சின்ன அண்ணாமலையும் கல்கியும்

சின்ன அண்ணாமலையும் கல்கியும்

நாட்டுடமை பதிவில் அவ்வளவாக விவரம் தெரியவில்லை என்று குறைப்பட்டுக்கொண்டவர்களில் சின்ன அண்ணாமலையும் ஒருவர். அவரைப் பற்றி சேதுராமன் அவர்கள் திரட்டிய விவரங்கள் கீழே.

தனது பத்தாவது வயதிலேயே, தனது ஊரிலேயே, தனது உறவினர் வீட்டிலேயே, மஹாத்மா காந்தியைத் தரிசிப்பதற்கு ஒருவர் எத்தனை கொடுத்து வைத்திருக்க வேண்டும் ? இந்த பாக்கியம் பெற்றவர் காரைக்குடியைச் சேர்ந்த சின்ன அண்ணாமலைதான்.. இளைஞன் அண்ணாமலையின் சிறிய தாயார் உமையாள் ஆச்சி, ராய.சொக்கலிங்கத்தின் துணைவியார் – 1934ல் மஹாத்மா காரைக்குடி வந்த போது இந்த நிகழ்ச்சி நடந்தது. இது மட்டுமல்ல, பிற்காலத்திலே, காந்தியின் ‘ஹரிஜன்’ பத்திரிகையை தமிழில் வெளியிட அண்ணலிடமே அனுமதி பெற்றவரும் கூட. இவருக்குச் சின்ன அண்ணாமலை என்ற பெயர் சூட்டியது வேறு யாருமல்ல, இராஜாஜி அவர்களேதான்.

காரைக்குடி சா.கணேசனின் உறவினர் இவர் – சின்னஞ்சிறு பிராயத்திலேயே தேசத்தைப் பற்றியும் காந்திஜியைப் பற்றியும் நன்கறிந்து, தேசப்பணிகளிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அண்ணாமலை.

இளம் வயதில் காரைக்குடியிலும், மலேயாவில் டெலுக்கான்சன் என்ற ஊரிலிருந்த ஆங்கிலோ-சைனீஸ் பள்ளியிலும் படித்தவர். தனது பதின்மூன்றாவது வயதிலே உமையாள் என்ற பெண்ணைத் திருமணம் புரிந்து கொண்டார்.

மேடையில் பேசுபவர்களுக்கு சுவையாக எழுதத் தெரியாது, எழுதத் தெரிந்தவர்களுக்கு மேடையில் அழகாகப் பேச வராது.அண்ணாமலை இதற்கு விதிவிலக்கு! சின்ன அண்ணாமலை அபூர்வமான பல ஆற்றல்கள் படைத்தவர், பதினாயிரம் இருபதினாயிரம் ஜனங்கள் அடங்கிய கூட்டத்திலே மணிக்கணக்கில் பிரசங்கமாரி பொழியக்கூடியவர், ஆவேசமாகப் பேசுவார், அழ வைக்கும்படி பேசுவார், சிரித்து வயிறு புண்ணாகும்படியும் பேசுவார் – இவரைப் போன்றவர்கள் நமது சட்ட சபையில் இருந்தால் எவ்வளவு கலகலப்பாகும் என்று நான் எண்ணுவது உண்டு. பேசும் ஆற்றலைப் போல் எழுதும் ஆற்றல் படைத்தவர் சின்ன அண்ணமலை – அழகிய சிறு கதைகள், சிறந்த நாவல்கள், ரசமான பிரயாணக் கட்டுரைகள் பல எழுதியிருக்கிறார் (“காணக் கண்கோடி வேண்டும்” என்ற நூலின் முன்னுரையில் கல்கி எழுதியது) சின்ன அண்ணாமலை கல்கி கிருஷ்ணமூர்த்தியைத் தன் குருவாகவும், வழிகாட்டியாகவும் வரித்துக் கொண்டவர்.

திரு. சத்தியமூர்த்தி கலந்து கொண்ட அரசியல் மானாட்டில், அண்ணமலை பேசி முடித்தவுடன் அவரைப் பாராட்டி நாவன்மையைப் புகழ்ந்த சத்தியமூர்த்தி தான் அணிந்திருந்த காவி கலர் கதர் அங்கவஸ்திரம் ஒன்றைச் சபையின் கரகோஷத்தினிடை அவருக்குப் போர்த்தினார். அந்த நினைவாகவே இவர் தன் வாழ் நாள் முழுதும் கதரில் காவி நிறச் சட்டையையே அணிந்து வந்தார்.

