டென்ஹாட் தளத்தில் நாஞ்சில் நாடன் தனக்கு பிடித்த பத்து இலக்கியங்கள் எவை என்று சொன்னதை காணலாம். சவுகரியத்துக்காக அவை இங்கே மீண்டும்:

1. அப்பர் – தேவாரம்
2. கம்பர் – இராமாயணம்
3. திருமந்திரம்
4. குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்
5. முத்தொள்ளாயிரம்
6. நகுலன் கவிதைகள்
7. பிரமிள் கவிதைகள்
8. சுந்தர ராமசாமி சிறுகதைகள்
9. அசோகமித்திரன் சிறுகதைகள்
10. அ மாதவன் கதைகள்

இவற்றில் முதல் ஏழுக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம். கவிதைகளை கொண்டால் ஓடி விடுவேன். அ. மாதவனை நான் இன்னும் படித்ததில்லை.

ஆனால் சுந்தர ராமசாமியின் சிறுகதை தொகுப்பு இருக்கிறது. உலகத் தரம் வாய்ந்த எழுத்தாளர். இப்போது நினைவு வரும் கதைகள் “கோவில் மாடும் உழவு மாடும்”, “விகாசம்”, “சீதை மார்க் சீயக்காய்த் தூள்” போன்றவை. விகாசம் மிகவும் அற்புதமான கதை. கண்ணில்லாத ராவுத்தர் ஒரு கணக்கு ஜீனியஸ். துணிக் கடையில் கூட்டம் குவியும்போது அவர் முதலாளிக்கு மிகவும் தேவையாக இருக்கிறார். ஆனால் ஒரு கால்குலேட்டர் அவரை மிக சுலபமாக replace பண்ணி விடுகிறது. தனது ஞாபக சக்தியால் அவர் முதலாளியின் மானேஜராக மறு அவதாரம் எடுக்கிறார்.

அசோகமித்ரனை பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். “காந்தியும் புலிக் கலைஞனும்”, “பிரயாணம்” போன்றவை மிக பிரமாதமான கதைகள். ஒரு கதையில் கார் ஓட்ட திடீரென்று தெரிந்துவிடும் அந்த நொடியை பற்றி எழுதி இருப்பார். மன்னன்!