எனக்கும் பழைய தமிழ் இலக்கியத்துக்கும் கொஞ்சம் தூரம். சின்ன வயதில் உருப்போட்டதால் நாலு குறள், குற்றாலக் குறவஞ்சியில் இரண்டு பாட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு வெண்பா சொல்லுவேன். அவ்வளவுதான். சிவ பெருமான் கர்ப்பகிரகத்தை விட்டு இறங்கி வந்து எழுதிய கவிதையான கொங்கு தேர் வாழ்க்கையை முழுதாக படித்தபோது இவர் கர்ப்பகிரகத்திலேயே இருந்திருக்கலாம் என்றுதான் தோன்றியது.

கலைஞரோ இந்த இலக்கியத்தில் முங்கி குளிப்பவர். அவர் எழுதி இருக்கும் குறளோவியம், தொல்காப்பிய பூங்கா ஆகியவை பெரிதும் புகழப்படுகின்றன. என்றாவது ஒரு நாள் படித்து பார்க்க வேண்டும். தமிழ் இலக்கியங்களை சாதாரண தமிழனுக்கு கொண்டு வர செய்யப்படும் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

அவருடைய கதைகளில் நான் படித்தது பொன்னர் சங்கர் ஒன்றுதான். ஆரம்ப பள்ளி மாணவன் லெவலில் எழுதப்பட்ட கதை. ஒரே லாபம் அண்ணன்மார் சாமி கதை பற்றி தெரிந்துகொண்டதுதான். ஜெயமோகன் அவரது ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம் ஆகியவற்றை தன் வரலாறு கற்பனை படிப்புகள் இரண்டாம் பட்டியலில் சிபாரிசு செய்திருக்கிறார். பொன்னர் சங்கர் மட்டும் வைத்து சொன்னால் இவர் எழுதாமலே இருக்கலாம் என்றுதான் சொல்வேன்.

அவர் எழுதும் கவிதைகளோடு எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லை. சின்ன வயதில் “ஸ்ரீரங்கநாதனை பீரங்கி வைத்து தகர்க்கும் நாள் என்னாளோ?” என்ற “கவிதை” படித்து வியந்தது ஞாபகம் இருக்கிறது. இன்று இதெல்லாம் ஒரு கவிதையா என்று தோன்றுகிறது. நான் கூட இது மாதிரி ஆயிரம் எழுதுவேன் – “ஸ்ரீரங்கநாதன் கோவில் புளியோதரையில் காரங்கள் போட்டுவிட்டான் எரியுதடா!” என் கவிதையை என் மனைவி கூட ரசிக்க மாட்டாள். அவாள்-சவால், குடும்பத் தகராறு பற்றி எழுதுவது எல்லாமும் கவிதை, பாரதி எழுதியதும் கவிதை என்பது உலக மகா அநியாயம்.

அவரது பேச்சும் எழுத்தும் பலரை கவர்ந்தன. அவரது கரிஷ்மாவின் ஆதாரமே அவரது தமிழ்தான். ஆனால் அது வெறும் அலங்காரத் தமிழ். அதில் கருத்தை விட எதுகை மோனைக்குத்தான் முதல் இடம். துக்ளக்கின் ஒண்ணரை பக்க நாளேட்டில் அவரை கிண்டல் செய்து – “அதை அவன் படித்திட்டான், பின் கண் துடைத்திட்டான், பின் படுத்திட்டான்” என்றுதான் பேசுவார் என்று எழுதுவார்கள். எனக்கு கருத்துதான் முக்கியம். அதனால் அது என்னை ஓரளவு வயது வந்ததும் கவரவில்லை. மேடையில் பேசினால் சும்மா பொழுதுபோக்குக்காக கேட்கலாம் – பஸ் பயணத்தில் ராஜேஷ் குமார் கதை படிப்பது போல.

மொத்தத்தில் எனக்கு தெரிந்த அவரது இலக்கிய பங்களிப்பு முக்கியமானது இல்லை. அவர் இலக்கியங்களை சாதாரணத் தமிழனுக்கு கொண்டு வர செய்துள்ள முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை, ஆனால் அவற்றின் தரத்தை பற்றி எனக்கு தெரியாது.

அவரது சினிமா பங்களிப்பு அடுத்த பகுதியில்.