December 2010


(ராஜனின் கட்டுரை என் சிந்தனையைத் தூண்டியது. இதைப்பற்றி எழுதிக் கொண்டே போகலாம். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் முயற்ச்சிக்கிறேன்)

தன் நாட்டிற்கு தேவையானவை நிறைவேறுவதற்க்கு இடைஞ்சலாக இருக்கும் பிற நாடுகளை தண்டிக்கவேண்டும் என்பது எல்லா நாடுகளுக்கும் இருக்கும் ஆவல் தான். சில நாடுகளால் முடியும். பிற சில நாடுகளால் முடியாது. இன்று எஞ்சிய ஒரே வல்லரசாக இருக்கும் அமெரிக்காவால் இதுவரை சர்வ சாதரணமாக பிற நாடுகளின் மீது படையெடுக்க முடிந்திருக்கிறது. போரிடுவதற்கு முன் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனை எதிரி நாடல்ல. தன் நாட்டிற்க்குள் இருக்கும் காங்கிரஸ் தான். கேப்பிட்டால் ஹில் அனுமதிக்கு பிறகு தான் எதுவும் செய்ய முடியும் என்ற ஒரு நிலை இருந்து வந்திருக்கிறது. கால காலமாய் நிர்வாகச் சிறகிற்க்கும், சட்டச் சிறகிற்க்கும் பிரச்சனைகள் இருந்தாலும், சட்டச் சிறகை உரிய மரியாதையுடன் நடத்தியும், வீட்டோ பலத்தை விரயமாக்காமலும், தக்க விவாதங்களுக்குப் பிறகே வழி வழியாக வந்த குடியரசுக் கட்சிகளும், ஜனநாயக கட்சிகளும் பிற நாடுகளின் மேல் போர் தொடுத்திருக்கிறது. 60களின் இறுதிகளில் ஜனநாயக கட்சியின் லிண்டன் ஜான்சன் நடத்திய வியட்நாம் போர், அதற்கு பின் 90களின் ஆரம்பங்களில் குடியரசு கட்சியின் முதலாம் ஜார்ஜ் புஷ் ஈராக்கில் நடத்திய ”ஆப்பரேஷன் டெஸர்ட் ஸ்ட்ராம்”  ஆகியவைகள் கூட இந்தக் கோட்பாடுகளை மீறவில்லை. சட்டச் சிறகில் இருக்கும் சில நல்ல இதயங்கள் எப்பொழுதுமே அமெரிககாவின் அநீதியான போர்களுக்கு உடன் படாமல் முட்டுக் கட்டை போட்டு வந்திருக்கிறார்கள். அதனால் தான் தினந்தோறும் ஒரு போர் என்று அமெரிக்கா கிளம்பி விடாமல் தடுக்க முடிந்து வந்தது. ஆனால் சமீப காலங்களில் காங்கிரஸிர்க்கு அழுத்தங்கள் கொடுக்கும் ஒரு சில யுக்திகளை கையாண்டு வந்திருக்கிறது நிர்வாகச் சிறகு. இந்த அழுத்தங்களின் முன் வாயில்லா பூச்சியாக படிந்து போகும்படி சட்டச் சிறகின் கட்டுப்பாடு மற்றும் சமன்படுத்தும் இயந்திரம் பழுது அடைந்து வருகிறது.

(Operation Desert Storm - Courtesy - Wikipedia)

அடுத்தக் கட்ட இடைஞ்சல் பன்னாட்டு மன்றம். அமெரிக்க நிற்வாகச் சிறகு பன்னாட்டு மன்றத்தை ஒரு கிள்ளுக் கீரையாகவே மதித்து வந்திருக்கிறது. அமெரிக்காவை பொறுத்தவரை பன்னாட்டு மன்றம் என்ற அமைப்பு ஒரு உணவு விநியோக இயக்கமே. அமெரிக்கா பன்னாட்டு மன்றத்திற்கு அதற்கு மேல் எந்த ஒரு அதிகாரத்தையும் விட்டுக் கொடுக்க தயாரில்லை. 2001 இறுதியில் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ”பன்னாட்டு மன்றம் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் அமெரிக்கா ஈராக்கின் மேல் படையெடுக்கும்” என்று திட்ட வட்டமாக கூறியதும் இன்றைய கால பன்னாட்டு மன்ற பாதுகாப்பு மன்றத்தின் இயலாமை வெட்ட வெளிச்சத்திற்கு வந்து விட்டது. அன்றைய செக்ரட்டரி ஜெனரல் கோஃபி ஆனன் இதை வெளிப்படையாகவே கூறிவிட்டது நினைவிருக்கலாம். அப்படியென்றால் பன்னாட்டு மன்றத்தின் பணிகள் மிகவும் சுறுக்கபட்டுவிடுகிறதா? இது இயற்க்கையாக நடந்து வருகிறதா? இல்லை திட்டமிட்ட சதியா? இறுதியில் பன்னாட்டு மன்றம் அதன் எல்லா அதிகாரங்களையும் இழக்கச் செய்து, அதனை “லீக் ஆஃப் நேஷன்ஸ்”க்கு நேர்ந்த முடிவிற்க்கு தள்ளி விடுவதே உறுப்பு நாடுகளின் எண்ணமா? அதுவும் அமெரிக்காவின் நடவடிக்கைகளைப்ப் பார்க்கும் பொழுது சதியாக இருக்கலாம் என்பது  நம்பும் படியாகவே உள்ளது.

