நான் ராஜாஜி பற்றிய scholar இல்லை. எனக்கு தெரிந்தவற்றை வைத்து எழுதி இருக்கிறேன், அவ்வளவுதான்.

என்னுடைய sources வருமாறு: மந்தவெளியில் வசித்த என் பெரியப்பா; தீவிர ராஜாஜி பக்தரான ம.பொ.சி. எழுதிய நானறிந்த ராஜாஜி என்ற புத்தகம்; இந்திய விடுதலை போராட்டத்தை பற்றி நான் படித்த பல வேறு புத்தகங்கள்; காமராஜ், பெரியார் திரைப்படங்கள்; கல்கி விமோசனம் என்ற பத்திரிகையில் ராஜாஜியுடன் வேலை செய்தபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள்; சாண்டில்யன் எழுதிய போராட்டங்கள் என்று அவரது memoirs.

ராஜாஜி 1878இல் பிறந்தவர். இப்படி பார்ப்பது எனக்கு சுலபமாக இருக்கிறது – அவர் காந்தியை விட கிட்டத்தட்ட பத்து வயது இளையவர்; நேருவை விட கிட்டத்தட்ட பத்து வயது மூத்தவர். பெரியாரை விட ஒரு வயது பெரியவர்; ஜின்னா, படேல் போன்றவர்கள் ஏறக்குறைய அவரது சம வயதுக்காரர்கள்.

புத்திசாலி வக்கீல் என்று பேரெடுத்தார். சேலத்தில் அப்போதெல்லாம் கொலை செய்துவிட்டு ராஜாஜியை பார்த்தால் போதும், ராஜாஜி எப்படியாவது விடுதலை பெற்று தந்துவிடுவார் என்று பேச்சு இருந்ததாம். வக்கீலாக வெற்றி அடைந்த பின், சேலத்துக்கு முனிசிபல் சேர்மனாக நல்ல விதமாக பணி ஆற்றி இருக்கிறார்.

முதல் முதலில் சூரத் காங்கிரசுக்கு போனாராம். அப்போதெல்லாம் திலகர் கட்சியாம். வ.உ.சி., பாரதி போன்றவர்களும் இந்த காங்கிரசுக்கு போனார்கள் என்றும், மெட்ராஸ் பிரதிநிதிகளின் ரவுடித்தனம்தான் கோகலே தலைமையில் ஒரு கோஷ்டியும், திலகர் தலைமையில் ஒரு கோஷ்டியுமாக காங்கிரஸ் உடையக் காரணம் என்றும் கேள்வி. இதிலெல்லாம் ராஜாஜிக்கு என்ன பங்கு என்று தெரியவில்லை. வ.உ.சியின் கப்பல் கம்பெனியில் பங்குகள் வாங்கினாரா என்பதும் தெரியவில்லை. சேலம் விஜயராகவாச்சாரியார் அந்த கப்பல் கம்பெனிக்கு சட்ட ஆலோசகராக இருந்தாராம்.

காந்தி வரும் வரை என்ன செய்தார் என்று தெரியவில்லை. இந்த காலகட்டத்தில் மனைவியை இழந்திருக்கலாம். குடும்பக் கவலைகளில் மூழ்கி இருக்கலாம்.

காந்தி வந்த பிறகு வெகு விரைவில் அவரது தமிழக தளபதியாக மாறிவிட்டார். முதலியார்-நாயுடு-நாயக்கர் என்று அழைக்கப்பட்ட, தமிழகத்தில் காங்கிரசை பிரபலமாகிய மும்மூர்த்திகளான திரு.வி.க. என்ற கல்யாணசுந்தர முதலியார், வரதராஜுலு நாயுடு, பெரியார் ராமசாமி நாயக்கர் ஆகியோரோடு உழைத்தார். பெரியார் அப்போதெல்லாம் இவரது சீடர். திரு.வி.க. தன் வாழ்க்கை வரலாற்றில் பெரியார் காங்கிரசை விட்டு விலகிய நிகழ்ச்சியை விவரிக்கிறார். ராஜாஜி கொஞ்சம் முயன்றிருந்தால் அதை தடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. திரு.வி.க. சொல்வதை பார்த்தால் பெரியார் கட்சியை விட்டு விலகுவது என்ற முடிவோடுதான் வந்திருக்கிறார் என்றும் தோன்றுகிறது.

நாக்பூர் கொடி சத்யாக்ரகத்தில் ஈடுபட்டார். (அது ஒரு வெட்டி வேலை என்பது என் அபிப்ராயம், அதைப் பற்றி எப்போதாவது நேரமிருந்தால் எழுதலாம்)

பிறகு திருச்செங்கோட்டில் ஒரு ஆசிரமம் அமைத்து மது விலக்கு, கதர் போன்றவற்றை பரப்ப பாடுபட்டார். பல ஆயிரம் ரூபாய் சம்பாதித்த வக்கீல், ஒரு அறையில், மகன் வாங்கிய நாற்பது ரூபாய் சம்பளத்தில், அவரும், அவர் மகனும், மகளும் வாழ்ந்தார்கள் என்று கல்கி எழுதி இருக்கிறார். கல்கி எழுதியதில் இருந்து ஒன்று தெரிகிறது – ஆசிரமத்தில் இருந்தவர்கள் முக்கால்வாசி பிராமணர்கள். ஏன்? அதை பற்றி இன்னும் விரிவாக இங்கே

அதற்கு பிறகு உப்பு சத்யாக்ரகம். சாண்டில்யன் அப்போது திருச்சியில் படித்துக் கொண்டிருந்தாராம். ராஜாஜி கல்லூரி மாணவர்களை இதற்காக தேர்ந்தெடுத்திருக்கிறார். வீட்டுக்கு ஒரே பையனாக இருக்கக்கூடாதாம், இதனால் சாண்டில்யன் செலக்ட் ஆகவில்லையாம். நூறு பேர்தான் போயிருக்கிறார்கள். சர்தார் வேதரத்தினம் பிள்ளை இதில் பங்கெடுத்துக்கொண்டார் என்று தெரியும், ஆனால் எவ்வளவு பெரிய பங்கு என்று தெரியவில்லை. இதுவும் பிராமணர்கள் நிறைந்த கூட்டமோ என்று தோன்றுகிறது.

