பதிமூன்று, பதினான்கு வயதில் ஒரு உறவினரிடம் கல்கி பத்திரிகையிலிருந்து கிழித்து பைண்ட் செய்யப்பட்ட ஐந்து வால்யூம் பொன்னியின் செல்வனைப் பார்த்தேன். ஒரே மூச்சில் ஒன்றிரண்டு நாட்களில் படித்து முடித்தேன். அதற்கு பிறகு அதைப் பற்றி எத்தனையோ நாட்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டே இருந்திருக்கிறேன். ஆதித்த கரிகாலனை உண்மையில் கொன்றது யார்? பெரிய பழுவேட்டரையரா, நந்தினியா, தற்கொலையா, என்று ஒருவர் பின் ஒருவராக அலசி இருக்கிறோம். (எங்களுக்கு தோன்றிய தீர்வு – ஆசிரியர் பொய் சொல்லி இருக்கிறார், இவர்கள் யாரும் இல்லை என்று பொருள்படும்படி சில வரிகளை வேண்டுமென்றே எழுதி இது ஒரு அவிழ்க்கப்படாத முடிச்சாகவே இருக்க வேண்டும் என்று விரும்பி இருக்கிறார்.) சினிமாவாக எடுத்தால் எந்த ரோலுக்கு யார் பொருத்தம் என்று மணிக்கணக்காக வாதிட்டிருக்கிறோம். (இன்றும் இதை பற்றி இணையத்தில் வாதிடுவதை பார்க்கிறேன்) நான் தமிழ் மீடியத்தில் படித்தவன். பல ஆங்கில மீடிய மாணவர்கள் சின்ன வயதிலேயே தெரிந்து கொள்ளும் Three Musketeers, ஐவன்ஹோ மாதிரி நாவல்களை எல்லாம் ஒரு பதினேழு பதினெட்டு வயதில்தான் மெதுவாகத்தான் படித்தேன். அப்படி படிக்கும்போது என் மனதில் இவற்றை பொன்னியில் செல்வனோடு ஒப்பிட்டு பார்ப்பேன். டூமாவும் ஸ்காட்டும் கல்கி கவர்ந்த அளவு என் மனதை கவரவில்லை. உண்மையில் ஸ்காட்டின் பல நாவல்கள் போர். கெநில்வொர்த்தை படிக்க மிக பொறுமை வேண்டும்.

அதற்கு முன்னாலும் கல்கி பற்றிய பிரக்ஞை இருந்தது. கல்கி பத்திரிகையை படித்திருக்கிறேன். ஆனால் கல்கியின் எழுத்தாளர் என்ற முகத்தை பற்றி அவ்வளவாக தெரியாது. இதற்கு பிறகு சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஓசை, தியாக பூமி, கள்வனின் காதலி, மகுடபதி எல்லாம் தேடி தேடி படித்தேன். சிவகாமியின் சபதம் – குறிப்பாக நாக நந்தியின் பாத்திரம் – பிடித்திருந்தது. பார்த்திபன் கனவு வாண்டு மாமா எழுதும் கதைகளின் சாயலில்தான் இருந்தது. ஆனால் மிக சுவையாக இருந்தது. அலை ஓசையை நான் பெரிதாக ரசிக்கவில்லை. ஆனால் அதுதான் கல்கிக்கே பிடித்த நாவல். தியாக பூமி பிடித்திருந்தது. கள்வனின் காதலி, மகுடபதி எல்லாம் அலை ஓசை அளவுக்கு கூட வரவில்லை.

பொ. செல்வன் என் மனதை அதிகமாக ஆக்கிரமித்திருந்தது. அதனால் அவரது மற்ற முகங்கள் பற்றி தெரிய பல வருஷம் ஆயிற்று.

கல்கி சுதந்திர போராட்ட வீரர். ஜெயிலுக்கெல்லாம் போயிருக்கிறார். ராஜாஜியின் அணுக்க சீடர். அரசியலில் ஒரு background figure. அவருக்கு ராஜாஜி மந்திரி சபையில் பதவி கொடுக்க முன் வந்ததாகவும் அதை அவர் மறுத்து விட்டதாகவும் சின்ன அண்ணாமலை சொல்கிறார். ராஜாஜியுடன் மது ஒழிப்புக்காக திருச்செங்கோடு ஆசிரமத்தில் வேலை பார்த்திருக்கிறார்.

பத்திரிகை உலகத்தோடு அவருக்கு தொடர்பு எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. நவசக்தி, விமோசனம், பத்திரிக்கைகளில் பணி புரிந்திருக்கிறார். ஆனால் பத்திரிகையில் அவர் கொடி கட்டி பறந்தது விகடனில்தான்.

