இலங்கையில் நடக்கும் போர் பற்றி எனக்கு அதிகமாக தெரியவில்லை. நான் அமேரிக்காவில் வாழ்கிறேன். தமிழ் பத்திரிகைகள், தினசரிகள், ஹிந்து பேப்பர், டிவி/ரேடியோ நியூஸ், டீக்கடை, பஸ் ஸ்டாண்ட், கோவில், காய்கறி கடை போன்றவற்றில் காதில் விழும் பேச்சுகள், ஆவேசமாகவோ அலட்சியமாகவோ பேசும் நண்பர்கள் யாரும் இல்லை. பதிவுகள் மட்டுமே எனது source.

கல்லூரிகளை மூடிவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். கல்லூரிகளில் மாணவர்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்று பதிவுகளில் படித்தேன். நேற்று பந்த் வேறு நடந்தது போலிருக்கிறது.

இருபத்தைந்து வருஷங்களுக்கு முன் இதே இலங்கை பிரச்சினைக்காக எங்கள் செட்டில் நடத்திய “போராட்டம்” நினைவு வந்தது. இப்போதும் மாணவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

நாங்கள் அப்போது சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றாவது வருஷ மாணவர்கள். எங்கள் செட்டில் ஒரு இருநூறு பேர் இருந்திருக்கலாம். கடைசி வருஷ மாணவர்கள் எந்த கலாட்டாவிலும் ஈடுபடமாட்டார்கள் (படிக்கிறார்களாம்) என்று ஒரு எழுதப்படாத விதி இருந்தது. சில பல குழப்பங்களால் காலேஜ் தேர்தல் எல்லாம் வேறு நடக்கவில்லை. சில கம்யூனிச சார்புள்ள மாணவர்கள்தான் முன்னால் நின்றார்கள் என்று ஞாபகம். எனக்கு இப்போது ஞாபகம் இருப்பது விஜயகுமார் ஒருவன்தான். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து சேலம் டவுனில் ஒரு பந்தல் போட்டு ஒரு நாள் உண்ணாவிரதம்.

யாரும் மறுத்து சொல்லவில்லை. அநேகம் பேருக்கு (என்னையும் சேர்த்துத்தான்) காலேஜ் ஒரு நாள் கட் என்று சந்தோசம். எங்கள் செட்டிலும் கோஷ்டிகள் இருந்தாலும் (SFI கோஷ்டி, மெட்ராஸ் கோஷ்டி, மதுரை கோஷ்டி, கவுண்டர் கோஷ்டி, டேஸ்காலர்கள், பெண்கள், இன்னும் சில – படிக்கிற கோஷ்டி தவிர பல கோஷ்டிகள் உண்டு) கோஷ்டிகளுக்குள் சண்டை இல்லை. பலர் நிறைய கோஷ்டிகளில் ஹானரரி மெம்பர். யாருக்காவது ஆட்சேபனை இருந்திருந்தாலும் பத்து பேர் ஆவேசமாக ஒரு விஷயத்தை பேசும்போது, முக்கால்வாசி பேர் அதை மறுத்து பேசாதபோது, அந்த பத்து பேருக்கு எதிரி யாராவது இருந்தாலொழிய அவர்களை யாரும் மறுத்து பேசப்போவதில்லை. எங்கள் சைக்காலஜி அப்படித்தான்.

மணிப்பூரில் இருந்து வந்து படித்த திரங் காங்க்மேய்க்கு ஸ்ரீலங்கா என்று ஒரு நாடு இருப்பதே தெரியுமோ தெரியாதோ. அவனுக்கு யாரும் இதை எல்லாம் விளக்கி இருக்கவும் மாட்டார்கள். அவன் என்ன நடக்கிறது என்று சரியாக புரியாமல் வேடிக்கை பார்த்திருப்பான்.

சேலம் டவுனில் பந்தல் போட்டோம். எல்லாரும் காலையில் மூக்கை பிடிக்க சாப்பிட்டுவிட்டு அங்கே போனோம். அநேகம் பேருக்கு அங்கே அட்டெண்டன்ஸ் போட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்த பத்து பேரோடு நாளைக்கு சண்டை ஏதாவது வரலாம். எதற்கு வம்பு? நாங்கள் நிறைய பேர் காலையில் அங்கே ஒரு ஒன்று இரண்டு மணி நேரம் உட்கார்ந்துவிட்டு, கோஷம் எல்லாம் போட்டுவிட்டு, மதியம் வசந்த விஹாரில் சாப்பிட்டுவிட்டு சினிமா கினிமா பார்த்துவிட்டு ஹாஸ்டலுக்கு திரும்பினோம்.

