நான் ஒரு அரைக் கிழம் (என்ன வயது என்று சொல்லாமல் இருக்க இது ஒரு வழி). நான் ஐயர் ஜாதியில் பிறந்தவன். எனக்கு ஜாதியை பற்றி பிரக்ஞை அவ்வளவாக இருந்ததில்லை. என் நண்பர்கள் பாதி பேர் என்ன ஜாதி என்று தெரியாது. மீதி பேர் ஜாதி தெரிந்ததும் யதார்த்தமாக நடந்ததுதான். லங்கோட்டி யார்களான சஞ்சய் மால்பானி, தங்கமணிமாறன், ஸ்ரீகுமார், சிவகுருநாதன், வி. சங்கர், கணேஷ் கனக சுந்தரராஜ், இவர்களெல்லாம் என்ன ஜாதி என்று தெரியாது. தெரிந்துகொள்ளக்கூடாது என்பதில்லை – தெரிந்துகொள்ள வேண்டும் என்பதும் இல்லை. எனக்கு என் ஜாதியை பற்றி பிரக்ஞை வந்ததெல்லாம் நான் எஞ்சினியரிங் சீட் அடித்துப் பிடித்து வாங்கியபோதும் வீட்டு கல்யாணங்களின் போதும்தான். எல்லாரும் இப்படித்தான் என்று நான் சொல்லவில்லை. எனக்கு தெரிந்த முக்கால்வாசி பேர் இப்படித்தான். நான் பெரிய உத்தமன் என்பது இல்லை – இதுதான் நான் பார்த்த, எனக்கு தெரிந்த அரை நகர வாழ்க்கை முறை.

ஜாதி பற்றிய பிரக்ஞை உள்ளவர்களும் மற்ற ஜாதியை ஒதுக்கியவர்கள் இல்லை – சுய ஜாதி அபிமானம் உள்ளவர்கள். அதுவும் நான் தமிழ் நாட்டுக்கு வெளியே இந்தியாவில் ஐந்து வருஷம் இருந்திருக்கிறேன். தமிழ் பேசினால் நீ நண்பன். இந்தியாவை விட்டு வந்து பதினாறு வருஷம் ஆயிற்று. நீ இந்தியன் என்றால் சந்தோஷம். இந்த மாதிரிதான் தமிழ் நாட்டில் சுய ஜாதி அபிமானம் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு ஒரு நினைப்பு.

சமீப காலமாகத்தான் நான் தமிழ் ப்ளாக்களை படிக்கிறேன். எனக்கு நான் ஐயர் ஜாதியில் பிறந்தவன் என்பதை நினைவுபடுத்துகிறார்கள். கொஞ்சம் பேருக்கு நான் என்ன சொல்கிறேன் என்பதை விட நான் ஐயர் ஜாதியில் பிறந்தவன் என்பதுதான் முக்கியமாகத்தான் தெரிகிறது என்று தோன்றுகிறது. இதனாலேயே நான் எந்த பதிவுக்கு பதில் எழுதினாலும் நான் ஐயர் ஜாதியில் பிறந்தவன் என்று இப்போதெல்லாம் முதலில் சொல்லி விடுகிறேன். அவர்களுக்கும் நான் என்ன எழுதி இருக்கிறேன் என்று படிக்கும் வேலை மிச்சம்.

இவர்கள் அனைவரும் கலைஞர் மாதிரி நாங்கள் பார்ப்பநீயத்துக்குத்தான் எதிரிகள், பார்ப்பனர்களுக்கு அல்ல என்று அவ்வப்போது சொல்லிக்கொள்வார்கள். பிறந்த ஜாதிதான் சமூகத்தில் உனக்கு என்ன இடம் என்று தீர்மானிக்கிறது என்ற கருத்தைத்தான் இவர்கள் பார்ப்பனீயம் என்று சொல்கிறார்கள். (சிலர் ஹிந்து தீவிரவாதத்தையும் பார்ப்பனீயம் என்று சொல்கிறார்கள்.) ஒரு குழுவுக்கு பார்ப்பனர்கள் என்று அடையாளம் வைத்துவிட்டு, ஒரு கருத்துக்கு பார்ப்பனீயம் என்று அடையாளம் வைத்தால், அந்த குழு பார்ப்பனீயத்தை ஏற்றுக்கொள்கிறது என்று அர்த்தம் வரவில்லையா? உலகெங்கும் பல தீவிரவாத தாக்குதல்கள் முஸ்லிம்களால் நடத்தப்படுகின்றன. யாராவது தீவிரவாதத்தை இஸ்லாமியம் என்று சொல்லுவீர்களா? தமிழ் நாட்டில் ஜாதி தாக்குதல்கள் முக்கால்வாசி தேவர் ஜாதியினரால் நடத்தப்படுகின்றன – யாராவது ஜாதி தாக்குதல்களை தேவரியம் என்று சொல்லுவீர்களா? ஜாதீயம் என்ற வார்த்தை இருக்கும்போது எதற்காக பார்ப்பனீயம் என்று சொல்ல வேண்டும்?

கலகம், வினவு, மதிமாறன் போன்றவர்கள் புத்திசாலிகளாக தெரிகிறார்கள். ஆனால் இவர்களுக்கு பிராமண எதிர்ப்பு என்பது ஜாதியை ஒழிப்பதை விட முக்கியமோ என்று சில சமயங்களில் தோன்றுகிறது. கலகம் காலையில் ட்ராஃபிக் ஜாம் ஆனால் இது பார்ப்பன சதி என்று சொல்வார் போலிருக்கிறது. வினவு பாகிஸ்தானிகள் பம்பாயை அடித்தால் இதற்கு பார்ப்பனீயம்தான் காரணம் என்கிறார். கலகம் நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை – ஆனால் தான் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லாவிட்டால் நான் ஜனநாயகவாதி இல்லை என்கிறார். மறுமொழி எழுதுபவர்களும் இப்படித்தான். வெங்கட் என்பவர் சில பார்ப்பனர்கள் ஜாதி பார்ப்பதால் நாங்கள் அவர்களை எதிர்க்கிறோம், அது எல்லா பார்ப்பனர்களையும் எதிர்ப்பது போல் தெரிகிறது என்கிறார். சூப்பர்! கூடிய சீக்கிரமே அவர் தேவர் ஜாதியினர், முஸ்லிம்கள் எல்லாரையும் எதிர்ப்பது போல் தெரியும் என்று நினைக்கிறேன். தாமிரபரணி என்பவர் பார்ப்பனர்களுக்கு இந்த அடி போதாது என்கிறார். என் ஐந்து வயது பெண் என்ன பாவம் செய்தாள்? அவளை அடிக்க கை ஓங்கினால் கை இருக்காது என்று சொல்லிவிடுகிறேன்.

ஜாதீய கோட்பாடுகளை அழியுங்கள். நானும் உடன் வருகிறேன். ஆனால் பார்ப்பனர்களை அவர்கள் பிறந்த ஜாதிக்காக எதிர்ப்பது reverse casteism. நீங்கள் பிறந்த ஜாதி உங்கள் இடத்தை தீர்மானிக்க கூடாது என்று சொல்லிக்கொண்டே பார்ப்பனர்களாக பிறந்தவர்களை எதிர்ப்பது sheer hypocrisy! 

பெரியாரை பற்றி அடுத்த போஸ்டில்.

Advertisements