சரித்திர நாவல்களுக்கு பல சுவாரசியமான மறுமொழிகள் வந்தன. அவற்றிலிருந்து எடுத்த விவரங்கள், பரிந்துரைகள், மற்றும் இணையத்தில் கிடைத்த பரிந்துரைகள் கீழே.

ஞானியும் வீரபாண்டியன் மனைவியை பரிந்துரைக்கிறார். இப்போது இந்த புத்தகம் கிடைக்கிறதா?

மாலன் டணாய்க்கன் கோட்டை என்ற புத்தகத்தை பரிந்துரைக்கிறார்.

பிரபஞ்சன் எழுதிய மானுடம் வெல்லும் என்ற புத்தகத்தை ஜெயமோகன் தனது டாப் டென் புத்தகங்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். நான் சரித்திர நாவல் பகுதியை பார்த்துவிட்டு, இதை பார்க்காமல் கோட்டை விட்டுவிட்டேன். மானுடம் வெல்லும் பற்றி அவர் சொல்வது:

வரலாறு என்றால் ஐதீகம் என நம்பிய சமூகம் நாம். ஐதீகங்களை மறு ஆக்கம் செய்து வரலாற்று நாவல் என்றோம். தமிழில் தகவல்களினால் சமநிலைப் படுத்தப்பட்ட வரலாற்று சித்திரத்திலிருந்து உருவாக்கப்பட்ட முதல் நாவல் இது. வரலாற்றின் அபத்தமான, ஒருங்கிணைவில்லாத, சம்பவ நகர்வையும்; அதன் களத்தில் நிகழும் தீவிரமான அதிகாரப் போட்டியையும் காட்டும் நாவல் இது. ஐரோப்பிய ஒழுங்கு இந்தியனை ஆட்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் ஒரேசமயம் இந்நாவலில் தெரிகிறது. வரலாற்று மாந்தர் அதிமானுடர்களாக இல்லாமலிருப்பது அளிக்கும் தரிசனம் தமிழுக்கு மிகமிக முக்கியமானது.
1991ல் பிரசுரமாயிற்று.

நண்பர் நந்தாவும் மானுடம் வெல்லும், உடையார் ஆகியவை பற்றி மறுமொழி எழுதினார். (நந்தா மேல் எனக்கு கொஞ்சம் காண்டு உண்டு. அவர் ரமணி சந்திரனை பற்றி எழுதிய ஒரு பதிவை பார்த்துவிட்டு எப்படியாவது கஷ்டப்பட்டு வாழ்க்கையில் ஒரு ரமணி சந்திரன் புத்தகமாவது படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.:-) ) நந்தா சொன்ன மற்ற புத்தகங்கள்
1. சேது நாட்டு வேங்கை, இந்திரா சௌந்தர்ராஜன் – சேது நாட்டு வேங்கை கிழவன் சேதுபதியைப் பற்றியது. ராமேஷ்வரம் மற்றும் ராமலிங்க விலாசம் என்று அந்த அரண்மனையப் பற்றி நன்றாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
2. பொன் அந்தி, எஸ்.பாலசுப்ரமனியம்மருதநாயகத்தை வைத்து எழுதப்பட்டது.
3. காஞ்சிபுரத்தான், ரா.கி.ரங்கராஜன் – பாளையத்தார்கள் காலத்திய முழுக்க முழுக்க கற்பனைக் கதை. நடை நன்றாய் இருக்கும்.
4. பாண்டிமாதேவி, நா.பார்த்தசாரதி

விஜயராகவன் ஜெயமோகன் குறிப்பிடும் ரோமாபுரி பாண்டியன் வேஸ்ட் என்று சொல்கிறார். அவர் ராஜா ராணி பாதுஷாக்கள் இல்லாத கதைகளை – சரித்திர பின்னணி கொண்ட கதைகளை – விரும்புபவர் போல தெரிகிறது. அப்படி எனக்கு தெரிந்து எழுதுபவர் பிரபஞ்சன்தான். மானுடம் வெல்லும் பற்றி ஜெயமோகன் எழுதி இருப்பதை படித்து பாருங்கள். அதை தவிரவும் அவர் சில கதைகள் – அனேகமாக பாண்டிச்சேரி பின்னணி கொண்டவை – எழுதி இருக்கிறார். பாலகுமாரனும் இப்படி சிலவற்றை எழுதி இருக்கிறார். இப்போது நாவல் பேர் எதுவும் ஞாபகம் வரவில்லை – ஜெம்பை கோவில் கல்வெட்டு, மயிலை, சுசீந்திரம் கோவில்கள் பற்றி எழுதி இருப்பது நினைவுக்கு வருகிறது.