பன்னாட்டு மன்றம் பல விதங்களில் அமெரிக்க வெளியறவு கொள்கைகள், குறிப்பாக குடியரசு கட்சியின் கொள்கைகள், மேலும் குறிப்பாக ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சிக் கொள்கைகள் மற்றும் ஆசை, அமிலாஷைகளிற்கு நடுவே இடைஞ்சலாக நின்று கொண்டு வந்திருக்கிறது. இந்தப் பிரச்சனைகளை அடியோடு வேறறுக்க ரீகன் காலம் முதல் பல அலோசனை-குழு (think-tank) சிந்தித்துக் கொண்டு தானிருந்தார்கள். 1997ல் அதற்க்காக ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதற்கு Project for the New American Century (PNAC) என்று பெயர். (Project Manhattan என்று அணுகுண்டு தயரிப்பிற்கு ஒரு பெயர் இருந்தது நினைவிருக்கலாம்.  PNACக்கும் ஒருவிதத்தில் ஒரு பெரிய அணுகுண்டு தான்). குடியரசு கட்சியின் நியோ-கான் குழு 2006 வரையில் மிகவும் மும்மரமாக இந்த ஏற்ப்பாட்டில் செயல் பட்டு வந்தது. டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட், டிக் ஷெய்னி, பால் உல்ஃபாவிட்ஸ், பில் கிஸ்டால் மற்றும் பலர் இதன் மைய அச்சு. அவர்கள் கொளகை “குளொபலைசேஷன்” (வர்த்தக கண்ணோட்டத்தில் அல்ல – அரசியல் கண்ணோட்டத்தில்; ஆனால் வர்த்தகம் உள்ளடங்கியது). அதாவது அமெரிக்கா மேலே, மற்ற நாடுகளெல்லாம் அமெரிக்காவின் கீழே. இதன் அர்த்தம் என்ன வென்றால் உலகை ஆள ஒரு மைய அரசே இருக்கவேண்டும். அந்த மைய அரசு அமெரிக்கா. மற்ற நாடுகளெல்லாம் அமெரிக்கா சொல்வது போல் கேட்டு அதன் படி எதிர்ப்பின்றி நடக்க வேண்டும். அப்படி ஒரு ”வேர்ல்ட் ஆர்டர்” வந்தால் செல்லாக் காசாகிப் போய்கொண்டிருக்கும் பன்னாட்டு மன்றத்திற்கு நிரந்தர ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடலாம், தன் இஷ்டப்படி ஆடலாம், தன் இஷ்டப்படி பிற நாடுகளைஆட்டி வைக்கலாம் என்பது அமெரிக்காவின் கனவு. இது பகல் கனவல்ல. பீதியை விளைவித்த ஒரு உண்மை. இதைச் செயலாக்கும் முதல் திட்டமே எப்பாடு பட்டாவது ஜார்ஜ் புஷ்ஷை ஜனாதிபதி ஆக்குவது என்பது என் யூகம். அதன் பிறகு நடந்த செப்டம்பர் 11, 2001 திவிரவாத சம்பவங்கள் இவர்களுக்கு ஒரு நல்ல தொடக்கமாக இருந்தது. வர்த்தக பலத்திற்கு ஈராக்கின் எண்ணெய், ஈரானை முற்றுகையிடல் , ஏன் அணைத்து மத்தியக் கிழக்கு நாடுகளையுமே கைக்குள் கொண்டு வருதல், வட கொரியாவை அடக்குதல் எல்லாம் இதன் பரந்த திட்டங்களின் சில பகுதிகள் தான். சேச்சன்ய தீவிரவாதத்தின் மூலம் ரஷ்யாவிற்கு தலைவலி கொடுத்தல, யுக்ரெய்ன் நாட்டின் உள் நாட்டு குழப்பத்திற்கு துணைபோதல் எனறு பல இடஙகளில் அமெரிக்க கைவைக்கும் பொழுதெல்லாம் PNAC பார்வையில் பார்த்தால் எல்லாவற்றிற்கும் ஒரு உள்ளார்த்தம் இருப்பதாக தோன்றும்.

ராஜன் எங்கள் நண்பர். மிக விவரம் தெரிந்தவர். அவர் இங்கே பல கட்டுரைகள் எழுதியுள்ளார். சமீபத்தில் அவரது ”அமெரிக்க போர்களும் விளைவுகளும்: கடந்த பத்தாண்டு- ஒரு பார்வை: ராஜன் சடகோபன்” என்ற தலைப்பில் தினமலர் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. மிக தெளிவாகவும், அபாரமான தகவல்களுடனும் தொகுத்து வழங்கியுள்ளார். அமெரிக்க போர்களை பற்றி தெரியாதவர்கள் “catch up” செய்து கொள்ள ஒரு அருமையான சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்.

படித்துப் பாருங்கள். விரைவில் அது பற்றிய கட்டுரைகள் இங்கேயும் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

நண்பர்கள் திருமலைராஜனும் பாலாஜியும் நாளை ஸ்பெக்ட்ரம் 2G பற்றி ஒரு ரேடியோ ப்ரோக்ராம் நடத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சியை இங்கே ஆன்லைனில் கேட்கலாம். நாளை (டிசம்பர் 21) பசிபிக் நேரம் காலை 7:30 a.m. – 9:00 a.m. வரைக்கும் நடக்கும். இந்திய நேரம் இரவு 9:00-இலிருந்து 10:30 மணி வரை. ராஜன் இங்கே பல பதிவுகளை எழுதி இருக்கிறார். எந்த விஷயமாக இருந்தாலும் நன்றாக ஆராய்ந்து பல விவரங்களை சேகரித்து பேசுபவர்.

கேட்டுப் பாருங்கள், ஒரு மணி நேரம் நன்றாக பொழுது போகும்!

பாகம் 1

பாகம் 2

(நன்றி – itsdiff.com வானொலி மற்றும் ஸ்ரீகாந்த் )

அமெரிக்காவில் வீட்டை தினமும் பெருக்கி துடைப்பது என்பது முடியாத காரியம். அவ்வப்போது இரண்டு maids வந்து பெருக்கிக் கொடுத்துவிட்டுப் போவார்கள். அதற்கு அவர்களிடம் முன் கூட்டியே அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டும். கொஞ்சம் hassle.

என் மனைவி ஹேமாவுக்கு அவர்கள் நாளைக்கு வருகிறார்கள் என்றால் இன்றைக்கே டென்ஷன் ஆரம்பித்துவிடும். எனக்கு அது புரிந்ததே இல்லை. நாம் பணம் கொடுக்கிறோம், அவர்கள் வேலை செய்கிறார்கள், அப்பாயின்ட்மென்ட் கிடைத்துவிட்டால் இதில் என்ன டென்ஷன்?

போன முறை என் மனைவி சொன்னதைக் கேட்டதும்தான் ஓரளவு புரிய ஆரம்பித்திருக்கிறது – “நாளைக்கு maids வராங்க, இன்னிக்கு நமக்கு வேலை இருக்கு – வீட்டை கிளீன் பண்ணி வச்சிடணும்!”

தொகுக்கப்பட்ட பக்கம்: குடும்பம்

(இது அண்மையில் தான் ”அவார்டா கொடுக்கறாங்க” ப்ளாக்கில் வெளியானது. ஒரு சிறிய குழப்பத்தினால் இங்கே வரவேண்டியது அங்கே வெளிவந்துவிட்டது. எனவே மீண்டும் இங்கே.)

(இது ஈஷ்வர் கோபால் அனுப்பியுள்ள செய்தி)
திரு. உமர் எழுதிய ‘கலை உலகச் சக்கரவர்த்திகள்’ என்ற நூலிலிருந்து சில சுவாரசியமான தொகுப்புகள் :-

‘நாதசுவரச் சக்ரவர்த்தி’ டி.என். ராஜரத்தினம் பிள்ளை பிரயாணம் செய்யும்போது, ரயிலிலும் சரி, காரிலும் சரி, கச்சேரிக்குச் செல்லும்போது ஒரு பெரும்படையுடன்தான் செல்வார்.  ஒருதரம் சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் அவர் வந்து இறங்கியபோது அவருடன் வந்தவர்கள் சாரதா (அவர் மனைவிகளுள் ஒருவர், அவருக்கு ஐந்து மனைவிகள்), 2 அல்சேஷன் நாய்கள், 1 தாளம் போடுபவர், 1 ஒத்து ஊதுபவர், 2 தவில் வித்வான்கள், 1 நாதசுவர வித்வான், 2 எடுபிடிகள் ஆக பத்து நபர்களுடன் வந்திறங்கினார். பிரயாணத்திலும் கூட அவரது ஆடம்பர வாழ்வு தெரிந்தது.

