சுஜாதா

சுஜாதா

சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள் என்று ஒரு லிஸ்ட் என் பழைய ஃபைல்களை கிளறியபோது கிடைத்தது. என் வழக்கமான சிறு ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.

புதுமைப்பித்தன் – மனித இயந்திரம்: கணக்குப்பிள்ளை பணம் திருடிக்கொண்டு ஓட முயலும் கதை. புதுமைப்பித்தன் உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதற்கு இந்த ஒரு கதை போதும்.

கு.ப.ராஜகோபலன் – விடியுமா?: ஒரு காலத்தில் புரிந்த மாதிரி இருந்தது. சமீபத்தில் யாரோ சிபாரிசு செய்யவே மீண்டும் படித்துப் பார்த்தேன். அத்திம்பேர் இருக்காரா போய்ட்டாரா என்று குழப்பம். அப்புறம் திருப்பி படித்தேன். போய்ட்டார் என்று புரிந்தது. நன்றாகத்தான் எழுதி இருக்கிறார். கு.ப.ரா.வின் வேறு கதைகள் சில எனக்கு இன்னும் அதிகமாக பிடிக்கும்.

தி.ஜா. – சிலிர்ப்பு: இதுதான் ரயிலில் சிறு பையன் எங்கோ கல்கத்தாவுக்கு சமையல் வேலை செய்யப் போகும் சிறுமிக்கு பழம் கொடுக்கும் கதை என்று நினைக்கிறேன். நல்ல கதை.

கு. அழகிரிசாமி – அன்பளிப்பு: மிக அற்புதமான கதை. பல சிறுவர்களுக்கு பரிசாக டைரி கொடுப்பவர் சாரங்கனுக்கு கொடுக்கவில்லை. சாரங்கன் ஒரு டைரியை அவரிடம் கொடுத்து சாரங்கனுக்கு பரிசாக கொடுத்தது என்று எழுதி வாங்கிக் கொள்கிறான். மிக பிரமாதமான கதை. அழகிரிசாமி ஒரு மாஸ்டர் என்பதில் சந்தேகமே இல்லை.

சுந்தர ராமசாமி – பிரசாதம்: புன்முறுவலாவது வராமல் இந்த கதையை படிக்க முடியாது. அர்ச்சகரிடம் லஞ்சம் வாங்க முயற்சிக்கும் போலீஸ்காரர் அவரிடம் கடைசியில் கொஞ்சம் பணம் கடனாக வாங்கிக் கொள்கிறார். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த கதை விகாசம்தான். ரத்னாபாயின் ஆங்கிலம், கோவில் காளையும் உழவு மாடும் என்ற கதைகளும் நினைவு வருகின்றன.

கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு: இந்த கதை சிரஞ்சீவி. சாவே கிடையாது. இந்த ஒரு கதையினாலேயே நம்பி தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுவார். உலக இலக்கிய வரலாற்றிலேயே கூட இடம் உண்டு.

அசோகமித்திரன் – புலிக் கலைஞன்: அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ். எல்லா சிறுகதைகளும் ஒரு தருணம், ஒரு நக்மா, ஒரு moment, ஒரு க்ஷணத்தை நோக்கி போகின்றணன். அதுதான் சாதாரணமாக கதையின் கடைசி வரி. இந்த கதையில் அந்த தருணம் கதையின் நடுவில் இருக்கிறது. மிக அபூர்வமான, அற்புதமான அமைப்பு. பிரயாணம் இன்னொரு அற்புதமான சிறுகதை.

தங்கர்பச்சான் – குடி முந்திரி: தங்கர் இரண்டு மிக நல்ல கதைகளை எழுதி இருக்கிறார். இது ஒன்று, வெள்ளை மாடு என்று ஒன்று. நகரத்தில் படிக்கும் பிள்ளைக்கு ஷூ வாங்க குடும்பத்தின் பாரம்பரிய சொத்தான முந்திரி மரத்தை விவசாயி வெட்டுகிறார்.

பிரபஞ்சன் – மீன்: பலரும் இதை சிலாகிக்கிறார்கள். எனக்கென்னவோ இது மிகவும் ramble ஆவதாக தோன்றுகிறது.

கி.ரா. – கதவு: நல்ல கதைதான், ஆனால் இதை விட பிடித்த கதைகள் இருக்கின்றன.

திலீப் குமார் – கடிதம்: கடிதம்தான் திலீப் குமாரின் சிறந்த கதை என்று பலராலும் கருதப்படுகிறது. இதை விட்டால் மூங்கில் குருத்துகள், பூனை செத்துப்போன கதை ஆகியவை திருப்பி திருப்பி anthology-களில் இடம் பெறுகின்றன. ஆனால் எனக்கு பிடித்தது கடவு என்ற கதைதான். சின்ன வயதில் பாட்டியை கடத்திக்கொண்டு போய் மும்பை சிவப்பு விளக்கு பகுதிகளில் விற்று விடுகிறார்கள். பல வருஷம் அங்கே வாழ்ந்துவிட்டு பிறகு தன் உறவினரிடம் திரும்பும் பாட்டியின் கதை.

வண்ணநிலவன் – எஸ்தர்: அன்பு நிறைந்த குடும்பம் பஞ்சம் பிழைக்க மதுரைக்கும் மற்ற ஊர்களுக்கும் சிதறப் போகிறது. வீட்டில் இருக்கும் கிழவியை என்ன பண்ண? சிறந்த கதை.

