இன்று போன ஞாயிறு ( மார்ச் 8 ) எங்கள் கல்யாண நாள். ஹேமாவை பற்றி நினைப்பதை எல்லாம் வெளியே சொல்லக்கூடாது என்று எனக்கு மீற முடியாத உத்தரவு இருக்கிறது. அது ப்ரைவேட்டாம், வெளியில் சொல்லக்கூடாதாம். அதனால் பீற்றிக் கொள்ள முடியவில்லை. 13 சந்தோஷமான வருஷங்கள் முடிந்து விட்டன என்றுதான் சொல்ல முடியும். அதனால் எங்கள் பெண்களை பற்றி எழுதுகிறேன்.

என் வாழ்வுக்கு அர்த்தம் கிடைத்தது என் முதல் பெண் ஸ்ரேயா பிறந்த அன்றுதான். ஸ்ரேயாவை கையில் ஏந்திய அந்த முதல் நிமிஷம் மறக்க முடியாதது.

என் இரண்டாவது பெண் க்ரியாவை கையில் ஏந்த துடித்தேன். ஏனென்றால் எனக்கு அப்போது அந்த ஆனந்தம் பற்றி தெரிந்திருந்தது. ஆனால் அவளை பார்க்கும் ஒவ்வொரு நிமிஷமும் மனதில் சந்தோஷம் பொங்கி வரும் என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அவளைப் பார்த்தால் எல்லா சோர்வும் ஒரு நொடியில் அகன்றுவிடுகின்றன. குழலினிது யாழினிது என்பர் என்று வள்ளுவர் தெரிந்துதான் பாடி இருக்கிறார்.

பாண்டியன் அறிவுடை நம்பி எழுதிய கவிதையோடு முடித்துக் கொள்கிறேன்.

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே!

என்ன அருமையான வரிகள்! கவிதை பிடிக்காத என்னையே மயக்குகின்றன.
குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்

க்ரியா அப்படித்தான் எல்லாவற்றையும் உதைத்துக் கொண்டும் அங்கங்கே தடுக்கி விழுந்து கொண்டும், எடுத்தவற்றை எல்லாம் கீழே வீசி எறிந்து கொண்டும் நடக்கிறாள். சில சமயம் கத்துவோம், ஆனால் ஒரு நிமிஷம் கத்துவதற்குள் சிரிப்பு வந்துவிடும். ஸ்ரேயாவுக்கு சில சமயம் கோபம் வரும் – நான் கீழே எறிந்தால் மட்டும் கத்துவீர்கள் என்று முகத்தை தூக்கி வைத்துக் கொள்வாள்.

Advertisements