இவர் ஒரு தனிப் பிறவி! சுகபோகங்களின் சிகரம்.  கேவலம், கையொப்பம் இடட்டும் – கொட்டைக் கொட்டை எழுத்துகள். அரைப் பக்கம் நிரம்பிவிடும். லெட்டர் பேப்பரும் வால் நோட்டீஸ் மாதிரித்தான். அதன் ஜோடி கவர் 15 அங்குலம் நீளமாகவும் இருக்கும். தபால் இலாகாவுக்கு நல்ல லாபம். கவரின் மேல் அச்சிட்டுள்ள பட்டம், பதவிகளின் போக்கும் கொஞ்சமும் இளைத்தவையல்ல, ரொம்பவும் பொருத்தமான பட்டங்களும் கூட. ‘நாதஸ்வரச் சக்கரவர்த்தி’, ‘ அகில உலக ஜோதி’…

மோட்டார் கார் பெரிய ரதம், காலனுக்கு (gallon) எட்டு மைலுக்கு மேல் ஓடாது. கச்சேரிகளுக்குப் பிரயாணம் செய்யும்போது,பக்கவாத்திய பரிவாரம், குடும்பம் சகலமும் காரில் அடங்கிவிடும். காதுகளில் மோட்டார் ‘ஹெட் லைட்’டுக்குச் சமமான வைரக் கடுக்கன் ஜோடி, அதை எஸ்.ஜி. கிட்டப்பாவிடம் விலைக்கு வாங்கி அணிந்துகொண்டதாகச் சொல்லுவார்கள், ஜரிகை மயமான ஆடை, அழுத்த வர்ணங்களில் பட்டுச் சட்டை, கவுன் போலவும் கழுத்து முதல் பாதம் வரை சில சமயங்களில் அணிந்துகொள்வார், முதலாளி மட்டுமேயல்ல, செட்டிலுள்ள பையன்களும் ஆடம்பரமான வேஷத்துடந்தான் இருப்பார்கள்.

பொடி டப்பி, பேர் பொடி டப்பியானாலும், டிரங்க் என்றுதான் சொல்லவேண்டும். பாப்பா கே.எஸ்.வெங்கட்ராமையா, வெள்ளியும் பொன்னும் கலந்த பெரிய பொடி டப்பியைப் பிரத்தியேகமாகத் தயாரித்து, ராஜரத்தினம் பிள்ளைக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். வெற்றிலைப் பெட்டி, ஒரு கூட்ஸ் வண்டி மாதிரி இருக்கும். கூஜா ஒரு வெள்ளி டிரங்க். இவ்வளவையும் தூக்கிக்கொண்டு, ரயில் பிரயாணம் முதல் வகுப்பில் வருவார்.

டி.என்.ஆர். ஓட்டல் தாசப்பிரகாஷில் தங்கியிருந்தபோது உஸ்தாத் கான்சாகிப் படே குலாம் அலி கான் அதே விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். ஒரு நாள் ஜி.என்.பியை அழைத்துக் கொண்டு டி.என்.ஆர். இருந்த அறைக்கு வந்துவிட்டார். இருவர் வரவையும் கண்டு பூரித்துப் போனார் டி.என்.ஆர். சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்த்தும், கான்சாகிபின் பாட்டைக் கேட்க ஆசைப்பாட்டார் டி.என்.ஆர். டி.என்.ஆரின்  ஆசையை ஜி.என்.பி. சொன்னது, ‘மாண்ட்’ ராகத்தில் அற்புதமாக அரை மணி நேரம் பாடினார் உஸ்தாத். கான்சாகிப் பாட்டைக் கேட்டதும் ஜி.என்.பி. அப்படியே மயங்கிவிட்டார். ராஜரத்தினம் பிள்ளைக்கு குஷி வந்துவிட்ட்து. விடுவாரா பிள்ளை, படே குலாம் வாசித்த அதே ‘மாண்ட்’ ராகத்தை தனது நாதசுவரத்தில் இரண்டு மணி நேரம் வாசித்தார். ஜி.என்.பி-யும் படே குலாம் அலி கானும் வியந்துவிட்டார்கள்.

“நாதசுவரச் சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை’ என்று விலாசமிட்டு வந்தால்தான் கடிதங்களையோ, அழைப்பிதழ்களையோ பிரித்துப் பார்ப்பார். ‘நாதசுரச் சக்கரவர்த்தி’ என்று தனது பெயருக்கு முன் போடாத, மொட்டையாக டி.என்.ராஜரத்தினம் பிள்ளை என்று மட்டும் வரும் கடிதங்களைப் பிரித்துப் பார்க்காமலேயே குப்பையில் வீசிவிடுவார்.

நாகப்பட்டினத்தில் ஒரு நாதஸ்வர வித்வான். அவர் கையில் நாதஸ்வரம், வாசிப்பில் அபஸ்வரம், ஆனால் வேஷத்தில் ராஜரத்தினம் பிள்ளை அவர்களை அப்பட்டமாகக் காப்பியடித்துக் கொண்டிருந்தார். முன்பு அவர் குடுமி வைத்துக் கொண்டிருந்தார். பின்னர் கிராப்புத் தலை ஆனார்.  அதே ஜொலிப்புக் கடுக்கன், அதே டால் வீசும் மோதிரங்கள் போதாக்குறைக்கு “ஏகலைவன் மாதிரி அண்ணாச்சியை மனசிலே வச்சுக்கிட்டு வாசிக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அத்துடன் நிற்காமல் ராஜரத்தினத்துக்கு நாதஸ்வரம் செய்து தரும் ஆசாரியைப் பிடித்து, அவருடைய வாத்தியத்தின் பிரத்தியேக அமைப்பையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.  அத்துடனாவது நிறுத்திக் கொண்டிருக்கலாம். “அண்ணாச்சி வாத்தியம் இருபத்தேழு இஞ்சு தானே, என்னுடைய வாத்தியத்தை இருபத்தெட்டரையாகப் பண்ணிவிடு” என்று வேறு சொல்லி வைத்தார். இது எப்படியோ பிள்ளைவாளின் காதுக்கு எட்டிவிட்டது.  அவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டார்.  கொஞ்ச நாள் கழித்து ராஜரத்தினம் பிள்ளை நாகப்பட்டினம் போக வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது. அங்கே ஒரு கச்சேரி. போன உடனேயே உள்ளூர் நாதஸ்வரத் தம்பிக்கு சொல்லியனுப்பினார். தம்பிக்கு ஒரு புறம் சந்தோஷம், இன்னொரு புறம் பயம். ஒருவாறு மனதைத் திடப்படுத்திக்கொண்டு ராஜரத்தினத்தின் முன் தயங்கித் தயங்கி நின்றார்.

