காமராஜ் பற்றி அடுத்த மதிப்பீடு எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சமீபத்தில் இறந்து போன முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் அவரை பற்றி எழுதியது விகடனில் கண் பட்டது. நன்றி, விகடன்!

மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்டு, அவர்கள் சொல்வதை நுட்பமாகக் கேட்டு, அவர்களுடைய கஷ்டங்களை அனுபவபூர்வமாக உணர்ந்து, உடனடியாகப் பரிகாரங்கள் தேடிக் கொடுத்தவர் காமராஜ்.

ஒருமுறை, அவருடன் நான் தஞ்சை ஜில்லாவுக்குச் சுற்றுப்பயணம் போயிருந்தேன். ஓர் இடத்தில் கூட்டத்தை முடித்துக் கொண்டு, நடந்து வந்து கொண்டு இருந்தோம். அங்கே, நடுப்பகல் நேரத்தில் பத்து வயதுச் சிறுவன் ஒருவன் கையில் குச்சி ஒன்றை வைத்துக் கொண்டு நிற்பதைப் பார்த்தார் காமராஜ். அவனிடம் அன்பாக, ”நீ பள்ளிக்கூடம் போகிறாயா?” என்று கேட்டார்.

”இல்லீங்களே!” என்றான் அவன்.

”என்னப்பா இது? நான்தான் பள்ளிக்கூடங்களில் இலவசமாகப் பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்திருக்கிறேனே, நீ ஏன் போகவில்லை?” என்று கேட்டார் அவர்.

”பள்ளிக்கூடத்திற்குப் போய்விட்டால் நான் சோத்துக்கு என்ன செய்வேன்? மாடு மேய்த்தாலாவது இரண்டு அணா ஊதியம் கிடைக்குமே!” என்று சொன்னான் அவன்.

காமராஜ் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்து விட்டார். பிறகு வரும் வழியில் என்னிடம், ”பார்த்தீர்களா! நாம் இலவசக் கல்வி அளித்தால் மட்டும் போதாது. சிறுவர்களுக்கு அங்கே மதிய உணவும் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் பள்ளிக்கூடத்திற்குப் போக முடியும்” என்றார்.

தமிழகப் பள்ளிக்கூடங்களில் இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டம் இப்படித்தான் பிறந்தது.

சிலர் அவருக்கு ஆங்கிலம் அதிகம் தெரியாது என்ற தவறான எண்ணத்தில், அவர் சரியாக ஃபைல் பார்க்க மாட்டார் என்று கூட நினைப்பதுண்டு. இது தவறான ஓர் அபிப்பிராயம். அவரைப் போல ஆங்கிலப் பத்திரிகைகளை ஊன்றிப் படித்தவரோ, அல்லது காரியாலயத்து ஃபைல்களை நுட்பமாகக் கவனித்தவர்களோ மிகக் குறைவு.

புவனேஸ்வர் காங்கிரஸ் மாநாட்டில் அவர் தலைமை உரை நிகழ்த்த வேண்டியிருந்தது. அதற்கான முக்கியக் குறிப்புகளை என்னிடம் தந்து, உரையை எழுதச் செய்தார். நான் எழுதிக் கொடுத்த உரையைத் தனியாகத் தானே ஒரு முறை படித்து, பக்கத்தில் இருப்பவர்களிடம் ஓரிரு முறை படித்துக் காட்டச் சொல்லி, பிறகு நான் அவரைச் சந்தித்தபோது, ”ஆங்கிலத்தில் இந்தந்த இடங்களில் வார்த்தையை இப்படி மாற்றிப் போட்டால் இன்னும் பொருத்தமாக இருக்குமே!” என்று யோசனை கூறினார் காமராஜ். அந்த நுட்பமான மதிப்புரையைக் கண்டு நான் வியந்து போனேன்.

