kamarajar
என் கண்களில் தமிழ் நாட்டின் தலை சிறந்த தலைவர் இவர்தான்.

உண்மையில் இது மிக ஆச்சரியமான விஷயம். அவர் மெத்தப் படித்தவர் இல்லை. தமிழில்தான் சுலபமாக பேச முடியும். (ஆங்கிலமும் ஹிந்தியும் பேச வராததால்தான் பிரதமர் பதவியை ஒதுக்கினார் என்று சிலர் சொல்கிறார்கள்.) பணக்காரர் இல்லை. கோவிலுக்குள் நுழைய முடியாத கீழ் ஜாதிக்காரர். (வைத்தியநாத ஐயர் மீனாட்சி கோவிலுக்குள் அழைத்து போனவர்களில் இவரும் இருந்தாரோ? இல்லை கக்கன் மட்டும்தானா? இவர் இல்லை என்று தெரிகிறது. அந்த கூட்டத்தில் கக்கன் உள்ளிட்ட ஐந்து தலித்களும், ஷண்முக நாடாரும் இருந்தார்களாம். அப்போது தலித்களுக்கும், நாடார்களுக்கும் மீனாக்ஷி கோவிலில் நுழைய அனுமதி இல்லை. இது பற்றிய மேல் விவரங்களை இங்கே காணலாம்.) சிறந்த பேச்சாளரோ, எழுத்தாளரோ இல்லை. எம்ஜிஆர், அண்ணா, ஏன், கலைஞர் போலக் கூட மக்களை கவரக் கூடிய எதுவும் அவரிடம் இல்லை. அவரை விட சிஎஸ், ஆர்வி போன்றவர்கள் சிறந்த நிர்வாகிகள். அவரே பிற்காலத்தில் காங்கிரஸ் தலைமையாக மாறினாலும், காங்கிரஸ் தலைமையிடம் – காந்தி, நேரு, படேல், ஆசாத் போன்றவர்களிடம் – அவருக்கு ராஜாஜி மாதிரி செல்வாக்கு எல்லாம் இருந்ததில்லை. அவர் பெரியார் மாதிரி புரட்சி எதுவும் செய்ய முயசிக்கவில்லை.

அவருடைய ரகசியம் இதுதான் – மக்களுக்கு/கட்சிக்கு எது நல்லது, அதை எப்படி செய்வது என்று ஓயாமல் சிந்திக்கும் குணம். அந்த சிந்தனைகளை செயல்படுத்தும்போது வரக்கூடிய இடையூறுகளை தாண்டியே தீர வேண்டும் என்ற வெறி.

அவர் மந்திரிகளுக்கு சொன்ன அறிவுரை இதுதானாம் – “பிரச்சினைகளிடமிருந்து ஓடக் கூடாது. பிரச்சினையை சமாளிக்க ஒரு சின்ன முயற்சியாவது எடுங்கள். மக்கள் திருப்தி அடைந்துவிடுவார்கள்”. அற்புதமான அறிவுரை. அவரும் அதை கடைப்பிடித்திருக்கிறார்.

இதனால் அவர் குறைகள் இல்லாத மாமனிதர் என்று அர்த்தமில்லை. ராஜாஜியை அமுக்க அவர் 42-54 கால கட்டத்தில் செய்த முயற்சிகள், அவரோடு போட்ட சண்டைகள் அவருக்கு பெருமை சேர்ப்பதில்லை. ராஜாஜிக்கும் பெருமை சேர்ப்பதில்லை என்பதும் உண்மைதான். அவர் கர்வி இல்லை, ஆனால் தொண்டர்களை அணுக விட்டதில்லை. ஏதாவது உதவி கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான். சோவே கூட அவர் மற்ற தமிழக் தலைவர்களை வளரவிடவில்லை, தன் கைக்குள்ளேயே வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார் என்று சொல்லி இருக்கிறார். ஜெயலலிதா ராஜினாமா செய்து பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒரு முதலமைச்சரின் உள்ளக் குமுறல் என்று குமுதத்திலோ விகடனிலோ ஒரு கட்டுரை வந்தது. எப்படி தலைவர் தன்னை முழுமையாக நம்பவில்லை, சுதந்திரமாக இயங்க விடவில்லை, தலைவர் ஒரு சூப்பர் முதலமைச்சராக நடந்து கொள்கிறார் என்று முதல்வர் வருத்தப்படுகிறார். அது பக்தவத்சலம் காமராஜை பற்றி வருத்தப்பட்டது, பன்னீர்செல்வம் ஜெவை பற்றி அல்ல. தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றில் அவர் செய்தது தவறு. அவர் குறைகள் உள்ள மாமனிதர்.