“என்ன தம்பி, சவுக்கியமாயிருக்கியா”?

“இருக்கேன், உங்க ஆசீர்வாதம்”.

“அசப்பிலே பார்த்தா என்னை மாதிரியே இருக்கே. என்னைப் போலவே ஊதறியாமே? பேஷ், பேஷ், யாருகிட்டே பாடம்”?

“உங்களையே குருவா மனசிலே எண்ணிக்கிட்டேனுங்க, கேட்கப் போனா இந்த வட்டாரத்திலே என்னை எல்லோரும் ‘சின்ன ராஜரத்தினம்’னுதான் சொல்லுவாங்க. எல்லாம் உங்க ஆசீர்வாதம்!”

“அது சரி நீ என்னவோ ஆசாரிகிட்டே உன் வாத்தியத்தை இன்னும் கொஞ்சம் நீளமாகச் செய்யச் சொன்னயாமே, என்ன ரகசியம் அதிலே”?

“அதெல்லாம் ஒண்ணுமில்ல, மந்தர ஸ்தாயியை இன்னும் கொஞ்சம் அழுத்தமாப் பேச வைக்கலாம்னு ஓர் இஞ்ச் கூடுதலா பண்ணச் சொன்னேனுங்க”.

“அது போவட்டும், டிரஸ், கிரஸ், ஆபரணங்கள் எல்லாம் என்னைப் போலவே போட்டுகிட்டு இருக்கியே?”

உள்ளூர்த்தம்பி ஓர் அசட்டுச் சிரிப்பு சிரித்தார். தம்பிக்கு நிறைய காப்பி, பலகாரம் வாங்கிக் கொடுத்த பின், இருவரும், ஒரு காரில் ஏறி, வெளியே போனார்கள். ராஜரத்தினம் தன் ஓட்டுனரை விளித்து, “நேரே சலூனுக்கு ஓட்டப்பா!” என்றார். கார் சலூன் போய்ச் சேர்ந்த்து. தாம் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு உள்ளூர்த் தம்பியைப் பக்கத்து நாற்காலியில் உட்காரச் சொன்னார். தம்பிக்கு பகீரென்றது. “என்ன விபரீதம் நடக்குமோ”? என்று தயங்கினார்.

“சும்மா உட்காருப்பா!” என்றதும் தயங்கித் தயங்கி நாற்காலியில் ஏறி உட்கார்ந்திருந்தார். முடி திருத்தும் கலைஞரைப் பார்த்து, “இரண்டு பேருக்கும் மொட்டை அடி, திருப்பதி ஸ்டைலில்” என்றார். உள்ளூர்த் தம்பி அலறி, “என்னங்க இது! நான் என்ன தப்பு செய்தேன்?” என்று கதறியே விட்டார். “பின்னே என்னவென்று நினைச்சுகிட்டே? எல்லாத்திலேயும் நீ என்னைக் காப்பி அடிக்கிறே. நான் கடுக்கன் போட்டா நீ கடுக்கன் போடறே. நான் தோடா போட்டா நீயும் ‘தோடா’ போடறே. கழுத்து சங்கிலியிலே பாதியை
ஜிப்பாவுக்கு வெளியே எடுத்து விடுக்கிறே. கட்டுக்குடுமி வச்சுக்கிடா கட்டுக்குடுமி வச்சுக்கிறே, கிராப்பு வச்சிக்கிட்டா கிராப்பு வச்சிக்கிறே. வாத்யம் பண்றதிலே என்னை ஒரு படி மிஞ்சி ஒன்றரை இஞ்ச் கூட வைச்சு ஆர்டர் பண்றே. நான் இப்ப மொட்டை அடிச்சுக்கப்போறேன். நீயும் அடிச்சுக்க!” என்றார். தம்பிக்கு புத்தி வந்து சரணாகதி அடைந்த பிறகுதான் சலூனை விட்டு வெளியே வந்தார்.

டி.என்.ஆர். 1956ஆம் ஆண்டில் மாரடைப்பால் காலமானார். இவர் சம்பாதித்த தொகையின் மதிப்பு அக்காலத்திலேயே கோடி ரூபாய்க்கும் அதிகம் என்பார்கள். ஒரு கச்சேரிக்கு 1950ம் ஆண்டிலேயே பத்தாயிரம் ரூபாய் வாங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவ்வளவு பணம் குவிந்தும் சிக்கனமாகச் செலவு செய்யாது மிகவும் ஆடம்பரமாக செலவு செய்துவிட்டார். கடைசிக் காலத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாதவை. இவரின் இறப்புச் சடங்குகளை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்தான் ஏற்றுக்கொண்டார்.

(நண்பர் கோபாலின் எழுத்து பலரை பழைய நினைவுகளுக்கு தள்ளிவிட்டது. சாரதா அவர்கள் தன் அனுபவத்தை கூறுகிறார்)

நன்றி கோபால், பழையவற்றைக்கிளறிவிட்டமைக்காக. பழையவற்றை அசைபோடுவதுபோன்ற இனிமையான அனுபவம் உண்டா?. என்னைப்பொறுத்தவரை ‘கிடையாது’ என்பதே என் பதில்.

எங்கள் இளம் பருவத்தில், எங்கள் ஊரில் எங்கள் வீட்டிலும் பல ஆண்டுகள் பசுமாடு இருந்தது. எங்கள் ஊரிலும் ‘பவுண்டுத்தொழு’ இருந்தது. சென்னையின் இயந்திர கதியில் வாழ்க்கையைத் தொலைக்கும் முன், அனுபவித்த சுவையான நினைவுகளை உங்கள் கட்டுரை கிளறிவிட்டுவிட்டது. சேர்மன்வாடி சந்திப்புக்கும், பழஞ்செட்டித்தெரு சந்திப்புக்கும் இடையே, மெயின் ரோட்டிலேயே இருந்தது பவுண்டுத்தொழு. எங்களுடையது நல்ல பசு ஆதலால் ஒருநாளும் பவுண்டில் அடைக்கப்பட்டதில்லை. ஆனால் என் நண்பர்களின் வீட்டு மாடுகள் அடைபட்ட போதெல்லாம் போய்ப்பார்த்த அனுபவம் உண்டு.