விவசாயத்திலும் சிறு பாசனத் திட்டங்களிலும் காமராஜ் மிகுந்த அக்கறை காட்டினார். அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் கீழ்பவானி, மணிமுத்தாறு, அமராவதி, சாத்த னூர், கிருஷ்ணகிரி போன்ற பல நீர்த்தேக்கத் திட்டங்கள் உருவாயின. இது போன்ற பெரிய திட்டங்கள்தான் என்றில்லை… கிராமங்களில் ஓடும் காட்டாறுகளைக் கூட சிறு அணைகள் கட்டி, நீரைத் தேக்கிப் பாசன வசதியைப் பெருக்குவதில் அவர் மிகுந்த சிரத்தை காட்டினார். திட்டங்கள் உருவாக அவர் யோசனை சொல்லும்போது அதிகாரிகள், ”இதற்கு விதிகள் அனுமதிக்கவில்லை” என்று தடுத்துக் கூறினால், அவருக்குக் கோபம் வந்து விடும்.

”இந்த விதிகளை வகுத்தது யார்? நீங்கள்தானே? அவற்றை உருப்படியான முறையில் நீங்களே மாற்றி அமையுங்கள். மக்களுக்கு நன்மை கிடைக்கவேண்டும். அதுதான் எனக்குத் தேவை!” என்று அடித்துச் சொல்லி விடுவார்.

அவர் காலத்தில்தான் மின்சார வசதி கிடைத்துள்ள மொத்த இந்தியக் கிராமங்களில் பாதி அளவு தமிழ்நாட்டிலேயே இருக்கிறது என்ற பெருமையை நாம் அடைய முடிந்தது. அதே போல விவசாயத்துக்காக பம்ப் செட் வசதிகள், அகில இந்தியாவில் உள்ள எண்ணிக்கையில் பாதி தமிழ்நாட்டில்தான் என்ற சாதனையையும் நாம் எட்டிப் பிடித்தோம். காமராஜ் நிர்வாகத்தை தமிழ்நாட்டின் பொற்காலம் என்பதில் மிகையில்லை.

ஒருநாள், ஒரு பெரிய விஷயத்தை நிதானமாக, மிக எளிதாக சுமார் அரைமணி நேரம் அவர் எனக்கு விளக்கிச் சொன்னார். அந்த விஷயம், பிறகு நாடெங்கும் பிரபலமான ‘காமராஜ் திட்டம்’தான்!

”இப்போது நாட்டில் உள்ள முக்கியத் தலைவர்கள் எல்லாரும் அநேகமாக நிர்வாகம் செய்யப் போய்விட்டார்கள். அதனால் ஸ்தாபனம் பலவீனமடைந்து விட்டது. ஆகவே, ஸ்தாபனத்தை வலுப்படுத்த, மூத்த தலைவர் தாமாகவே முன் வந்து பதவியைத் துறந்து, ஸ்தாபனத்துக்காகப் பணியாற்ற முனைய வேண்டும் என்பது என் திட்டம். இதை நேருஜியிடம் சமர்ப்பிக்கப் போகிறேன்” என்றார் காமராஜ்.

உடனே, ”உங்கள் திட்டத்தில் நீங்கள் ஒருவர்தான் பதவி துறப்பீர்கள்!” என்றேன் நான். அடக்கமாக ஒரு புன்னகை செய்தார் காமராஜ். பின்னர் நான் கூறியதே உண்மையாயிற்று. காமராஜ் திட்டத்தின்படி பதவியிலிருந்து விலகிய தலைவர்கள் அனைவரும், பிறகு மறுபடியும் பதவிக்கு வந்து சேர்ந்துகொண்டு விட்டார்கள்.

காமராஜ் எவ்வளவு உயர்ந்த தலைவரானாலும் சரி, அவரிடத்தில் பழகுவதில் அச்சம் இராது. அதேபோல, எவ்வளவு எளிய தொண்டராக இருந்தாலும் சரி, அவரிடம் பேசும்போது, காமராஜிடம் கர்வத்தைத் துளியும் பார்க்க முடியாது. இந்தக் குணாதிசயம்தான் காமராஜ் அவர்களை மக்கள் தலைவராக்கியது.