எஸ். ராமகிருஷ்ணன் தளத்தை படித்துக் கொண்டிருந்தேன். அவர் சிபாரிசு செய்யும் நாவல்களில் சரித்திர நாவல்கள் நான்குதான். பொன்னியின் செல்வன், வீரபாண்டியன் மனைவி, ரத்தம் ஒரே நிறம், உடையார். அவருடைய ஸ்டாண்டர்ட் என்னுடையதை விட கொஞ்சம் ஸ்ட்ரிக்டாக இருக்கிறது. 🙂

ம.தி.மு.க. தலைவர் வைக்கோ சரித்திர நாவல்களைப் பற்றி ஒரு சம்பிரதாயமான உரை ஆற்றி இருக்கிறார். அதை இங்கே காணலாம். அவர் இங்கே சிவகாமியின் சபதம் பற்றி நீண்ட அறிமுகம் செய்து வைக்கிறார்.


முந்தைய பதிவு இங்கே. அங்கே விட்டுப் போன சில கேள்விகளை இங்கே பதித்திருக்கிறேன்.

புலிகள் ஆதரவு ஈழத் தமிழர்களிடம் நிறைந்து காணப்படுகிறதே?
அவர்களுக்காக இன்று போராடும் ஒரே அமைப்பு புலிகள்தான். இருந்த வேறு அமைப்புகள் எல்லாவற்றையும் புலிகள் அழித்துவிட்டார்கள். அவர்களுக்கு வேறு சாய்ஸ் இல்லை. வேறு என்ன செய்வார்கள்? (ப்ரியா போன்றவர்கள் புலிகள் ஆதரவு ஒரு myth என்று கூறுகிறார்கள்)

அனேகமாக ஒவ்வொரு ஈழத் தமிழரும் – புலம் பெயர்ந்தவர்களும் சேர்த்துத்தான் – இழப்புகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அனுபவித்திருக்கிறார்கள். நேரடியாக இழப்பு இல்லாதவர்களின் பெரியப்பா, மாமா, மச்சினி, யாராவது எதையாவது இழந்திருக்கிறார்கள். அவர்கள் வலி எப்படிப்பட்டது என்று மூன்றாவது மனிதர்களான நானும் நீங்களும் சொல்ல முடியுமா? அடிபட்டவர்கள் தங்களுக்காக போராட மிஞ்சி இருக்கும் ஒரே அமைப்பான புலிகளை ஆதரிப்பதும் குறைந்த பட்சம் அடி வாங்காமல் பாதுகாப்பான சூழ்நிலையில் உட்கார்ந்து கொண்டு லாஜிக் பேசும் என்னை போன்றவர்களிடம் கடுப்பாக நாலு வார்த்தை பேசுவதும் அதிசயமா என்ன? அவர்கள் பேசட்டும், பேச வேண்டும். அவர்கள் நம் சகோதரர்கள். நம்மால் முடிந்தால் உதவி செய்வோம். இல்லை என்றால் ஆறுதலாக நாலு வார்த்தையாவது சொல்வோம். அவர்களோடு நமக்கு கருத்து வேற்றுமை இருக்கலாம். சகோதரர்களுக்குள் கருத்து வேற்றுமை இருக்காதா என்ன? அவர்கள் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கிறார்கள். அது கூட புரியாவிட்டால் எப்படி?
அதற்காக இந்திய இறையாண்மையை காம்ப்ரமைஸ் செய்து கொள்ள சொல்லவில்லை. நம் எல்லைகளுக்குள் நம்மால் முடிந்ததை செய்வோம். உதாரணமாக அடுத்த கேள்வியை பாருங்கள்.

