படங்களை பற்றி:

  1. ஜாலியாக வீணை வாசிக்கும் பிள்ளையார் – பிள்ளையார் உட்கார்ந்திருக்கும் விதத்தில் குஷி தெரிகிறது.
  2. காலை மடக்கி இருக்கும் பாரத மாதா – நல்ல ஐடியா, ஆனால் என் கண்ணில் நல்ல ஆர்ட் இல்லை.
  3. பிள்ளையார் தலை மேல் நிர்வாணமாக உட்கார்ந்திருக்கும் லக்ஷ்மி, மற்றும் நிர்வாண சரஸ்வதி – நல்ல craft.
  4. புலி மேல் துர்கை – Bad taste
  5. எம்.எஃப். ஹுசேன்
  6. டாக்டர் ருத்ரன் வரைந்த நிர்வாண சரஸ்வதி – டாக்டர் ஒரு ஹிந்து.

கொஞ்ச நேரத்துக்கு முன் டோண்டு எம்.எஃப். ஹுசெனைப் பற்றி எழுதி இருந்ததைப் படித்தேன். சுருக்கமாக என் எண்ணங்களை எழுத முடியாததால் இங்கே ஒரு பதிவாகவே எழுதுகிறேன்.

எனக்கு ஓவியங்கள் பிடிக்கும். ஆனால் பல பிரபல ஓவியங்களில் என்ன இருக்கிறது என்று புரிவதில்லை. புகழ் பெற்ற மோனா லிசா ஓவியத்தை நான் லூவர் மியூசியத்தில் நேராகவே பார்த்திருக்கிறேன். இது என்ன பிரமாதம் என்று புரிந்ததே இல்லை. ஹுசேனின் ஓவியங்களைப் பற்றி எனக்கு அப்படி ஒன்றும் பிரமாதமான அபிப்ராயம் இல்லை. சில ஓவியங்களில் நல்ல தொழில் திறமை (craft ) தெரிகிறது, அவ்வளவுதான். எனக்கு பிடித்த இந்திய ஓவியர்கள் அம்ரிதா ஷெர்கில், ஜாமினி ராய்.

ஆனால் ஹுசேன் சரஸ்வதியையும் துர்கையையும் நிர்வாணமாக வரைந்ததில் எந்த தவறும் இல்லை என்பது என் உறுதியான கருத்து. சரஸ்வதி, துர்க்கை, கிருஷ்ணன், ஏசு, முகமது நபி யாரை வேண்டுமானாலும் நிர்வாணமாக வரைய அவருக்கு பூரண உரிமை உண்டு. எப்படி வேண்டுமென்றாலும் வரையலாம், அது அவரது கருத்துரிமை. தஸ்லிமா நசரீன், சாலமன் ரஷ்டி எல்லாருக்கும் அந்த கருத்துரிமை உண்டு. ஹுசேனின் கருத்துரிமையை பறித்துவிட்டு ரஷ்டியின் புத்தகத்தை தடை செய்ததை எப்படி குறை சொல்வது? தஸ்லிமாவுக்கு நிகழும் அநீதிகளை எந்த முகத்தை வைத்துக் கொண்டு எதிர்ப்பது? தஸ்லிமாவை ஆதரித்து பேசுபவர்கள் ஹுசேனை எதிர்க்கும் அதிசயமும், ஹுசேனை ஆதரித்து பேசுபவர்கள் தஸ்லிமாவை எதிர்க்கும் அதிசயமும் இந்த நாட்டில் ஒரு சேர நடக்கிறது!

சரஸ்வதியை இழிவுபடுத்துகிறார் ஹுசேன் என்று பேசும் ஹிந்துக்களின் மன நிலை எனக்கு புரிவதே இல்லை. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். நான் வணங்கும் அலகிலா விளையாட்டுடையானை, ராமனை, கிருஷ்ணனை, சக்தியை இழிவுபடுத்தும் ஆற்றல் உள்ளவரா இந்த ஹுசேன்? இல்லை எல்லாம் வல்ல சரஸ்வதிக்கு நாலு பாடிகார்ட் தேவையா? இப்படி உணர்பவர்கள் எல்லாம் உண்மையிலேயே கடவுள் சர்வ சக்தி படைத்தவர் என்று நினைக்கிறார்களா? போயும் போயும் இந்த ஹுசேனா சிவனை கேவலப்படுத்த முடியும்?

ஹுசேனின் சில சர்ச்சைக்குரிய படங்களை இங்கே கொடுத்திருக்கிறேன். அவரது கோட்டோவியங்களில் நல்ல craft தெரிகிறது. சரஸ்வதியின் படம் எந்த விதத்திலும் சரஸ்வதியை கேவலப்படுத்தவில்லை என்பது என் உறுதியான கருத்து. பாரத மாதா படம் நல்ல ஐடியா. காலை மடித்து உட்கார்ந்திருக்கும் பெண் இந்தியாவின் தெற்குப் பகுதியுடனும், மார்புகள் குஜராத்துடனும் நன்றாக பொருந்துகிறது. ஆனால் நல்ல கலை என்று சொல்ல மாட்டேன். துர்கையின் படம் is in bad taste. But bad taste is not a crime!

அடுத்தவர் செய்கை என் மனதை புண்படுத்துகிறது, அதனால் அது தடை செய்யப்பட வேண்டும் என்று சொல்வது மிக தவறான அணுகுமுறை. டோண்டு ராகவன் பூணூல் அணிவது சிலர் மனதை புண்படுத்துகிறது என்பதற்காக அவர் பூணூல் அணிவதை நிறுத்த வேண்டுமா? இல்லை என்றுதான் நானும் அவரும் கருதுகிறோம். அப்புறம் ஹுசேனின் படங்கள் டோண்டுவின் மனதை புண்படுத்துகின்றன என்பதற்காக ஹுசேன் மட்டும் ஏன் இப்படி படம் வரைவதை நிறுத்த வேண்டும்? உயிருள்ளவர்களை கேவலப்படுத்தினால் அவர்களை சட்டம் பாதுகாக்கும்.

ஹுசேனுக்கு ஏசுவை இப்படி வரைய தைரியம் இல்லை, சீவி விடுவார்கள், முகமது நபியை இப்படி வரைந்தால் ஃபட்வாதான், அதனால் அவர் அப்படி வரைவதில்லை என்றுதான் நிறைய பேர் கோபப்படுகிறார்கள். அப்படி நினைப்பவர்கள் செய்ய வேண்டியது தெளிவு – சீவி விடுவார்கள் ஃபட்வா போன்ற நிலையை மாற்றுங்கள். போலி மத சார்பின்மை பேசிக் கொண்டு யாராவது வந்தால் – ராமர் எந்த ஆர்கிடெக்சர் காலேஜில் படித்தார் என்று கேட்டுக் கொண்டே ரம்ஜான் கஞ்சி குடிப்பவர்களை – புறக்கணியுங்கள். அதை விட்டுவிட்டு ஹுசேன் மேல் கேஸ் போட வேண்டும் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. அவனுக்கு ஜுரம் வந்தபோது ஊசி போடவில்லை, அதனால் எனக்கு ஜுரம் வரும்போது எனக்கும் போடக்கூடாது என்று குழந்தைகள் அடித்துக் கொள்வது மாதிரி இருக்கிறது!

இந்திய அரசு இந்த ஒரு விஷயத்தில்தான் consistent ஆக நடந்து கொள்கிறது, ஹுசேனின் மேல் கேஸ் போடுகிறது, டாவின்சி கோட், Midnight’s Children புத்தகத்தை தடை செய்கிறது!

