டைம் பத்திரிகையின் இன்னொரு லிஸ்ட். இந்தியாவிலிருந்து இந்திரா காந்தி, மதர் தெரசா இரண்டு பேர்.
ஆச்சரியப்படுத்திய நல்ல தேர்வுகள்:
Silent Spring என்ற புத்தகத்தால் பசுமை இயக்கத்துக்கு (Green Movement) பெரிய உந்துதல் கொடுத்த ரேச்சல் கார்சன்
கருத்தடை பெண்கள் உரிமை என்று போராடிய, கருத்தடை மாத்திரை கண்டுபிடிக்க உந்துதலாக இருந்த மார்கரெட் சாங்கர்
புகழ் பெற்ற anthropologist மார்கரெட் மீட்
பெண்களின் உடை அலங்காரத்தை மாற்றிய கோகோ சானல் (பெல்பாட்டங்களைப் படைத்தவர் இவர்தானாம். சானல் நம்பர் ஃ பைவ் இவர் உருவாக்கிய வாசனை திரவியம்தானாம்)
ஆச்சரியப்படுத்திய (இவர்களால் என்ன மாறிவிட்டது?) தேர்வுகள்:
வாசனைத் திரவியங்களை உருவாக்கிய எஸ்டி லாடர்
பாடகிகள் அரேதா ஃபிராங்க்ளின், மடோனா
எழுத்தாளர் வர்ஜினியா வுல்ஃப் (நான் படித்ததில்லை)
மார்த்தா ஸ்டூவர்ட் (வீட்டுப் பொருள்களை வியாபாரம் செய்பவர்)
சமையல் கலை மாதிரி புத்தகம் எழுதிய ஜூலியா சைல்ட் (சமீபத்தில் வந்த ஜூல்ஸ் அண்ட் ஜூலியா படம் இவரை வைத்துதான்)
சம்பிரதாயத் தேர்வுகள்:
இந்திரா காந்தி
மதர் தெரசா
முன்னாள் இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சர்
முன்னாள் இஸ்ரேல் அதிபர் கோல்டா மேயர்
முன்னாள் ஃபிலிப்பைன்ஸ் அதிபர் கோரஜான் அக்வினோ
ஹில்லரி கிளிண்டன்
தற்போதைய ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல்
மா-சே-துங்கின் மனைவியும், சீனாவில் பல ஆயிரம் பேர் இறப்பதற்கு காரணமாக இருந்த “கலாச்சாரப் புரட்சியின்” சிற்பியும் ஆன ஜியாங் க்விங் (நிழல் தலைவர்)
முன்னாள் அமெரிக்க அதிபர் ரூசவெல்டின் மனைவி எலியனார் ரூசவெல்ட் (நிழல் தலைவர்)
அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி சாண்ட்ரா டே ஓ’கானர்
பஸ்ஸில் வெள்ளையருக்கான சீட்டை விட்டு எழுந்திருக்கமாட்டேன் என்று உறுதியாக இருந்து அமெரிக்க கறுப்பர்களின் சமூக நீதிப் போராட்டத்துக்கு ஒரு symbolic வடிவம் கொடுத்த ரோசா பார்க்ஸ்
சமூக சேவைக்காக நோபல் பரிசு வென்ற ஜேன் ஆடம்ஸ்
டிவி ஸ்டார் ஓப்ரா வின்ஃப்ரே
விஞ்ஞானி மேரி க்யூரி
விட்டுப் போனவர்: பெண் உரிமைகளுக்கு போராடிய பத்திரிகையாளர் க்ளோரியா ஸ்டைனம். இவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை.
நான் வினவு பக்கம் போய் ரொம்ப நாளாச்சு. இன்றைக்கு தெரியாத்தனமாக ஜெயமோகன், சூப்பர்லின்க்ஸ் வழியாக அங்கே போய்விட்டேன். “இந்து ராம் – ராஜபக்சே உரையாடல்” என்று ஒரு பதிவு. அங்கிருந்து ஒரு excerpt :
இராம்: நீங்கள் தரும் விருதுகள் மட்டுமே உழைப்பிற்கு கிடைக்கும் பரிசுகள் அதிபரே . இந்தியாவின் மற்ற பத்திரிகை ஆசிரியர்களைப்போல காசுக்கு அலையும் சில்லறை அல்ல நான். அப்பாவி மக்களின் கல்லறைகளில் எனது பெயரை எழுதியாவது வரலாற்றில் ஒரு நிரந்தர இடம் பிடிக்க விரும்புகிறேன்
இராசபக்சே: இப்பொழுது தான் உண்மையான பிராமணன் பேசுகின்றான். கேவலமான செல்வத்தை விட நுட்பமான வரலாறே முக்கியமானது. நான் உங்களைப் போல ஒரு பிராமணன் கிடையாது. அதனால் தான் நான் வரலாற்றில் இடம்பிடிக்கும் வேலையுடனே செல்வத்தையும் சேர்த்து வருகின்றேன். ராஜபக்சே குடும்பத்துக்கு ஒரு பகுதி தரகாக வராமல் என் நாட்டில் எந்த ஒரு ஒப்பந்தமும் நிறைவேறுவதில்லை.
இதற்கப்புறம் படிப்பதை நிறுத்திவிட்டேன். ராம் இவர்கள் கண்ணில் அப்பாவி மக்களின் கல்லறைகளில் பேரை எழுதி வரலாற்றில் இடம் பிடிக்கிறாரா இல்லையா என்பது ஒரு பக்கம்; அதுதான் உண்மையான பிராமணனின் இலக்கணம் என்று அடுத்த வரி வருகிறது பாருங்கள், இவர்கள்தான் ஜாதியை ஒழித்து புரட்சி பண்ணி உப்மா கிண்டப் போகும் தன்மான சிங்கங்கள் என்று தெளிவாகத் தெரிகிறது!
