அயோத்தி தீர்ப்பை படிக்க வேண்டும் என்றுதான் பார்க்கிறேன், ஆனால் பல ஆயிரம் பக்கத்தில் இருக்கிறதாம். இதை டவுன்லோட் செய்வதற்குள்ளேயே தாவு தீர்ந்துவிடும், படிப்பது எப்போது? ஒரு மாறுதலுக்காக இந்த பதிவு…
டிஸ்க்ளைமர்: ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் பேரக்குழந்தைகள் இருக்கிறார்களா என்று கூட தெரியாது. சங்கநிதி என் கற்பனைப் பாத்திரம் மட்டுமே. இந்த டுமீல் செய்திகளை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டு குழந்தைகளை கிண்டல் செய்கிறாயா பாதகா என்று கிளம்பிவிடாதீர்கள்!
துக்ளக்கும் அவர்கள் ஸ்டைலை காப்பி அடிப்பதற்காக என்னை மன்னிக்கட்டும்!
ஜெய் ஹோ ஃபிலிம்ஸ்
நேற்று கலைஞரின் கொள்ளுப்பேரனும் ஸ்டாலினின் பேரனும் ஆன சங்கநிதி ஜெய் ஹோ ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த விழாவுக்கு கலைஞரின் குடும்பத்தினரும் சினிமாத் துறையினரும் பெருவாரியாக வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சங்கநிதிக்கு வயது பத்துதான் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். முதல் படத்துக்கு கலைஞரே கதை வசனம் எழுதுவதாக இருந்ததாம். ஆனால் சங்கநிதி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள மறுத்துவிட்டதால் இப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், கவுதம் மேனன், ஷங்கர் ஆகியோர் தாங்கள் அண்ணன் சங்கநிதியிடம் கதை சொல்வதற்காக ஸ்லாட் கேட்டிருப்பதாக தெரிவித்தனர். அனேகமாக ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்று தெரிகிறது.
கலை நிகழ்ச்சி:
நமீதா, முமைத் கான், ரகசியா ஆகியோரின் ஆட்டம், பாட்டு, கவிஞர் வாலி தலைமை தாங்கிய கவி அரங்கம், சங்கநிதியிடம் உயர்ந்து விளங்குவது ஸ்டாலினின் திறமையா இல்லை கலைஞரின் பெருமையா என்ற பட்டி மன்றம் என்று பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வாலியின் கவிதையிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கே கொடுத்திருக்கிறோம்.
முகத்திலே பரு
முளைக்காத சிறு உரு
ஆனாலும் கருவிலே திரு
அதற்கு காரணம் -
கலைஞர் என்ற கற்பகத் தரு
சளைக்காமல் போட்ட எரு!
உன்னிடம் சேர்ந்தாள் செந்திரு -
என்று பாற்கடலான் தொடுப்பான் செரு!
இந்த கவிதையை கேட்டதும் சங்கநிதி “What is செந்திரு? I don’t understand this Tamil!” என்று வாலியை வானளாவ புகழ்ந்தார்.
கலைஞர் கேள்வி பதில்:
கம்பெனிக்கு ஜெய் ஹோ ஃ பிலிம்ஸ் என்று ஏன் பேர் வைத்தீர்கள்?
ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் இருக்கிறது என்று பலரும் குறை சொன்னார்கள். அவர்கள் முகத்தில் கரியைப் பூசவே இப்போது ஆங்கிலக் கலப்பில்லாமல் ஜெய் ஹோ ஃபிலிம்ஸ் என்று பேர் வைத்திருக்கிறோம். மேலும் இது ஏ. ஆர். ரஹ்மானின் புகழ் பெற்ற, ஆஸ்கார் விருது வென்ற, அன்னியர் பாராட்டும் பாட்டு. சிறுபான்மையினரிடம் இயக்கம் கொண்டுள்ள அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தவே இப்படி ஒரு பேர்.
பத்து வயதிலேயே சினிமா எடுக்கும் அளவுக்கு பணம் எப்படி வந்தது?
குறுமுனி என்று சொல்லப்பட்ட அகத்தியன் தமிழ் மொழிக்கு இலக்கணமே எழுதவில்லையா? உருவத்தையும் பருவத்தையும் பார்த்து புருவத்தை உயர்த்தாதீர்கள், துருவ நட்சத்திரமாய் இலங்கும் திறமையைப் பாருங்கள்.