புதிதாக சேர்க்கப்பட்டது.
டாக்டர் ருத்ரன் (இவருடன்தான் எனக்கு ஜெநோடைப் பற்றி தகராறு.) ஒரு ஹிந்து. தன்னுடைய வலைத்தளத்தில் இப்போது ஹுசேன் மாதிரி ஒரு சரஸ்வதி படம் வரைந்திருக்கிறார். குறும்புக்காரர்!

தொடர்புடைய பதிவுகள், சுட்டிகள்
எம்.எஃப். ஹுசேன் பற்றிய விக்கி குறிப்பு
டோண்டு ராகவனின் பதிவு
ஜெயமோகனின் பதிவு, அவருக்கு வந்த எதிர்வினைகள் பகுதி 1, பகுதி 2, பகுதி 3
தமிழ் ஹிந்து தளத்தில் ஜெயமோகனுக்கு எதிர்வினை
டாக்டர் ருத்ரனின் பதிவு

அம்ரிதா ஷெர்கில் பற்றிய விக்கி குறிப்பு, அவரது சில ஓவியங்கள்
ஜாமினி ராய் பற்றிய விக்கி குறிப்பு, அவரது சில ஓவியங்கள்

டோண்டு ராகவன் எழுதிய இந்த போஸ்டை படித்தபோது நெவில் ஷூட் எழுதிய Trustee from the Toolroom புத்தகத்தை படிக்க வேண்டும் என்று தோன்றியது. என் அதிர்ஷ்டம், லோகல் நூலகத்தில் கிடைத்தது.

கதையை எல்லாம் டோண்டு எழுதி இருக்கிறார். அதனால் அதையே மீண்டும் நானும் எழுத வேண்டிய வேலை மிச்சம்.

சூப்பர் டூப்பர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஆனால் நாயகனின் திறமை அவருக்கு உலகெங்கும் பல நண்பர்களை ஏற்படுத்தி கொடுத்தது நன்றாக இருக்கிறது. அதே நேரத்தில் அவருக்கு எல்லாம் க்ளிக் ஆவது கொஞ்சம் தமிழ் படம் பார்ப்பது போல இருக்கிறது.

படிக்கலாம். A feel good book.

தொடர்புடைய பதிவுகள்
டோண்டுவின் பதிவு
விக்கிபீடியாவில் நெவில் ஷூட்
விக்கிபீடியாவில் Trustee from the Toolroom

சோ ராமசாமி

சோ ராமசாமி

இன்று தற்செயலாக நெருக்கடி நிலை பற்றி டோண்டு ராகவன் எழுதிய ஒரு பதிவை பார்த்தேன். சோ நெருக்கடி நிலையின்போது இந்திரா காந்திக்கு ஜால்ரா அடிக்கவில்லை என்று தெரியும். ஆனால் இவ்வளவு விவரங்கள் தெரியாது. அவர் எழுதியதிலிருந்து:

அவசர நிலை வந்தபோது எனக்கு வயது 29. எல்லா விஷயங்களுமே நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் இருக்கின்றன. அப்போது துக்ளக், இண்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற வெகுசில பத்திரிகைகளைத் தவிர்த்து எல்லாம் அரசு அடக்குமுறைக்கு பயந்து மிகச் சத்தமாக ஜால்ரா அடித்தன. அப்போதைய தி.மு.க. அரசு மட்டும் தைரியமாக அவசர சட்டத்தை எதிர்த்தது. முரசொலியில் இந்திரா காந்தியை ஹிட்லராக வர்ணித்து கார்ட்டூன் போடப்பட்டது. தமிழகத்தில் இருக்கும் எல்லா பத்திரிகைகளும் தி.மு.க. அரசுக்கு எதிராக எழுதுமாறு ஊக்குவிக்கப்பட்டன.

இங்குதான் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஓர் அறிவிப்பை பத்திரிகை தணிக்கை அமுலுக்கு வரும் முன்னர் வெளியிட்டார். மத்திய அரசை எதிர்த்து ஒன்றும் எழுத முடியாத நிலையில் மாநில அரசையும் தான் விமரிசனம் செய்வதற்கில்லை என்று தெளிவாகக் கூறினார். ஏனெனில் அவர் தைரியம் மிக்கவர். அதே போல சினிமா விமரிசனம் பகுதியில் சமீபத்தில் ஐம்பதுகளில் வந்த சர்வாதிகாரி என்ற படத்துக்கான விமரிசனம் வெளியிட்டார். அதில் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவில் மட்டும் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவார் என்று பொருள்பட ஒரு வாக்கியம் சேர்த்தார். பிறகு தணிக்கை முறை தீவிரமானது.

….

பத்திரிகை தணிக்கை முறை மிகவும் கடுமையாக்கப்பட்டது. சில காலம் வெளியிடப்படாமல் வைத்திருந்த துக்ளக்கை சோ அவர்கள் மறுபடி வெளியிட்டார். பத்திரிகை தணிக்கை அதிகாரிகளை நன்றாக ஏய்த்தார்.

….

1976 பிப்ரவரி ஒன்றாம் தேதி தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. ஸ்டாலின் அவர்கள் உள்பட தி.மு.க.வினர் மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது கருணாநிதி அவர்கள் தனிமையாக்கப்பட்டார். அந்த நேரத்தில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஒரு ஆண்மை மிக்க காரியத்தை செய்தார். கருணாநிதி அவர்கள் வீட்டிற்கே போய் அவருக்கு நடந்தது அநியாயம் என்று கூறி அவருக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார். அத்தருணத்தில் அதை செய்தது அவர் உயிருக்கே கூட கேடாக முடிந்திருக்கலாம். என்னதான் இருந்தாலும் அவர் தைரியம் யாருக்கு வரும்? 1976-ல் வந்திருக்க வேண்டிய பொது தேர்தலை இந்திரா காந்தி ஓராண்டுக்கு தள்ளி வைத்தார். இந்த அக்கிரமம் முன்னாலும் நடக்கவில்லை, அதற்கு பின்னாலும் தற்சமயம் வரை நடக்கவில்லை.

….

1977-ல் பத்திரிகை தணிக்கை முறை தேர்தலுக்கு முன்னோடியாக விலக்கப்பட்டது. அப்போது சோ அவர்கள் சீரணி அரங்கில் ஒரு மீட்டிங் வைத்தார். தணிக்கை முறை தமாஷ்கள் பலவற்றை அவர் கூறினார். ஜனநாயகத்தை ஆதரித்து பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் கூறியவற்றை சோ அவர்கள் மேற்கோள் காட்ட, அது தணிக்கை அதிகாரியால் தடுக்கப்பட்டது. இந்திரா காங்கிரஸ் தமிழகத்தில் நன்றாக நிலை கொண்டுள்ளதாக ஒரு இந்திரா காங்கிரஸ் தலைவர் உளறியதை சோ அவ்ர்கள் அப்படியே மாறுதலின்றி செய்தியாகப் போட இது ரொம்ப ஓவர், தேவையில்லாத கிண்டல் என்று தணிக்கை அதிகாரி நீக்கினார். அதை சோ அவர்கள் கூறியபோது மெரினா கடற்கரையே சிரிப்பலைகளில் மூழ்கியது. அப்போதுதான் மேலே கூறியபடி இந்திரா காந்தியை வெறுமனே பெயரிட்டு அழைத்ததையும் பிரதமர் என்று குறிப்பிடாததையும் கூறினார். இன்னொரு சிரிப்பலை.