இப்போது இந்தியாவில் இருக்கும் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டுமா?
கூடாது. பிரபாகரன் in absentia கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டவர். தடை நீக்கப்பட்டால் அது நீதிமன்றத்தை கிள்ளுக்கீரையாக்கிவிடும். இந்தியாவில் இப்போது இருக்கும் அமைப்புகளில் நீதி மன்றம்தான் ஓரளவு நம்பிக்கை தரும் ஒரே அமைப்பு. அதையும் கிள்ளுக்கீரையாக்குவது முட்டாள்தனம். அதனால் இந்திய அரசு பிரபாகரனிடம் பேசவே கூடாது என்பதில்லை. ஒரு அரசுக்கு தொடர்பு கொள்ள பல வழிகள் இருக்கின்றன.

இலங்கையில் இன்று நடப்பது genocide-ஆ?
ஆம். ப்ரியா போன்றவர்கள் இதில் புலிகளுக்கும் பங்குண்டு என்று சொல்கிறார்கள். ஆனால் முக்கிய குற்றவாளி இலங்கை அரசே என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

போர் நிறுத்தம் நல்ல விஷயமா?
ஆம். நடக்கும் genocide நிற்க வேண்டும் என்பதில் என்ன சந்தேகம்?

போர் நிறுத்தம் புலிகளுக்கு லாபம் தரும் விஷயமாயிற்றே?
நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம். genocide நின்றால் சரி.

இலங்கை அரசு போரை நிறுத்தாது என்று தெளிவாக தெரியும்போது தமிழ் நாட்டில் கூக்குரலிட்டு என்ன பயன்?
போர் நிறுத்தம் நடைபெறாது என்பது உண்மைதான். ஆனால் கத்தினால் தமிழர் காம்ப்கள் நிலை முன்னேறலாம். இலங்கை அரசு தன அரசியல் சட்டத்தை மாற்ற ஆரம்பிக்கலாம். அதனால் கத்தத்தான் வேண்டும். கொஞ்சம் புத்திசாலித்தனமாக கத்தினால் நல்லது. புலிகள் ஆதரவு குரல் குறைந்தால் இலங்கை அரசு நாம் சொல்வதை கொஞ்சமாவது கேட்க வாய்ப்பு இருக்கிறது.

ராஜீவ்-ஜெயவர்தன ஒப்பந்தம் போட இந்தியாவின் வல்லரசு கனவும் ஒரு காரணமா?
சந்தேகம் இல்லாமல். ராஜீவ் இலங்கையில் அமைதி வந்தால் தனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று கனவு கண்டிருப்பார். அந்த ஒப்பந்தம் நிறைவேறி இலங்கையில் அமைதி வந்திருந்தால் அவருக்கு நோபல் பரிசு கொடுப்பது சரியே. பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த விஷயம் அது.

புலிகள் தலைமையில் தனி ஈழம் அமைவது நல்ல விஷயம் இல்லை என்றால் தமிழர்களுக்கு வேறு யார்தான் தலைமை தாங்குவது?
புலிகளை விட்டால் வேறு தலைமை இல்லை. ப்ராக்டிகலாக யோசிக்க வேண்டி இருக்கிறது.

கலைஞரை நம்பவே முடியாதா?
முடியாது. அவர் உலகம் குடும்பம், கட்சி, டிவி, பதவி என்று குறுகிவிட்டது. வெளி உலகம் என்றால் சினிமாகாரர்களின் விழாக்கள், வெட்டித்தனமான பேட்டிகள் அவ்வளவுதான்.

ஜெவின் மனமாற்றம் நம்பக் கூடியதா? அவர் ஈழம வேண்டும் என்று முழங்குவாரா?
எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. ஆனால் ஒரு பிரபல கட்சி தலைவர் இப்படி வெளிப்படையாக சொல்வது இலங்கை, இந்திய அரசுகளின் மீது அழுத்தம் கொடுக்கும். அந்த வகையில் கொஞ்சம் நன்மைதான். (வானதி சொன்னதை யோசித்துப் பார்த்தபோது இப்படி தோன்றுகிறது)

ஈழ மக்களின் மீது உண்மையான அக்கறை யாருக்காவது இருக்கிறதா?
வைக்கோ, நெடுமாறன். ஆனால் அவர்களின் வெளிப்படையான, கண்மூடித்தனமான புலி ஆதரவு அவர்களது effectiveness-ஐ குறைக்கிறது.

