இது சிலிகன் ஷெல்ஃப் தளத்தில் திருத்தங்களுடன் மீள்பதிக்கப்பட்டிருக்கிறது.

ரொம்ப நாட்களாக இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று ஆசை. யார் யாரோ சொல்லி இருக்கிறார்கள், எனக்கு இப்போது யார் யார் சொன்னார்கள் என்று கூட சரியாக நினைவில்லை. க.நா. சுப்பிரமணியம் எழுதியது. முதல் பதிப்பு 1946இல் வெளி வந்தது. ஜெயமோகனின் டாப் டென் லிஸ்டில் இதற்கு ஆறாம் இடம். என்னுடைய டாப் டென் லிஸ்டில் இடம் பெறாது. ஆனால் நான் படித்த சிறந்த புத்தகங்களில் ஒன்று.

எனக்கு ஒரு முட்டாள்தனமான பழக்கம். சில புஸ்தகங்கள் எனது ரசனைக்கு ஒத்து வரும் என்று தெரியும். ஆனால் அதை படிக்க சரியான நேரம் வர வேண்டும் என்று காத்திருப்பேன். என்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி படிக்க வேண்டும் என்றும் வேலை டென்ஷன் இருந்தால் படிக்க முடியாது என்றெல்லாம் சில எண்ணங்கள் உண்டு. இந்த சரியான நேரம் எப்போது வரும் என்று எனக்கு தெரியாது. விஷ்ணுபுரம் வாங்கி 4 வருஷம் கழித்துத்தான் படித்தேன். பொய்த்தேவு எப்போது வாங்கினேன் என்று கூட தெரியாது, இரண்டு காப்பிகள் இருந்தன. (ஆனால் காலச்சுவடு அருமையாக பதிப்பித்திருக்கிறது) ஆனால் சில புத்தகங்களை திருப்பி திருப்பி படிப்பேன் – ஹாரி பாட்டர், டிக் ஃப்ரான்சிஸ் எழுதிய சில த்ரில்லர்கள், சில கணேஷ்-வசந்த் கதைகள். அவற்றில் உள்ள சுவை எனக்கு குறைவதே இல்லை.

இரண்டு வாரம் முன்னால்தான் முதல் முப்பது நாற்பது பக்கம் படித்தேன். உடனே தெரிந்துவிட்டது, இது ஒரு அருமையான புத்தகம் என்றும், படிக்க சுலபமான புத்தகம் என்றும். (விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் இரண்டும் சுலபமான புத்தகங்கள் அல்ல) சுலபமான புத்தகம் என்றால் மிக விரைவாக படிக்க முடியும். கதை ஒரு நேர் கோட்டில் செல்லும். முன்னால் என்ன சொல்லப்பட்டது என்று திருப்பி திருப்பி பார்க்க வேண்டியதில்லை. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் சுலபமாக படிக்க முடியும். One Hundred Years of Solitude படிக்க நேரமாகும். ஆனால் ஏனோ பிடிக்கும் என்று தெரிந்தும், சுலபம் என்று தெரிந்தும் இந்த புத்தகத்தை ஒரு ஓரமாக வைத்துவிட்டேன். இன்று திருப்பி எடுத்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

பொய்த்தேவு என்றால் என்ன என்று கூட தெரியாது. இத்தனைக்கும் எனக்கு ஓரளவு தமிழ் தெரியும். ஆனால் தேவு என்றால் தெய்வம் என்று பொருள் இதை படித்துத்தான் தெரிந்து கொண்டேன்.

படித்து முடித்ததும் மனதில் விவரிக்க முடியாத ஒரு நிறைவு.

இதற்கு கதை சுருக்கம் எல்லாம் எழுத முடியாது. ஆனால் இந்த கதையை பல தளங்களில் பார்க்கலாம். ஏழை மேட்டுத்தெரு சோமு சோம சுந்தர முதலியாராக மாறி சோமுப் பண்டாரமாக முடிகிறார். அவரது ஆசைகள், பார்த்ததற்கெல்லாம் ஆசைப்படும் குணம், அவரது தெய்வங்கள், அவரது ஆதர்ச மனிதர்கள், என்று பார்க்கலாம். என்னை பாதித்தது வேறு ஒரு தளம். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நாம் தேடும் விஷயங்கள் வேறு. இந்த தேடலுக்கு உண்மையிலேயே ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? காமம் எல்லா உயிர்களுக்கும் உள்ள அடிப்படை தேடல் என்று வைத்துக்கொள்ளலாம், அதற்கு அர்த்தம் தேடுவது அர்த்தம் இல்லாத செயல். பணம்? புகழ்? குடும்பம்? இவை எல்லாம் நமக்கு ஏன் முக்கியம் என்று நாம் யோசிப்பதே இல்லை. சரி, நான் யோசித்தது இல்லை.

எங்கோ அமேரிக்காவில் உட்கார்ந்து இருந்தாலும், எனது வேர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. எனது அப்பா, அம்மா, அத்தை(கள்), பெரியப்பா, பெரியம்மா, அத்தான்கள், அத்தங்காள்கள், காலேஜ் நண்பர்கள் இவற்றை சுற்றிதான் என் எண்ணங்கள் சுழல்கின்றன. முதலியாரின் வேர்கள் மேட்டுத் தெருவில் இருப்பது போல. அவரது விலங்குகள் ராயர் குடும்பத்தில் இருப்பது போல.

அவர் சோமுப் பண்டார மாற்றத்தை பற்றி இன்னும் விவரித்திருக்கலாம்.

கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம். படிக்க சொல்லி சொன்ன எந்தரோ மகானுபாவலுகளுக்கு நன்றி. 

 

P.S.

ஜெயமோகனின் குறிப்பு  பொய்த்தேவு —— க. நா. சுப்பிரமணியம்.

தமிழின் முதல் நாவல் என்று ஐயமின்றி கூறலாம். நாவல் என்ற விசேஷ வடிவத்தைப் பற்றிய பிரக்ஞையுடன் எழுதப்பட்ட முதல் படைப்பு. சோமு முதலி என்ற கதாபாத்திரத்தின் முழுவாழ்க்கையை முன்வைத்து வாழ்வின் சாரமான பொருளென்ன என்று தேடும் படைப்பு ஒரு காலை வேதாந்தத்திலும் மறுகாலை இருத்தலியத்திலும் ஊன்றி நிற்கும் காத்திரமான ஆக்கம் சோமுவை சிறுவயது முதல் தொடரும் அந்த மணியோசை நாவலில் கவித்துவத்தின் அபாரசத்தியங்களைப் பற்றி தமிழுக்கு கற்பித்தது.

 

Post-Post-Script:

பொய்த்தேவு என்று கூகிளில் தேடிப் பார்த்தேன். ஒரே ஒரு பக்கம்தான் கிடைத்தது. அதுவும் நானே ஜெயமோகனின் டாப் டென் லிஸ்டை பற்றி எழுதிய ஒரு குறிப்புத்தான். 🙂 ஆனால் ஜெயமோகனின் பக்கத்தையே கூகிளால் கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழில் எழுதப்பட்ட பக்கங்களில் எப்படி தேடுவது என்று யாராவது கொஞ்சம் சொல்ல முடியுமா?

Advertisements