ஒரு பத்திரிகையாளராக இந்த சமயத்தில்தான் சோ மிக அதிகமாக பிரகாசித்திருக்கிறார்.

தொடர்புடைய பிற பதிவுகள்:
சோ – ஒரு மதிப்பீடு
சோவை பற்றி நல்லதந்தி
முகமது பின் துக்ளக் – என் விமர்சனம்
முகமது பின் துக்ளக் – விகடன் விமர்சனம்

விகடனுக்கு நன்றி!

விருதுநகர் தெப்பக்குளம்; குளத்தைச் சுற்றிலும் கடை வீதிகள். அந்த வீதிகளின் ஒன்றுக்குள்ளே பிரிந்து செல்லும் சுலோசன நாடார் வீதி என்னும் அந்தச் சின்னஞ்சிறு சந்துக்குள்ளேதான், தமிழ் நாட்டின் தவப்புதல்வர் காமராஜ் அவர்களை ஈன்றெடுத்த அன்னை சிவகாமி அம்மாள் வாழ்ந்து வருகிறார்.

மிகச் சாதாரணமான எளிய இல்லம். அங்குள்ள கயிற்றுக் கட்டிலில் அந்த அம்மையார் படுத்திருந்தார். சின்ன இடம். நாலு பக்கத்துச் சுவர்களிலும் பழம் பெரும் தேச பக்தர்களின் படங்கள். அவற்றுக்கிடையே வேல் முருகன் படம். அதற்குப் பக்கத்தில் சத்தியமூர்த்தியின் உருவம்!

கட்டிலில் படுத்திருந்த மூதாட்டியார் எங்களைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்தார். மூச்சுத் திணறியது. ”வாங்கய்யா” என்று அன்புடன் அழைத்தபடியே எழுந்து போய் மின்சார விளக்கின் ஸ்விச்சைப் போட்டார்.

”தங்கள் திருமகனைப் பற்றித் தாங்கள் ஏதாவது சொல்லவேண்டும்.”

”நான் என்ன சொல்லப் போகிறேன் ஐயா! எனக்கு வயதாகிவிட்டது. அத்துடன் ரத்தக் கொதிப்பு வேறு. பேசினால் மூச்சுத் திணறுகிறது. ரெண்டு வருசம் உப்பைத் தள்ளிப் பத்தியச் சாப்பாடு சாப்பிட்டேன். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. சாப்பாட்டில் உப்பு சேர்ந்துக் கொள்கிறேன்.”

”சென்னைக்குப் போய் மகனோடு இருப்பதில்லையா?” என்று கேட்டபோது அம்மூதாட்டியார் முறுவலித்தார்.

”நல்லாச் சொன்னீங்கய்யா! அவன் மந்திரியாகி ஏழெட்டு வருசம் ஆகுது. இதுவரைக்கும் நான் அங்கே அஞ்சு தடவைதான் போயிருப்பேன். போன உடனே என்னை ஊருக்குத் திருப்பிப் பயணம் பண்ணி அனுப்புவதிலேயே குறியாயிருப்பான்! ‘பட்டணம் பாக்கணும்னா சுத்திப் பாரு. திருப்பதிக்குப் போகணும்னா போயிட்டு வா. எல்லாத்தையும் பார்த்துட்டு உடனே விருதுநகர் போய்ச் சேரு’ம்பான்!”

”மாசச் செலவுக்கு உங்களுக்குப் பணம் அனுப்புகிறாரா?”

”அனுப்பறான். பொடிக்கடை தனக்கோடி நாடார் மூலமாத்தான் பணம் வரும்.”

”எவ்வளவு பணம் அனுப்பறாரு?”

”120 ரூபாய். பத்துமாய்யா? தண்ணி வரியே பதிமூணு ரூவா கட்டறேன். மாசம் அந்த 120 ரூபாதான், அதுக்கு மேலே செலவு செய்யக்கூடாதும்பான். அவங்கவங்க உழைச்சுப் பிழைக்கணும்பான். நானும் பேசாம இருந்துடுவேன். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா? ரேசன் வந்துது பாருங்க, அப்ப இங்கே வந்திருந்தான். ‘என்னப்பா, இப்படிக் கேப்பையும் கம்பும் போடறாங்களே, இதை எப்படிச் சாப்பிடறது? நெல்லு வாங்கித் தரப்படாதா’ன்னு கேட்டேன். ‘நெல்லு பேச்சுப் பேசாதே. ஊருக்கெல்லாம் ஒண்ணு, நமக்கு ஒண்ணானு கேட் டான். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா?”

”இப்படி ஒரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த தாங்கள் நிஜமாகவே பாக்கியசாலிதான்” என்றதும், அன்னையின் கண்கள் கலங்கிவிட்டன.

”ஏன் கண் கலங்குகிறீர்கள் அம்மா?”

”கலங்காம என்ன செய்ய? துறவியாகி விட்ட பட்டினத்தடிகளை அவன் தாய் துறந்துவிட்டதைப்போல், நானும் என் மகனை இந்த நாட்டுக்காகத் துறந்துவிட்டு நிற்கிறேனே!”

ஆர்வியின் குறிப்பு: இந்த பேட்டி 1962-க்கு முன்னால் வந்திருக்க வேண்டும். 1962-க்கு பிறகு காமராஜ் எந்த பதவியிலும் இல்லை. அந்த காலத்தில் 120 ரூபாய் என்பது அப்போது ஒரு ஆள் உயிர் வாழ சமாளித்துக் கொள்ளக் கூடிய பணம்தான். ஆனால் சொகுசு வாழ்க்கை கிடையாது. வந்து போகும் ஆட்கள் நிறைய இருந்தால் கஷ்டம்தான்.

ஐம்பதுகளில் டீச்சர் ட்ரெயினிங் போன என் அம்மாவுக்கு மாதம் நூறு ரூபாய் சம்பளம் வாங்க வேண்டும் என்பதுதான் கனவு. (எழுபதுகளில் ஸ்கூலில் படித்த எனக்கு ஃபோர் ஃபிகர் சாலரி – ஆயிரம் ரூபாய் சம்பளம் என்பது பெரிய விஷயம். அப்போதெல்லாம் மாட்ரிமோனியல்களில் ஃபோர் ஃபிகர் சாலரி என்று போடுவார்களாம். எண்பதுகளின் இறுதியில் டெண்டுல்கர் விளையாட வந்தார். அவருக்கு மஃபத்லால் ஒரு வேலை கொடுத்தது. அப்போது அவருக்கு ஃபைவ் பிகர் சாலரி என்று பெரிய செய்தியாக வந்தது.)

டோண்டு ராகவன் காமராஜ் பற்றி எழுதி இருக்கும் சில பதிவுகளை இங்கே காணலாம்.

காமராஜை பற்றி அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த தளத்தில் நிறைய எழுதி இருக்கிறார்கள். அந்த தளத்தில் உள்ள அபூர்வமான புகைப்படங்களுக்காகவாவது பாருங்கள்!

இது 101-ஆவது பதிவு. நானும் பக்சும் சேர்ந்து வெற்றிகரமாக நூறு பதிவுகள் போட்டுவிட்டோம்.