உயர்நிலைப்பள்ளி முடியும் வரை ஆண், பெண் பாகுபாடின்றி பழகிய காலம் அது. அப்போது ஊரில் இருந்தது ஒரே உயர்நிலைப்பள்ளி. சேதுரோட்டுக்கு தெற்கே பெரிய கிரவுண்டைக்கடந்து போக வேண்டும். அல்லது கஸ்டம்ஸ் ரோட்டில் போய் பள்ளி அருகில் கிழக்கு நோக்கி இறங்க வேண்டும். சற்று தூரத்தில் ஆண்கள் கல்லூரி சேது ரோட்டுக்கு வடக்கே, சாலையை ஒட்டியே இருந்தது. எங்களது எஸ்.எஸ்.எல்.சி. வரை கோ-எஜுகேஷன் ஸ்கூல். பள்ளிகூடத்திலேயே காதல் உண்டாவதாகக் காண்பிக்கும் திரைப்படங்கள் வராததாலும், அவ நம் வீட்டுக்கூடத்துக்கே வந்து கெடுக்கும் தொலைக்காட்சிகள் இல்லாததாலும் மனதில் கல்மிஷம் இல்லாமல் பழகிய வயதுகள். எங்கள் கூட்டத்தில் ஆறு மாணவர்கள், ஐந்து மாணவிகள், என்னையும் சேர்த்து. எப்போதும் ஒரே கூட்டமாக சுற்றுவோம். பள்ளியில் யூனிபாரமெல்லாம் கிடையாது. கலர்கலராக பாவாடை, தாவணி அணிவோம். மாணவர்கள் நினைத்தால் பேண்ட் அணிந்து வருவார்கள் அல்லது லுங்கி (?) அணிந்து வருவார்கள்.

எங்கள் ஊர் பவுண்டுத்தொழு சுமார் இருபது அடிக்கு இருபது அடி சதுர இடம், அதிலேயே ஆடுகளுக்காக சின்ன உட்பிரிவு, அதற்கு தனியாகக்கதவு. ஆடுகளுக்கான பிரிவுக்கு மட்டும் மேற்கூறை, மாடுகளுக்கு வெட்டவெளி. இரண்டு கதவுகளிலும் முக்காலுக்கு முக்கால் அடியில் கம்பிகள் போட்ட ஒரு திறப்பு உண்டு. உள்ளே நிற்கும் மாடு அல்லது ஆடுகளை அதன் வழியாகப் பார்த்துக்கொள்ளலாம். அந்த வழியாகப்போகும்போதெல்லாம் சும்மா போய் உள்ளே எட்டிப்பார்ப்போம். ஏதோ அவைகளை அழைத்துப்போக வந்திருப்பதுபோல பரிதாபமாகப்பார்க்கும். உள்ளே அடைத்தாலும் பட்டினி போட்டுவிட மாட்டார்கள். உள்ளே கொஞ்சம் வைக்கோல் அல்லது புல், மற்றும் ஒரு பக்கம் சிமெண்ட் திண்ணையோடுகட்டப்பட்ட ‘குடுதாழி’ எனப்படும் தண்ணீர்த் தொட்டியில் நிறையத்தண்ணீர் இருக்கும்.

சில நேரங்களில் எட்டிப்பார்க்கும்போது, நமக்குத்தெரிந்தவர்கள் வீட்டு மாடு அல்லது ஆடு உள்ளே நின்றால் அவர்கள் வீட்டுக்குப்போய் ‘உங்க வீட்டு மாட்டைக்காணோமா?. பவுண்டுல அடைச்சி வச்சிருக்காங்க’ என்று தெரிவித்து சமூக சேவை செய்வதும் உண்டு.

பள்ளிப்படிப்பை முடித்து விட்டு மேற்படிப்புக்காக சென்னை ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் சேர்ந்ததும், சூழ்நிலைகள் சுத்தமாக மாறிப்போனது. என்னவோ திடீரென்று சந்திர மண்டலத்தில் போய் இறங்கியது போன்றதொரு நிலை. ஊரில் ஆண் மாணவர்களோடு பழகும்போது கூட தப்பாக தெரியாத பழக்க முறைகள் மறைந்து, மாணவிகளிலேயே கூட வார்த்தைக்கு வார்த்தை தவறான உள்ளர்த்தம் வைத்து பேசும், முற்றிலும் புதியதொரு சூழ்நிலை புரிபடத்துவங்கியது.

நிறைய ஆண்டுகள் கடந்தபின்னர் ஊர் சென்ற சமயம் பவுண்டுத்தொழுவத்தைப் போய்ப்பார்த்தபோது, அது உபயோகத்தில் இல்லையென்று சொன்னார்கள். இருந்தாலும் ஆர்வத்துடன் முக்காலடி ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தேன். காலியாகக்கிடந்தது. இடம் முழுக்க கருவேலஞ்செடிகள் மண்டிக்கிடந்தன. இதுவும் சரி, இதோடு இணைந்த பழைய ரெவினியூ இன்ஸ்பெக்டர் அலுவலகமும் சரி, நொறுங்கிப்போய் இன்றோ நாளையோ விழும் நிலையில் இருந்தன.

விரைவில் அவற்றை இடிக்கப்போவதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். இடிந்து கட்டந்தரையாகப் போகும்முன்னர் பார்த்துவிட்ட திருப்தியில் பெருமூச்சு விட்டேன். ‘இவ்வளவுதான் வாழ்க்கை’யென்பதை எவையெவைல்லாம் நமக்குப்புரிய வைக்கின்றன.

கடற்கரையோரம் அமைந்துள்ள ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனேன். மாலைநேரம். அப்போது ரயில் வரும் நேரமில்லையாதலால் பிளாட்பாரம் வெறிச்சோடியிருந்தது. நான் ஒருத்தி மட்டுமே. ஆகவே அங்குள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தேன். எதிரே பரந்து விரிந்துகிடந்த உப்பளத்தில் இருந்து வீசிய காற்று புடவையைப் பறக்கவைத்தது. சுற்றிலும் பார்த்தேன் யாருமில்லை. கடந்துபோன இன்பமான நாட்களில் மனம் லயித்துப்போக, அழத்துவங்கினேன், கண்ணீர் வற்றும்வரை

