hitler

சமீபத்தில் டிவிடியில் பார்த்த திரைப்படம் டவுன்பால்(Downfall). (ராமச்சந்திரன் உஷா இணையத்தில் இதைப் பற்றி ஒரு பதிவு இருந்ததாக ஞாபகம்) திரைப்படம் நனறாக எடுத்துள்ளார்கள். அதைப்பற்றி அவார்டாகொடுக்கிறாங்க? பிளாக்கில் பிறகு பதிவதாக திட்டமிட்டுள்ளேன். இது நெடுநாட்களாக நான் படித்து தெரிந்து கொண்ட உலகத்தலைவர்களைப் பற்றி ஒரு மதிப்பீடு எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த ஒரு எண்ணத்தை செயல்படுத்த உதவியது. ஹிட்லரைப் பற்றி முதலில் பார்ப்போம்.

மனிதர்களுக்கு வரும் குரூர எண்ணங்கள் பலவற்றை வெளிப்படுத்துவதற்க்கு சந்தர்ப்பம், மற்றும் இணக்கம் அளிக்காத சமுதாய அமைப்பு எவ்வளவு இன்றியமையாதது என்பது இவர் வாழ்க்கை மூலம் அறிந்துக்கொள்ளலாம். ஆசை (நிறைவேறாததால்) கோபமாகி, கோபம் (முற்றியதால்) மூர்க்கமாகி, மூர்க்கம் (இயலாமையால்) வெறியாகி, வெறி பிற மனிதர்களின் எந்தவித உணர்ச்சிகளை எற்றுக் கொள்ளாத நிலைப்பாட்டிற்க்கு பல தலைவர்களை எடுத்துச்சென்றதாக வரலாறு கூறுகிறது. மனிதர்கள் தங்கள் உணர்ச்சிகளுக்கு வரையரையைகளை வகுத்துக்கொள்ளாமல் ஒவ்வொரு வரையரைகளயும் மீறும் பொழுது தங்கள் வெளிப்பாடுகளின் சீற்றத்திற்கு ஏற்றவாறு சராசரி மனிதன், பேராசைகாரன், கோபக்காரன், மூர்க்கன், வெறியன் என்பது போன்ற ஆளுமைகளுடனும் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன் இல்லாததால் அல்லது கட்டுப்படுத்தும் கலையை கற்றுக்கொள்ளாததால் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் சில நேரங்களில் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

குரூரத்தின் எல்லயை கடந்துவிட்டவர்களுள் (வரலாறு பலரை இவ்வாறு நமக்கு அடையாளம் காட்டுகிறது) ஒருவர் ஏடால்ப் ஹிட்லர் என்று தோன்றுகிறது. தனி மனித வெறுப்பினாலும், தனது குறுகிய பார்வையினாலும் 60 லட்சம் யூதர்களை கொன்று குவித்ததாக வரலாறு கூறுகிறது. இந்தக் கணக்கைப் பற்றிய சர்ச்சை இருந்தாலும், நிச்சயமாக இரத்தம் தோய்ந்த கைகளின் சொந்தக்காரர் ஹிட்லர் என்பதில் மண்ணில் பிறந்த ஒருவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சில புள்ளிவிவரங்களின் படி
இவரால் 20 மில்லியன் முதல் 50மில்லியன் (2 கோடி முதல் 5 கோடி) வரை இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் உயிர் சேதம் உண்டாயிற்று எனக் கூறுவோர் உண்டு. இன்றைய நியோ-நாஜிகளும் (neo-nazis), யூத எதிர்ப்பாளர்களும் (anti-semitic), ஹோலோகாஸ்டை மறுப்பவர்களும் (holocaust deniers) இந்த புள்ளிவிவரங்கள் எதையும் ஏற்க மறுப்பார்கள்.

