எஸ். வையாபுரிப் பிள்ளை

எஸ். வையாபுரிப் பிள்ளை

இதுவும் சேதுராமனின் guest post. நாட்டுடமை ஆன எழுத்துகள் பதிவு இங்கே.

பிள்ளை பற்றிய மற்ற பதிவுகள் இங்கே மற்றும் இங்கே.

வையாபுரிப் பிள்ளை 1891 அக்டோபர் மாதம் 20 தேதி, திருநெல்வேலியிலே பிறந்தவர். தந்தை பெயர் சரவணப் பெருமாள் பிள்ளை – தமிழ்ப் புலவர், தீவிர சைவ பக்தர். வையாபுரி பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் ஹைஸ்கூலிலும், பின்னர் சென்னை கிறிஸ்தியன் காலேஜிலும் படித்துப் பட்டம் ற்றவர். ராஜதானியிலேயே தமிழ்ப் படிப்பில் முதலாவதாக நின்று சேதுபதி தங்கப் பதக்கம் வென்றவர்.

இவரது தமிழ் ஆசான் பிற்காலத்தில் மறைமலையடிகள் என்றழைக்கப்பட்ட ஆர்.எஸ்.வேதாசலம் பிள்ளையாவார். இதன் பிறகு வையாபுரி சட்டக் கல்வியும் பயின்று, திருவனந்தபுரத்திலே ஏழு வருடங்கள் வக்கீலாகப் பணியாற்றினார். படிக்கும்போதே ஆங்கிலத்திலும் தமிழிலும் புகழீட்டிய கட்டுரைகள் நிறைய எழுதியவர். இதன் காரணமாகவே சென்னைப் பல்கலைக் கழகம் 1924ல் ஆங்கிலத் தமிழ்ப் பேரகராதி முயற்சியில் துணை ஆசிரியராக நியமிக்கப் பட்டார். இப்பேரகராதிப் படைப்பில் இவருடன் துணை நின்றவர் தமிழ்ப் பேரறிஞர் மு.இராகவைய்யங்கார் அவர்கள். 1913ல் ஆரம்பிக்கப்பட்ட இம்மாபெரும் பணி 1936ல் தான் முடிவுற்றது. 1926ல் பேரகராதிக்குத் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்ட வையாபுரிப் பிள்ளை பணி நிறைவேறும் வரை அந்தப் பொறுப்பிலிருந்தார்.

வையாபுரிப்பிள்ளை பல ஆராய்ச்சிக் குழுக்களுக்குத் தலைவராக இருந்திருக்கிறார். இவற்றுள் அரசு நியமித்த தமிழ்ச் சொற்கள் குழுவும், திராவிட மொழிகள் திறனாய்வு குழுவும் முக்கியமானவை. ஓய்வுக்குப் பிறகு திருவாங்கூர் பல்கலைக் கழகத்தில், 1951 முதல் 1954 வரை தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் எழுதிய தமிழ் நூல்கள் சுமார் நாற்பதிருக்கும். தமிழ் இலக்கியங்களான கம்பராமாயணம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் – இவைகளுக்கு உரை/விளக்கம் எழுதப் பேரார்வத்துடன் இருந்தவர், இம்முயற்சி தொடங்கு முன்னரே 1956 பிப்ரவரி 17 தேதி சென்னையில் காலமானார்.

வையாபுரிப் பிள்ளை தன் வாழ் நாள் முழுதும் சேகரித்த விலை மதிப்பற்ற பல புத்தகங்களையும், மற்றும் பல ஓலைச்சுவடிகளையும், அவரது சந்ததியார் கல்கத்தாவிலுள்ள தேசீய நூலகத்திற்குக் கொடையாக அளித்துள்ளனர். இதில் 2943 தமிழ்ப் புத்தகங்களும், ஆங்கில, ஃப்ரென்சு, ஜெர்மன் நூல்கள் 1543ம், சம்ஸ்கிருதப் புத்தகங்கள் 113ம், மலையாளப் புத்தகங்கள் 16, பனையோலைச் சுவடிகள் முன்னூறும் அடங்கியிருந்தன (தகவல் ஆதாரம் – வி. சுந்தரம், ஐ.ஏ.எஸ். ஜூலை 2005ல் எழுதிய ஆங்கிலக் கட்டுரை)