பத்தாயிரம் ஹிட்கள். இது ஒரு பெரிய விஷயமா என்பவர்களுக்காகவே தமிழில் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ பழமொழி இருக்கிறது. வந்து பார்த்த எல்லாருக்கும் மறுமொழி இட்டவர்களுக்கும் நன்றி. மறுமொழிகள் உற்சாகம் அளிக்கின்றன. குறிப்பாக, விடாமல் வாதாடிய அரை டிக்கெட், ஊக்கப்படுத்திய/படுத்துகிற பாஸ்டன் பாலா, டோண்டு ராகவன் ஆகியோருக்கு நன்றி. வினவு குழுவுக்கும் எனக்கும் கடுமையான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் என்ன உங்களை ஆளையே காணோம் என்று அவர்களே வந்து கேட்டது உற்சாகம் அளித்தது.

அவசரமாக எழுதியதில் முரளியின் பெயர் விட்டுவிட்டது. இன்னும் யார் யார் பேர் விட்டுவிட்டதோ தெரியவில்லை. விட்டுப் போனவர்கள் மன்னிப்பார்களாக!

தமிழ் ப்ளாக் உலகில் எனக்கு வியப்பு அளித்த விஷயம் பிராமண ஜாதியில் பிறந்தவர்கள் மேல் இறைக்கப்படும் அவதூறுகள்தான். இது தவறு என்பது ஒரு பக்கம் – ஆனால் இருக்கும் எத்தனையோ பெரிய பெரிய பிரச்சினைகளை விட்டுவிட்டு பிராமண ஜாதியில் பிறந்தவர்களை திட்டுவதில் இத்தனை நேரம் செலவழிக்க வேண்டுமென்றால் எத்தனை துவேஷம் இருக்க வேண்டும்? Casteism தவறு என்று சொல்பவர்களுக்கு reverse casteism தவறு என்று புரியாதது மிக ஆச்சரியம். குறிப்பாக பெரியார் பக்தர்கள் இணையத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிராமண ஜாதியில் பிறந்தவர்களை திட்டுவது ஜாதியை ஒழிப்பதை விட முக்கியமானது என்று தோன்றுகிறது. இந்த வருத்தம் பலருக்கும் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ பார்ப்பனர்கள், பார்ப்பனீயம், தமிழ் நாடு என்ற பதிவு நாங்கள் எழுதியவற்றில் மிக பாப்புலரானதாக இருக்கிறது. பொதுவாக ஜாதி பற்றிய பதிவுகள் படிக்கக்ப்படுகின்றன.

என் மதிப்பீடுகளை எழுதியது எனக்கு சுவாரசியமாக இருந்தது. இனி மேலும் எழுதுவேன். பலரை இணையத்தில் சந்திக்கவும் முடிந்தது சந்தோஷமான விஷயம். இப்போது கூட வாஞ்சிநாதனை பற்றி தெரிந்த திரவியம் நடராஜன் சில மறுமொழிகளை எழுதி இருந்தார்.

எனக்கு புத்தகப் பித்து அதிகம். புத்தகங்களை பற்றி இங்கே எழுத முடிவது சந்தோஷமான விஷயம். நான் எழுதுவதை யார் படிக்கிறார்கள் என்று அதிகம் யோசித்து கவலைப்படுவதில்லை. கடமையை செய்… :-) (கிருஷ்ணர் நானும் அவரை கோட் செய்வேன் என்று தெரிந்திருந்தால் பகவத் கீதை பக்கமே வந்திருக்க மாட்டார்)

நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு கணேஷ் வசந்த் வாழ்க்கை வரலாறுதான். இதை இன்னும் flesh out செய்ய வேண்டும் என்று பார்க்கிறேன், முடியவில்லை.

எங்கள் குடும்பத்தினரின் பங்களிப்பும் உண்டு. பக்சின் 12 வயது மகளான பிருந்தா எழுதிய கவிதை குறிப்பிட வேண்டியது. க்ரியாவின் பொன் மொழிகளில் நான் நினைத்து நினைத்து புன்முறுவலிப்பது எது பெரிய நம்பர்தான். ஸ்ரேயாவின் பசியும் மறக்க முடியாதுதான்.

வாஞ்சிநாதனை பற்றி எனக்கு இருக்கும் பிம்பம் சிம்பிள் – வ.உ.சியும், சிவாவும் தூத்துக்குடி வட்டாரத்தில் ஒரு புரட்சிகரமான மன நிலையை உருவாக்கினார்கள். அவர்களை கலெக்டர் வின்ச்சும், சப்-கலெக்டர் ஆஷும் அடக்க முயன்றார்கள். இந்த தலைவர்கள் ஜெயிலுக்கு போனதும், வ.வே.சு. ஐயர், நீலகண்ட பிரமச்சாரி, மாடசாமி ஆகியோரின் பழக்கமும் அவரை கொந்தளிக்க வைத்தது. கோபம் தலைக்கேறி அவர் ஆஷை சுட்டார். தப்பிக்க வழி இல்லாததால் அவரும் தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.

தமிழ் நாட்டில் அனேகமாக எல்லாருக்கும் இந்த பிம்பம்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இன்று திரு. சரவணன் வாஞ்சி பற்றி எழுதிய ஒரு பதிவை பார்த்தேன். அதில் ஆஷ் குற்றாலத்தில் பிராமணர்கள் மட்டுமே குளிக்கலாம் என்ற நிலையை மாற்றியதாகவும் அலுவலகத்தில் எல்லாரும் ஒரே இடத்தில் உணவு அருந்த வேண்டும் என்றும், ஒரே குடத்து தண்ணீரை அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டதாகவும் அதனால் கோபம் அடைந்த வாஞ்சி ஆஷை சுட்டதாகவும் எழுதப் பட்டிருக்கிறது.

இருக்கலாம். 1886-இல் பிறந்த ஒரு பிராமணருக்கு ஜாதி உணர்வு இல்லாவிட்டால்தான் ஆச்சரியம். வ.உ.சி. கூட சிறையில் தனக்கு ஒரு வேளாளரோ, இல்லை பிராமணரோ சமையல் செய்து தர வேண்டும், தலித் செய்யக்கூடாது என்று கேட்டாராம். (வ.உ.சி. ஒரு தலித்தை தன் வீட்டு மனிதராகவே பாவித்ததாகவும் ம.பொ.சி. சொல்கிறார், எது சரியோ யானறியேன்) நிலைமை இப்படி இருக்கும்போது சம பந்தி போஜனம் என்று ஒரு வெள்ளைக்கார “மிலேச்ச” கலெக்டர் சொன்னால் கோபம் வருவது புரிந்து கொள்ளக் கூடியதே. அன்று இருந்த சமுதாய நிலையில் ஆஷ் அப்படி சொல்லி இருப்பாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

ஆனால் வாஞ்சியின் கடைசி கடிதத்தை பார்த்தால் அவர் ஆஷின் “ஜாதி ஒழிப்பு முயற்சிகளால்” கோபம் அடைந்து அவரை சுட்டதாக தோன்றவில்லை. அந்த கடிதம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிர்ப்பாகவே இருக்கிறது. குறிப்பாக சுதேசி கப்பல் கம்பெனியை பற்றி வேறு சொல்லி இருக்கிறார். விக்கிபீடியாவில் உள்ளபடி அவரது மரண வாக்குமூலம் கீழே.
I dedicate my life as a small contribution to my motherland. I am alone responsible for this.
3000 youths of this brave country have taken an oath before mother Kali to send King George to hell once he sets his foot on our motherland. I will kill Ashe, whose arrival here is to celebrate the crowning of King George in this glorious land which was once ruled by great samrats. This I do to make them understand the fate of those who cherish the thought of enslaving this sacred land. I, as the youngest of them, wish to warn George by killing Ashe who is his sole representative and has destroyed the Swadeshi shipping company and several other freedom fighters by subjecting them to severe torture.
Vande Mataram. Vande Mataram. Vande Mataram

சரவணன் அவர்களும் வாஞ்சியின் மரண வாக்குமூலம் என்று பதித்திருக்கிறார். விக்கிபீடியாவில் உள்ளதற்கும் அவர் சொல்வதற்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. சரவணனின் version-இல் சுதேசி கப்பல் கம்பெனி பற்றி எதுவும் இல்லை. பசு மாமிசம், சனாதன தர்மம் என்று இரண்டு குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் அதிலும் ஜாதியை பற்றியோ ஆஷ் மற்றும் ஆங்கிலேயர்களின் “சீர்திருத்த” ஆவலைப் பற்றியோ எதுவும் இல்லை.