படிக்காதவை:
ஆ. மாதவன் – நாயனம்
பாமா – அண்ணாச்சி
இந்திரா பார்த்தசாரதி – அசலும் நகலும்
இரா. முருகன் – உத்தராயணம்
ஜெயமோகன் – பல்லக்கு
கிருஷ்ணமூர்த்தி – மனிதர்கள்
லா.ச.ரா. – கொட்டு மேளம்
நாஞ்சில் நாடன் – வாக்குப் பொறுக்கிகள்
ரா.கி. ரங்கராஜன் – செய்தி
ராஜம் கிருஷ்ணன் – மாவிலைத் தோரணம்
ராமசந்தர வைத்தியநாதன் – நாடகக்காரர்கள்
சிவசங்கரி – செப்டிக்
சோ. தருமன் – நசுக்கம்
சுந்தர பாண்டியன் – கனவு
சுஜாதா – மகாபலி
சு. சமுத்திரம் – நான்காவது குற்றச்சாட்டு
வண்ணதாசன் – நிலை:

நீங்கள் இந்த கதைகளில் எதையாவது படித்திருந்தால், இல்லை உங்களுக்கு பிடித்த வேறு சிறுகதைகள் இருந்தால் சொல்லுங்கள்! இதில் உள்ள கதைகளுக்கு லிங்க் கொடுத்தால், பதினைந்தும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்கள். அதுவும் நான் படிக்காத கதைகளுக்கு லிங்க் கொடுத்தால் பதினாறு!

தொடர்புடைய பதிவுகள்:
எனக்கு பிடித்த சிறுகதைகள் பகுதி 1(தமிழ்), பகுதி 2(தமிழ்), பகுதி 3(பிற இந்திய மொழிகள்)
சிறுகதை வாரம்
ஜெயமோகனுக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள்
எஸ். ராமகிருஷ்ணனுக்கு பிடித்த 100 தமிழ் சிறுகதைகள், என் குறிப்புகள் பகுதி 1, பகுதி 2

கீழ்வெண்மணியில் கூலியை உயர்த்த வேண்டும் என்று கேட்டதற்காக எரிக்கப்பட்டவர்களை நாம் எல்லாரும் அனேகமாக மறந்தேவிட்டோம். தமிழ் நாட்டின் மோசமான களங்கம் என்பது எரித்த கோபாலகிருஷ்ண நாயுடு கோர்ட்டில் நிரபராதி என்று வெளியே வந்ததுதான். இன்றைக்கு கீழ்வெண்மணி பற்றி சில சமயம் தலித் சார்பு கட்டுரைகள் குறிப்பிடுகின்றன, அவ்வளவுதான். இன்றைய இளைஞர்களுக்கு இது பற்றி தெரிந்தால்தான் ஆச்சரியம் என்று நினைக்கிறேன்.

இத்தனை மோசமான நிகழ்ச்சி கதைகளிலும் இலக்கியத்திலும் பெரிய இடம் வகிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதை போன்ற ஒரு அநியாயம் இலக்கியாவதிகளை எழுதத் தூண்டாதது ஆச்சரியம்!

எனக்கு தெரிந்து இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப் புனல் – சாகித்ய அகாடமி பரிசு பெற்றது – மூலமாகத்தான் என் ஜெனரேஷன் ஆட்களில் பலர் இதை பற்றி தெரிந்தே கொண்டோம். இத்தனைக்கும் குருதிப் புனல் அவ்வளவு நல்ல நாவல் இல்லை. அதை தேவை இல்லாமல் நாயுடு காரக்டர் ஓரினச்சேர்க்கை விருப்பம் உள்ளவன் என்று இ.பா. எங்கெங்கோ கொண்டு சென்றார். இ.பா. என்ன நினைத்தாரோ தெரியாது, ஆனால் நான் இந்த புத்தகத்தை பற்றி யாரிடம் பேசினாலும் அந்த ஓரினச்சேர்க்கை ஆவல் பற்றி பற்றி பேச்சு வராமல் இருந்ததில்லை.

எனக்கு தெரிந்த முக்கியமான புத்தகம் சோலை சுந்தரப் பெருமாள் எழுதிய செந்நெல் என்ற நாவல். இலக்கியத் தரம் என்று பார்த்தால் அவ்வளவு நல்ல நாவல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் மிக முக்கியமான ஆவணம். சான் ஹோசே நூலகத்தில் கிடைக்கிறது.

சமீபத்தில் பாட்டாளி என்பவர் எழுதிய கீழைத்தீ என்ற ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது. லக்கி லுக் இதற்கு ஒரு அறிமுகம் எழுதி இருக்கிறார். விடுதலை ஆன நாயுடுவை நக்சலைட்கள் கொன்றதை பின்புலமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறதாம். படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கீழ்வெண்மணியை பற்றி எழுதும்போது நினைவு வரும் பெரும் உறுத்தல் பெரியார் அதை கூலி உயர்வு கேட்ட கம்யூனிஸ்டுகளின் தவறு என்று பேசியது. பெரியார் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் அவரது தாக்கம் தமிழ் நாட்டில் உருவாக்கி இருக்கும் நல்ல விளைவுகளை மறுக்க முடியாது. ஆனாலும் சேரன்மாதேவி குருகுலத்தில் இரண்டு பிராமணப் பையன்களுக்கு தனிப் பந்தி இருந்ததை எதிர்த்து காங்கிரசை விட்டு வெளியேறியவர் 42 தலித்கள் எரிக்கப்பட்டதை பற்றி பொங்கி எழுந்திருக்க வேண்டாமா? அவரது focus பிராமணர்களின் செல்வாக்கை குறைத்து பல “இடைப்பட்ட” ஜாதியினரின் செல்வாக்கை அதிகரிப்பதிலேதான் இருந்திருக்கிறது. எனக்கு அப்படித் தோன்ற பெரிய காரணம் அவர் கீழ்வெண்மணி சம்பவம் பற்றி எடுத்த நிலைதான்.

மகிழ்ச்சி தரும் பெரிய விஷயம் கிருஷ்ணம்மாள்-ஜெகன்னாதன் ஏற்படுத்திய லாஃப்டி அமைப்பு. ஏழைகளுக்கு, குறிப்பாக தலித்களுக்கு நிலம் கிடைக்க படாத பாடு பட்டிருக்கிறார்கள்/படுகிறார்கள். பாராட்ட வார்த்தை இல்லை.