வையாபுரிப் பிள்ளை எழுதிய நூல்களுள் சில – சிறுகதை மஞ்சரி, இலக்கிய தீபம், தமிழர் பண்பாடு, இலக்கிய உதயம், தமிழின் மறுமலர்ச்சி, தமிழ் மொழியின் சரித்திரமும் இலக்கியமும், தமிழ்ச் சுடர் மணிகள். இவற்றுள் தமிழின் மறுமலர்ச்சி 1947ல் வெளியான போது சர்ச்சைகள் எழுந்தன. எழுப்பியவர்கள் பாரதிதாசனும், தேவ நேயப் பாவாணரும். பிள்ளை சங்க இலக்கியங்களுக்கும் திருக்குறளுக்கும் சொல், மொழி ஆகியவற்றை வைத்து இவை எப்போது எழுதப்பட்டவை என்று சில முடிவுகளுக்கு வந்திருந்தார். அவர் சொன்ன காலம் பல திராவிட இயக்கத்தினருக்கு ஒத்து வரவில்லை. தமிழ் இலக்கியங்கள் பிள்ளை சொன்னதை விட புராதனமானவை என்று சொல்வதையே அவர்கள் விரும்பினார்கள். பிள்ளையவர்களின் கால ஆராய்ச்சி எதிராளிகளுக்குப் பிடிக்கவில்லை. பாரதிதாசன் கொஞ்சம் மூர்க்கமாகவே பேசினார் என்பது சரித்திரம். பாவாணருக்கோ உலகத்திலிருக்கும் எல்லா மொழிகளுக்கும் தமிழ் தான் ஆதார வேர் என்ற ஒரு ஆணித்தரமான அபிப்பிராயம் உண்டு. கண்மூடித்தனமான கோட்பாடுகளோ, எண்ணங்களோ இல்லாமல் ஆதார பூர்வமாக பிள்ளை கால ஆராய்ச்சி செய்து எழுதியது திராவிட அறிவாளிகளுக்குக் கசந்தது.

****
இம்மேதையைப்பற்றி, தமிழ் எழுத்தாளரும், இலக்கியத் திறனாய்வாளருமான க.நா.சுப்பிரமணியம் அவர்கள் எழுதியிருப்பதைப் பார்க்கலாமா?

வையாபுரிப் பிள்ளை வக்கீலுக்குப் படித்தும், தமிழ்ப் புலமை மிக்கவராக, முக்கியமாகத் தமிழ் நூல்கள் கால ஆராய்ச்சி வல்லுனராகவும் அகராதிப் (இப்போது அகர முதலி!) பதிப்பாளராகவும் வாழ்ந்தவர். அவருக்கு உள்ளூர சிறுகதைகள், நாவல்கள் எழுதிப் பெயர் பெறவேண்டும் என்ற ஆசையும் உண்டு – ஆனால் அதில் ஒரு சிறு பகுதி தான் நிறைவேறியது. அவர் எழுத்து பெரும்பகுதியும் புலமை நிரம்பிய பகுதி தான். அவர் பழகுவதற்கு எளிய மனிதர். பேராசிரியத்தனமோ, சிறிதளவும் ஆடம்பரமோ இல்லாதவர். அதே சமயம் எந்த நுணுக்கமான விஷயம் பற்றியும் பிடிவாதமாக, அசைந்து கொடுக்காமல், தான் எடுத்த முடிவிற்குச் சாதகமாக விவாதம் செய்வதில் தீர்மானமுள்ளவர்.

பிள்ளையவர்களின் நூலான தமிழ்ச்சுடர் மணிகளை விமர்சித்து, க.நா.சு. எழுதுகிறார்.

தமிழ்ச் சுடர்மணிகளை நான் தேர்ந்தெடுத்ததற்கு ஒரே ஒரு காரணம் தான். அதில் பல தலைப்புகளில், தொல்காப்பியர் முதல் டாக்டர் உ.வே.சாமிநாதையர், தேசீயகவி சுப்பிரமணிய பாரதி, கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை வரை பலரைப் பற்றிய செய்திகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும், குறிப்பும், செய்தியும் வையாபுரிப் பிள்ளை அவர்களின் சொந்த முத்திரை பெற்றது தான்.

தொல்காப்பியரையும், வள்ளுவரையும், சங்ககாலத்துக் கபிலரையும், மாணீக்கவாசகரையும், பவணந்தியையும், குமரகுருபரர், இராமலிங்கஸ்வாமிகள், சுந்தரம் பிள்ளை, வி. கனகசபைப் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையையும், மற்றவர்களையும் நமக்கு மிகவும் நெருங்கியவர்களாக அறிமுகம் செய்து வைக்கிறார்.

இந்தப் பேராசிரியருக்கு என்னமோ மலையாளப் பிரதேசத்தில் ஒரு மோஹம் – அதன் காரணமாகவே தொல்காப்பியரையும் மற்றவர்களையும் மலை நாட்டினருடன் தொடர்புள்ளவராக விவரிக்க முயலுகிறார் என்று சொல்ல முடியாதபடி ஆராய்ச்சி நடத்துகிறார். சாதாரணமாகப் பண்டிதர்களும் பாமரர்களும் ஏற்றுக்கொள்ளுகிற பழைய கால வரையறைகளை இவர் ஏற்றுக் கொள்வதில்லை என்பதில் பண்டிதர்களிலே ஒரு சாரார்க்குக் கோபம் என்று நான் கேள்விப் பட்டதுண்டு.. ஆனால் தொல் காப்பியரின் காலத்தையும், கம்பரின் காலத்தையும் விவாத முறையில் அவர் நிர்ணயித்துள்ளதைப் பார்க்கும்போது இதை மீறி யாரும் எதுவும் சொல்லி விட முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது.

