சவுக்கடி எஸ். வையாபுரிப் பிள்ளை பற்றிய பதிவுக்கு எழுதிய மறுமொழியை கீழே தந்திருக்கிறேன்.

//தமிழ் இலக்கியங்கள் பிள்ளை சொன்னதை விட புராதனமானவை என்று சொல்வதையே அவர்கள் விரும்பினார்கள்.//
இது நடுநிலையற்ற கூற்று. அவரகள் வையாபுரியின் ஆய்வில் முரண்பாடுகளைச் சுட்டி அவர்கள் கருத்தைக் கூறினார்கள். ஒருவரைப் பற்றிய கட்டுரை எழுதும்போது, அவர் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதவர்களைப் பழித்தெழுதுதல் முறையன்று.

இங்கே சொல்லப்படும் அவர்கள் தேவநேயப் பாவாணரும் பாரதிதாசனும் ஆவர். சவுக்கடி சொல்லியபடி ஒருவரைப் பற்றிய கட்டுரை எழுதும்போது, அவர் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதவர்களைப் பழித்தெழுதுதல் முறையன்று என்பதில் எனக்கு முழு உடன்பாடு இருக்கிறது. அதனால்தான் இந்த பதிவையே எழுதுகிறேன்.

சேதுராமன் அவர்களை பற்றி எனக்கு தெரியாது, ஆனால் நான் தமிழ் வல்லுனன் அல்லன். இங்கே குறிப்பிடப்படும் வையாபுரிப் பிள்ளை எழுதிய புத்தகத்தையும் நான் படித்ததில்லை, அதற்கு பாவாணரும், பாரதிதாசனும் எழுப்பிய ஆட்சேபங்களையும் நான் படித்ததில்லை. அதனால் சவுக்கடி சொல்வது போல அவர்கள் இருவரும் பிள்ளையின் ஆய்வில் உள்ள குறைகளை சுட்டி இருக்கலாம், அப்படி செய்யவில்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது.

ஆனால் நான் பிள்ளை எழுதிய சில கட்டுரைகளையும், பாவாணர் எழுதிய ஓரிரு நூல்களையும் படித்திருக்கிறேன். எனக்கும் கவிதைக்கும் வெகு தூரம் என்றாலும் பாரதிதாசனின் இருண்ட வீடு கவிதையை படித்திருக்கிறேன். பாரதிதாசனைப் பற்றி ஓரளவு தெரியும். இந்த படிப்பிலிருந்தும், தெரிந்து கொண்டதிலிருந்தும் எனக்கு ஏற்பட்ட சில கருத்துகள்:

1. பிள்ளை ஒரு உண்மையான ஆய்வாளர். அவர் என் ஆய்வின் முடிவு இப்படி வர வேண்டும் என்று முன் கூட்டியே தீர்மானித்துக் கொண்டு அதற்கேற்ப ஆய்வு செய்பவர் அல்ல. He is a scientific researcher.
2. பாவாணருக்கு தமிழ் மீது பற்று அதிகம். தமிழையும், தமிழர்களையும் ஏத்தி சொல்லவே அவர் விரும்புகிறார். தமிழ் காவியங்கள் பத்தாயிரம் வருஷங்களுக்கு முன் எழுதப்பட்டவை என்றால் அவர் அதிக மகிழ்ச்சி அடைவார். ஆயிரம் வருஷங்களுக்கு முன் எழுதப்பட்டவை என்றால் அவர் ஏமாற்றம் அடைவார், அப்படி சொல்லும் ஆய்வுகளை தாக்குவார். அவருக்கு தமிழ் முதல் மொழி, தமிழர் சமுதாயம் முதல் சமுதாயம் என்று உறுதியான நம்பிக்கை இருந்தது. உண்மையில் ஏதாவது ஒரு ஆய்வு முதல் குரங்கு தமிழ் குரங்கு என்று சொன்னால் அவர் ஜன்மம் சாபல்யம் அடையும்.
3. பாரதிதாசன் மிக சிம்பிளான மனிதர். அவர் வாழ்வில் ஐயர் (பாரதியார்), தமிழ், தமிழர் என்று சில விஷயங்கள் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு உயர்ந்தவை. அவரிடம் யாராவது பிள்ளை தமிழ் காவியங்களின் வயதை குறைத்து தமிழை இழிவு செய்துவிட்டார் என்று சொன்னால் அவர் கொதித்து எழுந்துவிடுவார். அவரால் இந்த விஷயங்களை நடுநிலையுடன் சீர்தூக்கி பார்க்க முடியாது என்று நினைக்கிறேன்.

