தமிழ் நாட்டின் – ஏன் இந்தியாவின் என்றே சொல்லலாம் – சாபக் கேடுகளில் தலைவர்கள், ஆளுமைகள் பற்றி நேர்மையான விமாசனங்கள் இல்லாததும் ஒன்று. என் தலைவரை பற்றி யாரும் எதுவும் குறைவாக சொல்லிவிடக்கூடாது. சொன்னால் அவனை ஒரு வழி பண்ணி விட வேண்டும். அப்படி செய்யாவிட்டால் நான் தொண்டனே அல்ல. அந்த தலைவன் ரஜினியாக இருக்கலாம், விஜய், தல, எம்ஜிஆர், சிவாஜி, கலைஞர், ஜெயலலிதா, நரேந்திர மோடி, விஜயகாந்த், பெரியார், அண்ணா, முத்துராமலிங்கத் தேவர், அம்பேத்கார், ராஜீவ் காந்தி, யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் – அவரை பற்றி விமர்சனம் வந்து விட்டால் உடன்பிறப்புகளும், ரசிகர்களும், ரத்தத்தின் ரத்தங்களும், “டாய்” என்று கத்திக் கொண்டு கிளம்பி விடுவார்கள். இது புத்திசாலிகளான சோ ராமசாமிக்கும் பொருந்தும். நாலாவது ஃபெய்ல் ஆகி மூட்டை தூக்கும் குப்பனுக்கும் பொருந்தும்.

எனது சம காலத் தலைவர்களான எம்ஜிஆர், கலைஞர், இந்திரா காந்தி, ராஜீவ், ஜெயலலிதா போன்றவர்களை பற்றி எனக்கே தெரியும். பெரும் தலைவர்களான காந்தி பற்றி கொஞ்சம் சரித்திரம் படித்தால் புரிந்து விடும். ஆனால் நேதாஜி, படேல், ராஜாஜி, காமராஜ், பெரியார் போன்ற தலைவர்களை பற்றி நேர்மையான மதிப்பீடுகளை படிப்பது ரொம்ப கஷ்டம்.

தலைவர்களும் மனிதர்கள்தான். தவறே செய்யாத தலைவன் கிடையாது. காந்தி நான் மிகவும் மதிக்கும் தலைவர். அவர் கிலாஃபத் என்று எங்கோ துருக்கியில் காலிஃபை இறக்கினால் அதை எதிர்த்து இங்கே இயக்கம் ஆரம்பித்திருக்கக் கூடாதுதான். முஸ்லிம்களின் ஆதரவை பெற அவர் செய்த இந்த ஜின்னா போன்று அது வரையில் மத சார்பில்லாத முஸ்லீம் தலைவர்களை ஒதுக்கியது. ஜின்னா காங்கிரசில் இருந்து ஒதுக்கப்பட்டதன் விளைவு நமக்கு எல்லாம் தெரிந்ததுதான். சௌரி சௌராவில் போலீஸ்காரர்கள் இறந்ததற்காக அவர் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி இருக்கக்கூடாது. அஹிம்சை அஹிம்சை என்று சொன்னவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை கட்டுபடுத்த முடிந்ததா? அப்போதைய ஹிம்சையை அவர் கண்டித்ததாக தெரியவில்லை. நேதாஜிக்கு அவர் செய்தது துரோகம்தான். சத்தியமூர்த்திக்கும்தான். நாரிமனுக்கும்தான். ராயல் நேவி புரட்சியில் ஈடுபட்டவர்களை அவர் ஏமாற்றிவிட்டார். ஆனால் அவர் உன்னத தலைவர்தான். அவருடைய நிறைகள் அவர் குறைகளை விட பல மடங்கு அதிகம்.

இப்படி எல்லாம் யோசிக்க பத்தாம் வகுப்பு சரித்திர புத்தகம் போதும். கிலாஃபத், வெள்ளையனே வெளியேறு, சௌரி சௌரா எல்லாம் அதிலேயே தெரியும். கொஞ்சம் முயற்சி செய்தால் நான் சொல்லி இருக்கும் மிச்ச விஷயங்களும் தெரிய வரும்.

