எனக்கு ஐந்து ஆறு வயது இருக்கும்போது எங்கள் ஊரில் ஒரு டெண்ட்டு கொட்டாய் திறந்தார்கள். முதல் படம் திருவருட்செல்வர். என் அப்பா ஊரில் ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர். அவருக்கு ஸ்பெஷல் இன்விடேஷன். ஏதோ துண்டை காணோம் துணியை காணோம் என்று சிவாஜி கதறி கதறி அழுவதுதான் ஞாபகம் இருக்கிறது.

அடுத்த படம் பாக்தாத் திருடன். வீட்டில் அழுது புரண்டு சண்டை போட்டேன். என் அம்மா யாரும் கூட வர மாட்டோம், பரவாயில்லை என்றால் போய்த்தொலை என்று கோபத்துடன் சொன்னாள். நானும் விட்டுக்கொடுக்காமல் போய்விட்டேன். சண்டைக் காட்சிகளின் போது பயம். என்னை யாராவது திரையிலிருந்து வெளி வந்து அடித்துவிடுவார்களோ என்று ஒரு வினோத பயம். பெஞ்ச்சுக்கு அடியில் போய் ஒளிந்து கொண்டேன். யாருடா இந்த வீரத் திருமகன் என்று எங்கள் குடும்ப நண்பர் எட்டிப் பார்த்து நான் தனியாக வந்திருப்பதை அறிந்து கொண்டு பக்கத்தில் உட்கார்ந்து எனக்கு தைரியம் சொல்லிக் கொண்டே படம் பார்த்தார்.

அது அல்லவோ படம்? எம்ஜிஆர் கத்தியை சுழற்றுவதென்ன, வில்லன்களை துரத்துவதென்ன? அடி தூள்! அப்போதிலிருந்து ஒரு மூன்று நான்கு வருஷம் நான் தீவிர எம்ஜிஆர் ரசிகன். அதற்கு பிறகு சிவாஜி நடிப்பு, ஜெய்ஷங்கரின் ஜேம்ஸ் பாண்ட் சாகசங்கள், ரஜினி ஸ்டைல், கமலின் இளமை என்று ரசனை மாறினாலும் எம்ஜிஆரை மறக்க முடிந்ததில்லை.

நாங்கள் இருந்த ஊரின் பேர் லாடாகரனை எண்டத்தூர். விவசாய கிராமம். சில பெரிய “பண்ணையார்கள்”, முக்கால்வாசி கூலிகள். அனேகமாக எல்லாரும் ஏழைகளாகத்தான் இருந்திருக்க வேண்டும். எம்ஜிஆர் தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்டதும் அந்த ஊரில் ஒரு ஊர்வலம் நடந்தது – ராத்திரி ஒன்பது மணிக்கு. எல்லாரும் வேலையை முடித்துக் கொண்டு, ராத்திரி சாப்பாடு ஆனதும் கோஷம் போட்டுக்கொண்டு ஊர்வலம் போனார்கள். நூறு பேராவது போயிருப்பார்கள். வேலைகளை முடித்துக்கொண்டு எம்ஜிஆருக்கு நேரம் ஒதுக்கியது என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி. இவர்கள் எண்டத்தூரில் ராத்திரி ஒன்பது மணிக்கு ஊர்வலம் போனதால் என்ன ஆகி விடப் போகிறது? பேசாமல் படுத்து தூங்குவதை விட்டுவிட்டு ஊர்வலம் போக வேண்டுமென்றால் எம்ஜிஆர் அவர்கள் உள்ளத்தில் எவ்வளவு ஆழமாக பதிந்திருக்க வேண்டும்?

அப்புறம் 1977இல் – எமர்ஜென்சிக்கு பிறகு – வந்த தேர்தலில் எம்ஜிஆர் இந்திரா கூட்டணி. அதற்கு முற்போக்கு கூட்டணி என்று பேர். பத்து பனிரண்டு வயது சிறுவனான நான் அப்போது இருபது அம்சத் திட்டம் பற்றி பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் பரிசெல்லாம் வாங்கி இருந்தேன். உண்மையிலேயே இருபது அம்சத் திட்டம் நல்ல விஷயம் என்று நம்பிய காலம். இது முற்போக்கு கூட்டணி என்றால் கலைஞர் இருப்பது பிற்போக்கு கூட்டணிதானே என்று யோசிக்கும் அளவுதான் என் மூளை இருந்தது. எம்ஜிஆருக்குத்தான் என் ஆதரவு.

எம்ஜிஆர் அரசியலில் வெற்றி அடைந்தவர். ஆனால் அவர் ஒரு சினிமாக்காரராக்கத்தான் தன்னை உணர்ந்திருக்க வேண்டும். அவர் ஆழ் மனதில் அவர் ஒரு அரசியல்வாதி இல்லை.

சிவாஜி நடிகர். பாலச்சந்தர் இயக்குனர். இளையராஜா இசை அமைப்பாளர். ஏவிஎம் செட்டியார் தயாரிப்பாளர். ஆனால் எம்ஜிஆர் சினிமாக்காரர் – நல்ல சினிமாக்காரர். அவரது ஆளுமை பெரியது.