விகடனுக்கு ஏட்டிக்கு போட்டி என்ற கட்டுரைய்டன் அவர் தொடர்பு ஆரம்பித்தது. (வாசன் அதை பற்றி இங்கே சொல்கிறார்). தமிழில் அதைப் போன்ற நகைச்சுவை கட்டுரைகள் எழுத ஆரம்பித்தவர் அவர்தான் என்று நினைக்கிறேன். Jerome K. Jerome, E.V. Lucas, Stephen Leacock, James Thurber போன்ற பலரால் கவரப்பட்டு இதை ஆரம்பித்திருக்கிறார் போல. (மணிக்கொடி எழுத்தாளர்கள் அவர் முதல் நாள் Lucas, Leacock போன்றவர்களின் கட்டுரையை ஒரு ஆங்கிலப் பத்திரிகை சென்னைக்கு வந்ததும் படிப்பார், அடுத்த நாள் அதை உல்டா செய்து விகடனில் எழுதி விடுவார் என்று சொல்கிறார்கள்) ஆனால் அவரது எழுத்துக்கள் மிக அருமையாக இருந்திருக்கின்றன. அவருக்கு பின் நாடோடி, துமிலன் போன்ற சிலர் முயற்சி செய்தாலும் அந்த நகைச்சுவை கட்டுரை genre இன்று தமிழில் செத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். (ஆங்கிலத்திலும் காணப்படுவதில்லை – ப்ளாக் உலகத்தில் பிழைத்து வந்தால் உண்டு)

அவரது இசை கச்சேரி விமர்சனங்கள் புகழ் பெற்றவை. கர்நாடகம் என்ற பேரில் கலக்குவாராம். அவரும் சுப்புடுவும்தான் கலை விமர்சகர்களாக புகழ் பெற்றவர்கள். சுப்புடு கல்கி தன் கச்சேரி விமர்சனத்தை பாராட்டியதை கடைசி வரை சொல்லிக் கொண்டிருந்தார்.

பல சிறுகதைகளும் எழுதினர். நிறைய காப்பி அடித்தார் என்று மணிக்கொடி எழுத்தாளர்கள், குறிப்பாகா புதுமைப்பித்தன் சொல்லி இருக்கிறார். அவர் எழுதிய “புது ஓவர்சீயர்” என்ற கதை பிரேம்சந்தின் புகழ் பெற்ற சால்ட் இன்ஸ்பெக்டர் கதையின் அப்பட்டமான காப்பிதான். எனக்கு சால்ட் இன்ஸ்பெக்டர் கதை பிடித்தமானது என்பதால் படிக்கும்போதே தெரிந்துவிட்டது. புதுமைப்பித்தன் அவரது புகழ் ஏணியின் முதல் படிக்கட்டான ஏட்டிக்கு போட்டி கட்டுரையே Jerome K. Jerome-இன் Three Men in a Boat-in தழுவல் என்று சொல்கிறார். இது உண்மைதான் என்பது டோண்டு ராகவன் எழுதிய இந்த பதிவில் தெளிவாக தெரிகிறது. எதையும் அவர் தழுவல் என்று ஒப்புக்கொண்ட மாதிரி தெரியவில்லை.

தழுவலோ, என்னவோ, விகடன் விற்பனை உச்சாணிக்கு போனது. பல பல உத்திகளை கையாண்டு விகடன் படிக்காத மத்திய தர வர்க்க குடும்பம் இல்லை என்ற நிலைக்கு விகடனை கொண்டு போனார். உதாரணமாக, தியாக பூமி திரைப்படம் தயாரிக்கப்பட்ட போது அந்த படத்தின் ஸ்டில்களோடு அந்த கதையை விகடனில் தொடர்கதையாக வெளியிட்டார். வியாபாரம் பிய்த்துக்கொண்டு போனது.

அவருக்கு தான் பத்திரிகையின் ஸ்டாராக இருந்தாலும், நல்ல வசதியாக இருந்தாலும், வாசனுக்குத்தானே லாபம் எல்லாம் போகிறது என்று தோன்றி இருக்க வேண்டும். சதாசிவமும், அவரும் சேர்ந்து நாற்பதுகளின் ஆரம்பத்தில் கல்கி பத்திரிகையை ஆரம்பித்தார்கள். நினைவிலிருந்து எழுதுகிறேன், அவர் கல்கி பத்திரிகையின் 25% பாகஸ்தர். மாதம் ஐயாயிரம் ரூபாய் சம்பளம். நல்ல வசதியாக வாழ்ந்திருப்பார்.

பார்த்திபன் கனவு, அலை ஓசை, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் எல்லாம் கல்கி பத்திரிகையில் தொடர்கதையாக வந்தவைதான். அவை எல்லாம் கல்கியை வெற்றிகரமான பத்திரிகையாக மாற்றின. நாடோடி, விந்தன், சாவி போன்ற திறமை வாய்ந்த, ஆனால் ஸ்டார் வால்யூ இல்லாத உதவி ஆசிரியர்கள் இருந்தார்கள். கல்கி அவரது பேராலும், எழுத்தாலும்தான் வெற்றி அடைந்தது.