ஆனால் பெரியாரை பற்றி நான் எங்கே போய் தெரிந்து கொள்வது? பெரியாரை பற்றி முதல் முதலாக நான் படித்தது அண்ணா ப்ளஸ் டூவில் தமிழ் புஸ்தகத்தில் எழுதியதுதான். அலங்காரமான தமிழ். அவர் தமிழ் நாட்டில் பெரும் புரட்சியை உருவாக்கினார், தமிழர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார் என்றெல்லாம் சொல்வார். அவர் என்ன செய்தார், என்ன புரட்சி, எத்தனை தமிழர்கள் தூங்கினார்கள், எத்தனை பேர் விழித்துக் கொண்டார்கள், விழித்துக் கொண்ட தமிழர்கள் தூங்கும் தமிழர்களை விட எப்படி மாறி இருக்கிறார்கள் என்று மட்டும் சொல்ல மாட்டார். பெரியாரை பற்றி அவரது பக்தர்கள் புகழ்ந்து பேசுவார்கள். அவர் சிந்தனை சிற்பி, பகுத்தறிவு பகலவன், எந்த குறையும் இல்லாத தெய்வப் பிறவி – சரி மாமனிதர், சூப்பர்மேன். இது என்ன நடக்கக்கூடியதா? இதை படிப்பவர்கள் முட்டாள்களா?

கீழ் வெண்மணியில் நடந்ததை பற்றி பெரியார் பேசும் போது பண்ணையார்களுக்கு ஆதரவாக பேசினார் என்று நான் அரசல் புரசலாக கேள்விப்பட்டிருக்கிறேன். இதை என்னால் நம்ப முடியவில்லை, அதே சமயம் நெருப்பில்லாமல் புகையாது என்றும் தோன்றுகிறது. பெரியாரிடம் போலித்தனம் இல்லை என்று நான் நினைக்கிறேன் – அவர் எரித்தவர்களுக்கு ஆதரவாக பேசி இருப்பார் என்பதை நம்ப கஷ்டமாக இருக்கிறது. அவர் அடக்கி வாசித்திருக்கலாம் – அவர் எப்போதுமே ஆளும் கட்சியின் ஆதரவாளர். ஆனால் பண்ணையார்கள் செய்தது சரி என்று பேசி இருந்தால் இது வரை நான் அவரை பற்றி நினைத்ததெல்லாம் தப்பு. என்னதான் சொன்னார்? இது வரை தேடியும் ஒன்றும் கிடைக்கவில்லை. இன்று டோண்டு சொன்னது கீழே.

12.1.69 அன்று செம்பனார் கோவிலில் அவர் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து (விடுதலை 20.1.69) வெண்மணி குறித்த பெரியாரின் மதிப்பீட்டை நாம் கண்டு கொள்ளலாம்:

“தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி அவர்களை பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணரவேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு – பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். நாகை தாலுக்காவிலே கலகம் செய்ய தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிக தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத்தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த ஆட்சியை பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்கு தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.”

இது நெருடலாகத்தான் இருக்கிறது – சப்பைக்கட்டு கட்டி இருக்கிறார். வெளிப்படையாக பண்ணையார்களை ஆதரித்து பேச வில்லையே தவிர, ஏறக்குறைய அப்படித்தான் பேசி இருக்கிறார். அவர் அப்போது விடுதலை பத்திரிகையில் என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. இந்த உறுத்தல் இருந்தாலும், முழு விவரமும் தெரியாமல் நான் பெரியார் பற்றிய என் கருத்துகளை மாற்றிக்கொள்ள போவதில்லை.

பெரியாரை பற்றி நேர்மையான மதிப்பீடு எதுவும் இதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது. ஆனால் அப்படிப்பட்ட மதிப்பீடு எங்குமே கிடைக்க மாட்டேன் என்கிறது. பெரியார் பக்தர்கள் ஒரு புறம், பெரியார் பக்தர்களின் எதிரிகள் ஒரு புறம். உண்மையை தெரிந்து கொள்ள விரும்பும் என் போன்றவர்கள் எங்கே போவது?