பத்து வயது என்பது சட்டப்படி மைனர். மைனராக இருக்கும்போதே திரைப்படத் தயாரிப்பா?
சட்டப்படி மைனராக இருந்தால் தவறில்லை. இட்டப்படி பெண்களோடு சுற்றும் மைனராக இருந்தால்தான் தவறு.
இருந்தாலும் இந்த வயதில் படம் எடுக்கும் அளவுக்கு பணம் என்றால் உதைக்கிறதே?
கலைஞர் உதவியாளர் சண்முகநாதனிடம் ஏதோ பேசுகிறார். பிறகு: இந்த நல்ல சமயத்தில் அரசின் திட்டம் ஒன்றைப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன். பத்திரிகைகள்தான் நாட்டில் ஜனநாயகத்தை காக்கின்றன. ஆனால் பத்திரிகை நிருபர்களோ வறுமையில் தவிக்கிறார்கள். அவர்களுக்கு ஈ.சி.ஆர். ரோட்டில் இலவச வீடு வழங்கும் திட்டம் – சங்கநிதி திட்டம் – வகுத்திருக்கிறோம். சங்கநிதி திட்டம் பற்றி பத்திரிகையாளர் சங்கத்தில் பேசுவோம்.
கலைஞரின் அறிவிப்புக்கு பிறகு பத்து வயதில் சினிமா தயாரிப்பது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுமா, ஓசியில் கிடைக்கும் வீடு எத்தனை சதுர அடி, சங்கநிதிக்கு பிடித்த உணவு என்ன, பிடிக்காத உணவு என்ன, இரவு எத்தனை மணிக்கு தூங்குவார், காலை எத்தனை மணிக்கு எழுந்திருப்பார், ஹோம்வொர்க் செய்ய அப்பா உதவி செய்வாரா, அம்மாவா, இல்லை ஹோம்வொர்க் கொடுக்கும் வாத்தியாரே அதை செய்தும் தந்துவிடுவாரா என்ற டைப்பில் (மட்டுமே) பல கேள்விகள் எழுந்தன. இடம் இல்லாததால் எல்லாவற்றையும் பிரசுரிக்க முடியவில்லை.
ஜெயலலிதா கருத்து:
இதைப் பற்றி ஜெயலலிதாவின் கருத்தை அறிய முயன்றோம். அவர் கொடநாட்டில் படுக்கையை விட்டு எழுந்த பிறகு கருத்து சொல்வார் என்று ஓ.பி. பன்னீர்செல்வம் பயந்து பயந்து பணிவோடு கருத்து தெரிவித்தார்.
விஜயகாந்த் பேட்டி:
இப்படி தன குடும்பமே கண்ணாக இருப்பவர் நாட்டுக்கு முதல்வராக இருக்க அருகதை அற்றவர் என்று விஜயகாந்த் கூறினார். நீங்களும் உங்கள் குடும்பத்தவரைத்தானே முக்கிய பதவியில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அது ஒரு குறையில்லை, கலைஞரும் என் குடும்பத்தவருக்கு முக்கிய பதவி அளித்தால் நான் அவரையும் குறை சொல்ல மாட்டேன் என்று கருத்து சொன்னார். தமிழகத்தில் கூட்டணி மாறுகிறது என்று திமுகவினரும், பெட்டி மாறுகிறது என்று அதிமுகவினரும் காரசாரமாக மேடையில் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.
ராமதாஸ் கருத்து:
கூட்டணி வைத்த பிறகுதான் கருத்து சொல்ல முடியும் என்று ராமதாஸ் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். திமுகவுடன் கூட்டணி வைத்தால் இந்த இளம் வயதிலேயே சாதனை புரிந்த சங்கநிதிக்கு வாழ்த்து சொல்வோம்; இல்லையேல் வாரிசுகளைக் கொண்டு கலை உலகை கைப்பற்றும் முயற்சிகளை கண்டிப்போம், இதைக் கூடவா சொல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் நிருபர்களை செல்லமாக கடிந்துகொண்டார்.
