ஜெயமோகனின் விலாங்கு என்ற போஸ்டை படித்த போது ராகுல சாங்க்ரித்யாயன் எழுதிய பிரவாஹன் என்ற கதை நினைவு வந்தது.

பிரவாஹன் ஒரு ராஜகுமாரன். ஆனால் அவன் ஒரு பிராமண குருகுலத்தில் ஒளித்து வளர்க்கப்படுகிறான். மற்ற உரிமையாளர்கள் எல்லாம் இறந்துவிட அவன் ராஜா ஆகிறான். நாட்டில் உள்ள வைதீக தத்துவங்களை மக்கள் கேள்வி கேட்கிறார்கள். பெரிய “ரிஷிகள்” யாராலும் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. பிரவாஹன் பிரம்மம், மறு பிறவி என்று இரண்டு புதிய கருத்துகளை கொண்டு வருகிறான். யாராலும் உணர முடியாத பிரம்மம் என்ன வேண்டுமானாலும் செய்யும். இந்த பிறவியில் நீ அடிமையா? பரவாயில்லை, உன் கடமையை செய், அடுத்த பிறவியில் பிராமணனாக பிறந்து சுகமாக இருக்கலாம். எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு. இந்த கருத்துகளை யாக்ஞாவல்கியருக்கு உபதேசிக்கிறான். அவர் அந்த கருத்துகளை கொண்டு ஜனகனின் அரசவையில் நடக்கும் ஒரு போட்டியில் வெல்கிறார். இந்த கருத்துகள் மதத்தின் ஒரு பகுதி ஆகின்றன.

பிரவாஹன் பற்றி நான் வேறு எங்கும் படித்ததில்லை. பிரவாஹன் ராகுல்ஜியின் கற்பனை பாத்திரமா இல்லை இதிகாசங்களில் குறிக்கப்படுபவனா என்று நிச்சயமாக தெரியவில்லை.

இந்த கதை வோல்காவிலிருந்து கங்கை வரை என்ற ஒரு அருமையான கதை தொகுப்பில் இருக்கிறது. “ஆரியர்கள்” மெதுவாக இந்தியாவிற்குள் நுழைந்து கங்கைக்கரை வரை பரவுவதை பல வேறு கால கட்டங்களில் நடக்கும் சிறு கதைகள் மூலம் விவரிக்கிறார். முதல் கதை கூட்டம் கூட்டமாக வேட்டையாடி வாழும் காலத்தில் நடக்கிறது. கடைசி கதை 1942இல் ஒரு கம்யூனிஸ்ட் ராணுவத்தில் சேர்ந்து போராடுவதுடன் முடிகிறது. நியு சென்சுரி புக் ஹவுஸ் போன்றவை ஒரு காலத்தில் வெளியிட்டன. இப்போது நியு சென்சுரி புக் ஹவுஸ் இருக்கிறதோ இல்லையோ?

Advertisements