சோவை பற்றி எழுதுவதாக முதலில் ஐடியா இல்லை. கொற்கை என்பவர் நான் ராஜாஜியை பற்றி எழுதியதும் அவர் “நீ பிராமணன், பிராமணன் பற்றிதான் எழுதுவாய்” என்ற ரேஞ்சில் ஒரு கமென்ட் விட்டார். அந்த கமென்ட் கிளப்பிய கடுப்பில்தான் – “பிராமணன் பற்றி எழுதுவது கொலைக் குற்றமா?” – இதை எழுதுகிறேன்.

சோவுக்கு பல முகங்கள் உண்டு. வக்கீல் (வெற்றி அடைந்தாரா தெரியாது), நாடக ஆசிரியர், நாடக, திரைப்பட நடிகர், அரசியல் இதழியலாளர் என்று.

வக்கீலாக என்ன செய்தாரோ எனக்கு தெரியாது.

அவர் அவ்வளவு நல்ல நடிகர் அல்லர். அவர் நன்றாக நடித்ததாக எனக்கு ஒரு திரைப்படம் கூட நினைவில்லை. ஆனால் கொஞ்ச நாள் அவர்தான் டாப் காமெடியன் ஆக இருந்தார். அவரது காமெடியும் வெகு சில படங்களிலேயே சோபித்தது. (வா வாத்யாரே ஊட்டாண்டே என்ன படம்? இடம் பெற்ற பொம்மலாட்டம், தேன் மழை) அரசியல் கலந்த காமெடி சில படங்களில் நன்றாக வந்தது (துக்ளக், அன்னபூரணி)

அவரது நாடகங்களை நான் பார்த்ததை விட படித்ததுதான் அதிகம். அவரது நாடகங்களில் நல்ல கதை அமைவது கஷ்டம். உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, துக்ளக், சாத்திரம் சொன்னதில்லை மாதிரி சில நாடகங்களில்தான் கோர்வையான கதை அமைந்திருக்கும். அவரது நாடகங்களின் ஃபார்முலா ரொம்ப சிம்பிள். ஏதாவது ஒரு பிரச்சினை – ஜாதி, விபசாரம், உண்மை vs. பண பலம், லஞ்சம் என்று ஏதாவது ஒரு விஷயம் – அதை சுற்றி நிறைய அன்றைய அரசியல் பற்றிய அடிவெட்டுகள், கெக்கே பிக்கே ஜோக்குகள் இவற்றை வைத்து ஒரு நாடகம் பின்னி விடுவார். அவரது பாணி ஏறக்குறைய எம்.ஆர். ராதா பாணி. very topical comments. எழுத ரொம்ப அலட்டிக்கொள்வதில்லை. சில சமயம் Pygmalion, Tale of Two Cities போன்ற புகழ் பெற்ற இலக்கியங்களை தழுவியும் மனம் ஒரு குரங்கு, வந்தே மாதரம் போன்ற நாடகங்களை எழுதி இருக்கிறார். சில சமயம் ப்ளாட்டே இல்லாமல் சும்மா அரசியல் கமெண்ட்டுகளை வைத்து வாஷிங்டனில் நல்லதம்பி, கூவம் நதிக் கரையினிலே, சர்க்கார் புகுந்த வீடு, என்று தணியும் இந்த சுதந்திர தாகம் போன்ற நாவல்கள் மற்றும் நாடகங்களை எழுதி இருக்கிறார்.

அவரை கிரேக்க நாடக ஆசிரியரான அரிஸ்டோஃபனசுடன் ஒப்பிடலாம். அரசியல், சமூகம் பற்றிய கமெண்ட்கள்தான் அவருடைய ஸ்பெஷாலிடி. இருவரிடமும் ஒரே ப்ராப்ளம். அந்த கால கட்டத்தில் வாசிக்காதவர்களுக்கு அவர் எதை கிண்டல் செய்கிறார் என்று புரிவது கஷ்டம். அரிஸ்டோஃபனஸ் அன்றைய கிரேக்க அரசியல்வாதியான க்ளியானை கிண்டல் செய்வதை நாம் இன்று எப்படி முழுதாக புரிந்து கொள்ள முடியும்? சோவுக்கு உதாரணமாக ஒன்று – சர்க்கார் புகுந்த வீடு என்ற நாவலில் வரும் முக்கிய பாத்திரங்களான ரகுநாத ஐயர், கந்தசாமி இருவருக்கும் மளிகைக் கடையிலும் பால்காரரிடமும் கடன் தொந்தரவு. அவர்கள் நாராயணசாமி நாயுடுவிடம் ஆலோசனை கேட்கப் போவார்கள். அவர் “பொதுவா வாங்கின கடனை திருப்பி கொடுக்கக் கூடாது என்பதுதான் நம்ம கொள்கை” என்பார். இதற்கு நீங்கள் சிரித்தீர்கள் என்றால் எண்பதுகளில் நாயுடு நடத்திய போராட்டங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறது என்று அர்த்தம்.

அவர் ஷேக்ஸ்பியரோ, இப்சனோ இல்லை. ஆனால் அவருடைய எழுத்துக்கள் சிரிக்க வைப்பவை. சில சமயங்களில் நாடகம் அருமையாக வந்து விழுவதும் உண்டு. சாத்திரம் சொன்னதில்லை, துக்ளக், உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, சர்க்கார் புகுந்த வீடு, கூவம் நதிக் கரையினிலே ஆகியவை படிக்க வேண்டியவை.

