இதுவும் ஒரு மீள்பதிப்பு. முந்தைய பதிவை சில டெக்னிகல் காரணங்களால் எங்கும் லிங்க் செய்ய முடியவில்லை. அதனால் இந்த மீள்பதிப்பை போட்டுவிட்டு பழைய பதிவை நீக்கிவிட்டேன்.

1919-இல் பாரதியுடன் ராய.சொக்கலிங்கம்

1919-இல் பாரதியுடன் ராய.சொக்கலிங்கம்


9-11-1919 அன்று காரைக்குடி இந்து மதாபிமான விழாவில் கலந்து கொண்ட மஹாகவி பாரதியார் – அவருக்கு வலப்புறம் ராய.சொ.வும் இடப்புறம் சொ.மு.வும். (இந்த சொ.மு. யாரென்று தெரியவில்லை)

நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்துக்கள் பற்றிய பதிவில் பல பேரை பற்றி தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். திரு. சேதுராமன் அவர்கள் ராய. சொக்கலிங்கத்தை பற்றி சிரமப்பட்டு கண்டுபிடித்து கீழே உள்ளதை எழுதி இருக்கிறார். அவருக்கும் அவருக்கு விவரங்களை தந்து உதவிய காரைக்குடி சித. ராயப்ப செட்டியாருக்கும் எனது நன்றி! இது அவரது guest post.

இது போன்ற விஷயங்களை கண்டுபிடிப்பது சுலபம் இல்லை. கூகிளில் தேடும் விஷயம் இல்லை. சேதுராமன் எப்படி சித. ராயப்ப செட்டியாரை கண்டுபிடித்தாரோ! சித. ராயப்ப செட்டியார் விவரங்கள் கொடுத்து உதவியது மட்டும் இல்லாமல் ஒரு புத்தகத்திலிருந்து இந்த புகைப்படத்தையும் scan செய்து உதவி இருக்கிறார். வளவள என்று எழுதுவதை காட்டிலும் ஒரு ஓவியமோ, புகைப்படமோ விஷயத்தை நமக்கும் சுலபமாக சொல்லிவிடுகிறது. இதை பார்த்தவுடன் நமக்கும் ராய.சொ. பாரதியின் காலத்து அறிஞர் என்று தெரிந்துவிடுகிறது பாருங்கள்!

எழுத்துகளை நாட்டுடமை ஆக்கினால் மட்டும் போதாது, அவர்களது புத்தகங்களை வெளியிடவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எழுதி இருந்தேன். புத்தகங்களை வெளியிடாவிட்டாலும், எழுத்தாளர்களின் வாழ்க்கை குறிப்புகள், அவர்கள் ஏன் இந்த கவுரவத்துக்கு தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்றாவது சிறு குறிப்பாக வெளியிட வேண்டும். அப்படி அரசு செய்யும் வரை நம்மை போன்று சாதாரண மனிதர்கள்தான் இதற்கு சிரமப்பட வேண்டும். திருவாளர்கள் சேதுராமன், சித. ராயப்ப செட்டியார் ஆகியோருக்கு ஓ பக்கங்கள் ஞானி ஸ்டைலில் இந்த வார பூச்செண்டு கொடுக்க வேண்டியதுதான்! (இப்போது சேதுராமன் மேலும் சின்ன அண்ணாமலை, என்.வி. கலைமணி, அகஸ்தியலிங்கம், மு. ராகவையங்கார் ஆகியோரை பற்றியும் விவரங்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறார்.) உங்களுக்கும் பூச்செண்டு வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று புரிகிறதா? 🙂

ஓவர் டு சேதுராமன்.

தமிழ்க் கடல் ராய.சொ. 30-10-1898 அன்று, காரைக்குடியில் பிறந்தவர். தந்தையின் பெயர் ராயப்ப செட்டியார், தாயார் அழகம்மை ஆச்சி. இளமையில் ஆசிரியர் சுப்பையா திண்ணைப் பள்ளியிலும், பின்னர் தனது பதினெட்டாவது வயதிலிருந்து இரண்டு வருஷங்கள் பண்டித சிதம்பர அய்யர் அவர்களிடம் தமிழ் இலக்கண இலக்கியப் பாடங்கள் பயின்றார்.

ராய.சொ. அவர்கள் திருமதி உமையாள் ஆச்சியை பள்ளத்தூரில் 1918ல் திருமணம் புரிந்து கொண்டார்கள். இத்திருமண வாழ்க்கை 43 ஆண்டுகள் தொடர்ந்தது.

தமிழ் இலக்கணப் பயிற்சி நடக்கையில் அப்போது ‘சமூகச் சீர்திருத்தத் தந்தை’ என்றழைக்கப்பட்ட திரு.சொ.முருகப்பாவின் தொடர்பு ஏற்பட்டது.. பல அன்பர்களைச் சேர்த்துக் கொண்டு ‘இந்து மதாபிமான சங்கத்தைத் தோற்றுவித்தனர் மஹாகவி சுப்ரமணிய பாரதியார் 1919ல் நேரில் வந்து இச்சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவாழ்த்துக் கவி பாடிச் சங்கத்தைப் பெருமைப் படுத்தினார். சங்கத்தின் தலைவராக ராய.சொ. பல ஆண்டுகள் பணி புரிந்துள்ளார்.