ஆஷ் குற்றால அருவியை எல்லாருக்கும் உரியதாக ஆக்கி இருக்கலாம். அவர் யாராவது ஒரு அருந்ததியர் பெண்ணை பிராமணர் தெரு வழியாக கொண்டு சென்றிருக்கலாம். அது ஆஷ் மேல் உள்ள கோபத்தை அதிகப் படுத்தி இருக்கலாம். ஆனால் வாஞ்சியின் காரணங்கள் வேறு என்றுதான் தோன்றுகிறது. வாஞ்சி சுதந்திரப் போராட்ட வீரர் என்ற பிம்பம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அதே நேரத்தில் நாம் icon-களாக நினைப்பவர்கள் மீது ஒரு உண்மையான பரிசீலனை நடத்தப்பட வேண்டும், அவர்களது குற்றம் குறைகள் மறைக்கப்படக் கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதனால் இது மாதிரி முயற்சிகள் வரவேற்கப் பட வேண்டியதே. ஆனால் icon-களை பற்றி உள்ள பிம்பங்களை கலைத்து அவை icon-கள் இல்லை என்று நிறுவ முயற்சி செய்யும்போது ஆதாரங்களையும் வெகு கவனமாக கொடுக்க வேண்டும் – செங்கோட்டையில் பலரிடம் பேசினேன் என்று மொட்டையாக சொன்னால் போதாது. யார் யாரிடம் பேசினார்கள் என்ற விவரங்கள், ஆஷ் என்ன செய்தார் என்பதற்கான ஆதாரங்கள், பாரத மாதா சங்கம் ஆஷின் இந்த சீர்திருத்த ஆவல் பற்றி என்ன எழுதினார்கள் என்ற விவரங்கள் ஆகியவையும் சுட்டப் பட வேண்டும். வாஞ்சிநாதன் இறந்து கிட்டத்தட்ட நூறு வருஷங்கள் ஆகிவிட்டன. அவர் சம காலத்தவர் அல்ல, நம் ஞாபகங்கள், இல்லை முந்திய ஒரு ஜெனரேஷனின் ஞாபகங்கள் போதும் என்று சொல்ல. இந்த பதிவர் சைக்கிள் காப் கூட இல்லாத இடத்தில் லாரியே ஓட்ட முயற்சி செய்வது போல் இருக்கிறது.

ஆனால் இவர் அருந்ததியர் வாழும் வரலாறு என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இதை எழுதி இருக்கிறார். இந்த புத்தகம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேவியர் கல்லூரி வெளியிட்டது. பேராசிரியர் மார்க் எழுதியது. அந்த புத்தகத்தில் மேல் விவரங்கள் இருக்கிறதோ என்னவோ? இந்த புத்தகத்தை யாராவது பார்த்திருந்தால் படித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்!

Reverse casteism – டோண்டு ராகவன் வாஞ்சியின் மனைவிக்கு கொடுக்கப்பட வேண்டிய பென்ஷன் தி.மு.க. ஆட்சியினால் மறுக்கப்பட்டது என்று எங்கோ சொல்லி இருந்தார். டோண்டு, என் ஞாபகம் சரிதானா? உறுதிபடுத்துகிறார். அவரது ஆதாரம் திராவிட கழகத்தினரின் விடுதலை பத்திரிகைதான். விடுதலை பத்திரிகையே சொல்வதால் இதில் சந்தேகப்பட எதுவும் இல்லை. பிராமண விதவை என்பதற்காக அவரது பென்ஷன் மறுக்கப்பட்டது மிகவும் கீழ்த்தரமான விஷயம். (ஆனால் அவருக்கு ராஜாஜி, காமராஜ் போன்றவர்களின் ஆட்சியிலும் ஏன் பென்ஷன் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.) இதைப் பற்றி முத்துராமலிங்கத் தேவர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பேசியதாகவும், பென்ஷன் வாங்கிக் கொடுக்க அவர் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததாகவும் ராமகுமரன் அவர்கள் ஒரு சுட்டியை காண்பிக்கிறார்.

செங்கோட்டைக்காரரும், வாஞ்சியின் வீட்டுக்கு பக்கத்தில் வாழ்ந்தவருமான திரு. திரவியம் நடராஜன் எழுதிய மறுமொழிகளில் வாஞ்சி ஜாதி வெறியர் என்ற கருத்து அபத்தம் என்று சொல்லி இருக்கிறார். இது வாஞ்சி பற்றி எனக்கு இருக்கும் பிம்பத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது. வாஞ்சியை பற்றி மேலும் எழுதுவதாகவும் சொல்லி இருக்கிறார், காத்திருப்போம்.

ஆஷ் பற்றி, குறிப்பாக குற்றாலம் அருவியை அவர் பொதுவாக்கியது பற்றி யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

ஒரு பத்திரிகையாளராக சோ மிகவும் பிரகாசித்த தருணம் அவர் நெருக்கடி நிலையை எதிர்த்ததுதான். இன்று அந்த கால கட்டத்தை பற்றி ஒரு பதிவு கண்ணில் பட்டது. சோவின் முரட்டு பக்தரான டோண்டு இந்த ஜெயா டிவி ப்ரோக்ராம் பற்றி ஒன்றும் எழுதக் காணோமே!

நெருக்கடி நிலையின் போது தி.மு.க. ஒடுக்கப்பட்டது என்று ஞாபகம். மிசாவில் ஸ்டாலினும், ஆற்காடு வீராசாமியும் அடிபட்டார்கள், சிட்டிபாபு ஜெயிலிலேயே இறந்து போனார். (சிட்டிபாபுதான் அப்போது எங்கள் ஊர் எம்.பி.) ஆனால் அங்கங்கே கலைஞர் நெருக்கடி நிலையை முதலில் ஆதரித்தார் என்று படிக்கிறேன். இதை பற்றி தெரிந்தவர்கள் யாராவது?

பட்ஜெட் உரையிலிருந்து:

117. With a view to ensuring that the views and thoughts of great Tamil Savants who dedicated their lives to the Tamil language, benefits not only the present but future generations also, the Tamil Nadu Government is implementing the scheme of nationalization of books of Tamil scholars. The books of 95 Tamil scholars have been nationalized by the State Government so far. Out of these, the works of 87 scholars have been nationalized by the DMK Government. After assuming charge by this Government in 2006 the works of 65 Tamil scholars including that of Parithimar Kalaignar, Pulavar Kuzhanthai, Muthamizh Kavalar K.A.P.Viswantham, Ilakkuvanar, Prof.Vellaivaranar, Dr.R.P.Sethupillai and Va. Suba. Manickam have been nationalised and solatium of Rs.4.86 crores have been given to their legal heirs. In continuation of this, this year books of 28 Tamil scholars namely Kuzhanthi Kavignar Ala.Valliappa, Kaviarasu Kannadhasan, Prof.Viayapuri Pillai, Pandithamani M.Kathiresan Chettiar, M.Raghavaiyangar, Pammal Sambandanar, A.Chidambaranathan Chettiar, M.S.Poornalingam Pillai, T.M.Baskara Thondaiman, Palur Kannappa Mudaliar, Raya.Chockalinganar, Dr.M.Varadharajanar, Dr.S.Akathiyalingam, Pavalar N.R.Natchiappan, Puliyur Kesikan, Writer Chandilyan, Writer V.M.Kothainayaki, Chinna Annamalai, Poovai S.Arumugam, N.V.Kalaimani, Kavingnar Murugusundaram, Pulavar T.Kovendan, Writer Sundara Ramasamy, Tirukural Mani, A.K.Navaneetha Krishnan, Lakshmi, Vaduvoor Duriasamy Iyengar, Jamathagni and J.R.Rangaraju will be nationalised and solatium will be given to their legal heirs having regard to the number of books written by them, their social impact and their literary value.

