கிராமங்களிலிருந்து எல்லாரும் நகரங்களை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு விளைவு ஜாதி பிரக்ஞை குறைவது. நகரங்களில் ஜாதி இட ஒதுக்கீடு, கல்யாணம் ஆகிய விஷயங்களில்தான் மிக முக்கியமாக இருக்கிறது. யாரும், குறிப்பாக இளைஞர்கள் யாரும், நான் தலித் வீட்டில் காப்பி குடிக்க மாட்டேன், செட்டியார் பையன் வாயிலிருந்து எச்சில் தம் அடிக்க மாட்டேன், முதலியாரோடு கட்டிங் போட மாட்டேன், ஐயங்கார் பெண்ணை சைட் அடிக்க மாட்டேன் என்று நினைப்பதில்லை. எல்லாரும் பேரளவிலாவது ஜாதி வித்தியாசம் பார்க்க மாட்டேன் என்று சொல்வார்கள். அரசியல் கட்சிகளும் சைதாபேட்டையில் வன்னியரை நிறுத்துவோம், ஆயிரம் விளக்கில் நாடாரை நிறுத்துவோம் என்று யோசிப்பதில்லை. மயிலாப்பூரில் கூட யாரோ ஒரு முஸ்லீம் ஜெயித்ததாக நினைவு.

ஆனால்: சமீப காலமாக வளர்ந்து வரும் ஜாதி கட்சிகளும், அமைப்புகளும் ஜாதி பிரக்ஞையை அதிகரிக்கின்றன. பா.ம.க. வளர்வதற்கு முன்னால் இருந்த ஜாதி அமைப்புகள் பலம் இல்லாதவை. பா.ம.க. வன்னியர்களை ஒன்றிணைத்தது. இன்று எல்லா கட்சிகளும் அதன் பின்னால் ஓடுகின்றன. தேவர்கள் ஜெயலலிதா-சசிகலா பின்னால் ஓரளவு அணி வகுக்கின்றனர். சரத் குமாருக்கு நாடார் ஆதரவை நம்பி கட்சி ஆரம்பித்திருக்கிறார். யாதவர்கள் (கோனார்கள் எப்போது யாதவர்கள் ஆனார்கள் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்) அவ்வப்போது சத்தம் போடுகிறார்கள். எல்லா ஜாதிகளுக்கும் சங்கம். இருப்பதிலேயே படித்தவர்கள் அதிகமான பிராமணர்கள் ஒரு சங்கம் வைத்திருக்கிறார்கள். எல்லாருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும். முற்படுத்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்பட்டவர்கள் மிக-பிற்படுத்தப்பட்டவர்களாகவும் ஆக வேண்டும் என்று துடிக்கிறார்கள். பிராமணர்கள் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வேறு வழி இல்லை.

ஒவ்வொரு சங்கமும் தன் ஜாதியினரை ஒன்றிணைக்க வேண்டும், அப்படி இணைத்தால் பா.ம.க. மாதிரி அவர்களும் பதவி, பணம் அடையலாம் என்று நினைக்கிறார்கள். ஜாதியை ஒன்றிணைக்க ஆக்கபூர்வமான வழிகள் கஷ்டம் – அதனால் கலாட்டா, அடிதடி, சிலரை புனிதர் ஆக்குவது மாதிரி எதையாவது செய்ய வேண்டும். முத்துராமலிங்கத் தேவர் ஏறக்குறைய கடவுள் ஆகிவிட்டார். அரசாங்கமும் அவ்வப்போது எதையாவது செய்யும். விமான நிலையத்துக்கு தேவர் பேர் வை, சாலைகளுக்கு நாடார் பேர் வை, சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கார் பேர் வை. அப்படி வைத்தால் அந்த ஜாதி சந்தோசம் அடையும். நமக்கும் ஒன்றுமே செய்யாமல் சீன் காட்ட ஒரு வழி. இப்படி அரசாங்கம் – குறிப்பாக கலைஞர் சிந்திப்பதால்தான் பல மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. அப்படி ஒரு நிகழ்ச்சிதான் சட்டக் கல்லூரி சண்டைகள்.

தலித்களை தவிர வேறு யாருக்கும் இங்கு சங்கமோ கட்சியோ வேண்டியதில்லை. (பா.ம.க. வருவதற்கு முன் வன்னியர்கள் நிலை மோசமாக இருந்தது என்றும் இப்போது பரவாயில்லை என்றும் நான் மதிக்கும் சிலர் சொல்கிறார்கள் – எவ்வளவு உண்மை என்று எனக்கு தெரியாது) அரசாங்கம் இப்படிப்பட்ட சங்கங்கள், கட்சிகள் குழப்பம் விளைக்கும்போது அதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பா.ம.க. மரங்களை வெட்டி சாய்த்த போது ஓட்டு போய்விடுமோ என்று அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டக் கல்லூரியில் சண்டை நடந்தால் கண்டுகொள்வதில்லை. பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கல் வீச்சு நடந்தால் போலிஸ் அடக்கி வாசிக்கும். இப்படி போனால் எங்கே உருப்படுவது?

இதெல்லாம் எங்கே நடக்கப்போகிறது? அதுவும் கலைஞரின் ஆட்சியில்?

Advertisements