உண்மையை ஒத்துக்கொள்கிறேன் – அசோகமித்ரனின் சில கதைகள் எனக்கு too subtleஆக இருக்கின்றன. ஆனால் சில சமயங்களில் க்ளிக் ஆகிறது. அப்படி க்ளிக் ஆகும்போது இரண்டு பெக் அடித்தால் வருவது போல மண்டையில் எங்கேயோ ஒரு அடி விழுகிறது.

மிகவும் சிக்கனமாகத்தான் வார்த்தைகளை பயன்படுத்துவார். வெகு கவனமாக தன் கதைகளை செதுக்குபவர். Master of irony.

லா.ச.ராவின் கதைகளில் அவர் எப்போதும் இருப்பார். சுஜாதாவின் கதைகளில் யாராவது ஒரு புத்திசாலி அவரை பிரதிபலிக்கிறான். ஜெயமோகனின் கதைகளில் வருபவர்கள் அவரைப் போல மிகவும் அழுத்தமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள். இந்திரா பார்த்தசாரதியின் அறிவு ஜீவிகள் அவரைப் போலத்தான் பேசுகிறார்கள். கி. ராஜநாராயணன் அவர் கதைகளில் இருக்கிறார். இவரது கதைகளில் அவர் எங்கேயும் இருக்கமாட்டார். ஆனால் இவரது பார்வை இருக்கத்தான் செய்கிறது.

எனக்கு பிடித்த கதைகள்.

பிரயாணம் – எனக்கே புரிவதால் எல்லாருக்கும் புரியும். ரொம்ப சிம்பிள் ஆன கதை. இமய மலையில் எங்கோ தன் குருவை அழைத்துக்கொண்டு கீழே இறங்கும் ஒரு சாமியாரையும் அவரது குருவையும் ஓநாய்கள் தாக்குகின்றன. அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. கடைசி வரியை கவனமாக படியுங்கள். நான் படிக்கும்போது அதிர்ந்தேன்.

பிற்காலத்தில் Ambrose Bierceஇன் ஒரு கதையும் இதைப் போல இருப்பதை கவனித்தேன். அசோகமித்திரன் காப்பி அடித்தாரா, இல்லை அவருக்கும் இதே மாதிரி தோன்றியதா தெரியாது. ஆனால் தமிழ் கதை Bierceஇன் கதையை விட பல மடங்கு அருமையாக செதுக்கப்பட்டிருக்கிறது.

இருவர் – பந்தம், இழப்பு, அன்பு இவற்றை இதை விட சிக்கனமாக சிறப்பாக சொல்ல முடியாது. தன் அப்பாவின் வைப்பாட்டியிடம் அன்பு வைக்கும் கொஞ்சம் லௌகீக அறிவு குறைந்த பையன். கதையின் முதலிலேயே இறந்துபோகும் அப்பா கதை முழுவதும் வியாபித்திருக்கிறார். தலைவன் போனதும் விதவை தாய் அக்ரகாரத்தில் அனுபவிக்கும் கஷ்டங்களும், தன் சோகங்களை பகிர்ந்துகொள்ளக்கூட ஆள் இல்லாத சோகமும், வைத்துக்கொண்டிருந்தவன் போனதும் வைதவ்யத்தை அனுபவிக்கும் தாசியும் – ஒரு மங்கலான, அழகிய ஆயில் பெயிண்டிங் பார்ப்பது போல ஒரு ஃபீலிங். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் தொண்டையில் துக்கம் அடைக்கிறது.

மானசரோவர் – ஒரு புகழ் பெற்ற நடிகனுக்கும் ஒரு லோ-லெவல் ஸ்டுடியோ அதிகாரிக்கும் உள்ள உறவு. மிக அருமையாக எழுதப் பெற்றது.

தண்ணீர் – எனக்கு ஒரு முறைக்கு இரண்டு முறை படித்த பிறகுதான் க்ளிக் ஆனது. தண்ணீருக்காக கஷ்டப்படும் ஜமுனா, கல்யாணம் ஆகாமலே குழத்தை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கிறாள். விளக்கினால் கோனார் நோட்ஸ் மாதிரி ஆகிவிடும்.

கரைந்த நிழல்கள் – கட்டாயமாக படிக்க வேண்டியது. Tour de force.

பதினெட்டாவது அட்சக் கோடு – பெருமையாக பேசப்படுவது. ஆனால் என் கண்ணில் சுமார்தான். நிஜாம் ஆட்சியில் ஹைதராபாத். autobiographical க்ளைமாக்ஸ் என்று நினைக்கிறேன். Very powerful climax.

எனக்கு இன்னும் புரியாதவை – “விழா”, “பாவம் டல்பதடோ”. என்ன சொல்ல வருகிறார்?