தொடர்புடைய பதிவுகள்:
பெரியார் – ஒரு மதிப்பீடு

நான் பார்த்த நாடகம் எல்லாம் சென்னை சபா சர்க்யூட்டில் பார்த்தவைதான். ஒய்.ஜி.பி., சோ, மௌலி, கிரேசி மோகன், எஸ்.வி. சேகர், காத்தாடி ராமமூர்த்தி நாடகங்களை பார்த்திருக்கிறேன். கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம், டெனன்ட் கமாண்ட்மெண்ட்ஸ், மகாபாரதத்தில் மங்காத்தா, டௌரி கல்யாணம், பட்டின பிரவேசம், அப்புறம் காத்தாடி ஊட்டிக்கு போகும் ஒரு நாடகம், ஐயோ அம்மா அம்மம்மா இவைதான் நான் இந்த சர்க்யூட்டில் பார்த்த நாடகங்களின் உச்சம்.

எஸ்.வி.சேகரும், கிரேசி மோகனும் ஒரே ஜெனரேஷனுக்கே நாடகம் என்றால் என்ன என்பதை மறக்கடித்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்சனையும் ஷாவையும், ப்ரேக்டையும், ஆர்தர் மில்லரையும், டென்னசீ வில்லியம்சையும் படிக்க ஆரம்பித்ததும்தான் நாடகம் என்றால் என்ன என்று ஓரளவாவது எனக்கு பிடிபட ஆரம்பித்தது. அப்போது தமிழில் சோவின் நாடகங்களை படித்தேன். ஆனால் நாடகம் என்பது படித்து புரிந்து கொள்ள வேண்டியது இல்லை, பார்க்க வேண்டியது. அப்புறம் நாவலுக்கும் நாடகத்துக்கும் என்ன வித்தியாசம்?

நாடக உத்திகள் எனக்கு புரிய ரொம்ப நாளானது. உதாரணமாக ப்ரெக்டின் The good woman of Sezuan படித்தபோதுதான் எனக்கு முகமூடிகளை ஒரு நாடகத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று புரிந்தது. கிரேக்க நாடகங்களை படித்தபோது என்னடா போரடிக்கிறார்கள் என்று தோன்றியது. அதில் வரும் கோரஸ் மகா முட்டாள்தனமாக தெரிந்தது.

அப்போதுதான் ஹைதராபாதில் காஷிராம் கொத்வால் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடகம் என்றால் அதுதான் நாடகம். எனக்கு இந்த நாடகம் பற்றி முன்பின் தெரியாது. ஏதோ நண்பன் கூப்பிட்டான் என்று கூடப் போனேன். முதல் காட்சியில் கோரஸ் வந்த அடுத்த நிமிஷம் எனக்கு கோரஸ் பற்றி ஞானோதயம் ஏற்பட்டது. Extremely powerful drama. விஜய் டெண்டுல்கர் ஒரு ஜீனியஸ். நானா ஃபட்நவிஸாக நடித்த மோகன் அகாஷே இன்னொரு ஜீனியஸ். நாடகம் என்றால் என்ன என்பது இதை பார்த்த பிறகுதான் எனக்கு புரிந்தது. நான் இன்னொரு நாடகத்தை இன்னும் பார்க்கவில்லை.

கதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். நானா ஃபட்நவிஸ் மராத்திய பேஷ்வா. புனேயில் அதிகாரம் செலுத்தியவர். பெண் பித்தர். அங்கே ஏழை காஷிராம் பிராமணர்களால் அவமானப்படுத்தப்படுகிறான். அவன் தன் பெண்ணை நானாவுக்கு கூட்டிக் கொடுத்து அதிகாரம் உள்ள கொத்வால் பதவியை பெறுகிறான். எல்லா பிராமணர்களுக்கும் டார்ச்சர் கொடுக்கிறான். அவன் பெண் பிரசவத்தில் இறந்துவிட, அவன் அதிகாரம் பறிக்கப்படுகிறது. அவன் அழிகிறான்.

பெங்களூரில் தலே தண்டா என்ற சுமாரான கிரிஷ் கார்னாட் நாடகம் பார்த்திருக்கிறேன். கல்கத்தாவிலும், பம்பாயிலும், பெங்களூரிலும் நாடகம் ஓரளவு நடப்பதாக அப்போதெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். விஜய் டெண்டுல்கர், ஏவம் இந்த்ரஜித் எழுதியவர், கிரிஷ் கார்னாட் மாதிரி தமிழில் யாருமே எழுதுவதில்லையா?

ஏவம் இந்த்ரஜித், சாந்ததா! கோர்ட் சாலு ஆஹே!, துக்ளக், ஹயவதனா, நாகமண்டலா போன்ற நாடகங்களை நான் பார்த்ததில்லை. ஆனால் இவை அனைத்தும் நல்ல நாடகங்களாக அமையும் என்று தோன்றுகிறது. இது போன்ற நிஜமான நாடகங்கள் தமிழில் வருவதில்லையா? இல்லை வெளியில் தெரிவதில்லையா? இன்று நான் எங்கேயோ வாழ்கிறேன் என்பது உண்மைதான், ஆனால் நாடகம் என்றால் என்ன என்று கூட தெரியாமல் நான் வளர்ந்த சூழ்நிலைதான் இன்னும் தமிழ் நாட்டில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

கூத்துப் பட்டறை, ஞானி, நா. முத்துசாமி என்றெல்லாம் இருபது வருஷங்களுக்கு முன் நான் கேள்விப்பட்டது கூட இல்லை. அது சரி, கணையாழி பற்றி கூட தெரியாதுதான். :-) இப்போது வளர்பவர்களாவது பார்த்தால் சரிதான். ஆனால் இந்த ஜெனரேஷனுக்கும் எஸ்.வி. சேகர்தான் தெரியும் போலிருக்கிறது.

எனக்கு தெரிந்து சோதான் தமிழில் ஓரளவாவது உருப்படியாக நாடகம் எழுதி இருக்கிறார். அவை எல்லாமே வசனங்களை வைத்து மட்டும் எழுதப்பட்டவைதான். ஆனால் உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, சாத்திரம் சொன்னதில்லை, முகமது பின் துக்ளக் ஆகியவை நல்ல முயற்சிகள்.