புலிகளை அறிவுபூர்வமாக யாராவது எதிர்க்கிறார்களா?
சோ. அவர் சிரிசபாரத்னம் கொலைக்கு முன்பே அவர்களை எதிர்த்தவர் என்று நினைவு.

புலிகள் வேறு ஈழத் தமிழர்கள் வேறு என்று உண்மையாக நினைத்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் யாராவது?
எனக்கு தெரிந்து யாருமில்லை. புலிகள் = ஈழத் தமிழர்கள் என்ற கருத்தைத்தான் தமிழக தலைவர்கள், ஊடகங்கள் பரப்புகின்றன. இது தமிழ் நாட்டுக்கு வெளியே ஈழத் தமிழர்களுக்கு பெரிய disadvantage.


அனல் பறக்கும் வாதங்களும் எதிர் வாதங்களும் வந்து கொண்டிருக்கின்றன. நான் பேசுவது நல்ல விஷயம் என்று நம்புபவன். மாற்று கருத்துகள் வரவேற்கப்பட வேண்டும் என்று நினைப்பவன். ரதி, ப்ரியா, வானதி மற்ற அனைவருக்கும் கருத்துகளை எழுதியதற்காக நன்றி!

நான் எங்கே நிற்கிறேன் என்று இந்த பதிவில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இரண்டாவது பகுதி இங்கே.

புலிகள்:
புலிகள் ஈழம் வேண்டும் என்று போராடுவது தவறான செயலா?
இல்லவே இல்லை.
ஒரு அரசாங்கம் பிறப்பு, பேசும் மொழி, மத நம்பிக்கைகள் ஆகியவற்றை வைத்து உங்களை இரண்டாம் தர குடிமகனாக சட்ட பூர்வமாக நடத்த முயற்சிக்கும்போது; அரசு எந்திரம் இந்த அடிப்படையில் மக்களை ஒடுக்கும்போது; போராடுவது தவறே இல்லை. போராடுவதைத் தவிர வேறு வழியே இல்லை. அஹிம்சை ஓரளவுதான், சில சூழ்நிலைகளில் மட்டும்தான் பயன் தரும்.

பிறகு புலிகளையும பிரபாகரனையும் நான் ஏன் எதிர்க்கிறேன்?
புலிகள் இலங்கை அரசோடு, சிங்களவர்களோடு மட்டும் போராடவில்லை. சக போராளிகளையும், கருத்து வேற்றுமை உள்ள அனைவரையும் வஞ்சம் வைத்து கொல்கிறார்கள். ஈழ விடுதலை என்பது அவர்கள் சொல்லும் வழியிலே, அவர்கள் தலைமையிலே மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

புலிகள் தலைமையில் ஒரு தனி ஈழம் அமைவது நல்ல விஷயமா?
இல்லை.
புலிகள், பிரபாகரன் ஃபாசிஸ்ட்கள். அவர்கள் தலைமையில் அமையும் எந்த ஆட்சியும் நல்லது இல்லை.

ராஜீவ்:
புலிகள் ராஜீவை கொலை செய்ததை கண்டிக்கப்பட வேண்டியதா?
கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது.
எல்லா இந்தியர்களும் எதிர்க்க வேண்டிய விஷயம் இது. இதற்கெல்லாம் ஏன் எதிர்க்க வேண்டும் என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
இது புலிகளும் ஈழத் தமிழர்களும் கூட கண்டிக்க வேண்டியது என்பது என் உறுதியான கருத்து. வெறும் பழி வாங்கும் உணர்ச்சியால் நடந்த கொலை இது. மக்கள் நலத்தில் அக்கறை உள்ள எந்த தலைவனும் கடந்த கால கசப்புகளை மட்டுமே நினைவில் வைத்துக் கொண்டு செயல்படக் கூடாது. ப்ராக்டிகலாகவும் யோசிக்க வேண்டும். இந்த ஒரு கொலைதான் இந்தியர்களை புலிகளுக்கு எதிராக திருப்பியது. இன்று நிலை கொஞ்சம் மாறி இருந்தாலும் தமிழர்களும் புலிகளுக்கு எதிராக செயல்பட இது ஒன்றுதான் முக்கிய காரணம். அதற்கு முன்னால் புலிகளுக்கு எதிராக கருத்து சொன்ன தமிழர்கள் வெகு சிலரே. பிரபாகரனின் மிக பெரிய முட்டாள்தனமான செயல் இது.

