Forum Hubஇல் இது பற்றி இனி மேல் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். :-)) அது அவர்களது உரிமை. ஆனால் எனது கருத்துக்கு எதிர்கருத்துக்கள் எழுந்தபோதும், என்னை குதர்க்கவாதி என்று சொன்னபோதும் பேசாமல் இருந்த சென்சார் நான் விளக்கம் சொல்லும்போது மட்டும் இது அரசியல், இங்கே கூடாது என்று சொல்வது கொஞ்சம் உறுத்துகிறது.

எனது முந்தைய போஸ்டில் இருக்கும் “எங்கள் வரிப்பணத்தை ஏனையா செலவழிக்கிறீர்” என்ற வரி பலரை பாதித்திருக்கிறது. அதற்கு முந்தைய வரியான “நண்பனுக்கு சிலை வைக்க வேண்டுமென்றால் சொந்த பணத்தில் அல்லவா வைக்க வேண்டும்” என்பதோடு சேர்ந்து படிக்க வேண்டிய வரி அது. Out of context ஆக படித்தால் உறுத்தலாம். உறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல.

“நண்பனுக்கு நான் ஆற்ற வேண்டிய கடமை” என்று கலைஞர் வரிப் பணத்தில் சிவாஜிக்கு என்ன காந்திக்கு சிலை எடுத்தால் கூட தவறுதான். வரிப் பணத்தில் சிலை எடுக்க ஒரே காரணம்தான் ஒத்துக்கொள்ளக்கூடியது – சமூகத்தின் மாமனிதர்களுக்கு – iconகளுக்கு – எழுப்பலாம். சிவாஜிக்கு தாரளமாக எழுப்பலாம். அவர் தமிழகத்தின் iconதான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. கலைஞர் சிவாஜியின் எதிரியாக இருந்தாலும் சிலை எழுப்பி இருக்க வேண்டும். (சிலைகளால் என்ன பயன் என்ற கேள்விக்கு நான் இப்போது வரவில்லை)

நான் பெருமதிப்பு வைத்துள்ள சாரதா சிவாஜி எவ்வளவோ வரி கட்டி இருக்கிறார், அந்த வரிப் பணத்தில் அவருக்கு சிலை வைத்ததாக வைத்துக்கொள்வோம் என்று சொல்லி இருக்கிறார். இது ஒப்புக்கொள்ளக்கூடிய வாதம் இல்லை. அப்புறம் சில்க் ஸ்மிதாவுக்கு கூட சிலை வைக்க வேண்டி இருக்கும், ஜாக்கிரதை!

திரு மோகன்ராமன் கலைஞர் உண்மையில் பல தடைகளை மீறி சிலை எழுப்பியதை நன்றியுடன் குறிப்பிடுகிறார். நானும் அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர் கலைஞர் கொஞ்சம் தன்னை பற்றி பெருமை அடித்துக்கொள்வது சின்ன விஷயம், கண்டு கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறார். நானும் ஓரளவு உடன்படுகிறேன். இது ப்ராக்டிகலாக இருக்கலாம். ஆனால் விட்டால் கலைஞர் என் மைத்துனருக்கு நான் ஆற்ற வேண்டிய கடமை இருக்கிறதே என்று நினைவு வந்து நாளை சி.எஸ். ஜெயராமனுக்கும் சிலை வைக்கலாம். (சி.எஸ். ஜெயராமன் நல்ல பாடகர், ஆனால் சிலை வைக்கும் அளவு ஒரு icon இல்லை என்று கருதுகிறேன்)

திரு ராகவேந்தரா தனக்கு கலைஞரின் வார்த்தைகளில் அப்படி தவறாக தெரியவில்லை என்று குறிப்பிடுகிறார். ஒரு வேலை திரு ஜோ சொல்வது போல் என் குதர்க்க புத்திக்குதான் அப்படி தோன்றுகிறதோ என்னவோ? :-))

ஒரு விஷயம் சந்தோஷமாக இருந்தது. சிவாஜியின் பொற்காலம் முடிந்து ஒரு நாற்பது ஐம்பது வருஷம் ஆகி இருந்தாலும், இன்னும் இவ்வளவு தீவிரமான விசிறிகள் இருப்பது ஒரு நிறைவான விஷயம். அதனால்தானோ என்னவோ திரு ஜோ திட்டுவது கூட தவறாக தெரியவில்லை!

Advertisements