நாகர்ஜுன் தன்னுடைய தளத்தில் சினிமா பற்றிய ஒரு கருத்து கணிப்பு போட்டிருக்கிறார். பின்னூட்டங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன. போய் பாருங்கள்!

யாரய்யா இந்த “பின்னூட்டம்” என்ற பேரை வைத்தது? “மறுமொழி” இதை விட பரவாயில்லாமல் இருக்கிறது. “பதில்” இதை விட சுலபமாக புரிகிறது. “பின்னூட்டம்” என்றால் வேறு என்னவோ தோன்றுகிறதே!

எனது (இன்னும் கொஞ்சம் விவரமான) பதில்கள்
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
ஆறு அல்லது ஏழு வயது இருக்கலாம். தங்கச்சுரங்கம் படம். செய்யூர் என்ற ஊரில் ஒரு தியேட்டரில். ஏதோ அல்கெமி, ரசவாதம் என்றும் “கட்டழகு பாப்பா கண்ணுக்கு” என்ற பாட்டும் “நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு இனியது” என்ற பாட்டும் நினைவிருக்கின்றன.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தசாவதாரம். கலிஃபோர்னியாவில் குடும்பத்தோடு ஆளுக்கு பதினாறு டாலர் டிக்கெட் வாங்கி முதல் நாள் நைட்ஷோ பார்த்தது.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
அந்த நாள் – சன் டிவியின் தமிழ் சினிமாக்கொண்டாட்டம் ப்ரோக்ராமில் பார்த்தது.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
எதுவுமில்லை. எந்த தமிழ் சினிமாவும் என்னுள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கப்பலோட்டிய தமிழன் பார்த்தபோது வ.உ.சி. கைது செய்யப்பட்டதும் தூத்துக்குடியில் கலவரம் நடைபெறும். அப்போது கையில் கிடைத்ததை உடைக்க வேண்டும் என்று எனக்கும் தோன்றியது. தண்ணீர் தண்ணீர் பார்த்தபோது அடி மனதில் ஒரு துக்கம் ஏற்பட்டது. வறுமையின் நிறம் சிவப்பு பார்த்தபோது நான் மாணவன். எனக்கு வேலை கிடைக்குமா என்று ஒரு பத்து நிமிஷம் பயப்பட்டேன். மனோகரா பார்த்தபோது சிவாஜி தன் அப்பாவிடம் உணர்ச்சி பொங்க பேசும் காட்சியில் அவர் என்ன சொல்கிறார் என்று கூட தெரியாமல் மெய்மறந்து பார்த்தேன். ஆனால் இவை எதுவும் என்னை பாதிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். நான் ஒவ்வொரு முறை வாழ்க்கையில் சோர்வு அடையும்போது இகிரு என்ற ஜப்பானிய திரைப்படம் பார்ப்பேன். அது என்னை உற்சாகப்படுத்தும். ஆனந்த் என்ற ஹிந்தி படமும் எனக்கு சில காலம் அப்படி இருந்தது. கல்யுக் என்ற ஹிந்தி படத்தின் மீது எனக்கு ஒரு பைத்தியமே உண்டு. Pulp Fiction பார்த்த போது அசந்துபோனேன். அப்படி எனக்கு எந்த தமிழ் படத்திலும் பாதிப்பு ஏற்படவில்லை.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
எதுவுமில்லை. சினிமா நடிகர்கள் அரசியலில் இருந்தாலும் அரசியல்வாதிகள் கதை வசனம் எழுதினாலும் இவை இரண்டுக்கும் உள்ள தொடர்பு தற்செயலானது. அதனால் சினிமா-அரசியல் சம்பவம் என்று ஒன்று இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. சினிமா நடிகர்களுக்கு ஏற்பட்ட அரசியல் சம்பவம் என்று வைத்துக்கொண்டாலும் அப்படி ஒன்றும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
எதுவுமில்லை. எனக்கு புரிவது கதைதான். கதை சொல்லும் டெக்னிக்கில் எனக்கு தெரிந்த புரட்சிகள் ராஷோமொனும், pulp fictionஉம்தான். சமீபத்தில் பார்த்த அந்த நாள் திரைப்படத்தில் ஒளிப்பதிவு என்னை வியக்கவைத்தது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
கரைந்த நிழல்கள் பிடித்த புத்தகம். தியோடர் பாஸ்கரன் மாதிரி எழுதினால் விரும்பிப்படிப்பேன். இல்லாவிட்டால் கிடைத்ததைப் படிப்பேன் – tamilcinema அடிக்கடி போவேன்.

7.தமிழ்ச்சினிமா இசை?
ரொம்பப்பிடிக்கும். அதுவும் பழைய பாட்டுக்கள் என்றால் பைத்தியம்

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
மிகவும் தாக்கிய படங்கள் இகிரு (ஜப்பானிய படம், குரோசோவா இயக்கம்), கல்யுக் (ஷ்யாம் பெனகல்), ஆனந்த் (ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன்), Pulp Fiction(க்வென்டின் டாரன்டினோ). மிகவும் பிடித்த படங்கள் என்றால் அபராஜிதோ, சாருலதா, பதேர் பாஞ்சாலி, அபூர் சன்சார் (சத்யஜித் ரே), மிஸ்ஸியம்மா, மாயா பஜார், குண்டம்மா கதா (விஜயா மூவீஸ், தெலுங்கு), வம்ச விருக்ஷா, தமிழில் கப்பலோட்டிய தமிழன், சந்திரலேகா, அந்த நாள், தில்லுமுல்லு, மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், பாமா விஜயம், நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், தண்ணீர் தண்ணீர், Dr. Strangelove, Being John Malkovich, A Few Good Men, Godfather என்று ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நான் பார்த்த சிறந்த தமிழ் சினிமா தண்ணீர் தண்ணீர். தமிழ் சினிமாவில் B grade வாங்கக்கூடிய படங்கள் வந்திருக்கின்றன, ஆனால் A grade வாங்கிய படம் இதுதான். உலகத்தரம் வாய்ந்த படங்கள் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. வரும் என்ற நம்பிக்கையும் இல்லை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்
ஏன் நியூஸ் இல்லை என்று இரண்டு வாரம் எல்லா ஊடகங்களிலும் மாய்ந்துமாய்ந்து பேசுவார்கள். பிறகு வேறு ஏதாவது பேசக் கிளம்பிவிடுவோம். ஒன்றும் மாறிவிடாது.

Advertisements