என் ஏழு வயதுப் பெண் க்ரியாவை காலையில் ஸ்கூல் போக வேண்டும் எழுந்திருடா என்று எழுப்பிக் கொண்டிருந்தேன். அவளுக்கு எழுந்திருக்க மனமே இல்லை. நாலைந்து முறை கூப்பிட்ட பிறகு தூக்கக் கலக்கத்திலேயே கடுப்போடு சொன்னாள் – “Daddy, I woke up so many times in my dream already!”
எங்கள் கல்லூரி நண்பன் ஸ்ரீதரின் பெண் மனஸ்வினி. மனஸ்வினி சிறு வயதிலிருந்து நடனம் கற்றுக் கொள்கிறாள். சமீபத்தில் NDTV அவளது நடன நிகழ்ச்சியிலிருந்து ஒரு க்ளிப்பை ஒளிபரப்பியது. பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. நண்பனின் பெண் என்பதற்காக சொல்லவில்லை, உண்மையிலேயே அழகாக ஆடுகிறாள். (கிட்டத்தட்ட இரண்டு நிமிஷம் கழிந்த பிறகு அவளுடைய நடனம் வருகிறது.)
இது அவளுடைய 75-ஆவது நிகழ்ச்சியாம். கடின உழைப்பு தெரிகிறது. ஒரு துறையில் நல்ல திறமை அடைய பத்தாயிரம் மணி நேரம் பயிற்சி பெற வேண்டும் என்று சொல்வார்கள். மேலேயே பயிற்சி பெற்றிருப்பாள் என்று நினைக்கிறேன். குழந்தைகள் பத்தாயிரம் மணி நேரம் பயிற்சி பெற வேண்டுமென்றால் அம்மா ஜெயஸ்ரீ, அப்பா ஸ்ரீதர் இரண்டு பேரும் எவ்வளவு உழைக்க வேண்டும்! ஸ்ரீதர் படிக்கும் காலத்தில் கூட இவ்வளவு கஷ்டப்பட்டு படித்திருக்கமாட்டான்!
இந்தக் கால இளைஞர் இளைஞிகள் எஞ்சினியரிங், டாக்டர், காமர்ஸ் என்று வழக்கமான வழியில் போகாமல் வேறு துறை பற்றி நினைப்பதே சந்தோஷமாக இருக்கிறது!
மனஸ்வினியை நான் கடைசியாகப் பார்த்தபோது அவளுக்கு ஒரு பத்து வயதிருக்கலாம். சிறு பெண் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், குழந்தைகள் எவ்வளவு சீக்கிரம் வளர்ந்துவிடுகிறார்கள்! இனி மேல் குழந்தை என்று சொல்வதே தவறு!
2G ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி நண்பர் திருமலை ராஜனும் நண்பர் பாலாஜியும் நடத்திய ஒரு ப்ரோக்ராமைப் பற்றி எழுதி இருந்தோம். இப்போது அந்த ப்ரோக்ராமை இன்டர்நெட்டில் கேட்கலாம். இரண்டு பகுதிகளாக இருக்கிறது. பகுதி ஒன்று இங்கே, பகுதி இரண்டு இங்கே.
எங்கள் மாமா இயல்பாகவே நகைச்சுவை உணர்வுள்ளவர். நகைச்சுவையை வருந்தி இழுத்துப்பேச மாட்டார். ஆனால் பேசும்போது தானாக வந்து விழும். அதனால் ரசிக்க முடியும்.
எங்களூரில் இருந்து மூன்று மைல் தூரத்தில் அவருக்கு பெரிய தென்னந்தோப்பு இருந்தது. தினமும் அங்கே போவார். நாங்கள் எப்போதாவது குடும்பமாய்ப்போய் இளநீரை வேட்டுவிட்டு வருவதுண்டு. பஸ் கிடையாது, ரயிலில்தான் போகவேண்டும். காலை 7 மணி ரயிலில் போனால் மாலை இருட்டியபின் வரும் ரயிலில்தான் திரும்பி வரவேண்டும். அப்படி ஒருமுறை திரும்பி வருவதற்கு மாலை ஐந்து மணிக்கெல்லாம் கிராமத்து ரயிலடியில் வந்து உட்கார்ந்துவிட்டோம்.
பொழுதடையும் நேரம். ரயிலடி பெஞ்சில் நாங்கள் அமர்ந்திருந்தபோது, மாமா அவரது தோப்புக்காட்டில் குடியிருக்கும் குடியானவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ரயில் ட்ராக்கின் அந்தப்பகம் ஒரு ஐந்து பேர் ஒவ்வொருவரும் ஒரு கையில் நீளமான துப்பாக்கியும், மறு கையில் அவர்கள் சுட்டு வீழ்த்திய கொக்கு, குருவிகளையும் தூக்கிக்கொண்டு நடந்து போய்க்கொண்டிருந்தனர். ‘மாரிமுத்து, அவங்கள்ளாம் யாரு? எங்கேயிருந்து வர்ராங்க?’ என்று மாமா கேட்க, அதற்கு அந்தக்குடியானவர் ‘அவைய்ங்க எல்லாம் பக்கத்திலுள்ள அலையாத்திக்காட்டில் வேட்டைக்குப்போய் கொக்கு சுட்டு எடுத்துக்கிட்டு வர்ராய்ங்க’ என்று அவர் சொன்னதும், உடனே மாமா சொன்னார்…
“மாரிமுத்து, நம்ம வீட்டிலேயும் ஒரு பழைய துப்பாக்கி இருக்கு. நாமளும் ஒரு கொக்கை புடிச்சிக்கிட்டு வந்து சுடணும்”.