ராஜீவ் – ஜெயவர்தன ஒப்பந்தம் நல்ல விஷயமா?
ஆம்.

பிறகு புலிகள் அதை ஏன் எதிர்த்தார்கள்?
பிரபாகரன் ஒரு பிடி மண்ணாக இருந்தாலும் போதும், அது என் கண்ட்ரோலில் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்ததால்.

ஒப்பந்தம் ஏன் தோல்வி அடைந்தது?
அனுபவம் இல்லாத ராஜீவை ஜெயவர்தன மாட்டி விட்டுவிட்டார். ராஜீவ் புலிகளை, பிரபாகரனை, பிரபாகரனின் பிடிவாதத்தை, அவரது “என் வழி தனி வழி” மனப்பான்மையை குறைத்து மதிப்பிட்டுவிட்டார். ஆப்பெடுத்த குரங்கு போல ஆகிவிட்டது ராஜீவின் நிலை.

IPKF அத்து மீறியதா?
என்னால் ஆதாரம் காட்ட முடியாது. ஆனால் எந்த ராணுவமும் அத்து மீறி இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. போலீஸ் திருடர்களை அடிக்கக் கூடாதுதான். ஆனால் அடிப்பதே இல்லை என்று யாராவது நம்புகிறீர்களா?

இலங்கை அரசு:

இலங்கை அரசை ஆதரிக்க வேண்டுமா?
இல்லவே இல்லை.
புலிகள் செய்த/செய்யும் தவறுகள் பரங்கிமலை அளவு என்றால் இலங்கை அரசு செய்த/செய்யும் தவறுகள் இமய மலை அளவு. Period.

தமிழ் நாடு:

தமிழர்களின் தவறு என்ன?
புலிகள் பற்றிய குற்ற/எதிர்ப்பு உணர்ச்சியில் நாம் ஈழத் தமிழர்களின் கஷ்டங்களை தமிழர்கள் அல்லாத இந்தியர்களிடம் விளக்க தவறி விட்டோம். உதாரணமாக இந்த தளம் தமிழில்தானே இருக்கிறது?
மற்ற இந்தியர்கள் தமிழர்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள், ஆ ஊ என்றால் தீக்குளிக்கிறார்கள் தீயில் எரிகிறார்கள், (யாரையா தீயில் எரிவதை தீக்குளித்தல் என்ற அழைப்பது?), ஈழம் என்றால் அறிவு பூர்வமாக, ப்ராக்டிகலாக பேசுவதில்லை என்றுதான் நினைக்கிறார்கள். வைக்கோதான் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும், மற்ற தேசிய தலைவர்களுக்கும் தெரிந்த ஈழத் தமிழர் ஆதரவுக் குரல். உணர்ச்சிவசப்படாமல் வைக்கோவுக்கு பேசவே தெரியாது. வேறு என்ன நினைப்பார்கள்? இல்லை என்றால் கலைஞர் மாதிரி பதவிக்காக ஜால்ரா அடிப்பார்கள்; இல்லை ஜெ மாதிரி குட்டையை குழப்புவார்கள். தமிழ் நாட்டின் முகங்கள் மிகவும் polarised ஆக இருக்கின்றன. வைக்கோவுக்கும் சோவுக்கும் இடைப்பட்ட ஒரு குரல் எங்கே?

தமிழர் தலைவர்களின் தவறு என்ன?
தலைமை வகிக்கும் தகுதி இல்லாதவர்கள். ஸ்டண்ட் அடிப்பதே குறி.
சிதம்பரம் போன்றவர்கள் என் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பவதில்லை?

இன்று என்ன செய்ய வேண்டும்?
முதலில் ப்ராக்டிகலாக யோசிக்க வேண்டும். பழைய கசப்புகளையே நினைத்து செயல்படக்கூடாது.