1936இல் சினிமாவில் நுழைந்தாலும் கிட்டத்தட்ட பதினைத்து வருஷங்கள் சைடி ரோல்கள்தான். அப்புறம் ஒரு பத்து வருஷங்கள் ராஜா ராணி படங்களில் ராஜா. அதற்கப்புறம் சினிமா உலகுக்கே ஒரு பத்து வருஷங்கள் ராஜா. கடைசி ஐந்தாறு வருஷங்கள் பழைய பெருங்காய டப்பா வாசனையை வைத்து ஓட்டினார்.

அவர் நல்ல நடிகர் இல்லை. எர்ரால் ஃப்ளின் நல்ல நடிகரா? இருக்கலாம், ஆனால் ஒரு சாகசம் புரியும் நடிகராகத்தான் நமக்கு தெரியும். ஆனால் எர்ரால் ஃப்ளின் முக்கியமான நடிகர். அதே போல்தான் எம்ஜிஆரும்.

அவர் நல்ல இயக்குனரா? தெரியவில்லை. அவர் இயக்குனர் என்று வெளிப்படையாக சொல்லிக்கொண்ட படங்கள் மிகக் குறைவு. நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி இரண்டொரு படங்கள்தான். ஆனால் நாடோடி மன்னனுக்கு பிறகு அவரது படங்களை அவர்தான் இயக்குனர் என்று சொல்ல வேண்டும்.

அவர் நல்ல தயாரிப்பாளரா? சினிமாவை ஒரு தொழிலாக செய்தாரா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு நல்ல தயாரிப்பாளர் செலவை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவோ குறைத்து வரவை அதிகரிக்க முயற்சி செய்வார். எம்ஜிஆர் பணத்தை காரணம் இல்லாமல் செலவழிப்பார் என்று கேள்வி. ஷூட்டிங்குக்கு வந்துவிட்டு மேக்கப் ரூமை விட்டு வெளியேவே வரமாட்டாராம்.

சினிமாவை பொறுத்த வரை அவர் ஒரு மிக லாபகரமான saleable brand. அவருக்கும் அது தெரிந்திருந்தது. அவர் தயாரிப்பாளர்களை வைத்து தன் பிராண்டை பலப்படுத்திக்கொண்டார். அவரை நம்பி தயாரிப்பாளர்கள் பணத்தை கொட்டினார்கள். படம் வெளிவந்தால் பொதுவாக அவர்கள் ஏமாற்றம் அடைந்ததில்லை. தானும் அவ்வப்போது பணத்தை கொடுத்து கொடை வள்ளல் என்று பேர் வாங்கினார். அந்த பேரும் mostly part of the brand building exercise, அவ்வளவுதான். உண்மையில் அவர் எஸ்.எஸ். வாசன், செசில் பி. டிமில், ராஜ் கபூர் போன்றவர்கள் வரிசையில் சேர்க்கப் பட வேண்டியவர்.

அவரது சினிமா எதுவும் உலகத்தரம் வாய்ந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, அலிபாபா, உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண் போன்றவை அருமையான பொழுதுபோக்குப் படங்கள். எங்க வீட்டுப் பிள்ளையில் அவர் நம்பியாரை சாட்டையால் அடித்துக் கொண்டே நான் ஆணையிட்டால் என்று பாடும் காட்சி பார்க்கும் அனைவரையும் குதூகலம் அடைய செய்யும். ஆயிரத்தில் ஒருவனில் அவர் அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் என்றால் விசில் பறக்கத்தான் செய்யும். நாடோடி மன்னனில் பி.எஸ். வீரப்பா “சரிதான்! நாட்டில் பணக்காரர்களே இருக்கக்கூடாது போலிருக்கிறது” என்றால் அதற்கு எம்ஜிஆர் “இல்லை ஏழைகளே இருக்கக்கூடாது” என்று சொன்னால் கை தட்டத்தான் செய்யும். அவர் சிலம்பம் ஆடுவதும் கத்தி சண்டை போடுவதும் இன்றும் பார்க்கலாம்.

ஆனால் அவரது பல சினிமாக்கள் இன்று பழையதாகிவிட்டன. காவல்காரன், தர்மம் தலை காக்கும், சக்கரவர்த்தி திருமகள், ஜெனோவா, மலைக் கள்ளன், திருடாதே, நம் நாடு, உழைக்கும் கரங்கள், நேற்று இன்று நாளை மாதிரி படங்களை இன்று பார்க்க முடிவதில்லை. போர் அடிக்கும். எழுபதுகளில் அவர் நடித்த அநேக படங்கள் மட்டமானவை. பெண்களை கீழ்த்தரமாக – காயா இது பழமா என்று தொட்டுப் பார்க்கட்டுமா? – சித்தரித்தன.

