டாப்டென் பதிவில் மேலும் சில புத்தக சிபாரிசுகள். நன்றி குமுதம், டாப்டென், பாஸ்டன் பாலா

முந்தைய சிபாரிசுகள் இங்கே மற்றும் இங்கே.

தலை சிறந்த 10 தமிழ் நாவல்: வெங்கட்சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன் முக்கியமான இலக்கிய விமர்சகர் என்று சொல்கிறார்கள். நான் அவரது இலக்கிய விமர்சனங்களை படித்ததில்லை. இப்போது திண்ணை தளத்தில் தன் வாழ்க்கை நினைவுகளை சுவாரசியமாக எழுதி வருகிறார்.

1. மோகமுள் – தி. ஜானகிராமன் கந்தர்வன், சி. மோகன் ஆகியோரும் சிபாரிசு செய்த புத்தகம். கும்பகோணத்து தெருக்களின் தூசி புத்தகத்தின் பக்கங்களில் இருக்கிறது.

2. தலைமுறைகள் – நீல. பத்மநாபன் கந்தர்வன் சிபாரிசு செய்த நாவல். எனக்கு இதை படித்திருக்கிறேனா என்று கொஞ்சம் குழப்பம்.

3. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி சி. மோகன் சிபாரிசு செய்திருக்கிறார். அருமையான புத்தகம். என்னுடைய காப்பியை பக்ஸ் தூக்கிக்கொண்டு போயிருக்கிறான். நீங்கள் சிலிகான் வாலியில் வசிப்பவராயிருந்தால், இரவல் வாங்கிக் கொள்ளலாம். ராஜ மார்த்தாண்டனும் சிபாரிசு செய்கிறார்.

4. கோவேறு கழுதைகள் – இமையம் கந்தர்வன் சிபாரிசு செய்தது. படித்ததில்லை.

5. வானம் வசப்படும் – பிரபஞ்சன் சா. கந்தசாமி சிபாரிசு செய்தது. படிக்கலாம். ஆனால் சூப்பர் டூப்பர் நாவல் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.

6. தூர்வை – சோ. தர்மன் படித்ததில்லை.

7. எட்டுத் திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன் படித்ததில்லை

8. கரமுண்டார் வீடு – தஞ்சை பிரகாஷ் படித்ததில்லை

9. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்; அற்புதமான நாவல். சி. மோகனும் சிபாரிசு செய்கிறார். சுலபமாக சுஜாதா புஸ்தகம் மாதிரி படிக்க முடியாது. அதிகாரம் எப்படி அநீதியில் விளைகிறது, இதிகாசங்கள் எப்படி உருவாகின்றன, பல கோணங்களில் படிக்கலாம். சிலிகான் வாலிக்காரர்கள் இரவல் வாங்கிக் கொள்ளலாம். ராஜ மார்த்தாண்டனும் சிபாரிசு செய்கிறார்.

10. செந்நெல் – சோலை சுந்தரபெருமாள் முக்கியமான புஸ்தகம். நல்ல நாவல் என்று சொல்ல மாட்டேன். கீழ் வெண்மணி பற்றி எழுதப்பட்ட docu-fiction. படிக்கும்போது இப்படித்தான் நடந்திருக்கு என்று நமக்கு தோன்றும். இந்திரா பார்த்தசாரதியும் கீழ் வெண்மணி பற்றி குருதிப் புனல் என்ற நாவலை எழுதி இருக்கிறார். ஆனால் அந்த நாவலில் ஒரு அந்நியத் தன்மை இருக்கும். இதிலோ அந்த ஊரிலேயே வாழ்ந்த ஒருவர் கதையை சொல்வது போல தோன்றும். சான் ஹோசே நூலகத்தில் கிடைக்கும்.

தமிழின் முக்கியமான புனைவுகள்: பட்டியல்: ராஜமார்த்தாண்டன்

ராஜ மார்த்தாண்டனும் முக்கியமான இலக்கிய விமர்சகர் போலிருக்கிறது. நான் எதையும் படித்ததில்லை.

1. பொய்த்தேவு – க.நா. சுப்பிரமணியம் அருமை. என் பதிவு இங்கே. கந்தர்வனும் சிபாரிசு செய்கிறார். சிலிகான் வாலிக்காரர்கள் இரவல் வாங்கிக் கொள்ளலாம்.

2. ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி அருமை. சிலிகான் வாலிக்காரர்கள் இரவல் வாங்கிக் கொள்ளலாம்.

3. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன் அருமை. வேதம் படிக்கும், ஒரு விதவையுடன் ரகசிய உறவு வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று குழம்பும் மகன், அவனது சோரம் போகும் அம்மா ஆகிய இரு பாத்திரங்களை வைத்து விளையாடி இருக்கிறார்.

4. ஜே.ஜே. சில குறிப்புகள்- சுந்தர ராமசாமி அருமை. வெங்கட் சாமிநாதனும், சி. மோகனும் குறிப்பிடுகிறார்கள். பக்ஸ் கொடுத்த பிறகு சிலிகான் வாலிக்காரர்கள் இரவல் வாங்கிக் கொள்ளலாம்.

5. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் – சுந்தர ராமசாமி படித்ததில்லை.

6. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம் ஆரம்பித்தேன். நன்றாகத்தான் இருந்தது. ஆனால் முடிக்காமல் அப்படியே வைத்துவிட்டேன். சி. மோகனும் சிபாரிசு செய்கிறார்.

7. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் அருமையான புத்தகம். வெங்கட் சாமிநாதனும் குறிப்பிடுகிறார்.

8. பின்தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன் ஜெயமோகன் நாலைந்து அற்புதமான நாவல்களை எழுதி இருக்கிறார். என்னை மிகவும் கவர்ந்தது இதுதான் – விஷ்ணுபுரத்தை விட, ஏழாம் உலகத்தை விட, காடு நாவலை விட.

9. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன் சா.கந்தசாமியின் சிபாரிசும் கூட. படித்ததில்லை.

10. உப பாண்டவம் – எஸ். ராமகிருஷ்ணன் நல்ல புத்தகம். எனக்கு மகாபாரதத்தின் மீது ஒரு fascination உண்டு. மகாபாரதத்தை வைத்து எவ்வளவு மோசமாக எழுதினாலும் ரசிப்பேன் என்று நினைக்கிறேன். இது நன்றாகவே எழுதப்பட்டிருக்கும், சிலிகான் வாலிக்காரர்கள் இரவல் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் மகாபாரதத்தை வைத்து இதை விட நல்ல புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஐராவதி கார்வே எழுதிய யுகாந்தர் என் லிஸ்டில் மிகவும் மேலே இருக்கும். பிரேம் பணிக்கர் இப்போது எம்.டி. வாசுதேவன் நாயரின் ரண்டாமூழம் என்ற நாவலை ஆங்கிலத்தில் online ஆக மொழி பெயர்த்துக் கொண்டு வருகிறார். அதுவும் இதை விட சிறந்த புத்தகம்.

Advertisements