By ஈ. கோபால்

இளங்குடி:
இந்த செவலை ஒரு முறை ஈன்றபோது அந்த பிரசவத்தை எப்படியாவது பார்க்க எண்ணி, கொல்லையில் போய் ஒளிந்து நின்று பார்த்தேன், அப்போது 7ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். மிகவும் லாவகமாக பிரசவம் பார்த்தார் தட்சணைக்கோனார், முதலில் நான் பயந்து விட்டேன். இரண்டு நாட்கள் பின்கட்டிற்கு போகவேயில்லை. ஏன் இந்த பசு இவ்வளவு வேதனைப்படுகிறது என்ற விடை கிடைக்காமல் மனது ததும்பும். இந்த தொப்புள்கொடி என்பது கூட வரும் சதைக் கழிவுகளை “இளங்குடி” என்பார்கள் (placenta). இதை ஒரு ஓலைப்பாயில் கட்டி தனியாக எடுத்து வைத்து,  ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நெடுஞ்சாலையில் உள்ள பெரிய ஆலமரத்தில் கொண்டு போய் கட்டிவிடுவார்கள். இப்படிச் செய்தால் நிறைய பால் கறக்கும் என்ற நம்பிக்கை (இது ஏன் என்று தெரியவில்லை.  ஆலமரத்தில் நூல் கட்டுவதும், குழந்தை பிறக்க வேண்டி சிறு தொட்டில்களை மரத்தில் கட்டுவதும் போல அப்போது நிலவிய ஒருவித கிராம நம்பிக்கையாக இருந்திருக்கலாம்). பல பசு மாடுகளும் ஊரில் ஈனும்போதும் இதே போல செய்வதால், நாம் எங்காவது பேருந்தில் வெளியூர் பயணிக்கும் போது, இந்த ஆலமரத்தைக் கடக்கும் போதெல்லாம் ஒரு வித வாடை மூக்கை விரல் விட்டி ஆட்டிவிட்டுச்செல்லும்.  ஆலமரம் வருவதற்கு முன்னாலேயே, நான் மூக்கைப் பொத்திக்கொள்வேன்.

சீம்பால்:
மகப்பேறிலிருந்து முதல் மூன்று(அ)ஐந்து நாட்கள் பசுவின் பால் சீம்பால் என்று அழைக்கப்படும். கன்றுக்குட்டி மட்டுமே அருந்தும், இதை நாம் குடித்தால் விஷம் என்பார்கள். விஷமெல்லாம் இல்லை, கன்றுக்குட்டிக்குரியதை நாம் எடுத்துக் கொண்டுவிடக் கூடாது என்பதால் இப்படிச் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். பல முறை இப்பாலை பால் கறப்பவரே எடுத்துக்கொண்டு போவதையும் பார்த்திருக்கிறேன். இப்பாலைக் கொண்டு தட்சணைக்கோனார் திரட்டுப்பால் போன்றதொரு இனிப்பைக் கிண்டியதை பார்த்திருக்கிறேன். பிறந்த மூன்று நாள் ஆகிய கன்றுக்குட்டி கூட விளையாடியிருக்கிறீர்களா? துருதுரு கண்களும், அமைதியான முகமும், அதன் அழகும் கொள்ளை கொள்ளும். அது ஒரு இனிமை. அது துள்ளித் திரிந்து, குதித்து ஓடுவதும், அதை பிடிக்க முடியாமல் திணறுவதையும் அனுபவித்தால்தான் தெரியும். அந்த கொட்டிலுக்குள்ளே அதை அவிழ்த்து விட்டு ஓடி விளையாடவேண்டும். தாய்ப் பசு பார்வையிலேயே வைத்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் தாய்க்கு கோபம் வந்துவிடும். அதற்கு கைக்கு அடக்கமாக பாதி பந்தை மூங்கிலில் பின்னினார்ப்போல் ஒரு கவசத்தை மாட்டி விடுவார்கள், அது மண் தின்றுவிடாமல் இருக்க.

கோவிலுக்கு நேர்ந்து விடும் மாடுகள் பிறர் நிலத்தில் போய் மேய்ந்தால், ஒன்றும் கூறமாட்டார்கள், அதற்கு அடையாளமாக, முதுகில் ஒரு நாமம் போல் கரிக்கோடை போட்டுவிடுவார்கள்.  நம் வீட்டு மாடு மேய்ச்சலுக்கு போய்விட்டு யார் வீட்டுத் தோட்டத்திலோ, வயலிலோ, வைக்கப்படப்பிலோ மேய்ந்துவிட்டால், சத்தமில்லாமல் ஊர் கிராம அலுவலகத்தருகே உள்ள பவுண்டுத்தொழு என்ற இடத்தில் அடைத்துவிடுவார்கள். இந்த ‘பவுண்டுத்தொழு’ சுவாரசியமான ஒன்று. சுமார் ஆறடிக்கு ஆறடி என்ற கணக்கில் பெரிதான கல் மதில் சுவர் எழுப்பப்பட்டிருக்கும், மேற்கூறை கிடையாது, வெட்டவெளியாக விடப்பட்ட ஒரு அறைதான் ‘பவுண்டுத்தொழு’. இதற்கு ஒரு சிறு பூட்டும், திறவுகோலும் இருக்கும், இந்த திறவுகோல் கிராம அலுவலகத்திலுள்ள அதிகாரியிடம் இருக்கும். இந்த மாடு எங்கள் விளைநிலத்தில் மேய்ந்து நெற்பயிரை நாசம் செய்து விட்டது என்று கூறி கிராம அதிகாரியிடம் திறவுகோல் வாங்கி அடைத்துவிடுவார்கள்.

காலை சுமார் 9 மணிக்கு அடைத்து விட்டார்கள் என்றால், நம் மாடை காணாமல் தேடிக் கண்டுபிடித்து ஒரு 11 மணிக்கு வந்தாலும் – அதற்குண்டான ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்தி மாடை பத்திப்போகமுடியாது. சட்டப்படி மாலை ஐந்து மணிக்குத்தான் திறப்பார்கள். அதுவரை காத்திருக்கவேண்டியதுதான். நம் மாடு காணாமல் போய்விட்டால், நமக்கு எப்படித் தெரியும்? ஒவ்வொரு இடமாக தேடிக்கொண்டே போகவேண்டும். சிலர், ஜோஸியரிடம் போவார்கள். குற்றங்கவாத்தியார் என்ற ஒரு ஜோசியர் இருந்தார், பானைத் தொப்பையும், காதுகளில் கடுக்கனும், சிவப்பில் வேட்டியும், கட்டி ஆஜானுபாகுவாக கண்ணை மூடிக்கொண்டு 9க்குள் ஒரு நம்பர் சொல்லு என்பார். பின் அங்கு மேய்கிறது, இங்கு மேய்கிறது என்று கூறுவார். சில நேரத்தில், ‘பவுண்டில்’ அடைத்துள்ளார்கள் என்று துல்லியமாக கணிப்பார். இவர் பையனே முன்கூட்டி எல்லா இடத்திலும் தேடிவிட்டு இவரிடம் கூறிவிடுகிறானோ என்ற சந்தேகம் நெடுநாள் எனக்குண்டு.