சத்தியமூர்த்தி பவனில் கூட்டம்:
இது குறித்து சத்தியமூர்த்தி பவனில் கூடிய கூட்டம் எந்த கோஷ்டிக்கு எத்தனை ப்ரிவ்யூ டிக்கெட் என்ற சண்டை முற்றி அன்போடு கலைந்தது என்று தெரியவருகிறது.
துக்ளக் தலையங்கம்:
குடும்பமே கட்சி என்ற நிலையிலிருந்து இன்று குடும்பமே சினிமா என்ற நிலைக்கு தமிழ் நாடு வந்து கொண்டிருக்கிறது. இது நாட்டுக்கும் நல்லதில்லை, கலைஞர் வீட்டுக்கும் நல்லதில்லை. வாரிசு போர்கள் இன்னும் பெரிதாகப் போகிறது.
கலைஞர் மீதும் குறைப்படுவதற்கில்லை. வயதாக ஆக குடும்பத்தினர் மீது பாசம் பெருகிக் கொண்டேதான் போகும். இதனால்தான் குடும்பம் இல்லாத தலைவர்களையே நாம் ஆதரிக்க வேண்டும். காமராஜ் கட்டை பிரம்மச்சாரி. அவரை விட சிறந்த தலைவர் யார்? வாஜ்பேயி திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரை விட தேசபக்தி உள்ள பிரதமர் யார்? ஜெயலலிதாவும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் எல்லாரும் ஜெவுக்கே ஓட்டு போடுங்கள்!
டி. ராஜேந்தர் பேட்டி:
வாரிசுகள் இப்படி சினிமாவில் நுழைவது நல்லதில்லை என்று டி.ஆர். பேட்டி அளித்தார். உங்கள் வாரிசு திரை உலகில் முன்னணி ஹீரோவாச்சே என்று கேட்டதற்கு சிங்கண்டா சிம்பு, வச்சுக்காதே வம்பு என்று எச்சரித்தார்.
ஜூவியில் கழுகு ரிப்போர்ட்:
சங்கநிதி எலிமெண்டரி ஸ்கூல் முடித்து ஹைஸ்கூல் சேர்வதற்கு முன் தாத்தாவிடம் ஆசி வாங்க வந்தாராம். தாத்தா நான் பாஸாயிட்டேன் என்று ஆசையோடு ஓடி வந்த அவரிடம் கலைஞர் நீ பெரியவனாகி என்ன பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டாராம். பெரியவனாகி என்ன செய்ய வேண்டும் என்பதை விடுங்கள், இப்போது யூத் படங்கள் எதுவுமே நன்றாக இல்லை, ஒரு நல்ல யூத் படம் எடுக்க வேண்டும் என்று சங்கநிதி சொன்னாராம். ஜெய் ஹோ என்று கலைஞர் ஆசீர்வதிக்க, அதையே கம்பெனி பெயராக வைத்து சினிமா தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்!
அழகிரி குமுறல்:
என் பேரன் எல்கேஜி முடித்து யுகேஜி போனானே அவனை வைத்து சினிமா வேண்டாம் ஒரு டிவி சீரியல், அது கூட வேண்டாம் ஒரு விளம்பரப் படம் கூட தயாரிக்கவில்லையே என்று அழகிரி குமுறுகிறாராம். அவரை சமாதானப்படுத்த ஃபோன் செய்த தயாளு அம்மையாரிடம் தேர்தலுக்கு மாங்கு மாங்கென்ற வேலை செய்ய மட்டும் நான், ஆனால் சினிமா கம்பெனி ஸ்டாலின் பேரனுக்கு மட்டும்தானா என்று ஆவேசமாக கேட்டாராம். ஜெய் ஹோ கம்பெனியிலிருந்து வரும் எந்த படமும் மதுரைக்கு தெற்கே ரிலீஸ் ஆகாது என்று சூளுரைத்தாராம். கலைஞர் நிலைமையை சமாளிக்க அழகிரி பேரனுக்கு விஜய் ஹோ ஃபிலிம்ஸ் என்று கம்பெனி ஆரம்பிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறாராம். என்ன ஆகுமோ என்று அரசியல் வட்டாரங்கள் கவலையோடு நிலையை கவனித்து வருகின்றன.