நடுவில் பல சர்ச்சைகள் வேறு. பத்திரிகை விற்க வேண்டுமென்றே சில சர்ச்சைகளை கிளப்பி இருப்பாரோ என்று தோன்றுகிறது. பாரதியார் மகாகவியா இல்லையா என்று ஒரு சர்ச்சை – கல்கி அவர் மகாகவி இல்லை என்று வாதாடினர். ஆனால் பின்னால் பாரதிக்கு மணி மண்டபம் கட்ட முன்னால் நின்று பணம் வசூலித்து கட்டினார். இந்த மகாகவி சர்ச்சை அவர் வேண்டுமென்றே கிளப்பியது என்று நினைக்கிறேன்.

மணிக்கொடி எழுத்தாளர்களோடு சண்டை – புதுமைப்பித்தன் இவரை மிக மோசமாக திட்டி இருக்கிறார். தழுவல் என்ற குற்றச்சாட்டுக்கு கல்கி பதில் சொல்லாமல் நழுவிவிட்டார் என்று நினைவு. தழுவல் தவறு என்று நான் நினைக்கவில்லை, ஆனால் தழுவினோம் என்று ஒத்துக்கொள்ளாமல் நழுவுவதுதான் உதைக்கிறது.

தமிழிசை இன்னொரு சர்ச்சையை கிளப்பியது. அது அவரது உண்மையான கருத்து என்று நினைக்கிறேன். பாரதியாரே தமிழில் பாட மறுக்கிறார்களே என்று குறைப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

ராஜாஜி அவருக்கு ஒரு வீக்னெஸ். அவரால் ராஜாஜியை குறை சொல்ல முடியாது. ராஜாஜி என்ன செய்தாலும் சரி என்று சொல்லி இருப்பார். 1940-1955 வரை கல்கி தலையங்கங்கள் கிடைத்தால் அவர் ராஜாஜியை பற்றி என்ன எழுதி இருக்கிறார் என்று பார்க்கலாம். காமராஜை நிறைய திட்டி இருப்பார் என்று நினைக்கிறேன்.

மொத்தத்தில் அவரை விட சிறந்த, திறமையான பத்திரிகையாளரை தமிழ் உலகம் பார்த்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தன் எழுத்து திறமையை அருமையாக leverage செய்து விகடனை ஒரு சாம்ராஜ்யம் ஆக்கினார். கல்கியை ஒரு சிற்றறரசாகவாவது ஆக்கினார். அவரது மறைவுக்கு பிறகும் அலை ஓசை, பொ. செல்வன், சி. சபதம், பா. கனவு ஆகியவை ஒன்று மாற்றி ஒன்று கல்கியில் வந்து கொண்டே இருக்கும்.

ஒரு எழுத்தாளராக அவரது சாதனை அவரது சரித்திர நாவல்கள்தான். பொ. செல்வன் Les Miserables, Tale of the Two Cities போன்ற வரிசையில் வைத்து பார்க்க வேண்டிய நாவல். அவரது கட்டுரைகள் (தழுவலோ, என்னவோ) பொதுவாக படிக்க சுலபமானவை, சுவாரசியமானவை. அவற்றை தொகுத்து வெளியிட்டால் வாங்கலாம். அவரது சிறுகதைகளும் – மயிலைக் காளை, தேரழுந்தூர் சிவக்கொழுந்து கதைகள், பொய் மான் கரடு, தப்பிலி கப் இன்னும் பல – அவ்வளவாக தமிழ் விமர்சகர்களால் கவனிக்கப்படாது துரதிர்ஷ்டம்தான். ஆனால் மிக நல்ல எழுத்துக்கள், படிக்க, பாதுகாக்க வேண்டிய கதைகள். அவரது இசை விமர்சனங்களும் தொக்குக்கப்பட்டால் நன்றாக வந்திருக்கும்.

புதுமைப்பித்தன் மாதிரி கல்கியின் கதைகள் உலகத்தரம் வாய்ந்தவை அல்ல. பு. பித்தன் மாதிரி கல்கி நோபல் பரிசு பெறும் தகுதி உள்ள எழுத்தாளரும் அல்ல. ஆனால் நல்ல எழுத்தாளர்.

சதாசிவம், எம்.எஸ்., கல்கி, ராஜாஜி, டி.கே.சி. ஆகியோரின் நட்பு, சின்ன அண்ணாமலை, விந்தன், நாடோடி, பரதன், சாவி ஆகியோரின் தொடர்பு, மிக சிறப்பானது.

அவரது சினிமா பங்களிப்பும் குறிப்பிட வேண்டியது. தியாக பூமி தவிர, மீரா படத்திலும் அவரது பங்களிப்பு இருந்தது. காற்றினிலே வரும் கீதம் பாட்டை யார் மறக்க முடியும்?

பொ. செல்வன் பல கதாபாத்திரங்களின் ஓவியங்களை இங்கே காணலாம்.

மொத்தத்தில் அவர் பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் அருமையான பணி ஆற்றி இருக்கிறார். அவர் சின்ன வயதிலேயே மறைந்தது நம் துரதிர்ஷ்டம்.