நான் புலிகளை எதிர்க்கிறேன். ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறேன். இப்போது எல்லா ஊடகங்களும் புலிகள் என்றால் தமிழர்கள், தமிழர்கள் என்றால் புலிகள் என்று பேசுவதால் குழம்பி இருக்கிறேன்.

83இல் நான் கல்லூரி மாணவன். என் கல்லூரியில் வந்து சேர்ந்த ஒரு இலங்கை மாணவனுக்கு முகத்தில் ஒரு வெட்டுக்காயம் இருக்கும். தான் நண்பர்கள் என்று நினைத்தவர்களே வெட்டியதாக ஒரு முறை சொன்னான். அப்போது தமிழ் நாட்டில் எல்லாருமே ஈழ ஆதரவாளர்கள்தான். கருத்து வேறுபாடு என்றால் இப்போதே இலங்கைக்கு படை அனுப்ப வேண்டுமா, இல்லை முதலில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமா என்பதுதான். இந்தியா தலையிட வேண்டும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. காலேஜில் ஸ்ட்ரைக் எல்லாம் நடந்தது. அவ்வப்போது ஹாஸ்டலை மூடி எங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.

85-86இல் பிரபாகரனை பற்றி கேள்விப்பட்டோம். சிரிசபாரத்தினம் அப்போதுதான் கொலை செய்யப்பட்டார் என்று நினைக்கிறேன். நான் பகத் சிங் காந்தியை கொன்றிருந்தால் யாராவது பகத் சிங்கை கொண்டாடுவோமா என்று கேட்டேன். கிழக்கு பகுதியும் அப்போதுதான் கை விட்டு போனது என்று ஞாபகம். ஆனால் என் முக்கால்வாசி நண்பர்கள் நீ தமிழனா என்று கேட்டார்கள். நான் பதில் எல்லாம் சொல்லாமல் உங்களுக்கு அறிவிருக்கிறதா என்று கேட்டேன். அதுவும் என் “லங்கோட்டி யார்” நண்பன் ஒருவன் திராவிட கழக பாரம்பரியம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவன். இரவு பகலாக சண்டை போடுவோம். (இன்னும் லங்கோட்டி யார்தான்)

IPKF இலங்கைக்கு போயிருக்கக்கூடாது என்றுதான் நானும் நினைத்தேன். ஆனால் என் காரணங்கள் வேறு – இது மிகவும் செலவு பிடிக்கும் வழி, புலிகள் வழிக்கு வர மாட்டார்கள் என்று நன்றாக தெரிந்த இலங்கை அரசு, அவர்களுடன் போராடும் உயிர் சேதத்தையும் செலவையும் நம் தலையில் கட்டிவிட்டார்கள் என்பதுதான். ஜாமீன் கையெழுத்து மாதிரி போட்டுவிட்டு மாட்டிக்கொண்டோமே, புலிகளை ராஜீவ் முட்டாள்தனமாய் நம்புகிறாரே, ஆப்பெடுத்த குரங்கு மாதிரி இந்தியாவின் நிலை ஆகி விடப்போகிறதே என்று பயப்பட்டேன். பயந்தது போலவே ஆனது.

ராஜீவ் கொலைக்கு பிறகு தமிழர்களின் நிலை மாறியது. ராஜீவை கொன்றது அறிவுள்ள தலைவன் செய்யும் வேலை இல்லை. தமிழ் நாட்டில் ஒரு turnaround வரும் என்பது கூட புலிகள் யாருக்குமே தெரியவில்லையா? ராஜீவாவது புரிந்து கொள்ளலாம். (ஒத்துக்கொள்ள முடியாது, புரிந்து கொள்ளலாம்.) அமிர்தலிங்கம் கொலை எதற்காக? சொந்த சகோதரர்களை தன் பலத்தை அதிகரிக்க மட்டுமே கொலை செய்யும் கயமைத்தனம்.