பிள்ளை மறைந்து ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஐம்பது ஆண்டுகளில் இன்னும் நிறைய ஆவணங்கள், கல்வெட்டுகள், ஓலை சுவடிகள், செப்பேடுகள் நமக்கு அகப்பட்டிருக்கலாம். அவை பிள்ளையின் ஆய்வு முடிவுகள் தவறு என்று நிரூபிக்கலாம். ஆனால் அவருக்கு அன்று இருந்த ஆதாரங்களைக் கொண்டு அவர் லாஜிகலாக சிந்தித்து சில முடிவுகளுக்கு வந்திருப்பார் என்று நம்புகிறேன்.

கடைசியாக சுஜாதா எழுதிய கற்றதும் பெற்றதும் புத்தகத்திலிருந்து சில வரிகள்:

பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி பேராசிரியர் எஸ். வையாபுரி பிள்ளை அவர்களின் நினைவுதினம். அவருடைய ஆராய்ச்சி முறைகளையும் முடிவுகளையும் மேல்நாட்டு பல்கலைக் கழகங்களில் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டில் இப்போது அவரை மறந்துவிட்டதற்குக் காரணம் – அவர் ஆணித்தரமான ஆதாரங்களுடன் தொல்காப்பியம், திருக்குறள் போன்றவற்றின் காலத்தை சில நூற்றாண்டுகள் தள்ளிப் போட்டதுதான். திருக்குறளின் காலத்தை அவர் ஆறாம் நூற்றாண்டு என்று சொன்னதற்குக் காரணங்கள் இவை: குறள் ஒரு கீழ்க்கணக்கு நூல். ‘கள்’ விகுதி தொல்காப்பியத்தில் அ·றிணைக்கு மட்டும் பயன்பட்டது. திருக்குறளில் உயர்திணையிலும் பயன்படுகிறது. ‘ஒப்பாரி’, ‘அப்பர்’ போன்ற புதுச் சொற்கள். ‘போழ்து’, ‘ஆயினால்’ போன்ற பிரயோகங்கள். ‘பாக்கியம்’, ‘பூசனை’, ‘மந்திரி’, ‘ஆசாரம்’ போன்ற 123 வடமொழி வார்த்தைகள். ‘ஒருவந்தம்’ போன்ற கலவைச் சொற்கள் – இவற்றையெல்லாம் வைத்துச் சொல்கிறார். மறுப்பது கஷ்டமாக இருக்கிறது.

வையாபுரிப் பிள்ளை பற்றி பி.கே. சிவகுமார் சில பதிவுகளை எழுதி இருக்கிறார். தேட மிக கஷ்டமாக இருக்கிறது. எனக்கு கிடைத்த சில சுட்டிகளை கீழே கொடுத்திருக்கிறேன்.

தமிழ் விக்கிபீடியா
பி.கே. சிவகுமார் பிள்ளையை அறிமுகம் செய்து வைக்கிறார்.
சர்ச்சைக்குள்ளான ஆய்வுகள்
மேலும் சர்ச்சை
பாரதியை பற்றி பிள்ளை
வையாபுரிப் பிள்ளை – செய்ய வேண்டியவை
வையாபுரிப்பிள்ளை குறித்து ஜெயமோகன்
சில ஒலிப்பதிவுகள் (நான் இன்னும் கேட்கவில்லை

பிள்ளை, பாவாணர், பாரதிதாசன் ஆகியோர் என்ன சொன்னார்கள் என்று தெரிந்தவர்கள் மேலும் எடுத்து சொன்னால் நன்றாக இருக்கும்!

பிள்ளை பற்றிய இன்னொரு பதிவு இங்கே.

Advertisements