இது 101-ஆவது பதிவு. நானும் பக்சும் சேர்ந்து வெற்றிகரமாக நூறு பதிவுகள் போட்டுவிட்டோம்.

பத்தாயிரம் ஹிட்கள். இது ஒரு பெரிய விஷயமா என்பவர்களுக்காகவே தமிழில் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ பழமொழி இருக்கிறது. வந்து பார்த்த எல்லாருக்கும் மறுமொழி இட்டவர்களுக்கும் நன்றி. மறுமொழிகள் உற்சாகம் அளிக்கின்றன. குறிப்பாக, விடாமல் வாதாடிய அரை டிக்கெட், ஊக்கப்படுத்திய/படுத்துகிற பாஸ்டன் பாலா, டோண்டு ராகவன் ஆகியோருக்கு நன்றி. வினவு குழுவுக்கும் எனக்கும் கடுமையான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் என்ன உங்களை ஆளையே காணோம் என்று அவர்களே வந்து கேட்டது உற்சாகம் அளித்தது.

அவசரமாக எழுதியதில் முரளியின் பெயர் விட்டுவிட்டது. இன்னும் யார் யார் பேர் விட்டுவிட்டதோ தெரியவில்லை. விட்டுப் போனவர்கள் மன்னிப்பார்களாக!

தமிழ் ப்ளாக் உலகில் எனக்கு வியப்பு அளித்த விஷயம் பிராமண ஜாதியில் பிறந்தவர்கள் மேல் இறைக்கப்படும் அவதூறுகள்தான். இது தவறு என்பது ஒரு பக்கம் – ஆனால் இருக்கும் எத்தனையோ பெரிய பெரிய பிரச்சினைகளை விட்டுவிட்டு பிராமண ஜாதியில் பிறந்தவர்களை திட்டுவதில் இத்தனை நேரம் செலவழிக்க வேண்டுமென்றால் எத்தனை துவேஷம் இருக்க வேண்டும்? Casteism தவறு என்று சொல்பவர்களுக்கு reverse casteism தவறு என்று புரியாதது மிக ஆச்சரியம். குறிப்பாக பெரியார் பக்தர்கள் இணையத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிராமண ஜாதியில் பிறந்தவர்களை திட்டுவது ஜாதியை ஒழிப்பதை விட முக்கியமானது என்று தோன்றுகிறது. இந்த வருத்தம் பலருக்கும் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ பார்ப்பனர்கள், பார்ப்பனீயம், தமிழ் நாடு என்ற பதிவு நாங்கள் எழுதியவற்றில் மிக பாப்புலரானதாக இருக்கிறது. பொதுவாக ஜாதி பற்றிய பதிவுகள் படிக்கக்ப்படுகின்றன.

என் மதிப்பீடுகளை எழுதியது எனக்கு சுவாரசியமாக இருந்தது. இனி மேலும் எழுதுவேன். பலரை இணையத்தில் சந்திக்கவும் முடிந்தது சந்தோஷமான விஷயம். இப்போது கூட வாஞ்சிநாதனை பற்றி தெரிந்த திரவியம் நடராஜன் சில மறுமொழிகளை எழுதி இருந்தார்.

எனக்கு புத்தகப் பித்து அதிகம். புத்தகங்களை பற்றி இங்கே எழுத முடிவது சந்தோஷமான விஷயம். நான் எழுதுவதை யார் படிக்கிறார்கள் என்று அதிகம் யோசித்து கவலைப்படுவதில்லை. கடமையை செய்… 🙂 (கிருஷ்ணர் நானும் அவரை கோட் செய்வேன் என்று தெரிந்திருந்தால் பகவத் கீதை பக்கமே வந்திருக்க மாட்டார்)

நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு கணேஷ் வசந்த் வாழ்க்கை வரலாறுதான். இதை இன்னும் flesh out செய்ய வேண்டும் என்று பார்க்கிறேன், முடியவில்லை.

எங்கள் குடும்பத்தினரின் பங்களிப்பும் உண்டு. பக்சின் 12 வயது மகளான பிருந்தா எழுதிய கவிதை குறிப்பிட வேண்டியது. க்ரியாவின் பொன் மொழிகளில் நான் நினைத்து நினைத்து புன்முறுவலிப்பது எது பெரிய நம்பர்தான். ஸ்ரேயாவின் பசியும் மறக்க முடியாதுதான்.

Advertisements