சாயங்காலம் போலிஸ் வந்து பந்தலில் இருந்தவர்களை தூக்கி இருக்கிறது. எல்லாருக்கும் டீ கொடுத்துவிட்டு காலேஜில் கொண்டுவந்து விட்டுவிட்டு போய்விட்டார்கள். அப்போது யாரோ ஒரு சீனியர் நீங்கள்ளாம் பெரிய புடுங்கிகளா என்று ஏதோ சொல்லிவிட அவர்களுக்கும் எங்களுக்கும் அன்று இரவு சண்டை. நன்றாக தெரிந்த ஒரு சீனியரை அடிக்க காலேஜ் க்ரவுண்டில் அவரை துரத்தினோம். சீனியர்கள் எல்லாம் அவர்கள் ரூமில் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு வெளியே வரவில்லை. அடுத்த நாள் எங்களுக்கும் அதே கதி நேர்ந்திருக்கும் – ஆனால் நல்ல வேளையாக அதற்குள் காலேஜை மூடி டிக்கெட்டுக்கு பணம் கொடுத்து எங்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.

உண்மையில் காலேஜில் ஒரு பத்து இருபது பேருக்கு இலங்கை தமிழர்கள் பேரில் அக்கறை இருந்திருந்தால் அதிகம். அந்த முறை மாணவர் தேர்தலில் ஜெயிக்கலாம் என்று கணக்கு போட்டவர்கள் சிலர் அவர்களோடு சேர்ந்தார்கள். அவர்களுக்கு எதிரிகள் இல்லை – யாரும் அவர்களை மறுத்து பேசவில்லை. ஆனால் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சேலம் அரசு பொறியியல் கல்லூரி பொங்கி எழுந்த மாதிரிதான் இருந்திருக்கும். பிரின்சிபால், போலிஸ், கலெக்டர் எல்லாம் எதற்கு வம்பு என்று காலேஜை மூடி விட்டார்கள். நாங்களும் ஜாலியாக வீட்டுக்கு போய்விட்டோம். ஹிமாசல் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து மாதிரி வட மாநிலங்களில் இருந்து வந்து படித்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் பிரச்சினை இல்லை. அவர்களுக்கும் சாப்பாட்டு பிரச்சினைதான். அவர்கள் பேசமால் தமிழ் நாட்டை சுற்றி பார்த்தார்கள். இரண்டு பேர் சைக்கிளில் கோயம்புத்தூர் வரை போனார்கள். ஒருவன் காவேரியை பார்த்துவிட்டு வந்து நான் அது வரை காவேரியை பார்க்காததை சொல்லி சொல்லி கிண்டல் செய்து கொண்டிருந்தான்.

மாணவர்களிடம் ஒரு mob mentality உண்டு. அவர்களை யாரும் பெரிதாக தண்டிக்க மாட்டார்கள் என்று அவர்களுக்கு தெரியும். அது ஒரு கும்பல். கும்பலில் ஒருவனை பிடிப்பது கஷ்டம் என்றும் அவர்களுக்கும் தெரியும். அந்த தைரியத்தில் அவர்கள் கொஞ்சம் வலிமையாக கூச்சல் போடுவார்கள். அதை பெரிதாக எடுத்துக் கொள்வது சரி இல்லை.

இப்போது நிலைமை மாறி இருக்கலாம். ஆனால் மாறி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

பின் குறிப்பு: புலிகளுக்கு ஆதரவு தரும் நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சீமான் போன்றவர்களுடன் எனக்கு கடுமையான கருத்து வேறுபாடு இருக்கிறது. ஆனால் நான் அவர்களை மதிக்கிறேன். புலிகளை எதிர்க்கும் சோ ராமசாமி, ஜெ போன்றவர்களுடன் எனக்கு இந்த விஷயத்தில் கருத்து ஒற்றுமை இருக்கிறது. அவர்களிடமும் (இந்த விஷயத்தை பொறுத்த வரை) எனக்கு மதிப்பு இருக்கிறது.

ஆனால் திண்ணையை காலி செய்ய மாட்டேன் என்று உட்கார்ந்திருக்கும் கலைஞரிடம் இருக்கும் மதிப்புதான் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. இரங்கல் கவிதை எழுதுவது, ஆனால் பிரபாகரன் சர்வாதிகாரி என்பது. சிந்தனையில் நேர்மை இல்லாத ஆசாமி. பதவிக்காக நிறம் மாற்றிக் கொள்ளும் பச்சோந்தித்தனம்.