ஆகஸ்ட் , 1942ல் நடந்த விடுதலைப் புரட்சியின் போது, பல பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு கனல் தெறிக்கப் பேசியவர், போலீஸாரால் கைது செய்யப்பட்டு திருவாடானை சிறையில் அடைக்கப்பட்டார் – மறு நாள் பகலில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறைக்கதவை உடைத்துத் திறந்து இவரை விடுதலை செய்தார்கள்.

இவர் நடத்திய தமிழ்ப் பண்ணை புத்தகாலயம், இராஜாஜி, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, மற்றவர்களின் புத்தகங்களைப் பதிப்பித்தது. அண்ணாமலை எழுதிய முதல் புத்தகம் “சீனத்துச் சிங்காரி”

மகாத்மா காந்தி கடைசியாகச் சென்னை வந்த போது, இராஜாஜி அண்ணாமலையை அண்ணலுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அண்ணாமலையின் சிறைவாசம், விடுதலை பற்றிச் சொல்லிய பிறகு ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் வெளியிட விரும்புகிறார் அண்ணாமலை, உங்கள் அனுமதி தேவை என்றிருக்கிறார் இராஜாஜி. “நஷ்டம் வராமல் பத்திரிகை நடத்துவாயா” என்று காந்தி கேட்டதற்கு “இவரும் உங்களைப் போல் வைசிய சமூகத்தைச் சேர்ந்தவர்தான்” என்றாராம் இராஜாஜி. மகிழ்ச்சியில் திளைத்த மகாத்மா, உடனேயே ‘தமிழ் ஹரிஜன்’ துவக்க விழா நடத்தி விடலாம் என்று சொல்லி முதல் காரியமாக தமிழிலேயே ‘தமிழ் ஹரிஜன்’ என்றெழுதித் துவக்கி வைத்தார்.

அண்ணாமலை கல்கியைச் சந்தித்ததே ஒரு சுவாரசியமான கதை. தேவகோட்டையில் ராஜாஜி வந்திருந்த போது ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. அண்ணாமலை அக்கூட்டத்தில் ஒரு பேச்சாளர். அண்மையில் கல்கி எழுதி ஆனந்தவிகடனில் தலையங்கமாக வெளி வந்த ராஜாஜி பற்றிய விஷயங்களை நன்றாகவே மனப்பாடம் செய்திருந்தார் அண்ணாமலை. முதலில் மேடை நடுக்கம் தான் – ராஜாஜி ஊக்கிவிடவும் கணீரென்ற குரலில் தான் பேச வேண்டியதை தைரியமாக எடுத்துரைத்தார். ராஜாஜி ஆசிகள் வழங்கி கூடவே “நன்றாக மனப்பாடம் செய்திருக்கிறாய்” என்றார்.

பேச்சு முடிந்தவுடன் மேடையில் பின்புறம் அமர்ந்தார் அண்ணாமலை. அருகில் இருந்த ஒருவர் ‘ரொம்ப நன்றாகப் பேசினீர்கள் – இவ்வளவு விஷயம் எங்கு படித்தீர்கள்’ என்று கேட்டார். அவரிடம் உண்மையை மறைக்கக் கூடாதென்று ”ஆனந்தவிகடனில்” என்றார் அண்ணாமலை. யார் எழுதியது தெரியுமா என்றார் அந்த மனிதர். கல்கி என்றார் அண்ணாமலை. அவரைத் தெரியுமா? தெரியாது, நான் பார்த்ததில்லை. பார்த்தால் என்ன செய்வீர்கள்? சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்வேன். “அப்படியானால் என்னையே நமஸ்காரம் பண்ணுங்க” என்றார். ஏன் என்று கேட்டார் அண்ணமலை. நான்தான் அந்தக் கல்கி என்று பதில் வந்தது (அண்ணாமலை எழுதிய “சொன்னால் நம்ப மாட்டீர்கள்” என்ற புத்தகத்திலிருந்து)

தன் வாழ்வில் அனேக தேசபக்தர்களைச் சந்தித்துப் பழகும் பாக்கியம் பெற்றவர் சின்ன அண்ணாமலை.

சிவாஜி ரசிகர் மன்றம் ஆரம்பித்ததில் ஒரு முக்கியமான நோக்கம் இருந்தது.. 1967 தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது, தொண்டர்கள் ஏமாற்றமும் சோர்வும் அடைந்திருந்தனர். அப்போது தமிழ் நாடு முழுவதும் இளைஞர்கள் பலர் சிவாஜிக்கென்று அனேக ரசிக மன்றங்கள் வைத்திருக்கின்றனர், இவர்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்தால் காங்கிரசுக்குப் புதிய பலம் கொண்டு வரலாம் என்று முடிவு செய்தனர்.