வையாபுரிப் பிள்ளை என்றவுடன் நமக்கு ஒரு புது முறையான விஞ்ஞான ரீதியாக ஏற்கப்பட்ட ஒரு ஆராய்ச்சிப் பண்பும், அறிவும் நினைவுக்கு வருகின்றன. சொல்ல முடியாத பழசு என்று நம்பப்பட்டதை எல்லாம் திறமான புலமையுடன் கால அறுதியிட்டுக் கண்டறிந்து கூறியவர். அவர் விளக்கமாக ஆராய்ந்து கண்ட முடிவுகள் அசைக்க முடியாதவையாகவே என் போன்றவர்களுக்குத் தோன்றுகின்றன. அவரைப் பற்றி அபிப்பிராயம் சொல்லுகிறவர்கள், அவர் கூறியுள்ள விஷயங்களை விட்டுவிட்டு, அவரைப் பற்றியே கண்டனங்கள் செய்து திருப்திப்பட்டு விடுகிறார்கள் என்று தோன்றுகிறது. நானும் இம்மாதிரி கண்டனங்களுக்கு ஆளாகியவனாதலால், பிள்ளையவர்களுடைய கால ஆராய்ச்சி பெருமளவில் சரியாகவே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

தமிழ் பற்றிய வரையில் கால ஆராய்ச்சி, மொழி ஆராய்ச்சி, அகராதி முதலியவற்றில் மட்டுமே பிள்ளை ஈடுபட்டார் என்பது பொருந்தாது. இலக்கிய விமரிசகராகப் பழசையும், புதுசையும் பற்றி அவரது கட்டுரைத் தொகுப்புகளிலே பல விஷயங்கள் அடங்கிக் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் வரிசைப் படுத்தி, இன்றைய வாசகர்களுக்குத் தருகிற காரியத்தை யாராவது பதிப்பாசிரியர்கள் மேற்கொண்டு செய்து தரவேண்டியது மிகவும் அவசியம்.

பழசில் இத்தனை ஈடுபாடும், ஆராய்ச்சியும், விமரிசனக் கண்ணோட்டமும் உள்ள பிள்ளை இன்றைய இலக்கிய வளத்தையும், வளர்ச்சியையும் புறக்கணிக்கவில்லை.. அவரே சிறுகதைகளும், நீண்ட கதைகளும் எழுதிப் பார்த்தார் என்பது ஒரு புறமிருக்க, அங்கங்கே தன் கட்டுரைகளில் இன்றையப் பத்திரிகைகள், நாவல்கள், சிறுகதைகள், வசன இலக்கியம், தேசபக்தி முதலியன பற்றித் தன் கருத்துக்களைத் தந்திருக்கிறார்.

வையாபுரிப் பிள்ளையவர்களுடைய நூல்களிலே சரித்திர அறிவும், ஆற்றலும், கலை உணர்ச்சியும், விமரிசன நோக்கும் பின்னிக் கிடக்கின்றன. தேடி எடுத்துப் பிரித்து நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது மிக மிக அவசியம். வளரும் தமிழ் இலக்கியத்துக்கு இன்றியமையாத ஒரு காரியம் இது. இந்தக் காரியத்தைச் சாத்தியமாக்குகிற, சுலபமாக்குகிற அவரது சிறப்பான நூற்பதிப்புகள் நமக்குத் தேவை..

பல மாணவர்களுக்கு இலக்கியத்தில் ஈடுபாடு ஏற்படுத்தித் தந்தவர். இந்த விஷயத்தில் அவர் மிகவும் சிறப்பாகச் செயலாற்றியவர் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பண்டைத் தமிழ் இலக்கியத்தையும், இன்றைய தமிழ் இலக்கியத்தையும் பற்றிச் சலிப்பில்லாமல் படிக்கக் கூடிய நானூறு பக்கங்கள் கொண்ட ஒரு நூலை இயற்றமுடியும் என்று சாதித்துக் காண்பித்தவர் வையாபுரிப் பிள்ளை. இது அவர் தனிப் பெருமை !!

(தகவல் ஆதாரம் – இலக்கிய விமர்சனங்கள் – க.நா.சு. கட்டுரைகள் – பாகம் இரண்டு – தொகுப்பாசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் — காவ்யா வெளியீடு முதற்பதிப்பு 2005)