ஒபாமா இன்னும் பத்து நிமிஷத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்பார். டிவியில் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

நானும் ஒபாமாவுக்கு ஓட்டு போட்டவன்தான். புஷ்ஷுக்கு எதிராக யார் நின்றாலும் ஓட்டு போட்டிருப்பேன். ஒபாமாவை பற்றி நல்ல அபிப்ராயமும் உண்டு. ஏன் என்று சொல்ல முடியவில்லை, ஆனால் ஒபாமா நம்பிக்கை அளிக்கிறார். அவரால் நாட்டின் பிரச்சினைகளை சமாளிக்க முடியும் என்று தோன்றுகிறது. அவர் கறுப்பர் என்பதாலேயே அவரை ஆதரிப்பவர்கள் உண்டு – எனக்கு அப்படி இல்லை. அவர் தோல் கறுப்பா, வெள்ளையா, பழுப்பா, நீளமா, அவர் ஆணா, பெண்ணா என்பதெல்லாம் எனக்கு முக்கியம் இல்லை. யாரும் அதை முக்கியமாக நினைக்கக்கூடாது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவருடைய ரெகார்ட் என்னவென்று தெரிந்துகொண்டு அவருக்கு ஓட்டு போடவில்லை. அவர் ஹில்லாரி க்ளின்டனை நன்றாக கையாண்டார், மக்கேயினுடன் நன்றாக வாதிட்டார், தன்னுடன் போட்டியிட்ட ஹில்லாரிக்கு செகரெட்டரி ஆஃப் ஸ்டேட் (நம்மூரில் வெளியுறவு மந்திரி) பதவி கொடுத்தார் போன்ற விஷயங்கள் பிடித்திருக்கிறது. இன்று நாட்டை சூழ்ந்திருக்கும் பெரும் பிரச்சினைகளை சமாளிக்க அவருக்கு திறமை இருக்கிறதா இல்லையா என்று கணிக்க இந்த ஆதாரம் போதாதுதான். ஆனால் எங்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது? ஒபாமாவை விட்டால் ஹிலாரி இல்லாவிட்டால் மக்கெயின் அவ்வளவுதான்.

ஆனால் இந்தியாவின் நிலை இதை விட கஷ்டம். நரசிம்ம ராவ் வருவார் என்று யார் எதிர்பார்த்தார்கள்? சந்திரசேகர்? குஜ்ரால்? தேவே கௌடா? அட மன்மோகன் சிங்? இந்தியாவில் யாரும் காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் ஓட்டு போடுவதில்லை. மக்கள் தேர்ந்தெடுப்பது கலைஞரா இல்லை ஜெ/எம்ஜிஆரா என்றுதான். நமக்கும் நாடாளுமன்ற தேர்தலை விட ஒரு தலைவரை (ஜனாதிபதியோ இல்லை பிரதமரோ) தேர்ந்தெடுப்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. அப்படி இருந்தால் ஒரு துறையில் சாதிப்பவர்கள் தலைவராகலாம். அப்துல் கலாம், நாராயண மூர்த்தி, பாபா ஆம்தே, மேதா பட்கர் போன்றவர்களுக்கு கூட ஒரு சான்ஸ் உண்டு. அவர்கள் தலைவராக விரும்புவார்களா என்பது வேறு விஷயம். ப்ராக்டிகலாக பார்த்தால் விஜயகாந்துக்கு ஜெயிக்க சான்ஸ் அதிகம். இன்று நீங்களும் நானும் முதல்வராக வேண்டுமென்றால் நமக்கு ஒரு கட்சி வேண்டும். 234 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும், அதில் 138 பேராவது ஜெயிக்க வேண்டும். ஜாதி, மதம் என்று பல கணக்குகள் போட வேண்டும். இந்த தலை வலி எல்லாம் குறைவது நல்ல விஷயம்தானே?

நான் எழுதி முடிப்பதற்குள் ஒபாமா ஜனாதிபதி ஆகிவிட்டார்.

Advertisements