கொசுறு செய்தி:
ஸ்டாலின், அழகிரி குடும்பத்திலிருந்து இப்படி சினிமா தயாரிப்பாளர்கள் கிளம்புவதை சன் குழுமம் கவலையோடு பார்த்து வருகிறதாம். தங்கள் இமேஜை உயர்த்த இனி மேல் கலாநிதி மாறன் தயாரிக்கும் என்று போட்டால் மட்டும் போதாது, ஓபனிங் சாங்கில் ஹீரோவுக்கு பதிலாக கலாநிதியையே வைத்து எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறதாம். கலாநிதிக்கு நடனம் கற்றுக் கொள்ள நேரமில்லை என்பதால் மாண்டேஜாக எடுத்து விடலாம் என்று யோசிக்கிறார்களாம். என் பேரு படையப்பா மெட்டில் என் பேரு கலாநிதி, சன் டிவி உங்க தலைவிதி, மிச்ச சினிமாவை எல்லாம் தூக்கிப் போட்டு மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி என்று வாலி எழுதிய பாட்டு ஒன்று இப்போது கோடம்பாக்கம் வட்டாரத்தில் ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருக்கிறது.
தொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல்
தொடர்புடைய பதிவுகள்:
ஒண்ணரை பக்க நாளேடு: அழகிரி vs. ஸ்டாலின்
ஒண்ணரை பக்க நாளேடு – 2009 நாடாளுமன்றத் தேர்தல்
சுப்பிரமணிய சாமி – 2009 நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 5
டி. ராஜேந்தர் – 2009 நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 4
சரத்குமார் – 2009 நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 3
ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகம் – 2009 நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 2
கார்த்திக் கட்சி – 2009 நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 1
தமிழ் நாட்டு கட்சிகள்
அக்டோபர் 5, 2010 at 2:04 மு.பகல்
இட்லி வடையில் உங்களுக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று நினைக்கிறேன்! (உண்மையை சொன்னால் துக்ளக்கை விட இட்லி வடை நன்றாக இருக்கிறது. சோவுக்கு வயதாகி விட்டது, பாவம். கேலி குறைந்து போய் சத்தம் அதிகமாயிட்ட மாதிரி இருக்கு!!)
அக்டோபர் 5, 2010 at 5:20 மு.பகல்
பாஸ்கர்/ஜவஹர், நீங்கள் பதிவை என்ஜாய் செய்தது பற்றி மகிழ்ச்சி!
அக்டோபர் 5, 2010 at 2:31 மு.பகல்
வாலி கவிதை சூப்பர்ங்காணும்! இதை அவரே படித்தால் கூட தான்தான் எழுதினோம் என்று நினைத்து விடுவார்!!
http://kgjawarlal.wordpress.com
அக்டோபர் 5, 2010 at 5:59 மு.பகல்
ஆர் வி
சூப்பர் அதிலும் கவிதை சும்மா அக்மார்க் வாலி பிராண்ட்
) சங்க நிதி எடுக்கப் போகும் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று நான் இட்லி வடையில் எழுதப் போக இட்லி வடை சங்கம் வளர்த்த தமிழில் இருப்பதினால் அதையும் நீங்கள் புறக்கணிப்பீர்களா என்று கேட்டிருக்கிறார்
இதை அப்படியே துக்ளக்கிற்கு அனுப்புங்கள். சத்யாவுக்கு பதிலாக உங்களை சோ வைத்துக் கொள்வார்
நிலமை உண்மையில் உங்கள் கிண்டலை விட மோசமாகிக் கொண்டிருக்கிறது. இன்று தமிழ் நாட்டில் சுதந்திரமாக எந்த சினிமாக்காரர்களும் இயங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். நேரில் சந்திக்கும் பொழுது சில தகவல்களைச் சொல்கிறேன்
அன்புடன்
ராஜன்
அக்டோபர் 6, 2010 at 4:46 மு.பகல்
ராஜன், இனியவன், பத்மஹரி, பதிவை நீங்கள் ரசித்தது மகிழ்ச்சி!
