பிராமணர்கள் எல்லாரும் தாங்கள் யாராவது ஒரு வேத அல்லது உபநிஷத கால முனிவரின் சந்ததிகள் என்று சொல்லிக்கொள்வார்கள். காசியப கோத்ரம், பாரத்வாஜ கோத்ரம் எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நான் விஸ்வாமித்ர கோத்ரத்தில் பிறந்தவன். எனக்கு ஒரு அடிப்படை சந்தேகம்.

லெஜன்ட் (இதற்கு தமிழில் என்ன எழுதுவது?) படி விஸ்வாமித்ரர் ராஜாவாக இருந்தவர். வசிஷ்டருடன் ஆயுதங்களுடன் போட்டு வசிஷ்டரின் தவ வலிமையால் தோற்கடிக்கப்பட்டவர். அதனால் தானும் பிரம்ம ரிஷியாக வேண்டும் என்று தவம் செய்து, பல கஷ்டங்களை சந்தித்து பிரம்ம ரிஷியானவர். ரிக் வேதத்தில் இவர் எழுதிய “கவிதைகள்” இருக்கின்றனவாம்.

இவரது நூறு பிள்ளைகளும் வசிஷ்டருன் போட்ட சண்டையில் இறந்துவிட்டார்கள். அப்படியே யாராவது மிஞ்சி இருந்தாலும் அவர்கள் க்ஷத்ரியர்கள். முனிவர் ஆன பிறகு அவரது தவத்தை குலைக்க வந்த மேனகாவுடன் கூடி சகுந்தலாவின் தந்தை ஆனார். கோத்ரம் என்பது ஆண்களுக்குத்தான். அதனால் சகுந்தலாவுக்கு கோத்ரம் கிடையாது. அப்படியே இருந்தது என்று வைத்துக்கொண்டாலும், சகுந்தலாவின் பிள்ளை பரதன். பரதன் பாரதத்துக்கே சக்கரவர்த்தி. அவரது பெயரை வைத்துதான் நம் நாட்டுக்கே பாரதம் என்று பெயர் வந்தது. சக்கரவர்த்தி க்ஷத்ரியர்.

பிறகு இந்த விஸ்வாமித்ர கோத்திர பிராமணர்கள் எங்கிருந்து வந்தார்கள்?

குழப்பத்தை அதிகரிக்க கௌஸிக கோத்ரம் என்றும் ஒன்று இருக்கிறது. கௌசிகர் என்பது விஸ்வாமித்ரரின் இன்னொரு பெயர். அப்புறம் எப்படி இரண்டு கோத்ரம்? என் பெரியப்பா ஒருவர் கௌஸிகர் விஸ்வாமித்ரரின் தம்பி என்று சொல்கிறார்.

பூணூல் போடும்போது “அபிவாதயே” என்று தொடங்கும் ஒரு சமஸ்க்ருத மந்திரம் சொல்லிக் கொடுப்பார்கள் – அதில் என்ன கோத்ரம், இந்த கோத்ரத்தின் முக்கிய முனிவர்கள் யார் யார், எந்த வேதம், தாத்தா, அப்பா யார் யார் (அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் மாதிரி) தன் பெயர் என்ன என்ற விவரங்கள் இருக்கும். எனக்கும் சொல்லி கொடுத்தார்கள், ஆனால்… ஞாபகம் இருக்கும் இந்த கோத்திர பெரியவர்கள் யாராவது இந்த கோத்திரத்தின் முக்கிய முனிவர்கள் யார் என்று சொல்லுங்களேன்!

விஸ்வாமித்ர கோத்திரப் ப்ரவரம்: வைஸ்வாமித்ர, தேவராத, ஔதல
கௌசிக (குசிக) கோத்திரப் ப்ரவரம்: வைஸ்வாமித்ர, ஆகமர்ஷண, கௌசிக
கௌசிக கோத்திரப் ப்ரவரம்: வைஸ்வாமித்ர, ஸாலங்காயன, கௌசிக

விவரம் தந்த சேதுராமனுக்கு நன்றி!

ஒரு வேளை சந்ததிகள் இல்லை, சிஷ்யப் பிள்ளைகள் என்று வைத்துக்கொள்ளலாமா என்று யோசித்தேன். அப்படி என்றால் ஒரே கோத்ரத்தில் கல்யாணம் செய்துகொள்ளக்கூடாது என்ற விதிக்கு அர்த்தம் இல்லையே? இந்த விதி நெருங்கிய உறவுகளுக்கு மத்தியில் திருமணம் செய்து கொள்வதை தடுப்பதற்காக ஏற்பட்டிருக்கவேண்டும். அஃப் கோர்ஸ், பெண்களுக்கு கோத்ரம் இல்லை என்று சொல்லி நாம் இந்த விதியை உபயோகம் இல்லாமல் செய்துவிட்டோம்!

சேதுராமன் தந்த விஸ்வாமித்ர, குசிக, கௌசிக கோத்திர ரிஷி வம்சாவளியை படித்த பிறகு எனக்கு ஒரு சந்தேகம் – விஸ்வாமித்ரா, கௌசிக, குசிக கோத்ரத்துக்குள் பெண் கொடுத்து பெண் எடுப்பார்களா?

Advertisements