ஹைலைட் செய்யப்பட்டிருக்கும் பெயர்களில் ஒரு அச்சுப்பிழை இருக்கிறது என்று நினைக்கிறோம். ஏனென்றால் 28 பேர் என்று சொல்லிவிட்டு 29 பெயர்கள் பட்டியல் இடப்பட்டிருக்கின்றன. திருக்குறள் மணி என்பது அ.க.நவநீதகிருஷ்ணனின் பட்டப் பெயர் என்பது எங்கள் யூகம். மேலும் விவரங்களுக்கு அ.க. நவநீதகிருஷ்ணன் பற்றிய குறிப்பை பார்க்கவும்.

இதை பற்றி நான் முதலில் எழுதுவதாக இல்லை. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்தான் எழுத்தாளர்களின் முழு லிஸ்ட் கிடைத்தது. ஜே.ஆர். ரங்கராஜு, வடுவூர் துரைசாமி ஐயங்கார் ஆகியவர்களின் பேரை இந்த லிஸ்டில் கண்டு அசந்தேன். இவர்கள் இருவரும் அந்த காலத்து ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் மாதிரி. ஒரு காலத்தில் பிரபலமானவர்கள்தான், ஆனால் இவர்கள் எழுத்து வருங்கால சந்ததியருக்காக காப்பாற்றப்பட வேண்டியது என்றோ, இலக்கியத் தரம் வாய்ந்தது என்றோ சொல்லிவிட முடியாது. அவர்கள் புத்தகம் கிடைத்தால் நான் வாங்குவேன். எனக்கு புத்தகப் பித்து. அதற்காக வரிப் பணத்தை செலவழிக்க வேண்டுமா என்ன? இந்த எழுத்தாளர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிய வேண்டும். சின்ன வயதில் கலைஞர் விரும்பிப் படித்த எழுத்தாளர்கள் எழுதியது நாட்டுடமை என்ற நிலை தவறு. அப்புறம் நான் நாளைக்கு முதலமைச்சரானால் முத்து காமிக்ஸ், இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ ஆகியோரின் சாகசங்கள் நாட்டுடமை ஆகும்.

அதற்காக நான் எழுத்துகளை நாட்டுடமை ஆக்குவது தவறு என்று சொல்லவில்லை. எழுத்துக்கள் நாட்டுடமை ஆவது புத்தகப் பிரியர்களுக்கு மட்டும் அல்ல, எல்லாருக்குமே நல்ல விஷயம். அந்த எழுத்தாளர்களுக்கோ, அவர்கள் வாரிசுகளுக்கோ ஓரளவு பணம் கிடைக்கிறது. மறந்து போகப்பட்ட புத்தகங்கள் மீண்டும் தெரிய வர ஓரளவு வாய்ப்பு இருக்கிறது.

இந்த வருஷம் சுந்தர ராமசாமி, கண்ணதாசன் ஆகியவர்களின் படைப்புகள் நாட்டுடமை ஆனதாகவும், அவர்கள் வாரிசுகள் சம்மதிக்காததால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் படித்தேன். முதலில் கேட்டுவிட்டு பிறகு நாட்டுடமை திட்டத்தை அறிவித்திருக்கலாம். அறிவித்துவிட்டு விட்டு பிறகு அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது take it for granted mentality. ஆனால் சின்ன விஷயம், எதிர்காலத்தில் சுலபமாக தவிர்க்கலாம். தவிர்ப்பார்கள் என்று நம்புவோம்.

ஒரு பெரிய விஷயமும் உண்டு. நாட்டுடமை ஆக்கிவிட்டு யாராவது புத்தகங்களை போடுவார்கள் என்று அரசு உட்கார்ந்திருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஒரு செம்பதிப்பு கொண்டு வரப் பட வேண்டும். ஏதோ தமிழ் பல்கலை கழகம் எல்லாம் இருக்கிறதாம், அங்கெல்லாம் இது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளலாமே? இல்லை என்றால் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் எழுதியவற்றை எல்லாம் யாரும் பதிக்கப் போவதில்லை.

சில கேள்விகள் இருக்கின்றன. இது வரை எத்தனை எழுத்தாளர்களின் எழுத்துக்கள் நாட்டுடமை ஆகி இருக்கிறது? யாரிடமாவது லிஸ்ட் இருக்கிறதா? இல்லை என்றால் உள்ளூர் ஆள் யாராவது இதை Right to information act மூலம் தெரிந்து சொல்ல முடியுமா? இதற்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டிருக்கிறது? இதற்கு ஏதாவது விதிமுறைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றனவா இல்லையா?

ராஜம் கிருஷ்ணன் இந்த லிஸ்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார். கள ஆய்வு செய்து புத்தகம் எழுதுவது இவருடைய தனி சிறப்பு. வேருக்கு நீர் புத்தகம் சாஹித்ய அகாடெமி பரிசு பெற்றது. மணலூர் மணியம்மையை பற்றி எழுதிய பாதையில் பதிந்த அடிகள் ஒரு முக்கியமான ஆவணம். குறிஞ்சித்தேன் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த வருஷ லிஸ்டில் எனக்கு தெரிந்தவர்களை பற்றி சிறு குறிப்புகள் கீழே. மற்றவர்களை பற்றி தெரிந்தவர்கள் சொல்லவும். இவர்களை தெரிந்து கொள்வது நல்ல விஷயம்தானே!

முனைவர் ச. அகத்தியலிங்கம் - யாரென்று தெரியாது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம். தமிழ் விக்கிபீடியா குறிப்பு இங்கே

சின்ன அண்ணாமலை – சுதந்திர போராட்ட வீரர். ஐம்பதுகளில் ஒரு பதிப்பகம் வைத்து பல நல்ல நூல்களை வெளியிட்டார் என்று ஞாபகம். ஒரு காலத்தில் காமராஜருக்கு துணை. சிவாஜி ரசிகர் மன்றத் தலைவரோ? தலைவர். இவர் எழுதி நான் அதிகமாக படித்ததில்லை. அதனால் இந்த தேர்வை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. சின்ன அண்ணாமலையை பற்றி சேதுராமன் அவர்கள் ஒரு guest post எழுதி இருக்கிறார். இங்கே அவர் பேரை க்ளிக் செய்தால் அந்த கட்டுரையை படிக்கலாம்.

பூவை எஸ். ஆறுமுகம் – ஏதோ சில சிறுவர் கவிதைகள் படித்த ஞாபகம் இருக்கிறது. ஒன்றும் சொல்வதற்கில்லை. ேரை க்ளிக் செய்தால் சேதுராமன் எழுதிய guest postஐ படிக்கலாம்.