அதற்கு பிறகு மெட்ராஸ் ப்ரீமியர். சத்யமூர்த்திதான் தொண்டர்களுக்கு பிடித்தமானவர் என்றும் காந்தி தலையிட்டு ராஜாஜியை முதலமைச்சர் ஆக்கினார் என்றும் சொல்வார்கள். இதை சாண்டில்யனும் உறுதி செய்கிறார். பம்பாயிலும் இப்படித்தான் நாரிமனை ஒதுக்கிவிட்டு கேர் என்பவரை படேல் தலையீடு ப்ரீமியர் ஆக்கியது என்று படித்திருக்கிறேன். ராஜாஜியின் காபினெட் – தந்துகூரி பிரகாசம், பி. கோபால் ரெட்டி, வி.வி.கிரி, டி.எஸ்.எஸ். ராஜன், பி. சுப்பராயன். சத்யமூர்த்திக்கு ஒரு அமைச்சர் பதவி கூட தரவில்லை. இது பெரிய அநியாயமாகத்தான் தோன்றுகிறது. இதனால்தான் சத்யமூர்த்தியின் சீடரான காமராஜ் ராஜாஜிக்கு எதிர்ப்பாளர் ஆனார் என்று சொல்வார்கள்.

பழைய காலத்தவர்கள் ராஜாஜியின் நிர்வாக திறமையை புகழ்ந்து பேசுவார்கள். ஆனால் அவர் இந்த சமயத்தில் என்ன செய்தார் என்று தெரியாது.

இரண்டாவது உலகப் போர் சமயத்தில் காங்கிரஸ் மந்திரி சபைகள் விலகின. ராஜாஜி பாகிஸ்தான் கொடுத்துவிடலாம் என்றார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆதரிக்காமல் காங்கிரசிலிருந்து விலகினார். படேல் எழுதிய சில கடிதங்களில் ராஜாஜியை பற்றி குறைப்படுகிறார். காமராஜ் இந்த சமயத்தில்தான் தமிழக காங்கிரசை தன் கைப்பிடியில் கொண்டு வந்தார்.

இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் மீண்டும் காங்கிரஸில் சேர ஆசைப்பட்டார். காமராஜ் இதை எதிர்த்தார். ம.பொ.சி. போன்ற சிலரே ராஜாஜி ஆதரவாளர்கள். பிறகு எப்படியோ காம்ப்ரமைஸ் செய்து உள்ளே வந்துவிட்டார். ம.பொ.சி. இதை பற்றி எழுதும்போது உறுதியாக நின்ற தன் போன்றவர்களை ராஜாஜி சரியாக நடத்தவில்லை என்று வருத்தப்படுகிறார். ராஜாஜிக்கு பதவி தர வேண்டும் என்று பெருந்தலைகள் ஆசைப்பட்ட போதும் படேல் போன்றவர்களுக்கு விட்டுவிட்டு போனவர் என்ற ஒரு தயக்கம் இருந்தது. இதை பற்றி படேல் ராஜேந்திர பிரசாதுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

விடுதலை வரும்போது அவருக்கும் எழுபது வயது இருக்கும். மத்திய மந்திரி, கவர்னர் என்று பதவிகள்.

ராஜாஜி ஒரு முறை கூட காங்கிரஸ் தலைவராக ஆனதில்லை. அவருக்கு தொண்டர்கள் மத்தியில் எப்போதுமே பெரிய வரவேற்பு இருந்ததில்லை என்று தோன்றுகிறது. சத்தியமூர்த்தி, பிறகு காமராஜ் இவர்கள்தான் தொண்டர்கள் மனதை கவர்ந்தவர்கள். காந்தி, நேரு, நேதாஜி, படேல், ஆசாத், சரோஜினி நாயுடு யாரெல்லாமோ ஆகி இருக்கிறார்கள். ராஜாஜி ஒரு முறை கூட ஆனதில்லை. ஏன்? அவர் கொஞ்சம் முசுடாக இருந்திருக்க வேண்டும். தான் அறிவாளி என்ற கர்வம் இருந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சிலரை தவிர வேறு யாரையும் சுலபமாக நம்பி இருக்க மாட்டார். மாறு கருத்துகளுடன் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் குணம், எல்லாரையும் அனைத்துப் போகும் குணம் இல்லை என்று நினைக்கிறேன். அவரது பலம் காங்கிரஸ் பெருந்தலைகளிடம் அவருக்கு இருந்த தொடர்பும், கூர்மையான அறிவும்தான். காங்கிரசை விட்டு விலகும் வரை அவரே ஒரு காங்கிரஸ் பெருந்தலை. In other words, he was a good backroom strategist, not a leader of the people.

விடுதலைக்கு பிறகு நடந்தவை அடுத்த பகுதியில்

Advertisements