திராவிட பாரம்பரியத்தில் அண்ணாவின் வேலைக்காரி, ஓரிரவு பெரிதாக பேசப்படுகின்றன. கல்கி ஓரிரவை பார்த்துவிட்டு இதோ ஒரு பெர்னார்ட் ஷா என்றெல்லாம் அண்ணாவை புகழ்ந்திருக்கிறார். கனல் பறக்கும் வசனம் இருந்தால் போதும், கதை முக்கியமில்லை என்று நினைத்த காலம் போல. அப்படி என்றால் வெ. சாமிநாத சர்மாவின் பாணபுரத்து வீரனை கூட நல்ல நாடகம் என்று சொல்லலாம்.

இந்திரா பார்த்தசாரதி பற்றி சொல்கிறார்கள். நந்தன் கதை நாடகம் conspiracy theory கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிப்பது போல இருக்கிறது. (இதன் வீடியோவை ஒரு முறை பார்த்திருக்கிறேன், நல்ல நடிப்பு, ஆனால் கதை சரியில்லை!) ராமானுஜர் நாடகம் வைஷ்ணவ குரு பரம்பரை கதையை அப்படியே போட்டுவிட்டார். இவை எல்லாம் நல்ல நாடகமாக எனக்கு படவில்லை.

மெரினாவின் நாடகங்கள் ஒரு காலத்தில் மிகவும் பாப்புலர். ஊர் வம்பு, கால்கட்டு ஆகியவற்றை விகடனில் படித்திருக்கிறேன். தனிக் குடித்தனம் புகழ் பெற்ற நாடகம். ஆனால் இவை எதுவும் உலகத் தரம் வாய்ந்த நாடகம் என்று எனக்கு தோன்றவில்லை.

சுஜாதா சில முயற்சிகள் செய்திருக்கிறார். சரியாக வரவில்லை. நான் பார்த்த ஊஞ்சல் நாடகத்தின் வீடியோ was quite bad. டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு சிறு வயதில் படித்திருக்கிறேன், அப்போது பிடித்திருந்தது, இப்போது என்ன நினைப்பேனோ தெரியாது. அவர் எழுதிய சரளா என்ற நாடகம் அந்த காலத்தில் எனக்கு டென்னசீ வில்லியம்சை நினைவுபடுத்தியது. மீண்டும் படித்து பார்க்க வேண்டும்.

அதே போல் ஜெயந்தன் எழுதிய ஏதோ ஒரு நாடகம் எனக்கு அந்த காலத்தில் பிடித்திருந்தது. கணக்கனோ என்னவோ பேர். மீண்டும் படித்து பார்க்க வேண்டும்.

தமிழில் சோதனை நாடகங்கள் என்று என்னிடம் ஒரு புத்தகம் இருக்கிறது. அதில் நாற்காலிக்காரர் கதை நாடகமாக பார்த்தால் நன்றாக இருக்கலாம்.

நீங்கள் நாடகம் பார்த்த அனுபவங்களை எழுதுங்களேன்! அது எஸ்.வி. சேகரின் ஜோக் தோரணமாக இருந்தாலும் சரி.

தொடர்புடைய பதிவுகள்
சோ – ஒரு மதிப்பீடு
முகமது பின் துக்ளக் விமர்சனம்

ராமகிருஷ்ணன் இப்படி ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். நல்ல முயற்சி.

இந்த லிஸ்டில் காலத்தால் முந்தையவற்றை ஓரளவு படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஓரளவு சமீப காலத்தில் – கடந்த 20 வருஷங்களுக்குள் – எழுதப்பட்டவை அவ்வளவாக என் கண்ணில் பட்டிருக்காது. எங்கோ உட்கார்ந்திருக்கும் துரதிருஷ்டம்தான்.

எனக்கு சிறுகதைகளிடம் ஒரு பிரச்சினை. கதை ஞாபகம் இருக்குமே தவிர தலைப்பு மறந்துவிடும். ஞாபகம் இருப்பவற்றை பற்றி மட்டும் கீழே.

புதுமைப்பித்தன்: தமிழில் எனக்கு பிடித்த சிறுகதை எழுத்தாளர் என்றால் இவர்தான். ராமகிருஷ்ணன் காஞ்சனை, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், செல்லம்மாள் ஆகிய மூன்றை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
க.க. பிள்ளையும் ஏன் பிடிக்கும் என்று என்னால் சொல்ல முடிவதில்லை. கடவுள் க. பிள்ளை வீட்டுக்கு ஒரு விசிட் அடிக்கிறார்.
செல்லம்மாள் கதையில் கீழ் மத்தியதர குடும்பம் – கணவன் கண்ணெதிரில் மனைவி கொஞ்ச கொஞ்சமாக இறந்து போவாள்.
காஞ்சனை சுமார்தான். ஏதோ பேய்க்கதை.
ஒரு நாள் கழிந்தது, சுப்பையா பிள்ளையின் காதல்கள், மனித இயந்திரம், பொன்னகரம், சாப விமோசனம், கல்யாணி, துன்பக் கேணி, பிரம்ம ராக்ஷஸ், ஞானக் குகை, புதிய கூண்டு எல்லாவற்றையும் விட்டுவிட்டாரே?

மௌனி: அழியாச்சுடர், பிரபஞ்ச கானம் என்ற இரு கதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறார். மௌனி எனக்கு புரிவதில்லை.

கு.ப.ரா: கனகாம்பரம், விடியுமா இரண்டையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
கனகாம்பரம் மிக அற்புதமான கதை. கணவன் புது மனைவியிடம் தன நண்பர்கள் வந்தால் சகஜமாக கலந்து பேச சொல்வான். நிஜமாகவா?
விடியுமா நினைவுக்கு வரவில்லை.
ஆனால் திரை, வீரம்மாளின் காளை இரண்டும் நினைவுக்கு வருகிறது. மிக நல்ல கதைகள். அதை எல்லாம் விட்டுவிட்டாரே?