கண்ணதாசன் – கண்ணதாசனின் சினிமா பாட்டுகள் பிடிக்கும். நாட்டுடமை அவரது சினிமா பாட்டுகளை பாதிக்காது என்று நினைக்கிறேன். அவர் எழுதிய கதைகள், காவியங்கள் எல்லாம் நல்ல இலக்கியம் இல்லை. அர்த்தமுள்ள இந்து மதம் இன்னும் விற்கிறது. அதனால் காந்தி கண்ணதாசன் எதிர்க்கிறார். இது புரிந்து கொள்ளக் கூடியதே. மோசமான தெரிவு. பேரை க்ளிக் செய்தால் விக்கிபீடியாவில் உள்ளதை காணலாம்.

பாலூர் கண்ணப்ப முதலியார் – டோண்டு ராகவன் இவர் சென்னை நியூ காலேஜ் தமிழ் துறை தலைவராக இருந்தவர் என்று தெரிவிக்கிறார். பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.

பண்டிதமணி கதிரேசன் செட்டியார் – பெரும் தமிழ் பண்டிதர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எதுவும் படித்ததில்லை. இவர் எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டது நல்ல தெரிவு என்றுதான் தோன்றுகிறது. பேரை க்ளிக் செய்தால் இவரை பற்றி சேதுராமன் எழுதிய குறிப்புகளை காணலாம். இவரை பற்றிய ஒரு திண்ணை தளக் கட்டுரையை இங்கே காணலாம்.

என்.வி. கலைமணியாரென்று தெரியாது. இவரைப் பற்றி சேதுராமன் அவர்கள் ஒரு guest post எழுதி இருக்கிறார். இங்கே அவர் பேரை க்ளிக் செய்தால் அந்த கட்டுரையை படிக்கலாம்.

புலியூர் கேசிகன்எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கிறது, ஆனால் யாரென்று தெரியவில்லை. பல சங்க, பிற்கால இலக்கியங்களுக்கு உரை எழுதி இருக்கிறாராம். லிஃப்கோ இவரது புத்தகங்களை பதித்தது என்று நினைவு. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.

வை.மு. கோதைநாயகி – இவர் அந்த காலத்து பெண்ணிய எழுத்தாளரோ? எழுத்தாளர். சரியாக நினைவில்லை, ஆனால் நல்ல தெரிவு என்று தோன்றுகிறது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம். இவரை பற்றி குமுதத்தில் வந்த ஒரு கட்டுரை இங்கே.

புலவர் த. கோவேந்தன்- யாரென்று தெரியாது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம். கோவேந்தனும் நாச்சியப்பனும் பாரதிதாசன் பரம்பரையை சேர்ந்த கவிஞர்கள். பாரதிதாசன் பரம்பரை பற்றி மு. இளங்கோவன் எழுதிய ஒரு கட்டுரை இங்கே. கோவேந்தன் நடத்திய வானம்பாடி பற்றிய விவரங்கள் இங்கே. இதுவும் இளங்கோவன் எழுதிய பதிவு.

பம்மல் சம்பந்த முதலியார் – நல்ல தெரிவு. தாமதமான தெரிவு. யாராவது மனோகரா நாடகத்தை பதியுங்கள்! (சங்கரதாஸ் ஸ்வாமிகளின் எழுத்துக்கள் நாட்டுடமை ஆகிவிட்டனவா?). பேரை க்ளிக் செய்தால் இவரை பற்றிய போஸ்டை படிக்கலாம். விக்கிபீடியா குறிப்பு இங்கே.

சாண்டில்யன் - தவறான தெரிவு. சாண்டில்யன் ஒரு டைம் பாஸ் எழுத்தாளர். நல்ல எழுத்தாளர் இல்லை. பேரை க்ளிக் செய்தால் இவரை பற்றிய போஸ்டை படிக்கலாம். விக்கிபீடியா குறிப்பு இங்கே. சாண்டில்யனை பற்றி ஒரு அலசல் இங்கே.

அ. சிதம்பரநாதன் செட்டியார் - யாரென்று தெரியாது. இவரும் ஒரு தமிழறிஞர் என்று சேதுராமன் சொல்வதிலிருந்து தெரிகிறது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.

சுந்தர ராமசாமி – தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். நல்ல தெரிவு. இன்னும் மார்க்கெட் உள்ள எழுத்தாளர். காலச்சுவடு கண்ணன் இதை எதிர்ப்பது புரிந்து கொள்ளக்கூடியதே.

ராய. சொக்கலிங்கம்யாரென்று தெரியாது. இவரும் ஒரு தமிழறிஞர் என்று சேதுராமன் சொல்வதிலிருந்து தெரிகிறது. ராய. சொ. சுதந்திர போராட்ட வீரர். மரபுக் கவிஞர். ஊழியன் என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர். இவருக்கு வ.ரா, தி.ஜ.ர., புதுமைப்பித்தன் ஆகியிவர்கள் உதவி ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். விவரங்களை சிரமப்பட்டு தேடிய சேதுராமனுக்கும, அவருக்கு விவரங்களை கொடுத்து உதவிய காரைக்குடி சித. ராயப்ப செட்டியாருக்கும் நன்றி! விரைவிலேயே சேதுராமன் ராய.சொ. பற்றி ஒரு guest post எழுதி இருக்கிறார். பேரை க்ளிக் செய்தால் அந்த guest post-ஐ படிக்கலாம்.

வடுவூர் துரைசாமி ஐயங்கார் – 1920-களின் ராஜேஷ் குமார். மோசமான தெரிவு. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.

திருக்குறள் மணி அ.க. நவநீதகிருஷ்ணன்யாரென்று தெரியாது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம். பட்ஜெட் உரையில் ஒரு கமா தவறாக பிரிண்ட் ஆகிவிட்டது போலிருக்கிறது. அதனால் திருக்குறள் மணி அ.க. நவநீதகிருஷ்ணன் என்று படிக்காமல், திருக்குறள் மணி, நவநீதகிருஷ்ணன் என்று படித்து குழப்பம். திருக்குறள் மணி என்பது இவரது பட்டப் பெயர் போல. திருக்குறளை கரைத்துக் குடித்த மாமணி என்று யாராவது பட்டம் கொடுத்திருப்பார்கள். பட்ஜெட் உரையை படித்தால் திருக்குறள் என்பது மணி என்பவரின் அடைமொழி போல தெரியும். சேதுராமன்தான் முதலில் இதை யூகித்தது. பிறகு தமிழம்.நெட் தளமும் இதை உறுதி செய்வதை பார்த்தேன்.

திருக்குறள் மணி - யாரென்று தெரியாது. இவர்தான் அ.க. நவநீத கிருஷ்ணன் என்று சேதுராமன் நினைக்கிறார். பட்ஜெட்டில் 28 பேர் எழுத்துகளை நாட்டுடமை செய்கிறோம் என்று சொல்லிவிட்டு 29 பேர் லிஸ்ட் கொடுத்திருக்கிறார்கள். அதனால் திருக்குறள் மணி என்பது பட்டப் பெயராக இருக்கலாமோ என்று சந்தேகம்.

பாவலர் நா.ரா. நாச்சியப்பன் – இவர் பேர் ஊடகங்களில் வந்த லிஸ்டில் விட்டுப் போய்விட்டது. பட்ஜெட் அறிக்கையில் இவர் பேர் இருக்கிறது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம். நாச்சியப்பனும் கோவேந்தனும் பாரதிதாசன் பரம்பரையை சேர்ந்த கவிஞர்கள். பாரதிதாசன் பரம்பரை பற்றி மு. இளங்கோவன் எழுதிய ஒரு கட்டுரை இங்கே.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்யாரென்று தெரியாது. இவரும் ஒரு தமிழறிஞர் என்று சேதுராமன் சொல்வதிலிருந்து தெரிகிறது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.

