நான் புலிகளின் ஆதரவாளனா இல்லையா என்பது இந்த போஸ்டுக்கு தேவை இல்லாத விஷயம். ஆனால் நான் லாஜிக்கின் ஆதரவாளன். வாழ்க்கையில் மனிதர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரே ஆயுதம் லாஜிக் என்று உறுதியாக நம்புபவன்.

இந்திரா காந்தியை கொலை செய்தவர் ஒரு சீக்கியர். அதனால் சீக்கிய இனத்தையே தண்டிக்கவில்லையே? காங்கிரஸ்காரர்கள் ஒரு சீக்கியரையே பிரதமராக ஆக்கவில்லையா? சீக்கியர்கள் என்றால் ஒஸ்தி, தமிழர்கள் என்றால் இளிச்சவாயர்களா? ராஜிவ் காந்தி கொலைக்காக ஒரு இனத்தையே படுகொலை செய்வது நியாயமா?

நான் இந்த வாதத்தை பல இடங்களில் படித்தேன். சோலை என்ற மூத்த பத்திரிகையாளர் ( இப்போது குமுதம் ரிப்போர்டரில் எழுதுபவர்), சீமான் போன்றவர்களும் இதை சொல்லி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், என்னால் இதை உறுதியாக சொல்ல முடியவில்லை.

ராஜிவ் கொலைக்கு மூல காரணம் பிரபாகரன் என்பது தெரிந்ததே. அவர் மீது இன்னும் கேஸ் இருக்கிறது. யாரோ ஒரு புலிகளின் தலைவர் “ராஜிவ் கொலை ஒரு துரதிர்ஷ்டமான விஷயம்” என்று இலைமறைகாயாக சொன்னார்.

இந்திரா காந்தியின் கொலைக்கு காரணமானவர்களை எந்த காங்கிரஸ்காரனும், இந்தியனும், தமிழனும் ஆதரிக்கவில்லை. பியாந்த் சிங் மன்னிக்கப்படவில்லை. மன்மோகன் சிங் இந்திராவை கொலை செய்ய திட்டம் தீட்டவில்லை, ஆணை இடவில்லை, காலிஸ்தான் வேண்டும் என்று போராடவில்லை. சீக்கியர்கள் காலிஸ்தான் வேண்டும் என்று போராடியபோது சீக்கியர்களும் அடக்குமுறைக்கு ஆளானார்கள். அவர்களிலும் நிச்சயமாக அப்பாவிகள் அவதிப்பட்டிருப்பார்கள்.

இவர்களோ புலிகள் = தமிழர்கள் என்று வாதிடுகிறார்கள். பிரபாகரனை அதிகாரத்தில் அமர்த்த இந்தியா பாடுபடவேண்டும் என்று சொல்கிறார்கள். புலிகளை தனிமைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

நான் ஒரு தெலுங்கன் என்று வைத்துக்கொள்வோம். எனக்கு இந்த சிம்பிள் லாஜிக் கூட புரியாதா என்ன?

அடுத்தவர்களை ஏமாற்றலாம், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதில் என்ன பயன்?