பாரதி பிறந்தது 1882இல். அவர் திலகரை விட இருபத்தைந்து வயது இளையவர்; அரவிந்தர், வ.உ.சியை விட பத்து வயது இளையவர்; திரு.வி.க., சுப்ரமணிய சிவா, வ.வே.சு. ஐயரின் சம வயதுக்காரர்.

அவர் சிறு வயதிலேயே நமக்கு தொழில் கவிதை என்று நிச்சயித்துக் கொண்டவர். நாட்டிற்குழைத்தல் பின்னால் வந்து சேர்ந்து கொண்டதுதான். அவரது மற்ற முகங்களை அவரது கவிஞர் முகம் பின் தள்ளி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவரது கவித்துவத்தை விமர்சிக்க என்னால் முடியாவிட்டாலும் மற்ற முகங்களை விமர்சிக்க்கிறேன். தகுதி இருக்கிறதோ இல்லையோ தைரியம் இருக்கிறது.

தமிழுக்கு அவர் செய்த பெரும் சேவை பண்டிதர்களிடமிருந்து தமிழை மீட்டதுதான். அவரும் சில கரடுமுரடான கவிதைகளை எழுதி இருக்கிறார் என்றாலும் அவரது பெரும்பாலான கவிதைகள் கோனார் நோட்ஸ் இல்லாமல் புரிந்து கொள்ளக்கூடியவை. அவருக்கு முன்னால் வந்த கோபால கிருஷ்ண பாரதியார், அண்ணாமலை ரெட்டியார் போன்றவர்கள் மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய தமிழில் எழுதி இருந்தாலும், அவரது பாட்டுகள்தான் மக்களிடம் சென்றடைந்தன. அதே நேரத்தில் பண்டிதர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவரது கவிதைகள் மட்டுமல்ல, அவரது உரைநடையும் இன்றைய தமிழில்தான் எழுதப்பட்டிருக்கிறது. தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரமும், இரண்டாம் நாவலான கமலாம்பாள் சரித்திரமும் ஏன் பின்னால் வந்த ஜே.ஆர். ரங்கராஜு, வடுவூர் துரைசாமி ஐயங்கார் போன்றவர்கள் எழுதிய நூல்களும் பழைய தமிழில் எழுதப்பட்டன. ஆனால் பாரதியாரது ஞான ரதமும், வசன கவிதைகளும் இன்றைய தமிழில்தான் எழுதப்பட்டிருக்கின்றன.

அவரது கதைகள் அவ்வளவாக கண்டுகொள்ளப்படுவதில்லை. கண்டுகொள்ளும்படி அவர் எழுதிய கதைகள் குறைவுதான். ஆனால் ஞான ரதம் ஒரு சாதனை. சாமுவேல் ஜான்சன் எழுதிய ரசெலாஸ் என்ற நாவலுடன் ஒப்பிடத் தக்கது. சின்ன சங்கரன் கதை, சந்திரிகையின் கதை ஆகியவை முடிக்கப்பட்டிருந்தால் நன்றாக வந்திருக்கும்.

அவரது வசன கவிதைகள் அருமையானவை. மொழிபெயர்க்கக்கூடியவை. இன்றைய புதுக் கவிதைகளின் முன்னோட்டம் என்று சொல்லலாம். உரைநடையில் கவிதை! இரண்டு கயிறுகளின் காதல். இதை வைத்து எப்படித்தான் இந்த மாதிரி ஜீவனுள்ள ஒரு கவிதையை எழுதினாரோ?

அவரது இதழியல் பங்களிப்பு மிக முக்கியமானது. எனக்கு தெரிந்து அவர் கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தியா பத்திரிகையை தொகுத்து வெளியிட்டால் அது ஒரு முக்கியமான ஆவணமாக இருக்கும். இனி மேல் கிடைக்குமோ கிடைக்காதோ?
நினைவிலிருந்து எழுதுகிறேன். அவரது கட்டுரை தொகுப்பில் அவர் வ.உ.சி., சிவா, சுதேசி கப்பல் கம்பெனி ஆகியவறை பற்றி எந்த கட்டுரையும் இல்லை. அது தொகுப்பாளரின் குறையா, இல்லை என் ஞாபக சக்தியின் குறையா, இல்லை பாரதியார் எதுவும் எழுதவில்லையா, இல்லை எழுதியது எதுவும் கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை.

சுதந்திர போராட்டத்தில் அவரது பாட்டுகளின் தாக்கம் பெரியது. அவரது பாட்டுகள் பல தலைமுறைகளை உற்சாகப்படுத்தின. அவர் ஜெயிலுக்கு போகவில்லை என்று குறை சொல்பவர்கள் உண்டு. வ.உ.சிக்கும் சிவாவுக்கும் ஏற்பட்ட கதியை பார்த்த பிறகு யார்தான் ஜெயிலுக்கு போக விரும்புவார்கள்? திலகருக்கு கிடைத்ததை விட அவரது சீடர்களுக்கு கிடைத்த தண்டனை பெரியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் புதுவைக்கு போனது நல்ல விஷயமே. அங்கும் அவர் சும்மா இல்லை – முடிந்த வரை விடுதலை ஆர்வத்தை கிளப்பிக்கொண்டுதான் இருந்தார்.

