வாஞ்சிநாதனை பற்றி எனக்கு இருக்கும் பிம்பம் சிம்பிள் – வ.உ.சியும், சிவாவும் தூத்துக்குடி வட்டாரத்தில் ஒரு புரட்சிகரமான மன நிலையை உருவாக்கினார்கள். அவர்களை கலெக்டர் வின்ச்சும், சப்-கலெக்டர் ஆஷும் அடக்க முயன்றார்கள். இந்த தலைவர்கள் ஜெயிலுக்கு போனதும், வ.வே.சு. ஐயர், நீலகண்ட பிரமச்சாரி, மாடசாமி ஆகியோரின் பழக்கமும் அவரை கொந்தளிக்க வைத்தது. கோபம் தலைக்கேறி அவர் ஆஷை சுட்டார். தப்பிக்க வழி இல்லாததால் அவரும் தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.

தமிழ் நாட்டில் அனேகமாக எல்லாருக்கும் இந்த பிம்பம்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இன்று திரு. சரவணன் வாஞ்சி பற்றி எழுதிய ஒரு பதிவை பார்த்தேன். அதில் ஆஷ் குற்றாலத்தில் பிராமணர்கள் மட்டுமே குளிக்கலாம் என்ற நிலையை மாற்றியதாகவும் அலுவலகத்தில் எல்லாரும் ஒரே இடத்தில் உணவு அருந்த வேண்டும் என்றும், ஒரே குடத்து தண்ணீரை அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டதாகவும் அதனால் கோபம் அடைந்த வாஞ்சி ஆஷை சுட்டதாகவும் எழுதப் பட்டிருக்கிறது.

இருக்கலாம். 1886-இல் பிறந்த ஒரு பிராமணருக்கு ஜாதி உணர்வு இல்லாவிட்டால்தான் ஆச்சரியம். வ.உ.சி. கூட சிறையில் தனக்கு ஒரு வேளாளரோ, இல்லை பிராமணரோ சமையல் செய்து தர வேண்டும், தலித் செய்யக்கூடாது என்று கேட்டாராம். (வ.உ.சி. ஒரு தலித்தை தன் வீட்டு மனிதராகவே பாவித்ததாகவும் ம.பொ.சி. சொல்கிறார், எது சரியோ யானறியேன்) நிலைமை இப்படி இருக்கும்போது சம பந்தி போஜனம் என்று ஒரு வெள்ளைக்கார “மிலேச்ச” கலெக்டர் சொன்னால் கோபம் வருவது புரிந்து கொள்ளக் கூடியதே. அன்று இருந்த சமுதாய நிலையில் ஆஷ் அப்படி சொல்லி இருப்பாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

ஆனால் வாஞ்சியின் கடைசி கடிதத்தை பார்த்தால் அவர் ஆஷின் “ஜாதி ஒழிப்பு முயற்சிகளால்” கோபம் அடைந்து அவரை சுட்டதாக தோன்றவில்லை. அந்த கடிதம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிர்ப்பாகவே இருக்கிறது. குறிப்பாக சுதேசி கப்பல் கம்பெனியை பற்றி வேறு சொல்லி இருக்கிறார். விக்கிபீடியாவில் உள்ளபடி அவரது மரண வாக்குமூலம் கீழே.
I dedicate my life as a small contribution to my motherland. I am alone responsible for this.
3000 youths of this brave country have taken an oath before mother Kali to send King George to hell once he sets his foot on our motherland. I will kill Ashe, whose arrival here is to celebrate the crowning of King George in this glorious land which was once ruled by great samrats. This I do to make them understand the fate of those who cherish the thought of enslaving this sacred land. I, as the youngest of them, wish to warn George by killing Ashe who is his sole representative and has destroyed the Swadeshi shipping company and several other freedom fighters by subjecting them to severe torture.
Vande Mataram. Vande Mataram. Vande Mataram

சரவணன் அவர்களும் வாஞ்சியின் மரண வாக்குமூலம் என்று பதித்திருக்கிறார். விக்கிபீடியாவில் உள்ளதற்கும் அவர் சொல்வதற்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. சரவணனின் version-இல் சுதேசி கப்பல் கம்பெனி பற்றி எதுவும் இல்லை. பசு மாமிசம், சனாதன தர்மம் என்று இரண்டு குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் அதிலும் ஜாதியை பற்றியோ ஆஷ் மற்றும் ஆங்கிலேயர்களின் “சீர்திருத்த” ஆவலைப் பற்றியோ எதுவும் இல்லை.