சுதந்திரப் போராட்டத்தில் பல முறை ஜெயிலுக்கு போயிருக்கிறார். ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு ஸத்யாக்ரஹத்தில் பங்கேற்றிருக்கிறார். சத்யமூர்த்தியின் அணுக்க சீடர். கொஞ்ச நாள் அவர் தமிழ் நாடு காங்கிரஸில் தலைவராகவும் காமராஜ் செயலாராகவும் இருந்திருக்கிறார்கள். பிறகு இவர் தலைவர், அவர் செயலாளர். 🙂 சத்தியமூர்த்தியின் மறைவுக்கு பின்னால், ராஜாஜி காங்கிரசை விட்டு வெளியேறிய பின்னால் இவர் தமிழ் நாட்டு காங்கிரஸின் ஜீவ நாடி ஆகிவிட்டார். அவரால் ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் வருவதற்கு கூட பல முட்டுக்கட்டைகள் போட முடிந்தது.

அவரது பலங்களில் அவருடைய எளிமையான பின்புலமும் ஒன்று. அவருடைய மதிய உணவுத் திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கும் ராஜாஜிக்கும் ஒரே குறிக்கோள்தான். அரசியல் நிர்ணய சட்டத்தில் சொன்னபடி எல்லாருக்கும் கல்வி என்பதை விரைவாக நிறைவேற்றுவது. இரண்டு பேருக்கு ஒரே பிரச்சினைதான். கிராமங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறைவாக இருக்கிறது. ராஜாஜி கண்ட தீர்வு பகுதி நேரக் கல்வி. (திராவிட இயக்கத்தினர் குலக் கல்வி என்று அழைத்த இந்த திட்டத்தை பற்றி மேலும் விவரங்கள் இங்கே) பகுதி நேரக் கல்வி என்பது சிறந்த நிர்வாக முடிவு. அதனால் கல்வி அறிவு செலவு அதிகம் ஆகாமல் அதிகரித்திருக்கும். ஆனால் அது ஒரு bean counter’s logical, cold hearted தீர்வு. காமராஜ் கண்ட தீர்வில் செலவு அதிகம்தான். ஆனால் அந்த பணம் well spent என்று அவரது படிக்காத ஏழை மனதுக்கு மட்டும்தான் புரியும். ஜீனியஸ் என்றே சொல்லக் கூடிய ராஜாஜிக்கு அந்த தீர்வு எப்போதும் தோன்ற வாய்ப்பில்லை.

விவசாயம், மின்சாரம், தொழில் பேட்டிகள் அமைப்பு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தினார். அரசு விதிகளை கண்மூடித்தனமாக பின்பற்றுவதை விட மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆர்வியும் இதை குறிப்பிட்டு சொல்கிறார்.

எதிரிகளையும் அணைத்து செல்லும் பக்குவம் அவரிடம் இருந்தது. முதல்வர் போட்டிக்கு அவரை எதிர்த்து போட்டி இட்ட சிஎஸ்தான் அவரது அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் இருந்தார். சிஎஸ், ஆர்வி, கக்கன், பக்தவத்சலம் போன்ற திறமைசாலிகளை அவர் அரவணைத்து சென்றார். அதே நேரத்தில் அவர் கடுமை காட்ட வேண்டிய நேரத்தில் கடுமை காட்டவும் தயங்கியதில்லை. மொரார்ஜியை அவர் அடக்கிய விதம் சூப்பர். கலைஞரால் கூட இப்படி செய்திருக்க முடியாது.