பி.எஸ். ராமையாவுக்கு ஒரு கதை – நட்சத்திர குழந்தைகள். பிச்சமூர்த்திக்கு ஒன்று – ஞானப் பால். தி.ஜானகிராமனுக்கு இரண்டு – பாயசம், பஞ்சத்து ஆண்டி. எதுவும் நினைவில்லை. பாயசம் கதையில்தான் பாயசத்தில் பல்லி என்று ஹீரோ அண்டாவை கவிழ்த்துவிடுவாரா?

கு. அழகிரிசாமிக்கு மூன்று – ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, இருவர் கண்ட ஒரே கனவு. ராஜா மட்டும்தான் என்ன கதை என்று நினைவுக்கு வருகிறது. நல்ல கதை.

கி. ராஜநாராயணனுக்கு மூன்று – கோமதி, கன்னிமை, கதவு.
கோமதிதான் gay சமையல்காரனை பற்றியதோ? மற்றவை நினைவுக்கு வரவில்லை.
நினைவு வருபவை – கொத்தைப் பருத்தி, மாய மான், ஜெயில்.

சுந்தர ராமசாமிக்கு இரண்டு – பிரசாதம், ரத்னாபாயின் ஆங்கிலம். அவரது பல கதைகள் பிடிக்கும், ஆனால் இவை இரண்டும் நினைவில்லை. விகாசம் என்ற கதை எனக்கு மிக பிடித்தமானது.

லா.ச.ரா.வுக்கு இரண்டு – பச்சை கனவு, பாற்கடல். பாற்கடல் என்று ஒரு புத்தகம் உண்டு, அவரது குடும்ப வரலாறு போல இருக்கும், ஆனால் அதில் சிறுகதை என்ன? தெரியவில்லை. பச்சை கனவு படித்ததில்லை. அவர் எழுதியவற்றில் எனக்கு பூரணி பிடிக்கும் (பஞ்ச பூதக் கதைகளில் பூமியை உருவகித்து எழுதப்பட்டது)

நகுலனின் ஒரு ராத்தல் இறைச்சி படித்ததில்லை.

அசோகமித்ரனுக்கு மூன்று – புலிக் கலைஞன், காலமும் ஐந்து குழந்தைகளும், பிரயாணம்.
புலிக் கலைஞன் மிக அற்புதமான கதை. புலி வேஷக் காரன் சினிமா சான்சுக்காக ஒரு பிரமாதமான டெமோ கொடுக்கிறான்.
பிரயாணம் – ப்ரில்லியன்ட்! அம்ப்ரோஸ் பியர்சின் ஒரு கதையை இது ஞாபகப்படுத்துகிறது. ஆனால் பியர்சை விட பல மடங்கு சிறப்பாக எழுதப்பட்டது.
காலமும் ஐந்து குழந்தைகளும் படித்ததில்லை.

ஜெயகாந்தனுக்கு மூன்று – குரு பீடம், அக்னி பிரவேசம், முன் நிலவும் பின் பனியும்.
அக்னி பிரவேசம் மட்டும்தான் படித்திருக்கிறேன். சில நேரங்களில் சில மனிதர்கள் இங்குதான் ஆரம்பம் ஆகிறது.

பா. ஜெயப்ரகாசம் (தாலியில் பூச்சூடியவர்கள்), பிரமிள் (காடன் கண்டது), ஆதவன் (உயரமா சிவப்பா மீசை வெச்சுக்காமல், ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்) படித்ததில்லை.

எம்.வி. வெங்கட்ராமின் பைத்தியக்காரப் பிள்ளை – மிக பிரமாதமான கதை. இதை விவரிக்க விரும்பவில்லை. பெட்கி கதையையும் சேர்த்திருக்கலாம்.

அ. முத்துலிங்கம் – மகாராஜாவின் ரயில் வண்டி. நிச்சயமாக படித்திருக்கிறேன், கதை ஞாபகம் வரவில்லை.

ந. முத்துசாமியின் நீர்மை – படித்ததில்லை.

அம்பைக்கு இரண்டு – காட்டில் ஒரு மான், அம்மா ஒரு கொலை செய்தாள்
கா.ஒ.மான் வயதுக்கு வராமலே வயதாகிவிடும் ஒரு பெண்ணை பற்றியது. நல்ல கதைதான், ஆனால் அம்பை இதை விட சிறப்பான கதைகளை எழுதி இருக்கிறார்.
அ.ஒ.கொ. செய்தாள் எல்லாரும் தேவைக்கு மேல் கொண்டாடும் ஒரு கதை. சின்னப் பெண் வயதுக்கு வந்த போது அலுத்துக் கொள்ளும் அம்மா பெண்ணின் நுண்ணிய உணர்வுகளை கொலை செய்தாள் என்று கதை. அம்பை இதை விட சிறப்பான கதைகளை எழுதி இருக்கிறார்.
எனக்கு பிடித்த அம்பையின் கதைகள் – வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, மல்லுக்கட்டு.

வண்ணநிலவன் (எஸ்தர், மிருகம், பலாப்பழம்), சம்பத்(சாமியார் ஜூவுக்கு போகிறார்), ராஜேந்திர சோழன்(புற்றில் உறையும் பாம்புகள்), வண்ணதாசன் (தனுமை, நிலை), ஆ.மாதவன் (நாயனம்) – இவற்றை நான் படித்ததில்லை.

சுஜாதாவுக்கு இரண்டு (நகரம், ஃபில்மோத்சவ்) – படித்திருந்தால் நினைவில்லை.
சுஜாதா கதைகளில் எனக்கு பிடித்த சில – பேப்பரில் பேர், சீனு, நிஜத்தை தேடி.

சா. கந்தசாமி, தக்கையின் மீது நான்கு கண்கள் – இதை விவரிப்பது கஷ்டம். அருமையான கதை.

