சமீபத்தில் சுப.வீரபாண்டியன் இலங்கை தமிழர் பற்றி கொடுத்த பேட்டி ஒன்றை கண்டேன். அந்த போஸ்ட்கள் இங்கே, இங்கே.

அவருடன் எனக்கு நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. படித்த கொஞ்சத்தை வைத்துக்கொண்டு இதை உறுதியாக சொல்ல முடியாது – ஆனால் அவருக்கும் பிராமண எதிர்ப்பு வெறி இருப்பது போல இருக்கிறது. அவர் கலைஞருக்கு அனாவசியத்துக்கு சப்பைக்கட்டு கட்டுவது போல இருக்கிறது. ஆனால் அவர் இலங்கை பிரச்னை பற்றி சொல்லி இருக்கும் சில கருத்துகள் எனக்கு சரி என்று படுகின்றன.

நான் ஏழெட்டு நாட்களுக்கு முன்னால் எழுதிய மறுமொழி இன்னும் ஏற்கப்படவில்லை போலிருக்கிறது. அது இங்கே.

சுப. வீ. அவர்களே, தமிழ் தேசியவாதம் என்றால் என்னவென்று சரியாக புரியவில்லை. உங்கள் அறிமுகப் பக்கங்களை படித்தும் புரியவில்லை. கொஞ்சம் விளக்க முடியுமா?

தனி ஈழம் கேட்டால் தனி தமிழ் நாடு கேட்பார்கள் என்பதெல்லாம் அனாவசிய பயம்தான். இந்தியா ஆயுதம் விற்காவிட்டால் சீனா விற்கும் என்பதும் அயோக்கியத்தனமான வாதம்தான். (இப்படித்தான் ஹிட்லருக்கும் ஆயுதம் விற்றிருப்பார்கள்.) புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதே தவறு என்பது பேச்சுரிமையை பாதிக்கும் விஷயம்தான். எனக்கு சட்ட நுணுக்கங்கள் புரியவில்லை – அதனால் எங்கே சட்ட மீறல் ஏற்படுகிறது என்பது புரியவில்லை.

ஆனால் தமிழ் ஈழம் இந்தியாவுக்கு நட்பு நாடாகத்தான் இருக்கும் என்று எப்படி உறுதியாக சொல்லுகிறீர்கள்? பங்களாதேஷ் என்ன இந்தியாவுடன் பிரமாத நட்பு பாராட்டுகிறதா? இத்தனைக்கும் அவர்கள் நாட்டிலிருந்து யாரும் இங்கே வந்து எந்த அரசியல் தலைவரையும் கொல்லவில்லை. புலிகளோ ராஜீவை கொன்றிருக்கிறார்கள், கலைஞருக்கு மிரட்டல் வந்து வைகோ பிரிந்தார், ஜெயலலிதாவுக்கு ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. தனக்கு விரோதமாக செயல்படும் எல்லாரையும் ஞாபகம் வைத்திருந்து பழி வாங்கும் குணம் புலிகளுக்கு இல்லை என்று நினைக்கிறீர்களா? அமிர்தலிங்கம், உமா மகேஸ்வரன், சிரி சபாரத்னம் போன்றவர்கள் கதி மறந்துவிட்டதா?

சீனாவின் முத்து மாலை நடவடிக்கை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது என்ன முத்து மாலை?

கலைஞர் செய்வது சரி என்று நினைக்கிறீர்களா? எல்லாரும் ராஜினாமா என்றார், எல்லாரும் அப்படியேதான் இருக்கிறார்கள். பிரணாப் போகிறார் என்றார், யாரும் போகவில்லை. நான் கலைஞர் சொல்வது சரி என்று நினைக்கவில்லை – ஆனால் அவர் சொல்வதற்கும் செய்வதற்கும் நிறைய இடைவெளி இருக்கிறது. வைகோ, நெடுமாறன் போன்றவர்களுடன் நான் வேறுபடுகிறேன், ஆனால் அவர்களிடம் இலங்கை தமிழர்கள், புலிகளை பொறுத்தவரையில் எந்த விதமான போலித்தனமும் இல்லை இன்று நினைக்கிறேன். கலைஞருக்கோ கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசையாக இருக்கிறது. பதவிக்கு சங்கடம் வராத வரையில் இரங்கல் கவிதை எழுதுவேன் என்கிற நிலைமையில் அல்லவா அவர் இருக்கிறார்?

புலிகள் என்றால் இலங்கை தமிழர்கள், இலங்கை தமிழர்கள் என்றால் புலிகள் என்பது உண்மையா இல்லை ஊடகங்கள் உருவாக்கும் மாயையா? புலிகளுக்கு எதிர்ப்பு நிலை எடுக்கும் என் போன்றவர்கள் தமிழர்களுக்கு ஆதரவு நிலை எடுக்க முடியாதா? என்னுடைய ஒரு போஸ்ட் இங்கே

உங்களுடன் பல விதங்களில் நான் வேறுபட்டாலும், உங்களுடைய “இந்தியாவும் தமிழர்களும் என்ன செய்ய வேண்டும்” என்பது எனக்கு சரியாக படுகிறது. இந்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு உதவி செய்வது என்னதான் ராஜீவின் கொலை ஏற்படுத்திய காயம் இருந்தாலும் பெரிய தவறுதான்.

கடைசியில் பார்ப்பனர்கள் என்று சொதப்பியதுதான் frustrationஐ கிளப்புகிறது. இதற்கு மறுமொழி எழுதும் முன் நான் ஐயர் ஜாதியில் பிறந்தவன் என்று சொல்லியாக வேண்டும். இதை சொன்ன பிறகு பலர் நான் என்ன சொல்கிறேன் என்பதை பற்றி கவலைப்படுவதில்லை, அம்பி என்று ஆரம்பித்துவிடுவார்கள். டாக்டர் ருத்ரனின் ப்ளாகில் ஒரு முறை Dalit Fury என்ற ஒரு போஸ்டுக்கு மறுமொழி எழுதும் போது இதை சொல்ல மறந்துவிட்டேன். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அவர் உன் ஜெனோடைப் என்ன என்று சந்தேகப்பட்டார் – இது வரையில் நான் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை.

பார்ப்பனர்கள் எந்த விதத்தில் தமிழுக்கு விரோதியாக இருக்கிறார்கள்? சிதம்பரம் தீக்ஷிதர்கள் தேவாரம் பாடக்கூடாது என்பதாலா? இப்படி உங்களுக்கு பத்து விஷயம் தெரியுமா? அப்படித்தான் என்றால் அதே லாஜிக்கை உபயோகித்து இப்படி சொல்வீர்களா? தமிழ் நாட்டில் தலித்கள் மீது நடக்கும் தாக்குதல்களில் அனேகமாக எல்லாமே தேவர் ஜாதியினர் நடத்துவது. தேவர்கள் ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று எந்த மேடையிலாவது நீங்கள் பேசுவீர்களா? முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று பேசுவீர்களா? (அப்படி பேசினால் நான் அதையும் எதிர்ப்பேன்) என்னை நான் பிறந்த ஜாதியால் பார்ப்பனன் என்று சொல்வீர்கள், பிறகு பார்ப்பனர்கள் தமிழ் விரோதி என்பீர்கள். நான் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? > – என்ன கொடுமை சார் இது? என்னுடைய இன்னொரு போஸ்ட் இங்கே

Advertisements