அக்டோபர் 5, 2010 at 7:04 மு.பகல்
Very very nice writing
அக்டோபர் 6, 2010 at 1:34 மு.பகல்
அட்டகாசம்……அட்டகாசம்……
சிரிப்பு தாங்க முடியல……!! உண்மையிலேயே அந்தக் கவிதை பிரமாதம். இப்படிக்கூட கேலி பண்ண முடியுமாங்கிற மாதிரி, சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்குது பதிவு. வாழ்த்துக்கள்!
பத்மஹரி,
http://padmahari.wordpress.com
அக்டோபர் 6, 2010 at 5:38 மு.பகல்
இது ஒரு சாமானியனின் பேரன் என்பதால்தானே இந்த காட்டம்? ஆரிய குலத்து குழந்தை என்றால் இருக்குமா உங்களுக்கு வாட்டம்? கருணாநிதி கொள்ளுப்பேரன் என்பதால்தானே இந்த சாட்டம்? இனி நீங்க தமிழ்நாடு வந்தா இருக்கும் உங்க வீட்டுப் பக்கம் ஆட்டோக்களில் கழக கண்மணிகளின் நடமாட்டம்
அக்டோபர் 6, 2010 at 10:04 பிற்பகல்
அரவிந்தன் நீலகண்டன், போச்சு வாலிக்கு இத்தனை பேர் போட்டியா?
விருட்சம்/பாபு/கார்கில் ஜெய், பாராட்டுக்கு நன்றி!
அக்டோபர் 7, 2010 at 11:28 மு.பகல்
எனக்கென்னவோ இந்தக்கவிதை வாலிக்குப் போட்டியாகத்தெரியவில்லை.
விஜய டி.ராஜேந்தரை காப்பியடித்தது போலிருக்கிறது.
அக்டோபர் 6, 2010 at 7:00 மு.பகல்
[...] கொசுறு செய்தி:ஸ்டாலின், அழகிரி குடும்பத்திலிருந்து இப்படி சினிமா தயாரிப்பாளர்கள் கிளம்புவதை சன் குழுமம் கவலையோடு பார்த்து வருகிறதாம். தங்கள் இமேஜை உயர்த்த இனி மேல் கலாநிதி மாறன் தயாரிக்கும் என்று போட்டால் மட்டும் போதாது, ஓபனிங் சாங்கில் ஹீரோவுக்கு பதிலாக கலாநிதியையே வைத்து எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறதாம். கலாநிதிக்கு நடனம் கற்றுக் கொள்ள நேரமில்லை என்பதால் மாண்டேஜாக எடுத்து விடலாம் என்று யோசிக்கிறார்களாம். என் பேரு படையப்பா மெட்டில் என் பேரு கலாநிதி, சன் டிவி உங்க தலைவிதி, மிச்ச சினிமாவை எல்லாம் தூக்கிப் போட்டு மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி என்று வாலி எழுதிய பாட்டு ஒன்று இப்போது கோடம்பாக்கம் வட்டாரத்தில் ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருக்கிறது.( நன்றி: http://koottanchoru.wordpress.com ) [...]
அக்டோபர் 6, 2010 at 9:55 மு.பகல்
Wow! RV. கலக்கீட்டீங்க
கனிமொழி கூட படத் தயாரிப்பில் இறங்கிட்டாங்க. அதனால் நீங்க அவங்க மகன் ஆதித்யாவுக்கு (இதெல்லாம் தமிழ் பெயர.் சொன்னா கேட்டுக்கணும் ) நீங்க முக்கியத்துவம் குடுத்து சிபாரிசு செய்யலைன்னு கருத்துல உங்கள காச்சிட்டாங்க. இப்படி மூன்றாம் தர குடிமக்களா தன் மகனையும் பேரனையும் ஆக்குவதைக் கேட்க யாரும் இல்லைன்னு ராஜாதி அம்மா ஒரேஅழுவாச்சியானதால இப்போ இன்னொரு ஹோ வும் யோசனையின் pipeline ல் .
அக்டோபர் 6, 2010 at 10:30 மு.பகல்
இட்லி வடையில் பார்த்துதான் உங்கள் பக்கம் வந்தேன். மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தேன்.
ஜெ.பாபு
கோவை
அக்டோபர் 6, 2010 at 7:57 பிற்பகல்
சங்கநிதி !?!? superb name… superb story