ஜி. நாகராஜன் (டெரிலின் ஷர்ட்டும் எட்டு முழ வேஷ்டியும் அணிந்த மனிதர், ஓடிய கால்கள்) – நாகராஜனின் எல்லா கதைகளையும் படித்திருக்கிறேன், ஆனால் இது என்ன என்று நினைவுக்கு வரவில்லை.

கிருஷ்ணன் நம்பி (தங்க ஒரு, மருமகள் வாக்கு) – மருமகள் வாக்கு சூப்பர்! நானும் அதற்கு கிளி சின்னத்தில் வாக்களிக்கிறேன். தங்க ஒரு நான் படித்ததில்லை.

பூமணி(ரீதி), நாஞ்சில் நாடன்(இந்நாட்டு மன்னர்), பிரபஞ்சன்(அப்பாவின் வேஷ்டி, மரி என்னும் ஆட்டுக்குட்டி), சோ. தர்மன்(சோக வனம்), மாலன்(இறகுகளும் பாறைகளும்) ஆகியவற்றை நான் படித்ததில்லை.

இந்திரா பார்த்தசாரதி, ஒரு கப் காப்பி. பரவாயில்லை, ஆனால் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.

திலிப் குமார் – மூங்கில் குருத்து, கடிதம். எனக்கு கடிதம் பிடித்த கதை. மூ. குருத்து சுமார்தான். ஆனால் அவர் எழுதிய கடவுதான் எனக்கு மிகவும் பிடித்த கதை.

எஸ்.ராவின் தேர்வு #63-#100 வரை நான் படித்திருப்பது ஜெயமோகனின் பத்ம வ்யூஹம் கதை மட்டும்தான். எனக்கு மகாபாரதத்தின் மீது ஒரு பெரிய பித்து உண்டு, அதனால்தான் பத்ம வ்யூஹம் நினைவிருக்கிறது. ஜெயமோகனின் கதைகளில் எனக்கு நினைவில் வருபவை பித்தம், காலம், அவதாரம், ஊமை செந்நாய்.

நான் படிக்காத அந்த #63-#100 வரை உள்ள தேர்வுகள்:
63. மறைந்து திரியும் கிழவன் – சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் – கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை – உமா வரதராஜன்
67. நுகம் – எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் – சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை – சார்வாகன்
72. ஆண்மை – எஸ்பொ.
73. நீக்கல்கள் – சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் – சூடாமணி
76. சித்தி – மா. அரங்கநாதன்.
77. புயல் – கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை – கோணங்கி
79. கறுப்பு ரயில் – கோணங்கி
80. வெயிலோடு போயி – தமிழ்செல்வன்

82. பாடலிபுத்திரம் – ஜெயமோகன்
83. ராஜன் மகள் – பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் – எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் – பாவண்ணன்.
89. காசி – பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் – விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் – பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி – உமா மகேஸ்வரி
93. வேட்டை – யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு – பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை – பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் – திசேரா
97. ஹார்மோனியம் – செழியன்
98. தம்பி – கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு – சந்திரா

மேலே உள்ளவற்றைத் தவிர நான் பரிந்துரைக்கும் சில கதைகள் – பாலகுமாரன்(சின்ன சின்ன வட்டங்கள், நெட்டி பொம்மைகள், எந்த கரை பச்சை?), தங்கர் பச்சான்(குடி முந்திரி, வெள்ளை மாடு), தமயந்தி(அனல் மின் நிலையங்கள்)மனங்கள், யுவன் சந்திரசேகர்(23 காதல் கதைகள், தாயம்மா பாட்டியின் 43 கதைகள்)

தொடர்புடைய பதிவுகள்:
சினிமாவுக்கு ஏற்ற தமிழ் சிறுகதைகள்

இந்திரா பார்த்தசாரதி

இந்திரா பார்த்தசாரதி

எனக்கு பொதுவாக இந்திரா பார்த்தசாரதி அவ்வளவாக பிடிப்பதில்லை. எல்லாரும் பேசிக் கொண்டே இருப்பார்கள். அதுவும் ஆங்கிலத்தில் அதிகமாக பேசுவார்கள். ஜெயகாந்தனைப் பற்றியும் எனக்கு இப்படி ஒரு நினைப்பு உண்டு. ஆனால் ஜேகேயின் படைப்புகளில் ஒரு அழுத்தமான நீதி, கொள்கை ஏதாவது இருக்கும். இ.பா.வின் படைப்புகளிலோ அங்கதம்தான் அடித்தளம். அவரது அங்கதம் எனக்கு சிரிப்பை வரவழைப்பதில்லை, அதுதான் பிரச்சினை. அதனால்தான் அவரது எந்த படைப்புமே எனக்கு நினைவில் வைத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை. அவரது புகழ் பெற்ற குருதிப் புனல் (கீழ் வெண்மணி சம்பவத்தை பின்புலமாக வைத்து எழுதப் பட்டது) புத்தகத்தை விட அவ்வளவாக வெளியே தெரியாத செந்நெல் – சோலை சுந்தரப் பெருமாள் எழுதியது – நன்றாக இருக்கும்.

இன்று தற்செயலாக திண்ணை தளத்தில் இ.பா.வின் ஏசுவின் தோழர்கள் புத்தகத்துக்கு ஒரு விமர்சனம் பார்த்தேன். நியாயமான விமர்சனம்தான். போலந்தில் செட்டில் ஆகிவிடும் ஒரு தமிழனின் மகள் தன் வேர்களை தேடி கும்பகோணம் வரும் கதை. மேல் விவரங்களை அங்கேயே பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏசுவின் தோழர்கள் நான் ஃப்ரீமான்ட் நூலகத்துக்கு நன்கொடையாக கொடுத்த புத்தகங்களில் ஒன்று. சான் ஃப்ரான்சிஸ்கோ அருகே இருந்தால் நீங்கள் சுலபமாக படிக்கலாம். நூலகத்துக்கு நன்கொடை கொடுத்தது பெரிய கதை. அதை இன்னொரு நாள் விபரமாக எழுதுகிறேன்.

