முதலில் தன்னிலை விளக்கம். நான் அய்யர் ஜாதியில் பிறந்தவன்.

இன்று ஜாதி கல்யாணங்களிலும், தேர்தல்களிலும், சில தொழில் உதவிகளிலும்தான் உயிரோடு இருக்கிறது என்று நினைக்கிறேன். கவனிக்கவும், கல்லூரி/வேலைக்கான இட ஒதுக்கீடுகளில் இருப்பது ஜாதியின் சூப்பர்செட். அங்கே இருப்பது முற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதிகள். ஜாதிக் கலவரங்கள் குறைந்துகொண்டே போகிறது, இன்னும் குறையும் என்று நினைக்கிறேன்.

கலைஞரின் ‘அவாள்” கவிதையைப் படித்ததும் முதலில் கொஞ்சம் கடுப்பு. முதல்வர், பழுத்த அரசியல்வாதி, பார்ப்பனர்கள் எப்போதும் நமக்கு சவால்தான் என்று எழுதியது மிகவும் வருந்தத்தக்கது. இவர் என்ன தமிழ் நாட்டில் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு மட்டும் முதலமைச்சரா? ஏதோ அடையாளம் உள்ள ஒரு குழுவையே தனக்கு சவால் என்று ஒரு முதலமைச்சர் சொல்வது அரசியல் சட்டப்படி தவறு இல்லையா?

ஆனால்:
அவருக்கு இப்போது எண்பத்தைந்து வயது இருக்கும். பிறந்து வளர்ந்த முதல் நாற்பது ஐம்பது வருஷங்களுக்காவது அவர் தாழ்ந்த ஜாதி என்பதால் பல அவமானங்களை சந்தித்திருப்பார். அவர் புதிதாக சந்திப்பவர் என்ன ஜாதி என்று கேட்டு அறிமுகப்படுத்திக்கொள்ளும் காலத்தில் வளர்ந்து பெரியவரானவர். அவரது பிரக்ஞையிலேயே ஜாதி ஊறி இருக்கிறது. அவர் அமைக்கும் கூட்டணிகள், தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள், எல்லா கணக்குகளிலும் ஒரு ஜாதி அடிப்படை இருக்கத்தான் செய்கிறது. ஏதோ ஒரு தேர்தலில் எத்தனை முதலியார், எத்தனை செட்டியார், எத்தனை தலித், எத்தனை தேவர் தன் கூட்டணி சார்பில் நிற்கிறார்கள் என்று பத்திரிகையில் விளம்பரமே செய்திருந்தார். சான்ஸ் கிடைத்தால் தான் தலித்துகளின் சம்பந்தி என்று சொல்லிக்கொள்வார். (விவாகரத்து ஆகிவிட்டது என்று சொல்லமாட்டார்.) அவர் வீட்டுக் கல்யாணங்களில் கூட யார் யார் எந்த எந்த ஜாதியில் கல்யாணம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பட்டியல் போடுவார்.

இது தவறுதான், ஆனால் இந்த தவறுக்கு அவர் முழு பொறுப்பாளி அல்ல. அவர் வளர்ந்த காலம், சூழ்நிலை, பண்பாடு இவை எல்லாம் ஒரு பெரிய காரணம். அதை அவரால் தாண்டி வரமுடியவில்லை. மனதில் ஆழமாக பதிந்திருக்கும் ஜாதி உணர்வு, தான் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்ற தாழ்வுணர்ச்சி, அவர் பட்டிருக்கும் அவமானங்கள் சில சமயம் வெளிப்படுகின்றன. அதுவும் தன் ஜாதியை தாழ்த்தி வைத்ததற்கு பார்ப்பனர்கள்தான் காரணம் என்ற அடிமனத்து கோபம் இந்த கவிதையிலும், அவ்வப்போது தன்னை “சூத்திரன்” என்று அழைத்துக்கொள்வதிலும், அதே நேரத்தில் ஜெயலலிதா “ஆமாம் நான் பாப்பாத்திதான்” என்று சட்ட மன்றத்திலேயே வெளிப்படையாக சொன்னார் என்று அதை குற்றமாக சொல்வதிலும் நன்றாகவே தெரிகிறது. அதுவும் யாராவது பார்ப்பனர் இவருக்கு எதிராக சென்றுவிட்டால் ஜாதியை வைத்து ஏதாவது குத்திக்காட்டி பேசுவார். கவனிக்கவும், பேச்சு மட்டும்தான். பூணூலை அறுக்க ஆள் அனுப்பிய காலம் எல்லாம் போச்சு. இப்போது ஆதாயம் இருந்தால் யாராக இருந்தாலும் அணைத்துக்கொள்வார். எதிரியா நண்பனா என்பதுதான் முக்கியம். அவர்களது ஜாதி அல்ல. என்ன பார்ப்பனராக இருந்தால் இந்த மாதிரி கவிதையில் ஜாதி பற்றி ஏதாவது சொல்வார். (நெடுமாறனுக்கும் ஒரு கவிதை எழுதியிருக்கிறார், அதை படித்து யாராலும் நெடுமாறன் எந்த ஜாதி என்று தெரிந்துகொள்ளமுடியாது.)

வயதானவரின் சிறு பலவீனம், விட்டுத்தள்ளுங்கள்!

அவர் எழுதிய கவிதை – மார்க்சிஸ்ட் கட்சியின் வரதராஜனை குறிப்பிடுகிறதாம்.
காரியமாகும் வரையில் நம் கரத்தைக் குலுக்குவதென்ன…
காலைப் பிடிப்பதுதான் என்ன?
அடிச்சது ‘சான்ஸ்’ என்றதும் ‘ஆத்துக்காராள்’ காட்டிய
அன்பும் நன்றியும் கூட ஆலாய்ப் பறந்து விடும்;
அசைத்துப் பார்த்தேன்
அடிமரம் ஒட்டிய கிளையன்றை!
அடடா – கொடிய பூச்சிகளும் கொட்டும் தேள் கூட்டமும்
படிப்படியாய் அளந்து போட்டது போல்
பாவி மனிதன் தலையிலிருந்து
படபடவென உதிர்ந்தென்னைத் தாக்கியதைக் கண்ட பின்பே
உணர்ந்து கொண்டேன்;
‘அவாள்’ நமக்கு எப்போதும் ‘சவால்’தான் என்ற உண்மை!
நன்றியில்லா உள்ளம் கண்டு நாய்கள்கூட சிரிக்குமய்யா!

P.S. இதெல்லாம் கவிதை என்றால் பாரதியார் எழுதியது என்ன? இதையெல்லாம் கவிதை என்பது கொஞ்சம் ஓவர்.

Advertisements