ஆஷ் குற்றால அருவியை எல்லாருக்கும் உரியதாக ஆக்கி இருக்கலாம். அவர் யாராவது ஒரு அருந்ததியர் பெண்ணை பிராமணர் தெரு வழியாக கொண்டு சென்றிருக்கலாம். அது ஆஷ் மேல் உள்ள கோபத்தை அதிகப் படுத்தி இருக்கலாம். ஆனால் வாஞ்சியின் காரணங்கள் வேறு என்றுதான் தோன்றுகிறது. வாஞ்சி சுதந்திரப் போராட்ட வீரர் என்ற பிம்பம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அதே நேரத்தில் நாம் icon-களாக நினைப்பவர்கள் மீது ஒரு உண்மையான பரிசீலனை நடத்தப்பட வேண்டும், அவர்களது குற்றம் குறைகள் மறைக்கப்படக் கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதனால் இது மாதிரி முயற்சிகள் வரவேற்கப் பட வேண்டியதே. ஆனால் icon-களை பற்றி உள்ள பிம்பங்களை கலைத்து அவை icon-கள் இல்லை என்று நிறுவ முயற்சி செய்யும்போது ஆதாரங்களையும் வெகு கவனமாக கொடுக்க வேண்டும் – செங்கோட்டையில் பலரிடம் பேசினேன் என்று மொட்டையாக சொன்னால் போதாது. யார் யாரிடம் பேசினார்கள் என்ற விவரங்கள், ஆஷ் என்ன செய்தார் என்பதற்கான ஆதாரங்கள், பாரத மாதா சங்கம் ஆஷின் இந்த சீர்திருத்த ஆவல் பற்றி என்ன எழுதினார்கள் என்ற விவரங்கள் ஆகியவையும் சுட்டப் பட வேண்டும். வாஞ்சிநாதன் இறந்து கிட்டத்தட்ட நூறு வருஷங்கள் ஆகிவிட்டன. அவர் சம காலத்தவர் அல்ல, நம் ஞாபகங்கள், இல்லை முந்திய ஒரு ஜெனரேஷனின் ஞாபகங்கள் போதும் என்று சொல்ல. இந்த பதிவர் சைக்கிள் காப் கூட இல்லாத இடத்தில் லாரியே ஓட்ட முயற்சி செய்வது போல் இருக்கிறது.

ஆனால் இவர் அருந்ததியர் வாழும் வரலாறு என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இதை எழுதி இருக்கிறார். இந்த புத்தகம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேவியர் கல்லூரி வெளியிட்டது. பேராசிரியர் மார்க் எழுதியது. அந்த புத்தகத்தில் மேல் விவரங்கள் இருக்கிறதோ என்னவோ? இந்த புத்தகத்தை யாராவது பார்த்திருந்தால் படித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்!

Reverse casteism – டோண்டு ராகவன் வாஞ்சியின் மனைவிக்கு கொடுக்கப்பட வேண்டிய பென்ஷன் தி.மு.க. ஆட்சியினால் மறுக்கப்பட்டது என்று எங்கோ சொல்லி இருந்தார். டோண்டு, என் ஞாபகம் சரிதானா? உறுதிபடுத்துகிறார். அவரது ஆதாரம் திராவிட கழகத்தினரின் விடுதலை பத்திரிகைதான். விடுதலை பத்திரிகையே சொல்வதால் இதில் சந்தேகப்பட எதுவும் இல்லை. பிராமண விதவை என்பதற்காக அவரது பென்ஷன் மறுக்கப்பட்டது மிகவும் கீழ்த்தரமான விஷயம். (ஆனால் அவருக்கு ராஜாஜி, காமராஜ் போன்றவர்களின் ஆட்சியிலும் ஏன் பென்ஷன் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.) இதைப் பற்றி முத்துராமலிங்கத் தேவர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பேசியதாகவும், பென்ஷன் வாங்கிக் கொடுக்க அவர் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததாகவும் ராமகுமரன் அவர்கள் ஒரு சுட்டியை காண்பிக்கிறார்.

செங்கோட்டைக்காரரும், வாஞ்சியின் வீட்டுக்கு பக்கத்தில் வாழ்ந்தவருமான திரு. திரவியம் நடராஜன் எழுதிய மறுமொழிகளில் வாஞ்சி ஜாதி வெறியர் என்ற கருத்து அபத்தம் என்று சொல்லி இருக்கிறார். இது வாஞ்சி பற்றி எனக்கு இருக்கும் பிம்பத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது. வாஞ்சியை பற்றி மேலும் எழுதுவதாகவும் சொல்லி இருக்கிறார், காத்திருப்போம்.

ஆஷ் பற்றி, குறிப்பாக குற்றாலம் அருவியை அவர் பொதுவாக்கியது பற்றி யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.