பின் குறிப்பு: சோலை சுந்தரப் பெருமாளின் செந்நெல் சான் ஹோசே நூலகத்தில் கிடைக்கும்.

சுரேஷ் கண்ணன் தமிழின் சிறந்த படைப்பாளிகளின் சிறுகதைகளை குறும்படங்களாக இயக்கினால், என்ன சிறுகதைகளை இயக்கலாம் என்று ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். அந்த லிஸ்ட் கீழே.
ஒரு நாள் கழிந்தது – புதுமைப்பித்தன்
உயரமாக சிவப்பாக மீசை வெச்சுக்காமல் – ஆதவன்
பிலிமோத்ஸவ் – சுஜாதா
உள்ளும் புறமும் – வண்ண நிலவன்
அந்தரங்கம் புனிதமானது – ஜெயகாந்தன்
கிறுக்கல் – லா.ச.ராமாமிருதம்
புலிக்கலைஞன் – அசோகமித்திரன்
தீட்டு – அழகிய பெரியவன்
ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி
நீர் விளையாட்டு – பெருமாள் முருகன்

இந்த சிறுகதைகளில் நான் மூன்றுதான் படித்திருக்கிறேன். புதுமைப்பித்தனின் ஒரு நாள் கழிந்தது, அசோகமித்ரனின் புலிக் கலைஞன், இந்திரா பார்த்தசாரதியின் ஒரு கப் காப்பி. முதல் இரண்டும் எனக்கு பிடித்த சிறுகதைகள். ஒரு கப் காப்பி சுமார்தான்.

ஒரு நாள் கழிந்தது கைக்கும் வாய்க்கும் பற்றாக்குறையாக இருக்கும் ஒரு குடும்பத்தின் ஒரு நாள் பாட்டை பற்றியது. அதிலும் ஒரு சிறு குழந்தை மிக நல்ல காரக்டர். குடும்பத் தலைவன் ஏழை, அதே நேரத்தில் அது தெரியாத மாதிரி கொஞ்சம் பந்தா பண்ணிக் கொள்ள வேண்டும். அந்த ரோலுக்கு தலைவாசல் விஜய் பொருத்தமாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

புலிக் கலைஞன் மிக அற்புதமான ஒரு கதை. புலி வேஷம் போடும் ஒருவன் சினிமாவில் சான்ஸ் கேட்டு ஒரு பிரமாதமான டெமோ கொடுக்கிறான். அந்த டெமோவின்போது ஒரு intensity வெளிப்பட வேண்டும். பிரகாஷ் ராஜ் பொருத்தமாக இருப்பார். இல்லை என்றால் நாசர்.

ஒரு கப் காப்பி சிறு வயது நண்பர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் ஒரு வேளை. ஒருவன் ஏழை பிராமணன், ஒன்றும் தெரியாமல் பிராமணன் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு புரோகிதம் செய்கிறேன் என்று காலத்தை ஓட்டுபவன். இன்னொருவன் ஊரை விட்டுபோய் ஓரளவு செழிப்பாக, சடங்குகள் செய்ய வேண்டும் என்று வருபவன். டெல்லி கணேஷும், டெல்லி குமாரும் பொருத்தமாக இருப்பார்கள்.

எனக்கு தோன்றும் சிறுகதைகள்:
தங்கர் பச்சானின் குடிமுந்திரி – முந்திரி மரத்தை வெட்டி பையனுக்கு ஷூ வாங்குகிறார் விவசாயி அப்பா.
சுஜாதாவின் நிஜத்தை தேடி – உதவி கேட்பவன் ஃப்ராடா இல்லையா? கணவன் மனைவி சண்டை.
சுந்தர ராமசாமியின் விகாசம் – மனித கால்குலேட்டர் ராவுத்தர் எலெக்ட்ரானிக் கால்குலேட்டர் வந்ததும் என்ன செய்வார்?
புதுமைப்பித்தனின் மனித இயந்திரம் – கணக்குப் பிள்ளை பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட திட்டம் இடுகிறார்.
புதுமைப்பித்தனின் சுப்பையா பிள்ளையின் காதல்கள் – ட்ரெய்னில் பெண்ணின் கால் பட்டதும் சுப்பையா பிள்ளை கனவு காண்கிறார்.
புதுமைப்பித்தனின் சாப விமோசனம் – சீதையின் அக்னி பிரவேசத்தை பற்றி அகலிகை என்ன நினைப்பாள்?
கு.ப.ரா.வின் கனகாம்பரம் – புது மனைவியிடம் தன நண்பர்களிடம் கலந்து பேச சொல்லும் கணவன், அதன்படி நடக்கும் மனைவி.
ஜெயமோகனின் பித்தம் – இரும்பை தங்கமாக மாற்ற வாழ்க்கையை செலவிடும் பண்டாரம்.
பாலகுமாரனின் எந்த கரை பச்சை – வீட்டு வேலைகளை கவுரவம் பார்க்காமல் செய்யும் மச்சினன்
பாலகுமாரனின் சின்ன சின்ன வட்டங்கள் – வேலை இழந்த கணவன், இறந்து போகும் குழந்தை.
எம்.வி. வெங்கட்ராமின் பைத்தியக்காரப் பிள்ளை – சுய நலம் நிறைந்த குடும்பம்
அசோகமித்ரனின் பிரயாணம் – குருவை ஓநாய்களிடமிருந்து காப்பாற்ற முடியாத சிஷ்யன்

எரிக் செகால் எழுதிய இந்த புத்தகம் என் மனதை தொட்ட புத்தகங்களில் ஒன்று. பல முறை படித்த புத்தகம்தான், ஆனால் ஒவ்வொரு முறையும் கடைசி பக்கங்களை படிக்கும்போது கண்ணில் நீர் தேங்கும். ஆலிவர் பாரெட் IV தன் அப்பாவின் தோள்களில் சாய்ந்து அழும் காட்சி மிக உருக்கமானது.