தமிழ் சினிமா வரலாற்றில் அவர் ஒரு முக்கியமான பகுதி. அவர் வழியில்தான் ரஜினி, விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் செல்கிறார்கள். அவரது பாதிப்பு இல்லாத ஹீரோ தமிழ் சினிமாவில் இல்லை. சிவாஜி கூட அவரது பாணியில் நடிக்க முயன்றிருக்கிறார்.

அவரது அரசியல் வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது. அண்ணா அவரை கூட்டம் கூட்டவும் ஓட்டு வாங்கவும் பயன்படுத்தினார். கலைஞர் அவரது ஆதரவால்தான் நாவலரை வென்று முதல்வரானார். நடிகருக்கு மந்திரி பதவி கொடுத்திருந்தால் அவர் எப்போதும் பின்னணியிலேயே இருந்திருப்பார். மந்திரி பதவி கொடுக்காததும், அவரை அமுக்க மு.க. முத்து முயன்றதும் கலைஞரின் தப்புக் கணக்கு. நடிகனுக்கும் நாடாளத் தெரியும் என்று காண்பிக்கிறேன் என்று சவால் விட்டு விட்டு அதிமுகவை ஆரம்பித்தார். அண்ணாயிசம் என்றெல்லாம் உளறிக் கொட்டினார். மக்களுக்கோ அவர் என்ன சொல்கிறார் என்பது ஒரு பொருட்டே இல்லை. அவர் முகத்தைப் பார்த்தால் போதும்.

முதல்வரான முதல் முறை கலைஞர் மாதிரி ஊழல் செய்யக் கூடாது என்று உறுதியாக இருந்தார். ஆனால் அவர் ஒன்றுமே செய்யவில்லை என்று தோன்றியது. கலைஞர் பேசாமல் இருந்திருந்தால் அடுத்த முறை அவர் தோற்றிருக்கலாம். கலைஞரின் அடுத்த தப்புக் கணக்கு அவரது அரசை டிஸ்மிஸ் செய்ய வைத்தது. சிம்பதி அலை கிளம்பி அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். லஞ்சமும் வந்து விட்டது. இட ஒதுக்கீட்டை அதிகரித்து என் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டார். கலைஞருக்கு விட்ட சவாலில் ஜெயித்தாகிவிட்டது. நிர்வாகத்தில் பெரிதாக இண்டரஸ்ட் இல்லை. அவருக்கு சொந்தமான உலகம் சினிமாதான். என்ன செய்வது? ஒன்றுமே செய்யவில்லை. கட்சியை நடத்த, கட்சிக்காரர்களை ஒரு கட்டுக்குள் வைக்க, தேர்தலில் செலவழிக்க என்று ஊழல் பணம் வருகிறது. மிச்ச நேரத்தில் டிவி பார்த்துக்கொண்டும், கலைஞரை மட்டம் தட்டிக் கொண்டும், உசுப்பி விட்டுக் கொண்டும், சுப்பு+துரைமுருகன்+ரஹ்மான் கான் கூட்டணியை சட்ட மன்றத்தில் சமாளித்துக்கொண்டும் காலத்தை ஓட்டினார். மூன்றாவது ஆட்சி காலத்திலோ உடல் நலம் மிக மோசமாக இருந்தது. அவர் வெறும் பொம்மை என்று தோன்றியது.

அவரது மனோதிடம் அசாதாரணமானது. தொண்டையில் குண்டு பாய்ந்ததும் அவரது சினிமா வாழ்க்கை முடிந்திருக்க வேண்டியது. ஆனால் அதற்குப் பிறக்கும் பத்து வருஷம் வெற்றிகரமாக நடித்தார். எழுபதுகளின் ஆரம்பத்தில் கலைஞர் எம்ஜிஆருக்கு கொடுத்த டார்ச்சர் கொஞ்சநஞ்சம் இல்லை. உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் செய்ய முடியாமல் அவரே பணத்துக்கு கஷ்டப்பட்டிருக்க வேண்டும். எப்படியோ சமாளித்து நின்றார். 87ல் உடல் நலம் சரி இல்லாமல் போன போதும் மீண்டும் கடுமையாக உழைத்து பேச ஆரம்பித்தார்.

அவரது இமேஜ் அவருக்கு மிகவும் முக்கியமான ஒன்று. தொப்பியும் கண்ணாடியும், படங்களில் எந்த வித கெட்ட குணமும் இல்லாத தட்டையான கதாபாத்திரமாக வருவதும், ரிக்ஷாக்கரார்களுக்கு ரெயின்கோட் வழங்குவதும், வள்ளல் என்று பேர் வாங்கியதும் brand buildingதான்.

அவர் ஒரு நல்ல சினிமாக்காரர். அசாத்தியமான மனோதிடம் கொண்டவர். தனது பிராண்டை வைத்து அரசியலில் வென்றார். ஆனால் அவருக்கு உண்மையில் அரசியலிலும் நிர்வாகத்திலும் அவ்வளவு உற்சாகம் இருந்ததில்லை. தமிழ் சினிமா உலகில் அவர் ஒரு மைல் கல். அவர் அரசியலில் வெற்றி அடைந்திருந்தாலும் அவர் தமிழ் நாட்டை பின்னடைய செய்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.