இதன் காரணமாகவேதான் 1969 ஆகஸ்டு மாதம் ” அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம்” என்ற அமைப்பு உருவாகியது.
அதன் முதல் பேரவை அக்டோபர் முதல் தேதியன்று சென்னையில் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் நடைபெற்றது. சரித்திரம் காணாத ஊர்வலமும், தென்னாட்டு, வடனாட்டு நட்சத்திரங்களும், அலை மோதினர். காங்கிரசைப் பலப்படுத்த அண்ணாமலை மறைமுகமாகச் செய்த இந்த ஏற்பாடு காங்கிரஸ் தலைவர்களுக்கு நாட்டமில்லாததால் அதன் இலக்கை எட்டிப் பார்க்க முடியவில்லை. அண்ணாமலை ஏழு வருடங்கள் இந்த அமைப்பின் தலைவராக இருந்தார்.

நிறைய நூல்கள் இவர் எழுதியும், அந்த நூல்களின் விவரங்கள் கிடைக்கவில்லை — இவர் எழுதிய முதல் நூல் “சீனத்துச் சிங்காரி” நினைவுக்கு வரும் மற்ற நூல்கள் – தியாகச் சுடர், சொன்னால் நம்ப மாட்டீர்கள், கண்டறியாதன கண்டேன், காணக் கண் கோடி வேண்டும் என்பவை.

(தகவல் உபயம் – சொன்னால் நம்ப மாட்டீர்கள்! – சின்ன அண்ணாமலை – குமரன் பதிப்பகம்}

ஆர்வி: சின்ன அண்ணாமலையின் சொன்னால் நம்ப மாட்டீர்கள் புத்தகத்தை சிறு வயதில் நானும் படித்திருக்கிறேன். அவர் கல்கி, ராஜாஜி ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். பின்னாளில் சிவாஜி, காமராஜ் ஆகியோருக்கு நெருக்கமாக மாறினார். ம.பொ.சிக்கு சின்ன அண்ணாமலையிடம் ஒரு வேலை செட்டப் செய்ய ராஜாஜி நடத்திய முயற்சிகள் ஏனோ பலிக்கவில்லை. அவருக்கு கல்கி ஒரு காரே வாங்கிக் கொடுத்திருக்கிறார். சி. அண்ணாமலையின் முதல் கார் அதுதானாம்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள் புத்தகத்தில் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கும் விஷயம் ஒன்று – ஒரு முறை இவர் வெளியூரில் எங்கோ பிரசாரத்துக்கு போய்விட்டு இரவில் டீ குடிக்க ஒரு கடையில் நிறுத்தினாராம். மக்கள் இரவு ஆட்டம் பார்த்துவிட்டு சாரி சாரியாக வந்து கொண்டிருந்தார்களாம். இவர் என்ன படம், எப்படி இருந்தது என்று எல்லாரையும் கேட்டுக் கொண்டிருந்தாராம். வீரபாண்டிய கட்டபொம்மன் படம். எல்லாரும் சிவாஜி நடிப்பை சிலாகித்துக் கொண்டிருந்தார்களாம். ஒருவர் மட்டும் இதெல்லாம் ஒரு படமா என்ற ரேஞ்சில் பேசிக் கொண்டிருந்தாராம். சி. அண்ணாமலை அவரிடம் உங்களுக்கு சிவாஜி நடிப்பு பிடிக்கவில்லையா என்று கேட்டாராம். அவர் சொன்னாராம், நடிப்பு எல்லாம் சரி, ஆனால் எங்க எம்ஜிஆரா இருந்தா வெள்ளைக்காரங்களை எல்லாம் சுட்டுட்டு குதிரை மேல ஏறி வந்து முடிசூட்டிக்குவாரு! என்று ஒரு போடு போட்டாராம்.

அந்த புத்தகத்தில் மக்களே திரண்டு வந்து ஜெயிலை உடைத்து விடுதலை செய்த ஒரே மனிதர் தான்தான் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். “பூட்டை உடை” என்ற புத்தகம் எழுதியதற்காக கேஸ் போடப்பட்டதும், இவர் பூட்டை உடை என்றால் என்ன என்று தமிழ் தெரியாத ஜட்ஜ், ப்ராசிக்யூட்டர் ஆகியோருக்கு விளக்க முயற்சி செய்ததால் மூன்று மாதம் ஜெயில் தண்டனை கிடைக்க வேண்டியது ஆறு மாதமாக ஆனதையும் நகைச்சுவையாக விவரிக்கிறார்.

அவர் ஒரு சிறந்த தேச பக்தர், பேச்சாளர் என்று தெரிகிறது. ஆனால் நாட்டுடமை ஆக்கப்படும் அளவுக்கு என்ன எழுதிவிட்டார் என்பது இன்னும் தெரியவில்லை.

Advertisements