நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பதிவில் புலவர் என்.வி. கலைமணி பற்றி விவரங்கள் தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். சேதுராமன் அவர்கள் கஷ்டப்பட்டு விவரங்கள் தேடி உள்ளார். ஓவர் டு சேதுராமன்.

எழுத்தாளர், பத்திரிகையாளர் என்று கார்த்திக் சந்திர தத் பதிப்பித்துள்ள WHO IS WHO OF WRITERS (1999) சொல்கிறது – தமிழரசி என்ற வாரப்பத்திரிகையை வெளியிட்டு வந்தவர், நூற்றைம்பதுக்கும் மேலான புத்தகங்கள் எழுதியுள்ளார் என்றும் தெரிகிறது. இலக்கியம், நுண்கலைகள், அரசியல், இதழியல் முதலியவற்றைப் பற்றியுமல்லாது, நாவல்களும் எழுதியுள்ளார்.

ஐம்பதுகளில், பல்வேறு தினசரி பத்திரிகைகளில் பணி புரிந்துள்ளார் – இவற்றுள் முக்கியமானவை அண்ணா தொடங்கிய திராவிட நாடு, முரசொலி, தனி அரசு, தென்னகம், எரியீட்டி நாளிதழ்களாகும்.

புத்தகங்களின் சில தலைப்புகள் — “தேசத் தலைவர் காமராஜ்”, “ஏழைகள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்”, “நேருவும் கென்னடியும்”, “நீதி மன்றத்தில் எம்.ஜி.ஆர்” முதலான வாழ்க்கைக் குறிப்புகள், “வஞ்சக வலை”, “மரண மாளிகை” போன்ற சரித்திர நாவல்கள், “இலட்சிய ராணி”, “சாம்ராட் அசோகன்” முதலிய நாடகங்கள், “சிந்தனை சிக்கல்கள்” என்ற அறிவியல் புத்தகம் — இவருடைய படைப்புகளாகும்.

டிசம்பர் 30, 1933ல் பிறந்த இவர் அண்ணமலைப் பல்கழகத்தின் மாணவர் – சரித்திரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்.. சென்னைப் பல்கலைக்கழகத்தின் ‘புலவர்’ பட்டமும் பெற்றவர்.

யு.என்.ஐ. செய்திக் குறிப்புப்படி, புலவர் கலைமணி 2007 மார்ச்சு மாதம் 6 தேதி காலமானார் என்று தெரிகிறது – மனைவி, இரண்டு பெண்கள், இரண்டு பிள்ளைகள் கொண்டது இக்குடும்பம்.

என்.வி. என்ற இனிஷியல்களும், அண்ணா மற்றும் கழக நாளிதழ்களின் தொடர்பும், இவர் கழகத்தை நிறுவிய ஐவர்களுள் ஒருவரான என்.வி.நடராசன் குடும்பத்தைச் சேர்ந்தவரோ? என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது.

(தகவல் உபயம் – Who is Who of Indian Writers K. C. Dutt (1999) – UNI Press Release Mar. 7, 2007)

ஆர்வி: சேதுராமன் திரட்டிய தகவல்களை வைத்துப் பார்க்கும்போது நாட்டுடமை ஆக்கும் அளவுக்கு என்.வி. கலைமணி என்ன சிறப்பாக எழுதி இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் இங்கே உள்ள விவரங்கள் ஒரு சிறு அறிமுகமே. அதை மட்டும் வைத்து முடிவெடுப்பது சரி இல்லை. அரசுதான் தான் ஏன் ஒருவரை இப்படி கவுரவப்படுத்துகிறது என்று தெளிவுபடுத்த வேண்டும்.