அவரை இன்றைய மதிப்பீடுகளை வைத்து குறை சொல்பவர்கள் உண்டு. தலித்துக்கு பூணூல் போடுவதற்கு பதிலாக அவர் தன் பூணூலை கழற்றி வீசி எறிந்திருக்கலாமே என்று சில திராவிட இயக்கத்தினர் குறை சொல்கிறார்கள். இது மடத்தனம். அவர் தலித்களை பிராமணர்களுக்கு சமமாக மாற்ற தனக்கு தோன்றியதை செய்தார். உங்களுக்கு வேறு ஏதாவது தோன்றினால் அதை செய்யுங்கள். அவரை ஏன் குறை சொல்கிறீர்கள்? அவர் சில இடங்களில் பசு வதை தவறு, பிராமணர்கள் தங்கள் உயர்ந்த ஜாதி தர்மத்தை கைவிட்டுவிட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார். அதற்காக அவரை ஹிந்துத்வவாதி என்று சொல்வது கேனத்தனம். ௧௮௮௨இல் பிறந்த ஒரு பிராமணர் பசு வதை தவறு என்று சொல்வது ஆச்சரியமா என்ன? இதை எல்லாம் ஒரு குறை என்று சொல்வது முட்டாள்தனம். அவர் ஒரு புரட்சியாளர்தான். இன்றைய மதிப்பீடுகளை வைத்து அவர் மீது குறை சொல்லாதீர்கள்!

அவர் ஒரு உணர்ச்சி பிழம்பு. யோசித்து செய்வதெல்லாம் இல்லை. தனக்கு தோன்றியதை முழு மனதோடு உடனே செய்துவிடுவாராம். அப்படிப்பட்டவர் வாழ்க்கையில் சில முரண்பாடுகள் இருப்பது சகஜம்தான்.

சில சுவாரசியமான விஷயங்கள்: அவருக்கு தலை வழுக்கை (எனக்கு ஒரு அல்ப சந்தோசம்) அதனால்தான் எப்போதும் தலைப்பாகையோடு காணப்பட்டாராம். காலில் ஒரு பெரிய ஆணி உண்டாம். சில சமயம் நடக்க கஷ்டப்படுவாராம். சுரத் காங்கிரஸில் திலகர் தலைமையிலும் கோகலே தலைமையிலும் காங்கிரஸ் இரு கோஷ்டிகளாக உடைந்தது. அதற்கு காரணம் தமிழக பிரதிநிதிகள் (பாரதி, வ.உ.சி., ராஜாஜி மற்றும் சிலர்) செருப்பை கழற்றி வீசியதுதான் என்று சொல்கிறார்கள்.

தன் பாட்டுகளை தானே அருமையாக பாடுவாராம்.

வ.ரா. எழுதிய “பாரதியார் நினைவுகள்” புத்தகத்தில் இருந்து ஒரு விஷயம் தெளிவு. புதுவையில் “ஒளிந்திருந்த” தேச பக்தர்கள் ஒரு ஐந்தாறு பேர்தான். அவர்களை மாட்டிவிட ஒரு போலிஸ் படையே வேலை செய்திருக்கிறது. ஆனால் வ.வே.சு. ஐயர், அரவிந்தர் ஆகியோருக்கு பணக் கஷ்டம் இல்லை. பாரதியாருக்கோ சோற்றுக்கே திண்டாட்டம். அடுத்தவர்கள் உதவியில்தான் காலட்சேபம் நடந்திருக்கிறது. ஆனால் வ.ரா. சொல்வது மாதிரி அவருக்கு உதவி செய்து மாளாது. பணம் வந்தால் நாலைந்து நாளில் கர்ண மகா பிரபு மாதிரி கொடுத்து தீர்த்துவிடுவாராம்.

புரியாத ஒரு விஷயம் உண்டு. வ.உ.சி., சிவா, பாரதி ஆகியோர் நெருங்கிய நண்பர்கள் என்று சொல்வார்கள். ஆனால் ஜெயிலில் இருந்து வந்த பிறகு அவர்களுக்குள் பெரிதாக தொடர்பு இருந்ததாக தெரியவில்லை. கடித தொடர்பு கூடவா இருந்திருக்காது?

மொத்தத்தில் அவர் எனக்கு பிடித்த கவிஞர். அவரது கவிதைகளின் தாக்கம் தமிழ் நாட்டில் மிகவும் பெரிது. தமிழ் எழுத்தில் ஒரு புரட்சியாளர். தமிழை இருபதாம் நூற்றாண்டுக்கு கொண்டு வந்தவர். அவரது ஞான ரதம் ஒரு முக்கியமான புத்தகம். அவரது வசன கவிதைகள் ஜீவனுள்ளவை. அவற்றை போன்று எதுவும் இன்னும் தமிழில் வரவில்லை – ஒரு விதத்தில் இவற்றை இன்றைய புதுக் கவிதைகளின் முன்னோடி என்று சொல்லலாம். தமிழின் முதல் இதழியலாளர் என்று அவரை சொல்லலாம். முக்கியமான சுதந்திரப் போராட்ட வீரர். அவரது கவிதைகள் விடுதலைப் போரில் பெரும் பங்கு வகித்தன. அவரது சமூக சீர்திருத்த நோக்கு புரட்சிகரமானது. ஆனால் அவரது தாக்கம் தமிழ் நாட்டில் மட்டும்தான். அவர் தமிழ் நாட்டின் வரப்ரசாதம்.

Advertisements