ஜெயமோகன்: இந்த ப்ளாக் படிக்க ஆரம்பித்துத்தான் நான் தமிழ் ப்ளாக்களை பற்றி தெரிந்துகொண்டேன். சுவாரசியமான எழுத்தாளர். கொஞ்சம் குசும்பு உள்ளவர். கண்ட மேனிக்கு எல்லாரிடமும் திட்டு வாங்குவார். பாதி நேரம் எனக்கு ஏன் திட்டுகிறார்கள் என்றே புரிவதில்லை. சுந்தர ராமசாமியை தன் குருவாக மதிக்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் அவருடனும் அவர் மகனும் காலச்சுவடு பதிப்பகத்தின் தலைவருமான கண்ணனுடனும் கூட சண்டை போலிருக்கிறது. சிவாஜி பற்றியும் எம்ஜியார் பற்றியும் எழுதி நிறைய திட்டு வாங்கினார். இதற்காக இவரை திட்டுகிறார்கள். ஆனால் இவரை விட அதிக ரீச் உள்ள அசத்தப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் சுமதீஈஈஈஈ என்று யாராவது சொன்னால் சிரிக்கிறார்கள். வி. எஸ். ராகவன் குரலில் பேசும் மைக்கேல் அகஸ்டின் என்பவர் எப்போதும் “அடங்கொய்யாலே என் பொண்டாட்டி எனக்கு சோறு போட மாட்டேங்கறா” என்றுதான் ஆரம்பிப்பார். அதற்கு வி.எஸ். ராகவனே கூட ஆட்சேபிப்பதில்லை. தமிழர்களின் லாஜிக் பெரிய மர்மம்தான்!

ராஜநாயகம்: ரசிகர். சினிமா, எழுத்து உலகங்களில் பலரை தெரிந்தவர். அவர்களை பற்றி சுருக்கமாக, சுவாரசியமாக எழுதுவார். திடீரென்று நிறைய கெட்ட வார்த்தைகள் போட்டு “தமாஷாக” நாலு போஸ்ட் எழுதுவார். கெட்ட வார்த்தைகளை பற்றி எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை, ஆனால் இதெல்லாம் தமாஷ் என்று சொல்வதற்கு ஆட்சேபணை உண்டு. ஜெயமோகனுடன் இவருக்கும் சண்டை. நான் இவரது தன்னிலை விளக்கங்களை முழுதாக படிக்கவில்லை,

டோண்டு: மனதில் பட்டதை தைரியமாக அடித்துவிடும் அபூர்வ மனிதர். சமீபத்தில் நாற்பது வருஷங்களுக்கு முன்னால் என்று ஆரம்பித்து எதையாவது எழுதுவார். அவரது நினைவுகள், கருத்துகள், பதில்கள் சுவாரசியமானவை. நரேந்திர மோடி, சோ ராமசாமி ஆகியோரின் தீவிர ஆதரவாளர். தமிழ் பதிவுகளில் வெளிப்படும் பிராமண வெறுப்பு இவரை வெறி கொள்ள வைக்கிறது.

வேறு பல ப்ளாக்களையும் அவ்வப்போது படிக்கிறேன். சாதாரணமாக வோர்ட்ப்ரெஸ்சின் டாப் ப்ளாக்கள் என்ன என்று பார்ப்பேன். ஆனால் ரெகுலராக பார்ப்பது இவைதான். இவற்றை எல்லாம் ப்ளாக்ரொலில் எப்படி சேர்ப்பது என்று கூட தெரியாது – அதனால் அவ்வப்போது சென்று பார்க்கிறேன்.

என்னை விட நன்கு தெரிந்தவர் என்ன சொல்கிறார் என்றும் பாருங்கள் – பாஸ்டன் பாலாவின் டாப் தமிழ் ப்ளாகர்ஸ் – எங்கள் சினிமா பற்றிய அவார்டா கொடுக்கறாங்க ப்ளாக் இங்கே “ஆறுதல் பரிசு” மாதிரி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Advertisements