ஆனால் யோசித்து பார்த்தால் இந்த புத்தகத்தில் ஒன்றுமே இல்லை. பணக்கார குடும்பத்து நாயகன் ஏழை பெண்ணை காதலித்து, அப்பாவுடன் சண்டை போட்டுக்கொண்டு, கல்யாணம் செய்து கொள்கிறான். மனைவி சிறு வயதிலேயே இறந்து விடுகிறாள். இந்த மில்ஸ் அண்ட் பூன் கதையை எவ்வளவு சிறப்பாக எழுதி இருக்கிறார்! இதே கதையை பிரபல தமிழ் எழுத்தாளர்கள் என்ன தலைப்பு வைத்திருப்பார்கள், எப்படி எல்லாம் எழுதி இருப்பார்கள் என்று ஒரு கற்பனை. என்னை இந்த எழுத்தாளர்கள் எல்லாரும் மன்னிப்பார்களாக!

ராஜேஷ்குமார், கெட்டி கிட்னி: அப்பா பாரெட் ஒரு இன்ஸ்பெக்டரை கூப்பிடுகிறார். என் பையன் என்னிடம் 5000 ரூபாய் ஏன் கேட்டான் என்று கண்டுபிடிக்க சொல்கிறார். கிட்னியை திருட சதி நடக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார்கள்.

பாலகுமாரன், சித்தியின் கோமணம்: ஒரு சித்தி (சித்தருக்கு பெண்பால்) வந்து ஜெனிஃபரை குணப்படுத்திவிடுகிறார். அந்த சித்திக்கு போன ஜென்மத்தில் தாசியாக கோமணம் மட்டுமே அணிந்த ஒரு சித்தருக்கு சேவை செய்ததால் சித்தி கிடைத்துவிடுகிறது.

ஜெயமோகன், ஆழப் பரவும் நிழல்: புத்தகத்தில் மொத்தம் ஆயிரம் பக்கம். அப்பாவும் மகனும் உணர்ச்சியில் கொந்தளிக்கிறார்கள். அப்பா தமிழ் கலந்த மலையாளத்திலும் மகன் மலையாளம் கலந்த தமிழிலும் ஒருவரை ஒருவர் கடுமையாக திட்டிக் கொள்கிறார்கள். ஜெனிஃபரிந் மறைவுக்கு பிறகு பாரெட் எப்படி எல்லாம் சீரழிகிறான், கஞ்சா குடிக்கிறான், பிச்சை எடுக்கிறான் என்று ஒரு நூறு பக்கம் இருக்கிறது. அதற்கு பிறகு ஜெயமோகனே இந்த புத்தகத்துக்கு ஒரு விமர்சனமும் எழுதிக் கொள்கிறார். அது ஒரு ஐந்நூறு பக்கம்.

அசோகமித்திரன், மறைந்த உடல்கள்: பாரெட்டுக்கு ஏன் ஜெனிஃபரை மணந்தோம் என்றே தெரியவில்லை. என்னவோ நடந்துவிட்டது. இப்போது ஜெனிஃபர் இறக்க போகிறாள் என்றதும் சரி சீக்கிரம் செத்தால் நல்லது என்று நினைக்கிறான்.

புதுமைபித்தன், கடவுளும் ஜெனிஃபரின் பிள்ளையும் – ஆலிவர் பாரெட் பிள்ளைவாள் ஜெனிஃபர் என்ற கிருஸ்தவ பெண்ணை விவாகம் செய்து கொள்கிறார். பிரசவத்தில் இறந்து கொண்டிருக்கும் அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து போக பணமில்லை. அப்போது கடவுள் ஒரு விசிட் அடித்து இதுதான் அய்யா பொன்னகரம்! என்கிறார். (வந்தது ஏசுவா, ஈசனா என்று கேட்கக் கூடாது)

சாண்டில்யன், வன மோகினி – இளைய ராணா ஆலிவர் பாரெட் அக்பரின் வைப்பாட்டி மகளான ஜெனிஃபர் கானை மணந்து சிங்காதனத்தை துறக்கிறான். நடுவில் காடு, மலை எல்லாம் பற்றி ஐந்து பக்கத்துக்கு ஒரு முறை வர்ணனை – இந்த காடு, மலை எல்லாம் ஜெனிஃபர் கானின் உடலில் இருக்கிறது. ஜெனிஃபர் கானை குணப்படுத்த ராஜ வைத்தியரை மூத்த ராணாவிடம் கடனாக கேட்கிறான். ராஜ வைத்தியர் வர தாமதம் ஆகி ஜெனிஃபர் இறந்ததும் அவன் வீறு கொண்டு எழுந்து அக்பரை எதிர்க்கிறான்.

லைஞர் கருணாநிதி, சாதிச் சுடுகாடு - ஆலிவர் பாரெட் அய்யர் தலித் ஜெனிஃபரை காதலிப்பதை மூட நம்பிக்கைகளில் மூழ்கிய அப்பா பாரெட் எதிர்த்திட்டார். அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதை பொறுக்க முடியாமல் ஒரு போலி சாமியார் ஜெனிஃபருக்கு விஷம் வைத்திட்டார். காலம் கடந்த பின் அப்பா அய்யர் அழுதிட்டார்.

ஜானகிராமன், அப்பா வந்தார் – வயதில் மூத்த ஜெனிஃபரை ஆலிவர் காதலிப்பதை அப்பா எதிர்க்கிறார். அதற்கு காரணம் அவருக்கு இருக்கும் தொடுப்பு என்று பின்னால் தெரிய வருகிறது.

இந்திரா பார்த்தசாரதி, சந்திர சாமி: டெல்லியில் ஆலிவர் பாரெட் அய்யங்கார் மந்திரியின் குருவின் வைப்பாட்டியின் தம்பி மகளை மணந்து டெல்லியில் பெரிய ஆளாகிறான். அவள் இறந்ததும் அவனை யாரும் சீந்த வில்லை. பாதி புத்தகம் ஆங்கிலத்தில்தான் இருக்கும். ஏனென்றால் All characters talk only in English, you know.