நான் சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தவன். கல்லூரி காம்பஸ் மிகவும் பெரியது. ஏதோ ஒரு கிராமத்தை வாங்கி கல்லூரியாக்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். நான் படிக்கும் காலங்களில் இன்னும் இடிக்கப்பட்ட வீடுகளின் அஸ்திவாரங்களும், இடிந்துகொண்டிருக்கும் கிணறுகளும் இருந்தன. காம்பஸுக்கு வெளியே வயல்கள், சின்ன குன்றுகள், பாறைகள், பார்க்க அழகாக இருக்கும். நாங்கள் பார்த்தது ரொம்ப குறைவு.

எங்கள் பொழுது ரொம்ப ஜாலியாக கழிந்தது. ஆனால் ஒரு குறுகிய வட்டத்தில்தான் புழங்கினோம். காலேஜ், மெஸ், நண்பர்களின் அறைகளில் அரட்டை, சீட்டு, ஏதாவது விளையாட்டு அவ்வளவுதான். வெளியே போவதென்றால் சினிமாதான். அதுவும் சேலம் டவுன் மாதிரி சினிமா பார்க்க ஒரு வசதியான இடத்தை நான் அது வரை பார்த்ததே இல்லை. இரண்டு தொடர்புள்ள தெருக்களில் அடுத்தடுத்து நாற்பது ஐம்பது தியேட்டர்கள். ஒரு தியேட்டரில் டிக்கெட் கிடைக்காவிட்டால் வேறு படம் போவது ரொம்ப சுலபம்.

எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு இந்திய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவர் சேலத்துக்கு அருகே உள்ள தாரமங்கலம் கோவிலைப் பற்றி எழுதி இருப்பது இங்கே. தாரமங்கலத்துக்கு டவுன் பஸ்களே போகும். எங்கள் செட்டில் யாருக்கும் இப்படி ஒரு கோவில் இருப்பதே தெரியாது. தெரிந்த லோகல் நண்பர்கள் யாரும் இதை ஒரு முக்கியமான விஷயமாக எங்கள் செட்டிடம் சொல்லவும் இல்லை. சொல்லி இருந்தாலும் போயிருப்போமா என்பது சந்தேகம்தான். இன்றோ போக ஆசை இருக்கிறது, நேரம் இல்லை.

கடைசி பாராவில் அவர் ஓமலூர் கணவாயை பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஓமலூரில் கணவாயா? எங்களுக்கு தெரிந்ததெல்லாம் சினிமா தியேட்டர் ஒன்றுதான். இத்தனைக்கும் ஓமலூர் கல்லூரியிலிருந்து ஒரு நீண்ட நடை போகும் தூரம்தான். நாங்கள் பல முறை நைட் ஷோ பார்த்துவிட்டு லாரி கிடைக்காததால் நடந்தே வந்திருக்கிறோம்.

படிப்பவர்களில் ஒருத்தர் இரண்டு பேராவது பக்கத்தில் உள்ள கலை அம்சம் உள்ள கோவில்களுக்கோ, அருகில் உள்ள கடற்கரைக்கோ, பார்க்குக்கோ போனால் என் ஜன்மம் சாபல்யம் அடைந்துவிடும்.

P.S. நேற்று எனது இரண்டு பெண்களும் அருகில் உள்ள ஒரு ஏரியை சைக்கிளில் சுற்றி வந்தார்கள். நானும், என் மனைவியும், என் மாமியாரும் பின்னாலேயே சுற்றி வந்தோம்.

Advertisements