சரோஜினி வரதப்பனுக்கு இந்த வருஷம் பத்ம பூஷன் விருது கொடுக்கப்பட்டது. அதை பற்றி எழுதிய பதிவில் இவரைப் பற்றி சரியாக தெரியவில்லை என்று சொல்லி இருந்தேன். இவரை பற்றி விகடனில் அந்தக் காலத்தில் வந்திருந்த கட்டுரை. ஒரே குறை, அதை படித்த பிறகும் அவர் என்ன சேவை செய்தார் என்று தெரியவில்லை. அவர் முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் மகள் என்று மட்டும் தெரிகிறது.

விகடனுக்கு நன்றி, ஓவர் டு விகடன்.

விகடன் பொக்கிஷம்

”சமூக சேவையில்தான் எனக்குத் திருப்தி!”

சில பேர், அரும் பெரும் காரியங்களை அமைதியோடு செய்து முடித்து விட்டு, அடக்க ஒடுக்கமாக இருந்து விடுவார்கள். சிலரோ சாதாரணமான காரியங்களைக்க ூட ‘ஹா, ஹூ’ என்று ஊரைக் கூட்டி, அமர்க்களப்படுத்திக் கொண்டுதான் செய்வார்கள்.

திருமதி சரோஜினி வரதப்பன் முதல் வகையைச் சேர்ந்தவர்.

”அரசியலில் தங்களுக்கு ஆர்வம் இல்லையா?” என்று கேட்டபோது, ”உண்டு. அதைக் காட்டிலும் சமூக சேவை செய்வதையே நான் பெரிதும் விரும்புகிறேன். இந்த ஆவலை எனக்குத் தூண்டிவிட்டவர் திருமதி அம்புஜம்மாள்தான்” என்கிறார் இவர்.

நேருஜி பிரதம மந்திரியான புதிதில் ஒருமுறை சென்னைக்கு விஜயம் செய்தார். அப்போது மாதர்கள் சங்கத்தின் சார்பில் அவருக்கு இந்தியில் ஒரு வரவேற்பு வாசித்து அளிக்கப் பட்டது. அந்த வரவேற்பை இந்தியில் எழுதியது, வாசித்தது இரண்டுமே சரோஜினி வரதப்பன்தான்.

மற்றொரு சமயம் இவர் டெல்லிக் ுப் போயிருந்தபோது, திருமதி அம்புஜம்மாள் இவரை நேருவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ”எனக்கு இவரைத் தெரியுமே!” என்றார் நேருஜி. ”இவர் அசெம்பிளி மெம்பராக வேண்டும் என்பது என் ஆசை” என்றார் அம்புஜம்மாள். நேருஜி உடனே சரோஜினி வரதப்பனைப் பார்த்து, ”தங்களுக்கு அந்த ஆசை இருக்கிறதா?” என்று கேட்டார்.

”இல்லை. எனக்கு இப்போது செய்து கொண்டிருக்கும் சமூக சேவையில்தான் திருப்தி” என்றார் இவர்.

சரோஜினி வரதப்பன் இப்போது வகித்து வரும் முக்கியப் பதவிகள்… சென்சார் போர்டு அங்கத்தினர், கௌரவ மாஜிஸ்டிரேட், மாதர் நல இலாகா சேர்மன்.

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் இவர், ”அந்தக் காலத்தில் பேட்டை முதலியார்கள் ரொம்ப வைதீகம். ‘பெண்களுக்கு அதிகப் படிப்பு எதற்கு?’ என்று கூறிவிட்டார்கள். ஆனாலும், நான் இந்தியில் விஷாரத் பாஸ் செய்திருக்கிறேன்” என்கிறார்.

சமீபத்தில் இந்திராகாந்தி சென்னை ராஜ்யத்தில் சுற்றுப்பயணம் செய்த போது, அவர் புரிந்த ஆங்கிலச் சொற்பொழிவுகளை தமிழில் மொழி பெயர்த்தவர் இவர்தான்.

மாதர் நல இலாகாவில் இவர் புரிந்துள்ள சாதனைகள் பல. சென்னை ராஜ்யத்திலுள்ள 373 பிளாக்குகளுக்கும் சுமார் 10,000 மாதர் நலச் சங்கங்களுக்கு மேல் தோன்றி இருக்கின்றன என்றால், அதற்கு இவருடைய ஆர்வமும் உழைப்புமே முக்கிய காரணம்.

”இந்தியாவில் முதன்முதலில் சென்னையில்தான் மாதர் நல இலாகா தொடங்கப்பட்டது. அதைப் பார்த்து இப்போது உத்தரப்பிரதேசத்திலும் ஆந்திராவிலும் ஆரம்பித்திருக்கிறார்கள்” என்கிறார் இவர்.

”எத்தனை முறை வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, ”முதல்முறை 1956ல் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.எல்.ஓ. மகாநாட்டுக்கு என் தந்தை (முதல்வர் பக்தவத்சலம்) போனபோது நானும் உடன் சென்றேன். லண்டன், பிரான்ஸ், ஸ்வீடன், வெஸ்ட் ஜெர் மனி, கெய்ரோ ஆகிய இடங்களைப் பார்த்துவிட்டு வந்தேன். அவற்றில் மேற்கு ஜெர்மனிதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட அந்த நாடு, யுத்தத்திற்குப் பின் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது. அங்கே பெண்கள் லிப்ஸ்டிக் போடுவதில்லை. தேச முன்னேற்றத்தையே முக்கிய லட்சியமாகக் கொண்டு உழைத்து வருகிறார்கள்” என்றார். சமீபத்தில் அமெரிக்க நாட்டின் அழைப்பை ஏற்று, அங்கும் சுற்றுப்பயணம் செய்துவிட்டு வந்துள்ளார் இவர்.

”குபேர நாடாக விளங்கும் அமெரிக்காவிலும் போக்குவரத்து வசதியும், மின்சாரத் தொடர்பும் இல்லாத பிற்போக்குப் பகுதிகள் நிறைய இருக்கின்றன. அந்தப் பகுதிகளின் முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி ஜான்சன் அங்கே பணத்தைக் கொண்டு போய்க் கொட்டிக்கொண்டிருக்கிறார். அமெ ரிக்காவிலும் வயது வராத சிறுவர்கள் நிறையக் குற்றம் புரிகிறார்கள். வறுமையினால்தான் இப்படிச் செய்கிறார்கள் என்று கூறமுடியாது. தாயின் கவனிப்பு இல்லாததே காரணம். ஹாலிவுட்டில் விசேஷமாக எதுவுமில்லை. நம் கோடம்பாக்கத்தைப் போல்தான் இருக்கிறது.”

இவையெல்லாம் சரோஜினி வரதப்பன் தரும் தகவல்கள்.

கர்னாடக இசையில் இவருக்கு நல்ல தேர்ச்சி உண்டு. ஐந்நூறு கீர்த்தனைகளுக்கு மேல் பாடத் தெரிந்த இவருக்கு, பிடில் வாசிப்பிலும் நல்ல புலமை உண்டென்பது பலருக்குத் தெரியாத செய்தியாகும்.

Advertisements