சொ.முருகப்பா 1920ல் தொடங்கிய ‘தன வைசிய ஊழியன்’ பத்திரிகைக்கு, இரண்டாவது ஆண்டிலிருந்து ராய.சொ. ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் இப்பத்திரிகையின் பெயர் ‘ஊழியன்’ என்று மாற்றப்பட்டது. அடுத்த இருபது ஆண்டுகள் இப்பத்திரிகை காரைக்குடியிலும், சென்னையிலும் வெளி வந்தது. இப்பத்திரிகையில் உதவி ஆசிரியர்களாகப் பணி புரிந்தவர்களில், வ.ரா, தி.ஜ.ர., புதுமைப்பித்தன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்.

நாட்டின் விடுதலைப் பணிகளில் காந்தியடிகள் காட்டிய நெறியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ராய.சொ.1932ல் சட்ட மறுப்பு இயக்கத்தில் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அடைந்தார். நகரத்தார் வகுப்பில் அரசியல் காரணமாக முதன் முதலாகச் சிறை சென்றவர் ராய.சொ தான்.

தன்னுடைய தென்னாட்டுப் பயணத்தின் போது, 1934-ம் ஆண்டு, அண்ணல் காந்தியடிகள், ராய.சொ.குடிலுக்கு வந்து, விருந்துண்டு அவரைப் பெருமைப் படுத்தியது இன்றும் எல்லோருடைய நினைவில் இருக்கிறது. காரைக்குடி நகரசபைத் தலைவராக இருந்தபோது, காரைக்குடியில் இருந்த நான்கு ஆரம்பப் பள்ளிகளைப் பதினேழாகப் பெருக்கினார்.

இந்து மதாபிமான சங்கம் 1958ல் ராய.சொ.வுக்கு “தமிழ்க்கடல்” என்ற பட்டம் வழங்கியது.. 1961ல் இரங்கூன் நகர நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் தர்ம பரிபாலன சபை அவருக்கு “சிவமணி”என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தனர். தொடர்ந்து 1963ல் கோலாலம்பூர் அருள் நெறித் திருக் கூட்டம் அவரை “சிவம் பெருக்கும் சீலர்” என்று கௌரவம் செய்தனர்.

ஆலயப் பணிகளில் வெகுவாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் – தென்னாட்டிலும், வட நாட்டிலும் உள்ள திருத்தலங்களுக்கெல்லாம் விஜயம் செய்தவர்.

தன் வாழ்க்கைக் காலத்தில் திரட்டிய, புத்தகங்கள், பத்திரிகைகள் முதலானவற்றைக் கொண்ட பெரும் நூல் நிலையத்தை, காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு வழங்கினார். இத்தொகுப்பு, கிடைத்தற்கரிய பதிப்புகளும், திங்கள் இதழ்களும், அகர நூல்களும், திருக்குறள் இராமாயணம் பல பதிப்புகளும், இலக்கண, இலக்கிய, சமய, அரசியல், பல்வேறு உரை நூல்கள், கொண்டது.

காந்தி நூற்றாண்டு விழாவினையொட்டி அன்னார் மீது தாம் முன்னர் இயற்றிய 901 பாடல்களையும் தொகுத்து “காந்தி கவிதை’ என்ற தலைப்பில் ஒரு கவிதை நூல் சென்னையில் வெளியிட்டார்.

இவரது படைப்புகளில் “தேனும் அமுதும்”, “திருவாசகத் தேன்”, “திருத்தலப்பயணம்” முதலான பக்தி நூல்கள் இருபத்தியெட்டும், காவேரி, குற்றால வளம் முதலான உரை நடைகள் ஐந்தும், “காந்தி பிள்ளைத்தமிழ்”, “காந்தி பதினெண்பா” முதலான எட்டு கவிதை நூல்களும், “சேதுபதி விறலிவிடு தூது”, “கூளப்ப நாயக்கன் விறலிவிடு தூது” முதலான நான்கு இலக்கிய வெளியீடுகளும், உள்ளன. இவை தவிர “கம்பனும் சிவனும்”, “வில்லியும் சிவனும்” என்ற ஆராய்ச்சி நூல்களும் இவர் படைத்துள்ளார்.

முன்னாள் இந்து மதாபிமான சங்கம் பொன் விழா கண்ட போது, உமையாள் மண்டபம் என்ற பெயரால் மேல் மாடி ஒன்று கட்டிக் கொடுத்திருந்தார்.. அழகப்பா கல்லூரி வட்டத்திலிருந்து ஓய்வெடுத்ததும், இம்மண்டபத்தில் குடியேறி தமது இறுதி நாள் வரை வாழ்ந்த ராய.சொ. 30-9-1974ல் மறைந்தார்.

(ஆதாரம் – “தமிழ்க் கடல் ராய.சொ. அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு” — அன்பளித்தது சித. ராயப்ப செட்டியார், காரைக்குடி)

மீண்டும் ஆர்வி:
இது ராய.சொவின் வாழ்க்கைக் குறிப்பு. அவரது எழுத்துகளை பற்றி சுருக்கமாகவே விவரங்கள் உள்ளன. பொதுவாக மரபு கவிதைகள் எழுதி இருக்கிறார், ஊழியன் என்ற பத்திரிகையை நடத்தி இருக்கிறார் என்று தெரிகிறது. அரசே பதிப்பித்தால் ஒழிய இவரது எழுத்துக்கள் மறு பதிப்பு பெற வாய்ப்புகள் குறைவுதான். இருப்பதை வைத்து பார்க்கும்போது இவர் எழுத்துக்கள் ஏன் நாட்டுடமை ஆக்கப்பட்டன என்று விளங்கவில்லை.

Advertisements