இலங்கை அரசு என்ன செய்ய வேண்டும்?
Ideally, போரை நிறுத்த வேண்டும். ஆனால் இது நடக்கப் போவதில்லை. நீங்கள் இலங்கை அரசின் நிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள். 25 வருஷ போருக்கு பின் இன்று வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது. புலிகளை அனேகமாக அழித்து விடலாம் என்ற நிலை. போரை நிறுத்தினால் அது புலிகள் இயக்கம் மீண்டும் வலிமையோடு உயிர்த்தெழ உதவும். அப்படி செய்ய இலங்கை அரசுக்கு என்ன பைத்தியமா இத்தனை நாள் தமிழர்கள் செத்துக் கொண்டு இருக்கிறார்கள், இன்னும் சில ஆயிரம் பேர் செத்தால் என்ன ஆகிவிடும் என்றுதானே யோசிப்பார்கள்? இலங்கை அரசு போரை தொடரத்தான் போகிறது.

போரை நிறுத்தப் போவதில்லை என்றால் அடுத்த நிலை என்ன?
தமிழர் காம்ப்களை செஞ்சிலுவை சங்கமோ, ஐ.நா.வோ பார்வை இட வேண்டும். அவர்களை நல்லபடி நடத்த வேண்டும்.
அரசியல் சட்ட மாற்றங்கள் இப்போதே ஆரம்பிக்க வேண்டும். இவற்றை செய்தால் இலங்கை அரசுக்கு propaganda வெற்றி கிடைக்கும்.

புலிகள் என்ன செய்ய வேண்டும்?
Ideally, தனி ஈழம் கோரிக்கையை விட்டுவிட்டு, இலங்கை அரசோடு ஒத்துழைக்க வேண்டும். இதுவும் நடக்கப் போவதில்லை. காயங்கள் மிக ஆழமானவை, புலிகளின் மனோநிலையும் அப்படிப்பட்டதில்லை.

அப்படி என்றால் புலிகளுக்கு அடுத்த நிலை என்ன?
போரில் ஈடுபடாத தமிழர்களை ஒரு பாதுகாப்பு வளையமாக பயன்படுத்தாதீர்கள். எனக்கு நிச்சயமாக அப்படி நடக்கிறதா என்றெல்லாம் தெரியாது. ஆனால் அப்படி செய்ய புலிகள் நிலையில் இருக்கும் எவருக்கும் தோன்றத்தான் தோன்றும்.
இழப்புகளை எவ்வளவு தூரம் குறைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு தூரம் குறைத்துக் கொண்டு தப்பிப்பதுதான் இப்போதைக்கு சிறந்த வழி. எதிர்காலத்தில் மீண்டும் வலிமை பெற முயற்சிக்கலாம்.

இந்தியா என்ன செய்ய வேண்டும்?
இலங்கை ராணுவத்துக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது.
இங்கே வரும் இலங்கை தமிழர்களை ஆதரிப்போம். கல்வி, மருத்துவ வசதி, சுலபமாக தொழில் செய்ய கடன் வசதி, குடியுரிமை ஆகியவை கொடுக்கப்பட வேண்டும். இலங்கை தமிழர்கள் தம் காலில் நிற்க முடிந்த உதவிகள் செய்ய வேண்டும்.
இலங்கை அரசின் மீது diplomatic pressure இருந்து கொண்டே இருக்க வேண்டும். தமிழர் காம்ப்கள் ஊடகங்கள், செஞ்சிலுவை சங்கம், ஐ.நா. ஆகியவை சுலபமாக அணுகும் நிலையில் இருக்க, அரசியல் சட்டம் இப்போதே மாற்றப்பட, எதிர்கால அரசியல் அமைப்பு இப்படி இருக்கும் என்று வரையறுக்கப்பட இப்போதே pressure இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஈழத் தமிழர் படும் கஷ்டங்களை எடுத்து சொல்லுங்கள். ஆங்கில பத்திரிகைகள், பதிவு தளங்கள் ஆகியவற்றில் ஏன் இலங்கை பிரச்சினை பேசப்படுவதில்லை? இந்தியாவில் இருந்து வரும் டாப் டென் ஆங்கில பதிவுகள் எப்போது இலங்கை பிரச்சினையை பற்றி பேசின? அவர்கள் இலங்கை அரசுக்கு ஆதரவாக பேசினாலும் பரவாயில்லை, முதலில் தங்கள் கருத்துகளை பதிக்க வேண்டும். அந்த் ஆரம்பம் இல்லாவிட்டால் ஒன்றுமே நடக்கப் போவதில்லை. As a tactical step, நீங்கள் புலிகளை ஆதரித்தாலும் இப்போதைக்கு அவர்களை பற்றி பேசாதீர்கள். நீங்களும் ஆங்கிலத்தில் பதிவிடுங்கள்!
காங்கிரஸ்காரர்களை பிடியுங்கள். கலைஞர் மண் குதிரை. சண்டைக்காரன் காலில் விழுவதே இப்போதைக்கு நல்லது. அவர்கள் வாயை திறக்க வேண்டும். அதற்கு முயற்சி செய்யுங்கள்!


