்று தேடிப்பார்த்தேன், தென்படவில்லை. 

Advertisements