ஆனால் இன்று புலிகள் இல்லாமல் ஈழத் தமிழர்கள் இல்லை! பிரபாகரனை தவிர அத்தனை தலைவர்களும் பரலோகத்துக்கு அனுப்பிவிட்டார்கள். பிரபாகரன் இல்லாமல் ஈழத்தில் ஒரு சமாதானம் உண்டாக முடியாது. தனி நாடோ, இல்லை தமிழர்களுக்கு முழு உரிமையோ எதுவானாலும் பிரபாகரன் ஒத்துழைக்காமல் நடக்காது. பிரபாகரனை இலங்கை அரசு என்றைக்கும் நம்பப்போவதில்லை. நம்பும்படி ஒரு நாளும் பிரபாகரன் நடந்துகொள்ள வில்லை. பிரபாகரனும் இலங்கை அரசை என்றும் நம்பப்போவதில்லை. இலங்கை அரசும் அப்படி நடந்துகொள்ளவில்லை. அப்படி எதிர்காலத்தில் யாராவது புது இலங்கை தலைவர் நடந்துகொண்டாலும் பிரபாகரனிடம் ஒத்துழைப்பு கிடைக்காது. பிரபாகரனுக்கு ஒரு பிடி மண் எஞ்சினாலும் போதும், அந்த மண்ணுக்கு தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்ற நினைப்புதான்.

தமிழகத்தில் இன்று உணர்ச்சி வசப்பட்டு பேசும் எல்லாருக்கும் இதுதான் பிரச்சினை. பிரபாகரனிடம் குற்றம் கண்டுபிடிப்பது இலங்கை தமிழர்களை பலவீனப்படுத்தும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பது தவறு என்று சொல்லமுடியாது. தமிழர்கள் அடிபடுகிறார்கள். திருப்பி அடிக்க பிரபாகரனை விட்டால் வேறு வழி இல்லை என்பது ஓரளவு உண்மைதான். ஆனால் புலிகள் அடங்கினால்தான் இலங்கையில் சமாதானம் வர கொஞ்சமாவது வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

என்னதான் வழி? எனக்கு தெரியவில்லை. தெரிகிற சில:

1. இந்தியாவுக்கு வரும் இலங்கை அகதிகளை நன்றாக நடத்த வேண்டும். அவர்கள் சாப்பாட்டுக்கும், துணிக்கும், வழி இருக்க வேண்டும். அவர்கள் விருப்பபட்டால், அவர்களுக்கு எந்த தீவிரவாத இயக்கத்துடனும் தொடர்பு இல்லை என்று நிச்சயமாக தெரிந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அவர்கள் வாழ வழி இருக்க வேண்டும் (படிக்க ஸ்காலர்ஷிப், சுலபமான கடன் வசதி…)

2. இந்திய கடற்படை நடமாட்டம் கடலோரத்தில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். மீனவர்கள் உயிர் அல்பம் இல்லை. மீன் பிடிக்கும் உரிமை சிங்கள கடற்பகுதிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் புலிகளுக்கு உதவும் மீனவர்கள் எந்த தயவு தாட்சண்யமும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

3. பேச்சு சுதந்திரம் இருக்க வேண்டும். புலிகளுக்கு ஆதரவாக பேசுவதே குற்றம் என்ற நிலை மாற வேண்டும். தனி மனித சுதந்திரத்தை எந்த காரணம் கொண்டும் அடக்கக்கூடாது. ஆனால் பேச்சுக்கு மேல் போனால் இரும்புக் கரம் தேவை!

4. சும்மா நடிகர்கள் உண்ணாவிரதம் என்றெல்லாம் சினிமா காட்டாமல், உருப்படியாக ஏதாவது செய்யலாம் – நடிகர்கள், இயக்குனர்கள் தங்கள் அடுத்த பட சம்பளத்தில் ஒரு சதவிகிதம் அகதிகளுக்கு உதவியாக கொடுக்கலாம். நூறாவது நாள், ஐம்பதாவது நாள் வசூலை அகதிகளுக்கு கொடுக்கலாம். சண் டிவியும் கலைஞர் டிவியும் ஜெயா டிவியும், ஒரு மணி நேர விளம்பர வசூலை கொடுக்கலாம். இவர்கள் எல்லாம் ஒரு வேளை சாப்பிடாவிட்டால் என்ன ஆகிவிடும்?

5. நான், கார்கி மாதிரி சாதாரணர்கள் மாய்ந்து மாய்ந்து ப்ளாக் எழுதலாம். ஏதோ ஒரு அற்ப சந்தோஷம் – ஒரு லாபமும் இல்லை…