ரொம்ப நாளாக சேதுராமன் சார் தயவில் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு ஒரு நாள் நானே எழுதுகிறேன்.

இந்த தேர்தலில் யாருக்கு உங்கள் ஓட்டு?

தி.மு.க. கூட்டணி – கட்சியை உன் குடும்பம் போல் நினைக்க வேண்டும் என்று யாரோ சொன்னதை கலைஞர் ஒருவர்தான் சரியாக புரிந்து கொண்டிருக்கிறார். அழகிரிக்கு எம்.பி. சீட் கொடுத்ததற்கு ஒரே காரணம்தான் – நாளைக்கு நாம் ஆட்சியில் இல்லாவிட்டால் உனக்கு பாதுகாப்பு வேண்டும் என்பது. மோசமான ஆட்சி. மாநில அளவு சமாச்சாரங்கள் இந்த தேர்தலுக்கு நேரடி சம்பந்தம் உள்ளவை இல்லை என்றாலும், மின் வெட்டு, சட்டக் கல்லூரி விவகாரம், சு. சாமி முட்டையடியை பெரிதாக ஊதிவிட்டது, இலங்கைப் பிரச்சினையில் காட்டும் hypocrisy, இவை எல்லாம் கலைஞருக்கு ஆட்சியில் கவனம் இல்லை, அதே நேரத்தில் பதவியை விடவும் மனமில்லை என்றுதான் காட்டுகின்றன. தி.மு.க.வுக்கு ஓட்டு போடுவது நமக்கு நாமே ஆப்பு வைத்துக் கொள்வது போல.

அ.தி.மு.க. கூட்டணி – ஜெ மாநில அளவில் இருந்த போதே போட்ட ஆட்டம் தாங்க முடிந்ததில்லை. இவர் மத்திய அளவில் போய்விட்டால் சசிகலா கும்பல் இந்தியா பூராவும் சொத்து வாங்கும். ஜெவின் துணிவு மிக நல்ல விஷயம் – ஆனால் துணிவுக்கும் திமிருக்கும் உள்ள எல்லையை அவர் எப்போதோ தாண்டிவிட்டார். இந்த கூட்டணிக்கு ஓட்டு போடுவது நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வது போல.

விஜயகாந்த் – விஜயகாந்த் நல்ல மாற்றாக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு குறைந்துகொண்டே போகிறது. இவர் மத்தியில் போய் என்னத்தை கிழிக்கப் போகிறார்? ஏதோ ஒரு கூட்டணிக்கு ஓட்டு போட்டுத்தான் ஆக வேண்டும் என்று நினைத்தால் இவருக்கு போடலாம்.

பா.ஜ.க. கூட்டணி – மசூதி என்று உடைக்கப்பட்டதோ அன்றிலிருந்தே நான் பா.ஜ.க. எதிர்ப்பாளன். ஓட்டுகளுக்காக இவர்கள் மூட்டிவிட்ட தீ மும்பை, கோயம்புத்தூர், கோத்ரா, குஜராத் என்று பல இடங்களில் எரிந்து கொண்டே இருக்கிறது. காங்கிரசை நல்லவர்கள் ஆக்குவது இவர்கள்தான். (இவர்களை நல்லவர்கள் ஆக்குவதும் காங்கிரஸ்தான்)

49O: எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. ஆனால் எனக்கு இதைப் பற்றி முழுதும் தெரியாது. ஒரு தொகுதியில் 49O நிறைய ஓட்டுகள் பெற்றால் அந்த தொகுதிக்கு எம்.பி. இல்லையா? இல்லை அடுத்த இடத்தில் இருப்பவர் எம்.பி.யா?

