இந்தியாவில் ஜனத்தொகை நூறு கோடியை தாண்டிவிட்டது. இந்த விருதுகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் கோடிப் பேருக்கு ஒரு விருது கொடுக்கப்படுகிறது போல. சாதனையாளர்களை கவுரவப்படுத்துவது நல்ல விஷயம். சில தவறுகள் இருந்தாலும். ஊடகங்கள் இவர்களைப் பற்றி எழுத வேண்டும். இப்போதைய நிலையைப் பார்த்தால் எல்லாரும் வாழ்த்து சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். கொடுக்கப்பட்டது சரி, தவறு என்று விமரிசனங்களை வைக்க வேண்டும், அப்படி செய்தால்தான் எதிர்காலத்தில் இந்த விருதுகள் கொடுக்கப்படுவது நன்றாக செயல்படும்.

விருது பெற்றவர்கள் லிஸ்டை பார்த்தேன். எனக்கு தெரிந்தவர்கள் வெகு சிலரே.

சுந்தர்லால் பஹுகுணா, பத்ம விபூஷன்: சிப்கோ இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். சரியானவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

பத்ம விபூஷன் விருது கொடுக்கப்பட்ட வேறு எவரையும் எனக்கு தெரியாது.

தெலுங்கு நடிகர் கிருஷ்ணா, பத்ம பூஷன்: இது கொஞ்சம் டூ மச்சண்டி. கிருஷ்ணாவின் சாதனை என்னங்க? அவருக்கு எதுக்கு ஒரு அவார்ட்? ஒரு வேளை முன்னூறு படங்களுக்கு மேல் நடித்ததற்கு அவார்டா?

ஹிந்தி திரைப்பட பின்னணி பாடகி, ஷம்ஷாத் பேகம்: ஐம்பதுகளில் பிரபலமான திரைப்பட பின்னணிப் பாடகி. எனக்கு மிகவும் பிடித்த குரல்களில் ஒன்று. ஒரு மாதிரி கனமான குரல். ஓரளவு பரவை முனியம்மாவை நினைவு படுத்தும் குரல். ஆண்களில் திருச்சி லோகநாதனை நினைவுபடுத்தும் குரல். கபி ஆர் கபி பார், லேக்கே லேக்கே பெஹ்லா பெஹ்லா ப்யார், பச்பன் கே தின் புலா ந தேனா போன்ற பல புகழ் பெற்ற பாடல்களை பாடியவர். ஹிந்திப் பட உலகில் அவரது சாதனை தமிழ் பட உலகில் திருச்சி லோகநாதனுக்கு ஏறக்குறைய சமமானது. ஹிந்தி பாடல்களின் தாகம் அதிகம், அதனால் அவருக்கு விருது கொடுக்கப்பட வேண்டியதுதான்.

ஆனால் எம்எஸ்வி, இளையராஜா போன்றவர்களுக்கு ஒரு பத்மஸ்ரீ விருது கூட கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. அது ஒரு பெரிய அநியாயம்.

தனஞ்சயன், சாந்தி தனஞ்சயன் தம்பதியினர், பத்ம பூஷன்: இவர்களை இங்கே சில நண்பர்களின் அரங்கேற்றத்தில் பார்த்திருக்கிறேன். நடனம் பற்றி எனக்கு தெரியாது. விருது பற்றி கருத்து சொல்ல முடியாது.

கணபதி ஸ்தபதி, பத்ம பூஷன்: இவர்தான் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை கட்டியவரோ? விருது பற்றி கருத்து சொல்ல முடியாது.

சி. கே. பிரகலாத்: இவர் ஒரு மானேஜ்மென்ட் குரு. வறுமை ஒழிப்பை பற்றி பாட்டம் ஆஃப் த பிரமிட் என்ற ஒரு புகழ் பெற்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். நான் படித்ததில்லை. அமெர்க்காவில் வாழ்கிறார். விருது பற்றி கருத்து சொல்ல முடியாது.

ஜெயகாந்தன்: சரியானவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இவரை பற்றி தனியே ஒரு போஸ்ட் எழுதி இருக்கிறேன்.