அவருடைய இதழியல் பணி குறிப்பிடப்பட வேண்டிய்து. துக்ளக் நடத்த முதல் ஐந்து ஆறு வருஷங்களாவது மிகுந்த துணிச்சல் வேண்டும். கலைஞர் அவருக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தினார். நெருக்கடி நிலையின் போது அவர் ஜெயிலுக்கு போய் அடி வாங்காதது ஆச்சரியம்தான். He made Thuglaq an institution! அவருக்கு பிறகு துக்ளக் வரப்போவதில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

அவருடைய அபிப்ராயங்கள் சுலபமாக மாறுவதில்லை. காமராஜின் ஆட்சி பொற்காலம், மொரார்ஜி, சந்திரசேகர் போன்றவர்கள் அப்பழுக்கில்லாதவர்கள், வி.பி. சிங் ஒரு துரோகி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியோரை செலுத்துவது தேச பக்தியே, பெண் சுதந்திரம் என்பது பம்மாத்து, நரேந்திர மோடிதான் இன்றைய இந்தியாவின் சிறந்த தலைவர், புலிகள் அயோக்கியர்கள் இந்த மாதிரி பல. அவற்றை நல்ல நகைச்சுவையுடன் வெளிப்படுத்துவார். எழுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை அவர் நடுநிலை தவறியதில்லை. நடுநிலை என்றால் எல்லா அரசியல் நிகழ்வுகளையும் ஒரே value system வைத்து பார்த்தார். அதனால் எம்ஜிஆர், கலைஞர், இந்திரா, ஜனதா கட்சி ஒருவரையும் விட்டதில்லை. மொரார்ஜி, காமராஜ் மீது அவருக்கு பெரும் மரியாதை இருந்தது, ஆனால் அவர்களது குறைகளையும் சொல்லுவார். ஒண்ணரை பக்க நாளேடுகள் சூப்பர்!

என்றைக்கு பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்க ஆரம்பித்தனவோ, அன்றையிலிருந்து அவர் தனது நடுநிலையை தவற விட்டுவிட்டார். அவரது கண்ணோட்டத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நல்லது. அதனால் அவர் பா.ஜ.க.வின் முக்கிய குறையான முஸ்லீம் எதிர்ப்பு என்பதற்கு ஏதாவது சப்பைக்கட்டு கட்டுவார். நரேந்திர மோடி குஜராத்தை ஊழல் அற்ற மாநிலமாக மாற்றி இருக்கிறாராம். அங்கே வளர்ச்சி அதிகமாம். அவரை சாதாரண மனிதனும் சுலபமாக பார்க்கலாமாம். இவை எல்லாம் அங்கே நடந்த படுகொலைகளை நியாயபடுத்த முடியாது. அவரே ஒரு முறை சொன்ன மாதிரி, integrity is more important in a politician than efficiency.

அதே போல்தான் ஜெவும். கலைஞர் ஆட்சிக்கு வந்தால் புலிகளுக்கு ஆதரவு மறைமுகமாக தரப்படும், அது இந்தியாவுக்கு ஆபத்து என்று அவர் உறுதியாக நம்புகிறார். கலைஞருக்கு புலிகளை விட, தமிழர்களை விட பதவி முக்கியம் என்பது அவருக்கு புரியவில்லை. அதனால் ஜெ போன்ற ஒரு மோசமான சர்வாதிகாரி மேல் அவருக்கு ஒரு ஸாஃப்ட் கார்னர் இருக்கிறது.

அவர் நல்ல அறிவாளி. அரசியலில் ஒரு தீர்க்கதரிசி என்றே சொல்லலாம். புலிகளை பற்றி எண்பதுகளில் குறை சொன்ன ஒரே பத்திரிகையாளர் அவர்தான். புலிகள் ராஜீவ்-ஜெயவர்த்தனே உடன்பாட்டை நிறைவேற விடமாட்டார்கள் என்று சரியாக கணித்தார். வி.பி. சிங்கை ஆதரிப்பது ஜனதாவுக்கு தற்கொலைக்கு சமமானது என்று அவர் கணித்தது சரியாக அமைந்தது. சரண் சிங், ராஜ் நாராயண் ஆகியோர் மொரரஜியின் முதுகில் குத்தக்கூடும் என்று சந்தேகப்பட்டார். அப்படியே ஆயிற்று.

மொத்தத்தில் அவர் ஒரு நல்ல நாடக ஆசிரியர். தமிழில் நல்ல நாடக ஆசிரியர்கள் அபூர்வம். அதனால் அவரது நாடக பங்களிப்பு மிக பெரியதாக தெரிகிறது. அவரது நகைச்சுவை அற்புதமானது. கிட்டத்தட்ட இருபத்தைந்து வருஷங்கள் அவர் அரசியல், சமூகம் பற்றி பட்டையை கிளப்பும் நடுநிலையான கமெண்ட்களை போட்டு தாக்கி இருக்கிறார். ஆனால் ஒரு பத்து பதினைந்து வருஷங்களாக அவர் பா.ஜ.க. பக்கம் சாய்ந்துவிட்டார், அதனால் எல்லார் தவறுகளையும் போட்டு கிழிக்காமல், பா.ஜ.க.வுக்கு சப்பைக்கட்டு கட்ட ஆரம்பித்துவிட்டார். தான் நினைப்பதுதான் சரி என்று பிடிவாத குணமும், குதர்க்கம் பேசும் புத்தியும் அவருடைய குறைகள்தாம். அவர் நல்ல நடிகர் இல்லை. நகைச்சுவைக்காகவும், ஒரு நாடக ஆசிரியராகவும், தைரியமான, ஆனால் கடைசி நாட்களில் ஒரு பக்கம் சாய்ந்து விட்ட இதழியலாளர்/அரசியல் விமர்சகராகவும், நினைவு கூறப்பட வேண்டியவர்.