ஒருமுறை எங்கப்பா வைத்த உணவை சாப்பிடாமல் அடம்பிடித்த செவலைப் பசுவை அடித்துவிட்டார். அன்று எங்கம்மா மிகவும் அழுது சோகமாக்க்காணப்பட்டார். குடும்பத்தில் ஒன்றாகவே கருதப்படும் கால்நடைச் செல்வங்களால் மகிழ்ச்சியும், சரியாக சாப்பிடவில்லையென்றால் வருத்தமும் பட்ட காலங்கள் உண்டு. பருத்திக் கொட்டை, புண்ணாக்கை அரைக்கும் போது கொஞ்சம், எள்ளு, கொள்ளு, உப்பையும் போட்டு சுவையைக் கூட்ட அரைப்பார்கள். வைக்கப்படப்பு என்ற வைக்கோல் தேக்கி வைக்கும் பகுதி எப்போது ஒரு வெதுவெதுப்பாகவே இருக்கும். இதன் மேல் நாங்கள் உருண்டு பிரண்டு சண்டையிட்டுள்ளோம், உடம்பில் துணியில்லாமல் பிரளும்போது அரித்துக் கொட்டும், ஈரமாக இருந்தால் ஒருவித வாடை வரும். பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பம் குடிபெயர்ந்து வடக்கே போனபோது 2 பசுமாடு, எருமைமாடுகளை விற்கும் படி ஆயிற்று. மனது கணத்தது.

பல வருடம் உருண்டோடி, காலத்தின் சுவடில் பயணித்து, நாமும் அதே போல் மாற்றிக்கொண்டபின், என் பழைய வீட்டிற்கு போனேன். தொழுவம் இருந்தது. ஆட்டுக்கல் குழவி உடைந்து, சற்று கீழே  புதைந்து இருந்தது.  பலவருடம் உபயோகத்தில் இல்லாமல் இருந்த சுவடு தெரிந்தது. மேற்கூரை ஓடுகள் எல்லாம் உடைந்து, எல்லாமே அலங்கோலமாக இருந்தது. வைக்கோற்படப்பு இருந்த இடத்தில் கோரைப்புற்களும், மரமும் இருந்தது. பசுமாடு இருந்தபோது நடந்த இயல்பு வாழ்வும், பழைய நினைவுகளும் மட்டுமே பசுமையாக மனதில் ஓடியது.  ‘இதுவும் கடந்து போகும்’ என்ற வாக்கின்படி கால மாற்றத்தால் நாம் அனுபவித்த எல்லாமே கைவிட்டு போய்விட்டது ஒருவித ஏமாற்றத்தை கொடுத்தது. இனி அப்பசுமை வராது என்று உறுதியாக தோன்றியது. மனதிற்கும், உள்ளத்திற்கும் இன்பமளிக்கும் எல்லாவற்றையும் உதறிவிட்டு, எல்லாக் கெடுதல்களையும் ரசிக்க மனம் பக்குவப்பட்டுவிட்டது ஒருவிதத்தில் காலத்தின் கோலம்தான். இதுபோல் அனுபவிக்காத, ரசிக்காத வருங்காலத் தலைமுறை அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை. ஒரு விதத்தில் நாமும், நம் அனுபவங்களும் ‘பவுண்டுத்தொழு’விற்குள் அடைக்கப்பட்ட பசுமாடுதான்.

(முற்றும்)

தொடர்புடைய பிற பகுதிகள்

காலத்தால் அழிந்தவை – பகுதி 1

கோபால் பக்கங்கள்

By ஈ. கோபால்

பவுண்டுத்தொழு

வாழ்க்கை மாறும்போது பல நிகழ்வுகள், வாழ்வாதாரம், வாழும்முறை, சமூக கோட்பாடுஎல்லாம் கொஞ்சம் மாறும் – ஆனால், சுமார் 20 வருடங்களாக, பழைய சுவடே இல்லாமல்,தரைமட்டமாக அழிந்துபோனவற்றில் குறிப்பிடத்தக்கது – வாழ்கைமுறை, மொழிப்பயன்பாடு,இயற்கை, வனவிலங்குகளின் வாழும் உரிமை, மனிதநேயம், மரியாதை, ஒருவரை ஒருவர்மதிப்பது, மாற்றுக்கருத்துக்கு இடமளிப்பது, பொதுநலம் என்பவையே.

அப்போதல்லாம், ஒவ்வொரு மணித்துளிகளிலும் நாம் இயற்கையோடுதான் வாழ்ந்துள்ளோம்.நம்மை அறியாமலே விலங்கு, இயற்கை, மரம், செடி, கொடி, நட்பு, பாசம் ஆகியவற்றால்பின்னப்பட்டு சமமான வாழ்வாரத்தை பருகியுள்ளோம். பழைய வாழ்கைமுறை இன்றையசூழலுக்கு ஒவ்வாதமுறையா தெரியவில்லை. ஆனால், காலத்தின் கோலத்தில் புள்ளிவைத்துவரையத்துவங்கி பழகிவிட்டதால் – இதுவே இன்பம் என்று நினைத்து பழையவற்றைநூலைச்சுற்றி மனதில் பூட்டிவிட்டோம்.

காலையில் ஒரு நான்கு மணிசுமாருக்கு அப்பா எழுந்திருந்தால் – முதலில் கண்ணில்படுவதுநாங்கள்தான்.  தருமாஸ்பத்திரியில் படுத்துள்ளது போல் படுத்திருக்கும் எங்களை, “நேரமாச்சு,எழுந்து பசு மாட்டுக்கு தண்ணிவைக்கனும்” என்று பின்கட்டுக்கு போவார் – அப்போது ஒருஎச்சரிக்கையும் கொடுப்பார், “ம்…சீக்கிரம் எழுந்திருங்கள்”. எங்களில் முறை போட்டுக்கொண்டுபசுமாட்டிற்கு பருத்திக்கொட்டை, புண்ணாக்கு அறைத்துக்கொடுக்கவேண்டும், அதற்கென்றுதனியாக தொழுவத்தில் ஒரு ஆட்டுக்கல் பதியப்பெற்றிருக்கும். வைக்கப்படப்பிலிருந்துவைக்கோல் பிடுங்கி ஒவ்வொரு பசுமாட்டிற்க்கும் தொழுவில் போட்டுவிட்டு, முதலில் கழுநீர்(அதற்கு காப்பி) கொடுக்கவேண்டும். மாட்டின் சாணியை பல பகுதிகளிலிருந்து மொத்தமாகஎடுத்து ஒரு இடத்தில் சேர்க்கவேண்டும். பின் கிணற்றிலிருந்து ஒரு 150 வாளி தண்ணீர்இறைத்து தோட்டத்திற்கு பாய்ச்ச வேண்டும். விருமுறைநாட்கள் என்றால், முழு நாட்களும், வீட்டின் முன் யார்வந்து கழிநீர் கொண்டுவந்தாலும், வாங்கி பின் கட்டில் பசுமாட்டுத்தொட்டியில் நிறப்பவேண்டும். பூபாளத்தில் தூங்குவது ஒருவித சுகம். அன்னாளில், எதையுமே அறிந்திராதவயதில், எவ்விதகட்டுபாடும் இல்லாத மனம் இளம் காலைபோல் துள்ளித்திரியும், அப்போதுகடிவாளம் போட்டால் யாருக்குத்தான் பிடிக்கும்?.

