நான் புரிந்து கொண்ட வரை கீழே எழுதி இருக்கிறேன். ஏதாவது சரி இல்லை என்றால் சொல்லுங்கள்.

1. ஒரு காலத்தில் தமிழகத்தில் – இல்லை இந்தியாவிலேயோ? – பிறப்பினால் ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் இருந்தது.
2. மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள் (மத்திய ஆசியா என்றால் இன்றைய உஸ்பெகிஸ்தான், டாட்ஜிகிஸ்தான், கசாகிஸ்தான் போன்ற நாடுகள்)
3. அவர்கள் வர்ணம், ஜாதி, பிறப்பினால் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை இந்தியாவில் நுழைத்தார்கள்.
4. ஒரிஜினல் இந்தியர்களுடன் இனக் கலப்பு நடந்தது. ஆனால் இந்த இனக் கலப்பு தென் இந்தியாவில் மிக குறைவு. முக்கியமாக தமிழகத்தில் இன்னும் ஒரிஜினல் இந்தியர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
5. ஆரியர்களின் பூசாரி வர்க்கமான பிராமணர்கள் மெதுவாக தமிழகத்துக்கு வந்தார்கள்.
6. இவர்கள் எண்ணிக்கையில் அதிகம் இல்லாதவர்கள். பல நூறாண்டுகளுக்கு பிறகும் தமிழகத்தில் 3%தான் இருக்கிறார்கள்.
7. இவர்கள் படை திரட்டிக்கொண்டு வந்து தமிழகத்தை வெல்லவில்லை.
8. இவர்கள் பெரிய விஞ்ஞானிகளும் அல்லர். இவர்கள் வந்து விவசாயம், தொழில், போர் முறை எதையும் முன்னேற்றவில்லை.
9. ஆனால் இவர்கள் சொல்வதை எல்லாரும் ஒத்துக்கொண்டார்கள். திடீரென்று இங்கே நுழைந்து ராஜாவைத் தவிர மற்றவரெல்லாம் சூத்திரன், தாழந்தவன், இவர்கள் சந்ததியினர் எல்லாரும் கிட்டத்தட்ட அடிமைகள் என்று சொன்னதை அத்தனை பேரும் ஒத்துக்கொண்டார்கள்.

இது இந்தியா முழுதும் அப்படியே பொருந்துமா என்று தெரியவில்லை. வட இந்தியாவிலும், மற்ற திராவிட மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் இவ்வளவு பிராமண எதிர்ப்பு கிடையாது. அதனால் அங்கே எல்லாம் இந்த வரலாற்றில் சில மாற்றங்கள் இருக்கலாம்.

அதாவது 97 பேர் உள்ள ஒரு ஊருக்கு 3 பேர் வந்தார்கள். இந்த 3 பேரிடம் படை இல்லை, ஆயுதம் இல்லை. ஆள் பலம் இல்லை. படை பலம் இல்லை. வாழ்க்கைக்கு உபயோகமான அறிவு பலம் இல்லை. திடீரென்று ஒரு ஊருக்கு வருவார்களாம். ஏறக்குறைய அத்தனை பேரும் எனக்கு அடிமை என்பார்களாம். எல்லாரும் “தங்கள் சித்தம் என் பாக்யம்” என்பார்களாம். இந்த ட்ரிக் தெரிந்திருந்தால் அலெக்சாண்டர், சீசர், ஜெங்கிஸ் கான், முஹம்மத் கஜினி, தில்லி சுல்தான்கள், ராஜ ராஜ சோழன், பாபர், வெள்ளைக்காரர்கள், நெப்போலியன், ராஜ பக்ஷே, பிரபாகரன் எல்லாரும் உலகத்தையே வென்றிருக்கலாம்.

இல்லை என்றால் இப்படியா? ஆரியர்கள் படை எடுத்து வந்து தமிழகத்தை வென்றார்கள். பிறகு திரும்பி போய்விட்டார்கள். போகும்போது சில பூசாரிகளிடம் நீங்கள் இனி மேல் எல்லாரிடமும் நீங்கள் உயர்ந்தவர், மற்றவரெல்லாம் தாழ்ந்தவர் என்று சொல்லுங்கள், எல்லாரும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டுவார்கள், உங்களுக்கு அவர்களை அடக்கி வைக்க படை, ஆயுதம், பணம், பதவி ஒரு மண்ணும் தேவை இல்லை, சரித்திரத்தில் இந்த படைஎடுப்பு, ஆரியர்களின் வெற்றி எதையும் எழுத வேண்டாம் என்று சொல்லி விட்டு திரும்பி போய்விட்டார்கள்.

என் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன், சில சமயம் கிருஸ்துவ பிரசாரகர்கள் தெரு மூலையில் நின்று கொண்டு “பாவிகளே” என்று கூப்பிடுவார்கள். உடனே பத்து பேர் பாவி என்றால் நான்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்காத குறையாக அங்கே போய் நிற்பார்கள். அதுதான் நினைவுக்கு வருகிறது.

கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மூளை எங்கே போயிற்று? எதற்காக இதை எல்லாம் ஒத்துக்கொண்டார்கள்?

Advertisements