எனக்கு கவிதை பிடிப்பதில்லை. அது கம்பனோ, வள்ளுவரோ, இளங்கோவோ, தாகூரோ, ஷெல்லியோ, கீட்சோ, பைரனோ, வால்ட் விட்மனோ – அப்படி கவிதையில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. இத்தனை வருஷங்கள் படிப்புக்கு பின் நிச்சயம் எசெகியல் எழுதிய Night of the Scorpion, வோலே சொயிங்காவின் A Telephone Conversation, “வாசல் சுத்தமாச்சு மனசு குப்பையாச்சு” என்று முடியும் ஒரு தமிழ் புது கவிதை அவ்வளவுதான் தேறும்.

இதற்கு இரண்டே இரண்டு விதிவிலக்குகள் – ஒன்று பாரதியார், ஒன்று ந. பிச்சமூர்த்தி. ந. பிச்சமூர்த்தியின் கவிதைகளை என் இருபதுகளில் எழுத்தாளர் சுப்ர பாரதி மணியனின் பலத்த சிபாரிசில் படித்தேன். இப்போது ஏதோ கடவுள் வரும் கவிதை ஒன்றுதான் ஞாபகம் இருக்கிறது. ஆனால் பல கவிதைகள் பிடித்திருந்த ஞாபகம் இருக்கிறது. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.

பாரதியாரை ஏன் பிடித்திருக்கிறது? சிறு வயதிலிருந்தே அவர் ஒரு மகாகவி என்று ப்ரெயின் வாஷ் செய்யப்பட்டதாலா? இல்லை அவர் உண்மையிலேயே மகாகவியா? இதற்கு பதில் சொல்வது கஷ்டம்.

கவிதையை பற்றி மனதில் ஒரு பிம்பம் இருக்கிறது – அதற்கு மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது. அது உணர்ச்சிகளை தட்டி எழுப்ப வேண்டும். கதையும் கட்டுரையும் போல மெதுவான பில்டப் இருக்க முடியாது. ஒரு கவிதை என்ன மிஞ்சி மிஞ்சி போனால் நூறு வரி இருக்குமா? (பெரும் கவிதைகள் காவியமாகிவிடுகின்றன.) சந்தம் நல்ல விஷயம், ஆனால் சந்தம் மொழிபெயர்ப்பிலும் வருவது கஷ்டம். மொழி இல்லாவிட்டால் ஏது சந்தம்? (புதுக் கவிதைக்காரர்களுக்கு பிரச்சினை குறைவு) “சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிருண்டு” என்று வரும் பீமனின் சபதத்தை படிக்க முடியாது, பாடத்தான் முடியும். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அந்த சந்தத்துக்கு எங்கே போவது? பொழுது போகாத நேரத்தில் உங்களுக்கு பிடித்த ஒரு பாரதியாரின் கவிதையை வேறு மொழியில் எழுதிப் பாருங்கள். தமிழின் வேகம், சந்தம், நயம் வருகிறதா? நான் கன்னடியனுக்கும், கனடியனுக்கும், அமெரிக்கனுக்கும், ஆந்திரனுக்கும் இதை எப்படி கொண்டு போக முடியும்?

சிறு வயதிலிருந்து அவர் கவிதைகள் அருமையானவை என்று எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது. வெள்ளி பனி மலை, ஜய ஜய பவானி, பாருக்குள்ளே நல்ல நாடு, செந்தமிழ் நாடென்னும் போதினிலே, ஓம் சக்தி ஓம் சக்தி ஓம், காற்று வெளியிடை கண்ணம்மா, கூலி மிக கேட்பான், சின்னஞ்சிறு கிளியே, வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே, ஓடி விளையாடு பாப்பா, ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா, சுட்டும் விழி சுடர்தான் போன்ற பல கவிதைகள் என் மனதில் ஏற்படுத்தும் கிளர்ச்சி, உத்வேகம் கொஞ்சநஞ்சம் இல்லை. ஆனால் அந்த உத்வேகத்தை ஒரு மலையாளியிடம் கூட என்னால் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அப்படி என்றால் இவை எல்லாம் உண்மையிலே நல்ல கவிதையா இல்லை சிறு வயதில் ஆழப் பதிந்தவையா?

செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
When someone mentions Tamil Nadu,
Sweet honey pours into my ear.
உங்களுக்கு எது பிடித்திருக்கிறது? தமிழ் அறியாத உங்கள் நண்பரிடம் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பை சொல்லி பாருங்கள். நான் நல்ல மொழி பெயர்ப்பாளன் அல்லன். ஆனால் இதை எப்படி மொழி பெயர்த்தாலும் இவ்வளவுதான்! Enough said.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்றே சங்கே முழங்கு என்ற பாட்டும் உத்வேகத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அது சிறந்த கவிதை இல்லை, சிறந்த சந்தம் மட்டுமே கொண்டது என்று எனக்கு தெரிகிறது. பாரதியாரின் பாட்டுகளை பற்றி என்னால் இப்படி சொல்ல முடிவதே இல்லை.

கவிதையை ரசிக்க தெரியாதது என்னுடைய பலவீனமாக இருக்கலாம். ஆனால் எனக்கு தோன்றும் வரை – பாரதி ஒரு தமிழ் கவிஞர். அவ்வளவுதான். உலக மகா கவி எல்லாம் இல்லை. எனக்கு உலக மகாகவி என்று யாருமே இல்லை, அது வேறு விஷயம்.

தமிழ் நாட்டில் அவருக்கு பின்னால் ஒரு ஒளி வட்டம் இருக்கிறது. காந்தி, பெரியார், காமராஜ் போன்றவர்களுக்கு இருப்பதை போல. அந்த ஒளி வட்டத்தை உடைத்து அவரை பார்ப்பது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. அதனால் அவரது கவித்திறன் என்னவென்று யாருமே அலசி நான் பார்க்கவில்லை. ஜெயபாரதன் என் மதிப்பிற்குரியவர். ஆனால் அவர் எழுதிய மதிப்பீட்டை பாருங்கள், அவர் ஒரு பௌதிக கவி, வேதியியல் கவி என்ற ரேஞ்சில் எழுதி இருக்கிறார். இந்த மாதிரி புகழ்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். a

இல்லை என்றால் “திராவிட” மதிப்பீடுகள். வீரமணி ஒரு முறை அவர் ஆரியன் என்ற வார்த்தையை உயர்ந்தவன் என்ற பொருளில் பயன்படுத்தி இருக்கிறார் என்று குறை சொல்லி இருந்தார். அவர் எழுதிய காலத்தில் அதுதான் அர்த்தம். கொஞ்சம் விட்டால் “பறையனுக்கும் இன்று தீயர் புலையனுக்கும் விடுதலை” என்று எழுதிவிட்டார், “பறையன்” என்று சொன்னவர் மீது தீண்டாமை கேஸ் போடுங்கள் என்பார்.

ரசிகமணி டி.கே.சி. கம்பனை சாதாரண மக்களுக்கு கொண்டு வந்தாராம். அந்த மாதிரி பாரதியாரை யாருமே அலசவில்லை. அப்படி அலசக் கூடியவர்கள் எதுக்குடா வம்பு என்று விலகி விடுகிறார்கள். ஒரு காலத்தில் கல்கிக்கும் பல பாரதி பக்தர்களுக்கும் பாரதி மகாகவியா இல்லையா என்று விவாதம் நடந்ததாம். ஒரு வேளை அப்போது அலசப்பட்டிருக்கலாம்.

சுற்றி வளைப்பானேன்? என் பலவீனமோ, என்னவோ எனக்கு தெரியாது. பாரதியை ஒரு கவிஞராக மதிப்பிட என்னால் முடியாது. எனக்கு அவர் பிடித்த கவிஞர். அவர் உலக மகாகவியோ இல்லையோ என்னால் சொல்ல முடியாது. எந்த கவிஞரும் மொழி என்ற எல்லையை தாண்டுவது கஷ்டம் என்று நான் நினைக்கிறேன்.

நல்ல வேளையாக பாரதிக்கு பல முகங்கள் இருக்கின்றன. அவர் அரசியல் விமர்சகர்; இதழியலாளர்; எழுத்தாளர்; சுதந்திர போராட்ட வீரர். தமிழ் எழுத்தில் ஒரு புரட்சியாளர். அதைப் பற்றி எல்லாம் அடுத்த இன்ஸ்டால்மென்டில்.

Advertisements