மு.சு. பூரணலிங்கம் பிள்ளையாரென்று தெரியாது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.

கவிஞர் முருகுசுந்தரம்யாரென்று தெரியாது. பேரை க்ளிக் செய்தால் இவரை பற்றி சேதுராமன் எழுதிய போஸ்டை காணலாம். காலச்சுவட்டில் வந்த கட்டுரை ஒன்று இவரது படைப்புகளை பற்றி அருமையாக ஆய்வு செய்கிறது.

ஜே.ஆர். ரங்கராஜு- 1910-களின் ராஜேஷ் குமார். மோசமான தெரிவு. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.

மு. ராகவையங்கார் – தமிழ் பண்டிதர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இவர் எழுத்துகளை படித்திருக்காவிட்டாலும் சரியான தெரிவு என்றுதான் நினைக்கிறேன். சேதுராமன் அவர்கள் இவரைப் பற்றி விவரங்கள் சேகரித்து ஒரு guest post எழுதி இருக்கிறார். பேரை க்ளிக் செய்தால் அதை படிக்கலாம். ராகவையங்கார் பற்றிய விக்கி குறிப்பு இங்கே.

லக்ஷ்மி – அந்த கால(1950 onwards), கொஞ்சம் நன்றாக எழுதக் கூடிய ரமணி சந்திரன். தவறான தெரிவு. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.

மு.வ. – மு.வ. தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவர் ஒரு கால கட்டத்தின் லட்சியங்களை நன்றாக எழுத்தில் கொண்டு வந்தவர். இவர் எழுதிய மொழி நூலோ, மொழி வரலாறோ ஏதோ ஒன்று மிக நல்ல புத்தகம். மொழி எப்படி உருவாகிறது என்பதை மிக அருமையாக ஒரு layman-க்கு விளக்கும். (ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கும்.) இந்த தெரிவு சரிதான். பேரை க்ளிக் செய்தால் இவரை பற்றிய போஸ்டை காணலாம். விக்கிபீடியா குறிப்பு இங்கே.

அழ. வள்ளியப்பா- குழந்தை கவிஞர். என் சிறு வயதில் இவரது பாட்டுகளை படித்திருக்கிறேன். சிறுவர்களுக்காக எழுதுபவர்கள் குறைவு. அதனால் இது சரியான தெரிவு. பேரை க்ளிக் செய்தால் இவரை பற்றிய போஸ்டை காணலாம். இவரை பற்றி விக்கிபீடியாவில் உள்ளது இங்கே.

வையாபுரிப் பிள்ளை - தாமதமான தெரிவு. எப்போதோ செய்திருக்க வேண்டும். பேரை க்ளிக் செய்தால் இவரை பற்றி விக்கிபீடியாவில் உள்ளதை காணலாம். சேதுராமனின் guest post இங்கே. அவரை பற்றிய சில சர்ச்சைகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.

கே.ஆர். ஜமதக்னியாரென்று தெரியாது. இவரை பற்றி சேதுராமனின் guest postஐ பேரை க்ளிக் செய்தால் படிக்கலாம்.

இங்கே உள்ள அநேக எழுத்தாளர்களை சேதுராமன்தான் அறிமுகம் செய்துவைத்தார். அவருடைய concluding remarks.

ஜெயமோகன்: இந்த ப்ளாக் படிக்க ஆரம்பித்துத்தான் நான் தமிழ் ப்ளாக்களை பற்றி தெரிந்துகொண்டேன். சுவாரசியமான எழுத்தாளர். கொஞ்சம் குசும்பு உள்ளவர். கண்ட மேனிக்கு எல்லாரிடமும் திட்டு வாங்குவார். பாதி நேரம் எனக்கு ஏன் திட்டுகிறார்கள் என்றே புரிவதில்லை. சுந்தர ராமசாமியை தன் குருவாக மதிக்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் அவருடனும் அவர் மகனும் காலச்சுவடு பதிப்பகத்தின் தலைவருமான கண்ணனுடனும் கூட சண்டை போலிருக்கிறது. சிவாஜி பற்றியும் எம்ஜியார் பற்றியும் எழுதி நிறைய திட்டு வாங்கினார். இதற்காக இவரை திட்டுகிறார்கள். ஆனால் இவரை விட அதிக ரீச் உள்ள அசத்தப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் சுமதீஈஈஈஈ என்று யாராவது சொன்னால் சிரிக்கிறார்கள். வி. எஸ். ராகவன் குரலில் பேசும் மைக்கேல் அகஸ்டின் என்பவர் எப்போதும் “அடங்கொய்யாலே என் பொண்டாட்டி எனக்கு சோறு போட மாட்டேங்கறா” என்றுதான் ஆரம்பிப்பார். அதற்கு வி.எஸ். ராகவனே கூட ஆட்சேபிப்பதில்லை. தமிழர்களின் லாஜிக் பெரிய மர்மம்தான்!

ராஜநாயகம்: ரசிகர். சினிமா, எழுத்து உலகங்களில் பலரை தெரிந்தவர். அவர்களை பற்றி சுருக்கமாக, சுவாரசியமாக எழுதுவார். திடீரென்று நிறைய கெட்ட வார்த்தைகள் போட்டு “தமாஷாக” நாலு போஸ்ட் எழுதுவார். கெட்ட வார்த்தைகளை பற்றி எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை, ஆனால் இதெல்லாம் தமாஷ் என்று சொல்வதற்கு ஆட்சேபணை உண்டு. ஜெயமோகனுடன் இவருக்கும் சண்டை. நான் இவரது தன்னிலை விளக்கங்களை முழுதாக படிக்கவில்லை,

டோண்டு: மனதில் பட்டதை தைரியமாக அடித்துவிடும் அபூர்வ மனிதர். சமீபத்தில் நாற்பது வருஷங்களுக்கு முன்னால் என்று ஆரம்பித்து எதையாவது எழுதுவார். அவரது நினைவுகள், கருத்துகள், பதில்கள் சுவாரசியமானவை. நரேந்திர மோடி, சோ ராமசாமி ஆகியோரின் தீவிர ஆதரவாளர். தமிழ் பதிவுகளில் வெளிப்படும் பிராமண வெறுப்பு இவரை வெறி கொள்ள வைக்கிறது.

வேறு பல ப்ளாக்களையும் அவ்வப்போது படிக்கிறேன். சாதாரணமாக வோர்ட்ப்ரெஸ்சின் டாப் ப்ளாக்கள் என்ன என்று பார்ப்பேன். ஆனால் ரெகுலராக பார்ப்பது இவைதான். இவற்றை எல்லாம் ப்ளாக்ரொலில் எப்படி சேர்ப்பது என்று கூட தெரியாது – அதனால் அவ்வப்போது சென்று பார்க்கிறேன்.

என்னை விட நன்கு தெரிந்தவர் என்ன சொல்கிறார் என்றும் பாருங்கள் – பாஸ்டன் பாலாவின் டாப் தமிழ் ப்ளாகர்ஸ் - எங்கள் சினிமா பற்றிய அவார்டா கொடுக்கறாங்க ப்ளாக் இங்கே “ஆறுதல் பரிசு” மாதிரி குறிப்பிடப்பட்டிருக்கிறது.