காமராஜ் திட்டம் எல்லாம் போட அவரால்தான் முடியும். பதவி ஆசை அவருக்கு அவ்வளவாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அவருக்கு ராஜாஜி ஒரு வீக்னெஸ். அங்கே அவரது பெருந்தன்மை, நல்ல குணங்கள் வெளிப்படவில்லை. சத்தியமூர்த்திக்கு பதிலாக ராஜாஜியை காங்கிரஸ் மேலிடம் – குறிப்பாக காந்தி – முதல்வராக ஆக்கியதால் ஏற்பட்ட வெறுப்பு, ராஜாஜி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொள்ளாமல் காங்கிரசை விட்டு விலகியதும் தீவிரம் அடைந்தது. 46-இல் ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் நுழையக் கூடாது என்று காமராஜ் பெரிதும் முயன்றார். கட்சி அவரது கண்ட்ரோலில் இருந்தாலும், ராஜாஜிக்கு கணிசமான ஆதரவு இருந்தது – மேலிடத்து சப்போர்ட்டும் இருந்தது. அதனால் ராஜாஜி காமராஜை மீறி உள்ளே நுழைந்தார். ராஜாஜி மத்திய அரசாங்கத்துக்கு போய்விட்டதால் சண்டை இன்னும் பெரிதாக வெடிக்கவில்லை. ராஜாஜி முதல்வராக இருந்தபோது அவர் சில உள்குத்து வேலைகள் செய்திருக்கிறார். காமராஜ் படத்தில் அவர் ஒரு விழாவில் ராஜாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுவதாக காட்டுகிறார்கள்.

தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றில் அவர் கோட்டை விட்டுவிட்டார். கேரளாவில் இருந்தாலென்ன, தமிழ் நாட்டில் இருந்தாலென்ன, இரண்டும் இந்தியாதானே என்று அவர் நினைத்திருக்க வேண்டும். பிராந்திய உணர்ச்சிகள் இவ்வளவு தீவிரமாக வளரும் என்று அவர் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். அவருடைய அலட்சியத்துக்கு தமிழர்கள் இன்றும் ஒரு விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அவருடைய மிக பெரிய தோல்வி இந்திரா காந்திதான். அவர் தோளில் நின்று பிரதமரான இந்திரா அவரையே யார் என்று கேட்டது அவரை நிலை குலைய செய்திருக்க வேண்டும். அறுபதுகள் காங்கிரசுக்கு நல்லதாக இல்லை. சீனாவோடு சண்டை, ஹிந்தி எதிர்ப்பு, வேலை இல்லா திண்டாட்டம், பொதுவாக இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டிருந்த அதிருப்தி, சோஷலிசத்தின் குறைகள் வெளிப்பட ஆரம்பித்தது எல்லாம் அவரை புரட்டி போட்டுவிட்டன. Indira usurped his socialistic plank. ராஜ மானியம் ஒழிப்பு, வங்கிகள் தேசிய மயம், என்றெல்லாம் ஆரம்பித்தது உண்மையான சோஷலிஸ்ட்டான அவரை வலது சாரி தலைவராக காட்டியது – அவருக்கு மிஞ்சிய கூட்டாளிகள் எல்லாம் வலது சாரி நிஜலிங்கப்பா, மொரார்ஜி, எஸ்.கே.பாட்டில், சஞ்சீவ ரெட்டி போன்றவர்கள்தான். A great irony.

முதல்வர் பதவியில் இருந்து விலகிய நாளிலிருந்து அவர் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் போல மத்தியிலும் மாநிலத்திலும் இயங்க முயன்றார். மத்தியில் வெற்றி பெற்றவர் மாநிலத்தில் கோட்டை விட்டுவிட்டார். அது மத்தியிலும் அவர் தோல்வி அடைய காரணம் ஆகிவிட்டது. 67-இல் காங்கிரஸ் தமிழ் நாட்டில் ஜெயித்திருந்தால் இந்திராவால் அவரை அவ்வளவு சுலபமாக உதறி இருக்க முடியாது. 71-இலோ பங்களாதேஷ் போர் இந்திராவுக்கு அமோக வெற்றி தந்தது. காமராஜ் அந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டார். அதற்கு பிறகு அவர் ஒரு மாநில அளவு தலைவர் அவ்வளவுதான். அவ்வளவு பெரிய தலைவருக்கும் sell-by-date கடந்து விட்டது.

இன்று ஒரு காமராஜ் இருந்தால் என்று பெருமூச்சுதான் விட முடிகிறது. கம்யூனிசம், சோஷலிசம், காபிடலிசம், போன்ற இசங்களை விட நல்ல தலைவர்கள் ஏதோ ஒரு இசத்தை செயல்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கியம் என்று எனக்கு தோன்றுகிறது. கன்சர்வேடிவ் ராஜாஜி, சோஷலிஸ்ட் காமராஜ் இருவருமே நல்ல முதல்வர்கள்தானே!

அவரைப் போன்ற ஒரு தலைவர் இந்தியாவின் வரப்பிரசாதம்.

Advertisements