ஹிட்லர் போன்ற ஒருவரை பற்றி பல உளவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்தும் அது ஒரு முடிவில்லாத ஆராய்ச்சியாகவே எனக்கு தோன்றுக்கிறது. அத்தகைய சிக்கலான் மனநிலை உடையவர். ஹிட்லரிடம் இருந்த பேராபத்தான குணங்கள் பல. தனது எண்ணங்களே உண்மை என நினைத்து அதை நடைமுறைபடுத்த சற்றும் சிந்திக்காமல் உடனே செயலாக்க நினைக்கும் அபாயம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மற்ற விஷயங்களில் சரி. போர் போன்ற பெரு முயர்ச்சிகளிலும் இவர் மிகவும் அலட்சியம் காண்பித்திருக்கிறார். வலிமையற்ற ஆஸ்திரியாவையும், செக்கோஸ்லோவேக்கியாவையும் தட்டிக்கேட்க கூட ஒருவரும் இல்லாத சூழ்நிலையில் அவர் ஜெர்மனியுடன் இணைத்துக் கொண்டார். எளிதில் வென்று சுகம் கண்ட இவர் இதுவே பிற நாடுகளிலும் எதிர்ப்பார்த்தார். போலந்து இவருடைய இந்த மாயையை விலக்கியது. ஏற்றுக்கொள்ளமுடியாமல் நிஜத்தை எதிர் நோக்கினார். அவர் நினைத்தால்தான் ஒப்பந்தங்கள் ஒப்பந்தங்களாகப் பார்க்க்கப்பட்டது. இல்லாவிட்டால் ஒப்பந்தங்கள் அவருக்கு அலட்சியமாயிற்று. ஜோஸப் ஸ்டாலினை கிள்ளுக்கீரையாக நினைத்தார். ஸ்டாலின் இவரைவிட எத்தன், பெரிய சர்வாதிகாரி என்பதை ஏற்க மறுத்தார். பெனிட்டோ முசோலினியயை பயமுறுத்தி தன் வசப்படுத்திய மாதிரி ஸ்டாலினை பயமுறுத்துவதில் வெற்றிப்பெற்றாலும் தன் வசப்படுத்த முடியாத ஒரு இயலாமை. மாஸ்கோ வரை சென்றும் அதை கைப்பற்ற முடியாத ஒரு வெறுப்பு. நெவில் சாம்பர்லினின் எத்தனையோ அறிவுரைகளை நிராகரித்தார். இரண்டாம் உலகப்போர் ஆரம்பத்தில் ஒருவரைத் தவிர மற்றத் தலைவர்கள் (சாம்பர்லின், ரூஸவெல்ட் மற்றும் ஸ்டாலின் உள்ளடங்களாக), அவருடைய செயல்களுக்கு அவ்வளவு எதிர்ப்பை காட்டவில்லை. சாம்பர்லினுக்கு பின்னால் வந்த சர். வின்ஸ்டன் சர்ச்சில் தான் ஹிட்லருக்கு ஈடான ஆத்திரத்துடன் ஹிட்லரை எதிர்த்தவர். ஆனால் ஹிட்லர் அதை அலட்சியப்படுத்தினார் (சர்ச்சில் யூதர்களின் அனுதாபி என்று தெரிந்தும்). அவர் எப்பொழுதும் இங்கிலாந்து தனக்கு ஆதரவு அளிக்கும் என்ற தப்புக் கணக்கு போட்டுக்கொண்டிருந்தார். சாம்பர்லினுடைய மிதமான போக்கு ஹிட்லருடைய இந்த அணுகுமுறைக்கு காரணமாக இருந்திருக்கலாம். டான்ஸிக் யுத்தத்தில் கிட்டதட்ட 2 லட்சம் பிரிட்டிஷ் துருப்புகளை கைப்பற்றியப் பிறகு ”போகட்டும்” என விட்டுவிட்டு ஜெர்மனியின் ராணுவத்திற்கு அதிர்ச்சியையும், தனக்கே சாவு மணியும் அடித்துக்கொண்ட இன்காம்பீட்டண்ட் தலைவர் இவர். இவர் ராஜதந்திரம் புரிகிறது. அதாவது அவருக்கு எப்பொழுதும் சோவியட் யூனியனை தனியாக கைப்பற்றுவதில் சந்தேகம் இருந்துக் கொண்டே இருந்தது. இங்கிலாந்து உதவியுடன் அதை நிச்சயம் கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. இந்த எண்ணம் கண்ணை மறைக்க சர்ச்சிலின் எண்ணங்களை கணக்கிலெடுத்துக் கொள்ள தவறினார். சர்ச்சிலோ பிறரின் புகழை பார்த்து சந்தோஷம் அடையாதவர். (பொறாமை என்று கூட சொல்லலாம் – காந்தியைப் பார்த்து “அரை நிர்வாண பிச்சைக்காரன்” என்றவர்). ஹிட்லரிடம் இவர் காட்டிய வெறுப்பு கணக்கிலடங்காதது. இது அந்த காலத்தில் பலருக்கு புரிந்திருந்தது. ஆனால் புரியவேண்டிய ஹிட்லருக்கு புரியவில்லை.

ஆரிய சுப்ரிமஸி கொள்கை இவருக்கு ஏற்ப்பட்டது தனிப்பட்ட பாதிப்பினால் என்று கருதுகிறேன். தனது ஆரிய பாட்டி வேலை செய்து வந்த வீட்டின் யூதரால் கெடுக்கப்பட்டதை அறிந்ததிலிருந்து யூதர்கள் மேல் ஒரு வித வெறுப்பை வளர்த்துக் கொண்டார். இது போக யூதர்கள் ஆதிக்கமிகுந்த கல்விச் சாலைகளும் மற்ற இடங்களிலும் தனக்கு நியாயம் வழங்கப்படவில்லை என்றும் எண்ணங்களை வளர்த்துக் கொண்டார். யூதர்களை தன் வசதிக்கு ஏற்றவாறு போற்றவோ, தூற்றவோ செய்தார். தூற்றியது 99 சதவிகிதம். (தமிழகத்தில் சிலருக்கு “அவாளை”ப் பார்த்து தாழ்வு மணப்பான்மை. ஐரோப்பாவில் ”அவாளுக்கு” யூதர்களை பார்த்து தாழ்வு மணப்பான்மை – “உலகத்தை பார்த்தேன், சிரித்தேன்” என்ன ஒரு திரைப்படத்தில் வசனம் ஒன்று வரும். அது ஞாபகம் வருகிறது. என்ன என்று சொல்ல?)

Advertisements