ஒரு 4.30 மணிக்கு தட்சனைக்கோனார் என்று பால் கறக்க ஒருவர் வருவார்.  ஒல்லியான தேகம்,வாயில் எப்போதும் வெற்றிலையை அரவை இயந்திரம் போல் அரைத்துக்கொண்டிருப்பார்,சிறிய கண்கள் முழித்துள்ளாரா, விழித்திருக்கிறாரா தெரியாதிருக்கும், தலையில் ஒருமுண்டாசு, சட்டையெல்லாம் கிடையாது, வேட்டியை நம்பூதிரிகள் கட்டும் பஞ்சகச்சத்தை விட குறைவாக இறுக்கிக் கட்டி, நடையும் ஓட்டமுமாக வருவார்.  ஒரு செவலைப்பசு இருந்தது, அதுஇவர் கறந்தால்தான் ஒன்றும் பண்ணாது, வேறு யார் வந்தாலும் பதம் பார்க்கும், அடங்காது. இவர் சரியாக அதை கணிப்பார், அதன் ‘மூட்’ எப்படி, இன்னிக்கு பால் கொடுக்குமா, உடம்புசரியில்லையா, மகிழ்சியக இருக்கிறதா என்று ஒரு பார்வையில் ஆராய்ந்து கொட்டிவிடுவார். எங்கப்பா பின்கட்டிற்கு போய் 20 நிமிடத்தில், இவர் வந்தபின்புதான் பிரச்சனையே ஆரம்பமாகும். “ஏ, என்னா இன்னுமா எந்திரிக்கல, மணி 4.30 ஆச்சு, எந்திரிங்க” என்று சொல்லிக்கொண்டேபோகும்போது அவர் பேசுவது எதுவும் நமக்கு கேட்காது. இன்னாள் “திரும்பிப்பார்க்கிறேன்”கள்கனவில் வந்து அஸ்திவாரத்தை அசைத்துக்கொண்டிருக்கும்போது, தட்சினைக்கோணார்சொன்னால் காதில் கேட்கவா போகிறோம்?

கடகால்

அவருக்கு முந்தின இரவே ‘கடகால்’ என்ற நீள வட்டத்தில் ஒரு பாத்திரம் வைத்திருப்பார்கள். அதன் கூட கொஞ்சம் விளக்கெண்ணையும், தண்ணீரும் இருக்கும். இந்த ‘கடகால்’ என்பது ஒரு 35 செ.மீ நீளமும் 20 செ.மீ மேல்முகப்பு சுற்றும் உடைய எவெர்சில்வர் அல்லது பித்தளை பாத்திரம், இரண்டு காதும் இருக்கும்.  இதில் தான் பாலை கறப்பார்கள். இது நீளமாகவும், சுற்றளவு குறைவாகவும் இருக்கும். இவர் பசுமாட்டருகே போகும் முன், கொஞ்சம் வைக்கோலைப்போட்டுவிட்டு, எங்கப்பாவிடம், “பசங்க இன்னும் எழுந்திருக்கல, நான் கத்திட்டுத்தான் வாரேன்” என்று கூடுதலாக வைக்கோலைப்போடுவார்.  பின் விளக்கெண்ணையை மடுக்களில் தடவி(antiseptic?), தண்ணீரை தெளித்து, குந்தி உட்கார்ந்து இந்த ‘கடகாலை’ இரு முழங்கால் நடுவில் லாவகமாக் சொருகி பால் கறப்பார். இதில் ஒரு காம்பில் பால் கறக்க மாட்டார்கள், அது கன்றுக்குட்டிக்காக வைத்திருப்பார்கள்.

அவரின் உந்துதலாலும், எங்கள் மேல் உள்ள நம்பிக்கையாலும், அப்பா ஒரு வாளி நிறைய தண்ணீர் சேந்தி – சூடான ‘வார்ப்பில்’ பாயாசத்தை தூக்கி ஓடிவரும் சமயல்காரர்கள் போல், அரக்க பறக்க பின் கட்டிலில் தொடங்கி கொட்டில், தாழ்வாரம், ரேழி தாண்டி தூக்கிவந்து, நெல்வயலுக்கு உரம் வீசும் விவசாயி போல், போல் எங்கள் மேல் ஊற்றிவிடுவார்.  நாங்கள் படுத்திருக்கும் பஞ்சுமெத்தை வெறும் பாய், கைதான் தலையணை.  கனவில் பயத்தில் ஒண்ணுக்கு போய்விட்டாலும் சரி, இதுபோன்ற தண்டனை கொடுத்தாலும் சரி, அதை நாங்கள்தான் எடுத்துப்போய் கழுவவேண்டும்.  அண்ணா தம்பிகள் ஒரு கிரிக்கட் குழுதேரும் என்பதால், அப்பாவிற்கு துணிதோய்க்க எங்கள் முதுகே கல்லாக பயன்பட்டுள்ளது, பல சமயங்களில்.  எவ்வளவு கோபம் வந்தாலும் வீட்டுப்பெண்களை அடிக்கவோ, கடிந்து கொள்ளவோ மாட்டார்கள். “சே, நாமும் பெண்ணாய் பிறந்திருக்கலாம்” என்று பல நேரங்களில் ஏங்கியதுண்டு.  ஆனால், அன்பிற்கும் பாசத்திற்கும் ஒரு குறை வைக்கமாட்டார். எங்கள் வீட்டிலிருந்த செவலைப்பசுக்கு எல்லா கைங்கர்யம் செய்தும் அதன் மேன் ஒரு பாசம் வரும் சில நேரத்தில் ‘ஏ பசுவே உனக்கு இவ்வளவு உழைத்திருக்கிறேன், நீ எனக்கு என்ன பண்ணுவே?’ என்று கேட்டிருக்கிறேன்.  அதற்கு உடம்பு சரியில்லாவிடில் மாட்டாஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போயிருக்கிறேன். கிணற்றிலிருந்து வாளிவாளியாக இறைத்து கொட்டி அதை குளிப்பாட்டி அழகு பார்த்திருக்கிறேன். மாட்டிற்கு லாடம் அடிக்கும்போதும், மூக்கனாம் கயிறை குத்தும்போதும் விசனப்பட்டிருக்கிறேன்.

 

(தொடரும்)

தொடர்புடைய பிற பகுதிகள்

கோபால் பக்கங்கள்

 

Follow

Get every new post delivered to your Inbox.

Join 59 other followers