ராமச்சந்திர குஹா: எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் கிரிக்கெட் பற்றி எழுதுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அருமையான புத்தகங்கள் எழுதி இருக்கிறார். ஆனால் நான் இவருக்கு பத்மஸ்ரீ விருதுதான் சிபாரிசு செய்திருப்பேன்.

சாம் பிட்ரோடா: இந்தியாவில் டெலிகம்யூனிகேஷன் புரட்சியின் சிற்பிகளில் ஒருவர். சரியானவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ப்ரொஃபசர் கைலாத்: இருபது வருஷங்களுக்கு முன் நான் கண்ட்ரோல் சிஸ்டம்சில் எம்.டெக். படிப்பதாக பொய் சொல்லிக்கொண்டிருந்த போது இவரது புத்தகங்களையும் பேப்பர்களையும் புரட்டி இருக்கிறேன். அப்போதே புரியவில்லை. ஆனால் விருது கொடுக்கப்பட வேண்டியதுதான். இவர் அப்போதே ஒரு என்ஆர்ஐ.

சரோஜினி வரதப்பன்: சமூக சேவகி. முன்னாள் முதலமைச்சர் பகதவத்சலத்தின் மகள் என்று நினைக்கிறேன். முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் அம்மாவோ? எனக்கு இவர் என்ன சேவை செய்தார் என்று தெரியாது, அதனால் விருது பற்றி ஒன்றும் சொல்ல முடியாது.

அபினவ் பிந்த்ரா: துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்றவர். விருது கொடுக்கப்பட வேண்டியதுதான்.

மொத்தம் முப்பது பேருக்கு பத்ம பூஷன் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. சேஷாத்ரி என்பவர் தமிழ்நாட்டுக்காரர். மாத்சயின்ஸ் இன்ஸ்டிட்யூட்டின் தலைவராம்.

திலகன், பத்மஸ்ரீ: திலகனை எனக்கு தமிழ் படங்கள் மூலமாகத்தான் தெரியும். அதை வைத்து அவருக்கு ஒரு விருதும் கொடுத்திருக்க முடியாது. அவர் மலையாளப் படங்களில் என்ன சாதித்திருக்கிறார் என்று எனக்கு தெரியாது.

விவேக், பத்மஸ்ரீ: இவரைப் பற்றி தனியாக ஒரு போஸ்ட் எழுதி இருக்கிறேன்.

ஐஸ்வர்யா ராய்: கொடுக்கலாம்.

அக்ஷய் குமார்: அநியாயம்.

அருணா சாயிராம்: கொடுக்க வேண்டியதுதான்.

ஹெலன்: காபரே நடனக்காரியாக புகழ் பெற்றவருக்கு அவார்டா என்று யோசிக்காதீர்கள். அவர் ஒரு காலத்தின் பிரதிநிதி. அவருக்கு கொடுக்க வேண்டியதுதான்.

ஹிருதயநாத் மங்கேஷ்கர்: கொடுக்கலாம்.

தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம்: இவருக்கு எதற்கு விருது என்று எனக்கு புரியவில்லை.

ஐராவதம் மஹாதேவன்: சரித்திர ஆராய்சியாளராகத்தான் எனக்கு இவரை தெரியும். மிகத் தகுதியானவர்.

ஹிந்தி பின்னணி பாடகர் குமார் சானு: கொடுக்கலாம்.

டாக்டர் எஸ். கிருஷ்ணஸ்வாமி: இவர் “இந்தியன் ஃபில்ம்” என்ற புத்தகத்தை எழுதியவரா? எனக்கு இவரைப் பற்றி தெரியவில்லை.

ரேடியோ புகழ் அமீன் சயானி: இவரது குரல் ஒரு காலத்தில் மிக பிரபலாமானது. கொடுக்கலாம்.

கிரிக்கெட் வீரர்கள் டோனி, ஹர்பஜன் சிங்: கொடுக்கலாம்.

ஸ்னூக்கர் வீரர் பங்கஜ் அத்வானி: கொடுக்கலாம்.

மொத்தம் 93 பேருக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டை சேர்ந்த டாக்டர் சிவராமன், டாக்டர் நூர்தீன், டாக்டர் சடகோபன், கிருஷ்ண குமார், சக்திவேல் ஆகியவர்களை பற்றி தெரியவில்லை.

Advertisements