பிறகு என்னதான் செய்வது?

இருக்கிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்ற நிலைதான். யாருக்கு ஓட்டு போடலாம் என்பதை விட யாருக்கு ஓட்டு போடக் கூடாது என்று தீர்மானிப்பதுதான் சுலபம்.

1. தி.மு.க.வுக்கு கூடாது. (கூட்டணிக்கு இல்லை, தி.மு.க. கட்சிக்கு) தி.மு.க.வுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் கலைஞர் குடும்ப மாஃபியாவைதாந் வலிமைப்படுத்துகின்றன.
2. அ.தி.மு.க.வுக்கு கூடாது. (கூட்டணிக்கு இல்லை, அ.தி.மு.க. கட்சிக்கு). அ.தி.மு.க.வுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் சசிகலா குடும்ப மாஃபியாவை வலிமைப்படுத்துகின்றணன்.
3. பா.ம.க.வுக்கு கூடாது. இவர்களுக்கு போடும் ஓட்டு சந்தர்ப்ப வாத அரசியலுக்கு போடும் ஓட்டு.
4. பா.ஜ.க.வுக்கு கூடாது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நரேந்திர மோடி போன்றவர்களின் வீச்சு இன்னும் அதிகரிக்கும். நரேந்திர மோடி குஜராத்துக்கு பல நன்மைகள் செய்திருக்கிறார். ஆனால் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு அவர்தான் பெரும் பொறுப்பு. அப்படிப்பட்டவருக்கு கொடுக்கும் ஆதரவு மற்றவர்களையும் சில குழுக்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மீது வெறுப்பை பரப்ப செய்யும்.

அதனால்:
1. நல்ல வேட்பாளர், நல்ல மனிதர், ஊழல் செய்ய மாட்டார், வந்தால் நல்லது செய்ய முயற்சிப்பார் என்று தெரிபவர்களுக்கு போடுங்கள். – தென் சென்னையில் சரத் பாபு.
2. அது முடியாவிட்டால், மோசமில்லை, அதே நேரத்தில் தொகுதிக்கு நல்லது செய்யும் சக்தி உள்ளவர் என்று தெரிபவர்களுக்கு போடுங்கள் – ப. சிதம்பரம், தயாநிதி மாறன் மாதிரி. (ஆனால் அழகிரிக்கு போடாதீர்கள் – போட்டால் ரவுடியிசம் அதிகரிக்கும்.)
3. அதுவும் முடியாவிட்டால், இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுக்கக் கூடிய வைக்கோ, திருமாவளவன் போன்றவர்களுக்கு போடுங்கள். அவர்கள் கொடுக்கும் குரல் எனக்கு முழுதும் ஏற்புடையதல்ல. காம்ப்ரமைஸ்கள் பண்ணிக் கொண்டவர்கள்தான். ஆனால் அவர்கள் நூறு சொன்னால்தான் ஒன்றாவது நடக்கும்.
4. அதுவும் முடியாவிட்டால், இருக்கிற கொள்ளியில் காங்கிரஸ்தான் குறைவான மோசமான கொள்ளி. அதனால் காங்கிரஸ் போட்டி இட்டால் காங்கிரசுக்கு போடுங்கள். (பா.ஜ.க.வும் மாயாவதியும், கம்யூனிஸ்டுகளும் இலங்கைக்கு ராணுவ உதவியை நிறுத்த மாட்டார்கள், காங்கிரசுக்கு மட்டுமே கொஞ்சமாவது நிறுத்த சான்ஸ் இருக்கிறது என்பது என் நினைப்பு.)
5. அதுவும் முடியாவிட்டால், விஜயகாந்துக்கு ஓட்டு போடுங்கள். அவர் ஜெயித்தால் காங்கிரசுக்குத்தான் ஆதரவளிப்பார். தி.மு.க., அ.தி.மு.கவுக்கு ஒரு மாற்று வளர்வது நல்லது.
6. அதுவும் முடியாவிட்டால், 49O. வேறு என்ன செய்து தொலைப்பது?