இரண்டு நாட்களுக்கு முன் டிஸ்னிலாண்ட் போயிருந்தோம் – என் சின்னப் பெண்ணின் பிறந்த நாளுக்கு அவள் கேட்டது அதுதான்.

நாங்கள் போனது ஒரு பார்க் ஒரு நாள். (டிஸ்னிலாண்ட் பல பார்க்குகள் கொண்டது – டிஸ்னிலாண்ட், கலிஃபோர்னியா அட்வென்சர் பார்க் என்று நிறைய இருக்கின்றன) ஒரு டிக்கெட் எழுபது டாலர்கள். வருஷா வருஷம் டிக்கெட் விலை ஏறிக்கொண்டே போகிறது. ஆனால் கூட்டம் வந்து அம்முகிறது. குழந்தைகள் கேட்டார்கள் என்று ஒரு கடையில் லாலிபாப் வாங்கப் போனேன். அரை மணி க்யூவில் நிற்க வேண்டி இருந்தது.

கொடுமை என்னவென்றால் ஒரு ஐந்து நிமிஷ ரைடுக்கு அரை மணி க்யூவில் நிற்க வேண்டி இருக்கிறது. பார்க்கிங் இடத்திலிருந்து உள்ளே போக அரை மணி ஆகும். பிறகு டிஸ்னி காரக்டர்கள் உலா வரும் ஒரு பரேட், வாண வேடிக்கை இவற்றை பார்க்க ஒரு இரண்டு மணி நேரம் செலவாகும் (அரை மணி நிகழ்ச்சி, அரை மணி நல்ல சீட் பிடிக்க முயற்சி) பிறகு சாப்பாடு, கழிப்பறை, ஷாப்பிங் எல்லாம் இருக்கவே இருக்கிறது. நீங்கள் காலை ஒன்பது மணிக்கே போய் இரவு பத்து மணிக்கு வந்தாலும், ஒரு பதினைந்து ரைடுக்கு மேல் போக முடியாது. ஒரு நாள் போதாது.

எல்லாருக்கும் இப்படி இருக்குமா என்று தெரியாது. ஆனால் என் குடும்பத்தில் குழந்தைகளுக்கு ஒரே ஜாலி. பெரியவர்களுக்கு ஒரே போர். எனக்கு பாதி கூட குழந்தைகளுக்கு காட்டவில்லையே என்ற குறை. அம்மாவுக்கு நடந்து நடந்து கால் வலி. என் பெண்களுக்கு ராத்திரி மணி பத்தானாலும் போய்த்தான் ஆக வேண்டுமா என்ற கேள்வி.

ஒரு உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும். எல்லா சோர்வும், இவ்வளவு பணம் செலவு செய்து எண்ணத்தை கண்டோம் என்ற கேள்வியும், என் பெண்களின் சந்தோஷத்தில் மறைந்துவிடுகின்றன.

உங்களுக்கு 25 வயது ஆகிவிட்டதா? ஒரு முறையாவது பார்த்திருக்கிறீர்களா? குழந்தைகள் இருந்தாலொழிய மீண்டும் போகாதீர்கள்.

Advertisements